சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வை திரும்பப் பெற வேண்டும்: பொது தீட்சிதர்கள்

கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அலுவல் ரீதியாக இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டு வரும் ஆய்வுக்குத் தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், கோயில் வளாகத்தை சுற்றிலும் பார்வையிட்டு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், மேற்கொண்ட கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கோயிலில் நேரடியாக ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக் குழுவை நியமித்தது.

அதன்படி இன்றும் நாளையும் (ஜூன் 7, 8) சிதம்பரம் நடராஜர் கோயிலில் விசாரணைக் குழு ஆய்வு செய்கிறது. அதற்காக இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த விசாரணைக் குழுவை தீட்சிதர்கள் வரவேற்று சாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர்களுக்கு கோயில் சார்பில் தீட்சிதர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோயில்

பின்னர் ஆய்வு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தணிக்கை விவரங்களை அதிகாரிகள் கோயில் தீட்சிதர்களிடம் கேட்டனர். அப்போது தீட்சிதர்கள் குழு சார்பில் வழக்குரைஞர் சந்திரசேகர், 'சட்ட ரீதியான விதிமுறைகளை மேற்கொள் காட்டி, சட்ட ரீதியாக அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளுமாறு' தெரிவித்தார்.

"தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவினர் என்றும், சமய விவகாரங்களை 26வது பிரிவின்படி பொது தீட்சிதர்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்றும் 2014 ஜனவரி 6ஆம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தனி சமய பிரிவினர் நிர்வாகம் செய்யும் கோயில்களில் இந்து அறநிலையத்துறை சட்டம் பிரிவு 107 பொருந்தாது. இதனை மேற்கோள்காட்டியே எங்களது ஆட்சேபனையை தெரிவித்தோம்.

கோயில்

இந்த ஆய்வுக் குழு எதன்‌ அடிப்படையில் ஆய்வு மேற்கொள்கிறது என்று உரிய விளக்கம் அளிக்கவில்லை. மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி துணை ஆணையர் நேரடியாக, தன்னிச்சையாக எந்தவித பொது கோயில்களிலும் ஆய்வுக்குச் செல்ல இயலாது. மேலும் ஒரு புகார் வந்தால், எதன் அடிப்படையில் புகார் வந்தது என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் எந்தவித புகார் வந்தது என்று எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. இதற்கான சட்ட ரீதியான ஆட்சேபனையை நாங்கள் தெரிவித்துள்ளோம். எங்கள் சட்ட ரீதியான ஆட்சேபனைக்கு அவர்களால் எந்த விளக்கமும் தர இயலவில்லை. மேற்கோள் காட்டிய உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளோம்," என்று கோயில் நிர்வாக வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் நடராஜர் கோயில் நிலங்கள் மார்ச் 9ஆம் தேதியிட்ட அரசாணை எண்: 836-ன் படி தனி வட்டாட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆகையால் நடராஜர் கோயில் நிலங்களைப் பற்றி தனி வட்டாட்சியரிடம்தான் கேட்க வேண்டும். தங்கள் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடந்த 40 வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் ஆவணங்கள் இல்லை. நகைகள் பற்றிய விவரத்திற்கு, தாங்கள் 2005 வருடம் செய்த தணிக்கை அறிக்கை இதுவரை சிதம்பரம் கோயிலுக்குத் தரப்படவில்லை. கடைசியாக முடிக்கப்பட்ட தணிக்கை அறிக்கை இல்லாமல் புதிய தணிக்கை நடத்த இயலாது. 2021 ஜூன் 7ஆம் தேதியிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி துறை தணிக்கை குழுவுக்கான விதிகள் சட்டப்படி செல்லாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி உருவாக்கப்பட்ட ஆய்வுக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதே எங்கள் நோக்கம். எனவே இந்த ஆய்வை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது," என்று கூறி அறநிலையத்துறை ஆய்வு குழுவிற்கு நேரில் விளக்கிய அனைத்தையும் கடிதம் மூலமாக கொடுத்தனர்.

கோயில்

தொடர்ந்து கோயில் வளாகத்தைச் சுற்றிப் பார்வையிட்டு வந்த ஆய்வு குழுவினர், கோயில் வளாகத்தில் அமர்ந்து ஆலோசனை மேற்கொண்டனர். ஆய்வு நிலவரம் குறித்து விசாரணைக் குழுவிடம் கேள்வி கேட்டபோது தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், இது குறித்து பிறகு தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வுக் குழுவில், பழனி திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன், வேலூர் மாவட்ட இணை ஆணையர் லட்சுமணன், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் உட்பட 5 பேர் இந்த விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளராகக் கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் சி.ஜோதி உடன் இருந்தார்.

ஆய்வு செய்ய உரிமை உள்ளது - அமைச்சர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அறநிலையத்துறை ஆய்விற்கு கோயில் தீட்சிதர்கள் குழு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

"சிதம்பரம் நடராஜர் கோயிலைப் பொறுத்தவரை அது பொதுக்கோயில் என்றுதான் உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. அப்படி பொதுக்கோயிலாக இருக்கின்ற கோயிலில் புகார் எழுகிறபோது இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959 பிரிவு 23, 28ன் படி அந்த திருக்கோயிலுக்கு சென்று புகாரின் மீது (துறைசார்பில்) ஆய்வு செய்து விசாரிக்கலாம்.

இந்த ஆய்வு தொடர்பாக கடந்த 1ஆம் தேதி இந்தக் கோயிலை நிர்வகிக்கும் தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தனர். அந்த ஆட்சேபனைக்கு உரிய பதில், துறை சார்பில் 3ஆம் தேதி அனுப்பப்பட்டது. கோயிலை இந்து சமய அறநிலையத் துறை எடுக்கவேண்டும் என்பது குறிக்கோள் அல்ல. இதை தீட்சிதர்களுக்கு எதிரான செயல் என்றும் நினைக்கக்கூடாது. பக்தர்களிடம் இருந்து வருகின்ற புகார்களை விசாரிப்பதற்கான குழுதான் இது," என்றார்‌ அவர்.

"என்ன உண்மை இருக்கிறதோ அதனை அவர்களிடம் தெரிவியுங்கள். நிச்சயம் சட்டத்தை மீறி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோம் என உறுதியளித்த பிறகு, இன்றைக்கு (அவர்கள் ஒத்துழைக்க) மறுப்பதாகத் தெரிகிறது. சட்டப்படி ஆய்வு என்பதை, வருகிற புகார்கள் குறித்து விசாரிப்பது என்பதை இந்து சமய அறநிலையத் துறை, மேற்கொள்ளும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்," என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: