சிதம்பரம் நடராஜர் கோயில்: பெண் பக்தரை சாதியை சொல்லி திட்டியதாக 20 தீட்சிதர்கள் மீது வழக்கு

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிட சென்ற பெண் பக்தரரை சாதிப்பெயரை சொல்லி திட்டியதாக தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்வது தொடர்பாக இரு தரப்பு தீட்சிதர்கள் இடையே பிரச்சனை இருந்து வந்த சூழலில், ஒரு பெண் பக்தரை ஒரு தீட்சிதர் சிற்றம்பல மேடைக்கு அழைத்துச் சென்றபோது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சிற்றம்பல மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயில் நிர்வாகம் யாரையும் அனுப்பதில்லை. இந்த சூழலில் கணேச தீட்சிதர் என்பவர் கோயில் விதிமுறையை மீறி தமது மனைவியை அழைத்து சென்றதால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தாம் மீண்டும் சாமி கும்பிட சென்றபோது சக தீட்சிதர்கள் தடுத்து தம்மைத் தாக்கியதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் இந்த கணேச தீட்சிதர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் மீது 3 தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மறுநாள் அவரது மகன் தர்ஷன் தீட்சிதர் பெண் பக்தர் ஒருவரை சாமி கும்பிட சிற்றம்பல மேடைக்கு அழைத்துச் சென்றபோது மற்ற தீட்சிதர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தம்மை சாதி பெயரை சொல்லி திட்டியதாக சிதம்பரத்தைச் சேர்ந்த அந்த பெண் பக்தர் ஜெயஷீலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் சிதம்பரம் நகரப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூட்டமாக சேர்ந்து தடுத்தல், தாக்குதல் தொடர்பான சட்டப் பிரிவுகள் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பில் பிபிசியிடம் பேசிய ஐயப்ப தீட்சிதர், "சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் அனைவரையும் அனுமதிப்பதில்லை. தரிசனத்திற்கு கீழே நிற்கும் பக்தர்களுக்கு சிற்றம்பல மேடை மீது நிற்கும் பக்தர்களால் இடையூறு ஏற்படுவதால், அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டிருந்தது. மேலும் சிற்றம்பல மேடை மீது பணம் வாங்கிக் கொண்டு சிலரை மட்டும் அனுமதிப்பதாகவும், முக்கிய நபர்களை அனுமதிப்பதாகவும் தவறான சர்ச்சை எழுந்தது.
இதனால் கோயிலுக்கு வரும் மக்கள் மற்றும் நிர்வாகத்தின் நலன் கருதி கனகசபை எனப்படும் சிற்றம்பல மேடை மீது யாரையும் அனுமதிக்க கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது. 450 தீட்சிதர்கள் கருத்து கேட்கப்பட்டு அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவில் இந்த முடிவு எடுக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை கோயிலுக்கு வரும் பக்தர்கள், உள்ளூர் மக்கள், கோயில் தீட்சிதர்கள், தீட்சிதர் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரும் கடைபிடித்து வருகின்றனர்," என்றார் அவர்.
"இந்த சம்பவம் ஏற்படுவதற்கு முன்பு வரை கணேஷ் மற்றும் தர்ஷன் ஆகிய அந்த இரண்டு தீட்சிதர்களும் இதனை கடைபிடித்து வந்திருந்தனர். ஆனால் கணேஷ் தீட்சிதர் அவரது மனைவியை சிற்றம்பலத்துக்கு அழைத்து வந்த காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு கணேஷ் தீட்சதர் மகன் தர்ஷன் தீட்சதர் வேறொரு பெண் பக்தரை சிற்றம்பல மேடைக்கு அழைத்து வந்தார். அவரை தடுக்கும் நோக்கத்தில் மேல செல்ல அனுமதி கிடையாது என்று தீட்சிதர்கள் கூறினர். ஆனால், தீட்சிதர்கள் தலித் பெண்ணை கோயில் அனுமதிக்க மறுத்து தீண்டாமையை கடைபிடிப்பதாக தவறான தகவலை தெரிவிக்கின்றனர்," என்றும் அவர் கூறுகிறார்.
ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தர்ஷன் தீட்சிதர் என்பவர் அரசு பணி செய்யும் செவிலியரை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. அதற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதற்கான தண்டனையும் அனுபவித்த பின்னர் வழக்கம்போல கோயில் பணிகள் செய்ய தொடங்கினார். அதை மனதில் வைத்துக்கொண்டு இந்த கோயிலுக்கும், நிர்வாகத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்து கொண்டிருக்கின்றனர்.

இதில் தன்னை தவறாக பேசி மேலே அனுமதிக்கவில்லை என்று 20 பேர் மீது காவல் நிலையத்தில் தவறாக அப்பெண் புகாரளித்துள்ளார். முன்னதாக கணேச தீட்சதர் தாக்கபட்டதாக ஒரு புகார் அளித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட கணேச தீட்சதர் மீது கை கூட படவில்லை. இவ்வாறு நடைபெறவில்லை தவறாக சொல்கின்றனர். அதற்கான சிசிடிவி காட்சிகள், காணொளி பதிவுகள், அங்கே சூழ்ந்திருந்த பொது மக்களின் சாட்சியங்கள் உள்ளது," என்று ஐயப்ப தீட்சிதர் தெரிவித்தார்.
"எப்படியாவது இந்த நடராஜர் கோயிலை அரசுடமையாக்கி அதில் ஆதாயம் தேடலாம் என்ற நோக்கத்தில் இவர்கள் செயல்படுகின்றனர்," என்றும் ஐயப்ப தீட்சதர் கூறுகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடராஜ தீட்சதர் என்கிற தர்ஷன், "கனக சபை மீது மக்களை அனுமதிக்க கூடாது என்று முடிவெடுத்து அதனை பின்பற்றி வருகின்றனர். இதில் எங்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக பலமுறை சஸ்பெண்ட் செய்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு எனது தந்தை தாயாரையும், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணையும் மேலே சாமி கும்பிட அழைத்து சென்றபோது தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை மேலே அழைத்துச் சென்றபோது அவரை சாதி பெயர்கொண்டு அழைத்து திட்டியுள்ளனர். கையை பிடித்து வெளியே இழுத்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி அனைவரும் சாமி கும்பிட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். சோழர்கள் கட்டிய நடராஜர் கோயிலில் கனகசபை மீது யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். இது தவறானது," என்று தர்ஷன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த லட்சுமி என்கிற ஜெயஷீலா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இந்த கோயிலுக்கு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறேன். இதற்கு முன்பு கனகசபை மீது சென்று சாமி தரிசனம் செய்ததுண்டு, தற்போது கொரோனா சூழலைகரணம் காட்டி அனுமதிப்பதில்லை. இது சாதி தீண்டாமை. இதையறிந்து அங்கு சென்று கேட்டபோது பல்வேறு காரணங்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு இவ்விவகாரம் தொடர்பாக யூடியூப் சமூக வலைதள பக்கத்தில் பேசியுள்ளேன்.

இதை காரணமாக வைத்துக்கொண்டு நான் கோயிலுக்கு செல்லும்போதெல்லாம் தவறாக பேசுகின்றனர். இதனால் வேறொரு தீட்சிதரிடம் எங்களுடைய உரிமை பறிபோவதாக கூறி மேலே என்னை அழைத்து செல்லும்படி கூறினேன். அதன்படி மேலே எற முயற்சித்தேன். என்னை மேலே செல்ல விடவில்லை. அப்போது கையை பிடித்து இழுத்தனர். சாதி பெயரை குறிப்பிட்டு திட்டினர். தவறாக பேசினர். ஆகவே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்," என்று ஜெயஷீலா தெரிவித்தார்.
இதுகுறித்து சிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. "இந்த சம்பவத்தில் ஏற்கனவே கணேச தீட்சதர் தாக்கப்பட்டதாக புகார் கொடுத்துள்ளனர். அதன்படி இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 307-ன் கீழ் மூன்று பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு தீட்சிதர் தரப்பினர் மேலே செல்லக்கூடாது என்றும், மற்றொரு தரப்பினர் மேலே சென்று பார்க்கலாம் என்று கூறுகின்றனர். ஆகவே இந்த விவகாரத்தில் இரு தரப்பாக உள்ளனர்.
இதில் முன்னதாக ஒரு தீட்சிதர் அவரது மனைவியை அழைத்து சென்றுள்ளார். அவரது மனைவி மேலே செல்ல அனுமதிக்காத காரணத்தினால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை கோயில் நிர்வாகத்தினர் சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த சம்பத்தை தொடர்ந்து வெளியே இருந்து மற்றொரு பெண்ணைமேலே அழைத்து சென்றபோது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்த்தவர் என்பதால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அப்பெண் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சுமார் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக காணொளி காட்சிகள், தகுந்த ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. உரிய விசாரணை மேற்கொண்ட பிறகு தான் இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கபடும்," என்று ரமேஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:
- நியூட்ரினோ திட்டத்தால் என்ன ஆபத்து? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?
- "தேர்தலில் வெற்றிபெற பணத்தையும் பரிசுப் பொருள்களையும் வாரியிறைக்கும் கட்சிகள்"
- திருவள்ளூர் சாமியாரின் ஆசிரமத்தில் விஷம் குடித்து இறந்த கல்லூரி மாணவி - என்ன நடந்தது?
- கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்: கனடாவில் அவசரநிலை
- "என்னுடைய நிர்வாணப் படங்களை டெலிகிராம் நீக்காதது ஏன்?"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்









