தென்காசி தீண்டாமை புகார்: குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை?
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின பள்ளி குழந்தைகளுக்கு, ஊர்க்கட்டுப்பாடு இருப்பதாக கூறி கடையில் தின்பண்டம் தர மறுத்த கடைக்காரர் அதை வீடியோவாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட விவகாரம் பேசுபொருளானது.
இது தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த தீண்டாமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய நீதிமன்றம் மூலம் தடை விதிப்பதற்கு தென்காசி மாவட்ட காவல் துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
பழைய பகை
இந்த ஊரில் 2 ஆண்டுகளுக்கு முன் கோவில் திருவிழா மற்றும் திருமண நிகழ்வின் போது இளைஞர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் பட்டியல் சாதியை சேர்ந்த இளைஞர்களை மாற்று சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஜாதி ரீதியாக திட்டியதால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ஊர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் வேலைக்கு சேர அவருக்கு எதிராக போலீசில் இருக்கும் வழக்கு தடையாக இருக்கிறது என்று கருதிய அவரது தரப்பினர்,அவருக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறவேண்டும் என்று சமாதானம் பேசியுள்ளனர். இதை பட்டியல் சாதி தரப்பில் ஏற்கவில்லை.
நடந்தது என்ன?
இந்நிலையில், கடையில் தின்பண்டங்கள் வாங்க வந்த பட்டியல் சாதிக் குழந்தைகளிடம், ஊர்க் கட்டுப்பாடு இருப்பதாகவும், இதனால், அவர்கள் தெருவைச் சேர்ந்தவர்களுக்கு கடையில் பண்டங்கள் தர முடியாது என்றும் பேசிய ஊர் நாட்டாமையான மகேஷ்வரன் அதை வீடியோவாக எடுத்து சாதிக்கான வாட்சாப் குழுவில் பகிர்ந்துகொண்டார்.


இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த விவகாரத்தில் 5 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 147, 294, 506, 153, 377, உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மகேஷ்வரன், ராமச்சந்திர மூர்த்தி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முருகன், குமார், சுதா ஆகிய மூவரை கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்த சமாதானத்தை கூட்டத்திற்கு இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள பட்டியல் சாதி பெண்கள் பாஞ்சாகுளம் கிராமத்தில் நிலவும் சாதிய வன்கொடுமைகளுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் கடந்த 2020 ஆண்டு இளைஞர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஜாதி ரீதியாக திட்டியதால் நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து பட்டியல் சமூக பெண்களையும், குழந்தைகளையும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கேலியும் கிண்டலும் செய்வதாக தெரிவித்தனர்.
பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள பட்டியல் சமூக மாணவர்களுக்கு பள்ளியில் சாதி பாகுபாடுகள் பார்க்க படுவதாகவும் சத்துணவு சாப்பிடும் பட்டியலின மாணவர்களுக்கு உணவளிப்பதில் பாகுபாடு காட்டுவதாகவும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஊடகங்களில் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இது தொடர்பாக பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள பட்டியல் சமூக பெண்கள் மற்றும் மாணவர்களிடம் இன்று பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டதற்கு நேற்றே இது குறித்து பேசிவிட்டதாகவும் மீண்டும் பேச முடியாது என்றும் கூறிவிட்டனர்.
பட்டியல்சாதி சத்துணவு அமைப்பாளர் வாக்குமூலம்
பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் சாதி பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கந்தசாமி, சங்கரன்கோவில் வட்டாட்சியர் பாபு, மண்டல துணை வட்டாட்சியர் ராணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரடியாக பள்ளி ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர் ஆகியோரிடம் விசாரித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளித்தனர்.
அந்த அறிக்கையில் 'இப்பள்ளி ஆசிரியர் அருள் ராஜ் என்பவர் விசாரணையில் ஆஜராகி தாம் நான்கு ஆண்டுகளாகப் பள்ளியில் பணிபுரிந்து வருவதாகவும், தான் பணியாற்றத் தொடங்கிய நாள் முதல் இன்றைய தேதி வரை மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் எந்த சாதிப் பாகுபாடும் காட்டப்பட்டதில்லை என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். மேலும் இப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரியும் செல்வி பரிசுத்தமாள் (பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்மணி) விசாரணையில் ஆஜராகி எந்த குழந்தைகளுக்கும் சாதிப்பாகுபாடு காட்டப்படுவதில்லை, தரம் பிரித்து உணவு வழங்ப்படுவதில்லை, அனைத்து குழந்தைகளையும் ஒன்றாக அமர வைத்தே உணவு வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் சொல்வது என்ன?

தீண்டாமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக செய்தி வெளியானது தொடர்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தீண்டாமை வழக்கில் தொடர்புடைய நபர்கள் தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமை தூண்டும் விதத்தில் செயல்பட்டால் அந்த நபர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள ஒரு பிரிவைப் பயன்படுத்தி ( குற்றவியல் செயல்களை தடுக்க குறிப்பிட்ட நபர்களை குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதை தடுக்கும் சிறப்பு பிரிவு) தீண்டாமை ஒடுக்குமுறை முறையை தடுக்கவும் தொடர் பிரச்னைகளை தவிர்க்கவும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கலாம் ஆனால் அதற்கான உத்தரவை நீதிமன்றம் மட்டுமே பிறப்பிக்க முடியும். காவல்துறை உத்தரவு பிறப்பிக்க முடியாது.
பாஞ்சாகுளம் தீண்டாமை பாகுபாடு தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது ஏற்கனவே 2020ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளதால் இவர்களை ஊருக்குள் நுழைய தடை விதித்தால் ஊர் அமைதியாக வாய்ப்பு உள்ளது. என்பதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் EXTERNMENT PROVISION பிரிவின் கீழ் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை ஊருக்குள் நுழைய தடை விதிப்பது குறித்து காவல் துறை சார்பில் கோப்புகள் தயார் செய்யப்படுகின்றன.
அதனை நீதிமன்றம் தாக்கல் செய்வோம் அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கும். ஆனால் பாஞ்சாகுளம் தீண்டாமை பாகுபாடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய போலீஸ் தடை ஏதும் விதிக்கவில்லை" என்றார் கிருஷ்ண ராஜ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













