"கொள்ளிடம் பழைய பாலத்தை இடிக்காதீர்கள்" - கோரிக்கை விடுக்கும் மக்கள்

- எழுதியவர், ஆர்.அருண் குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருச்சியில் வெள்ளப்பெருக்கால் சிறிது, சிறிதாக இடியும் கொள்ளிடம் பாலம் முற்றிலுமாக இடிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், அந்த பாலத்தை அதன் பழமைத்துவம் மாறாமல் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட்டால் வரும் காலங்களில் அது திருச்சிக்குப் பெருமை சேர்க்கும் சின்னமாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே போக்குவரத்து வசதிக்காக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 12.5 மீட்டர் அகலமும் 792 மீட்டர் நீளமும் 24 தூண்களுடனும் 1928ஆம் ஆண்டில் கட்டபட்டதுதான் கொள்ளிடம் பழைய இரும்புப் பாலம்.
பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த இந்த பாலம் வலுவிழந்ததால், 2007ஆம் ஆண்டு முதல் அதன் மீது கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, அவரது உத்தரவின் பேரில் கொள்ளிடம் பழைய பாலம் அருகே ரூ.88 கோடி மதிப்பீட்டில் சென்னை நேப்பியர் பாலம் வடிவில் புதிய பாலம் கட்டப்பட்டு 2016ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு பழைய பாலத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதை பொது மக்கள் நடைபயிற்சிக்காகப் பயன்படுத்தி வந்தனர்.


இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதில் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடபட்ட பெருவெள்ளத்தில் கொள்ளிடம் பழைய பாலத்தின் 18 மற்றும் 19வது தூண்கள் நீரில் அடித்துச் செல்லட்டதால் பாலம் இடிந்தது.
அதன் பின்னர், ஐஐடி குழுவினர் அந்தப் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து நடத்திய ஆய்வில் பாலத்தை முற்றிலுமாக அகற்ற நெடுஞ்சாலைத் துறைக்கு பரிந்துரைக்கும் அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
ஆனால், திருச்சியின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இந்தப் பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர். இதேவேளை, இந்த பாலத்தை பராமரிக்க ஆகும் செலவு வீண் என்று மற்றுமொரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் பாலம் அகற்றும் பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்கிருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றபட்டது. இதன் காரணமாக காவிரியாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்தது.

காவிரியில் வெள்ள பாதிப்புகளைத் தடுப்பதற்காக கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறப்பட்டது. இதனால் பழைய பாலத்தில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு 17வது தூண் இடிந்து விழுந்தது.
இதனால் பழைய பாலம் அருகே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் இதனால் பழைய பாலத்தை உடனே அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று முக்கொம்பில் ஆய்வு மேற்கொண்ட தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், "கொள்ளிடம் பழைய பாலத்தை இடித்து அகற்ற 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாலத்தை விரைந்து அகற்ற ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அதற்குள் தானாக விழுந்தால் நல்லதுதான். அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க அப்பகுதி தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருகிறது," என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், "காவிரி ஆற்றில் 50,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, மீதமுள்ள தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதுவரை வெள்ளப் பெருக்கால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வடிந்தவுடன் பழைய பாலம் முழுமையாக அகற்றப்படும்," என தெரிவித்தார்.
மேலும் இந்தப் பாலம் குறித்துப் பேசிய சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் ஹேமலதா ராஜீ, "திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உத்தமர்சீலிக்கும் கவுத்தரசநல்லூருக்கும் இடையே மணல்குவாரி செயல்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்ட பல மணல்குவாரிகளில் டிப்பர் லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வந்தது.
இதனால் வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக பாலத்தின் தூண்கள் பிடிமானம் இல்லாமல் ஆபத்தான நிலையில் இருந்ததால் இடிந்தது. எனவே இதுபோல் தொடர்ந்து ஆற்றில் மணல் அள்ளுவதால் புதிய பாலத்தின் தூண்களும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பழைய பாலத்தின் நிலை புதிய பாலத்திற்கும் ஏற்படாத வகையில் புதிய பாலத்தை மாவட்ட நிர்வாகம் காப்பாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன்," என்று தெரிவித்தார்.

இதேபோல் திருச்சியின் அடையாளமாக உள்ள பழைய கொள்ளிடம் பாலம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலரும் சேவை சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவருமான பால் குணா லோகநாத் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழிடம் இது தொடர்பாக பேசிய அவர் "திருச்சிக்கு ஆறுகள் விஷயத்தில் பெருமை சேர்ப்பது காவிரி மற்றும் கொள்ளிடம். இதில் முக்கொம்பில் இருந்து ஸ்ரீரங்கம் வழியாகப் பிரிந்து வரும் கொள்ளிடம் ஆற்றின் மேல் கட்டபட்ட இந்தப் பாலம் மரபு மிக்கது.
ஆங்கிலேயர் காலத்தில் இரும்புத் தூண்களால் கட்டபட்ட இந்தப் பாலம் சமீபத்தில் ஒவ்வொரு தூணாக இடிந்து வருகிறது. இதை ஏன் பழமை மாறாமல் புதுப்பிக்க முடியாது? தற்போதுள்ள பல அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு புதுப்பிக்கலாமே!
ஏனென்றால் பழமையானவற்றைப் பழையது என அனைவரும் தூக்கி எறிந்துவிட்டால் நமக்கு வரலாறு என்றோ நினைவு என்றோ ஒன்று இருக்காது. எனவே திருச்சிக்கு அழகு சேர்க்கும் கொள்ளிடம் பழைய பாலத்தை, பழமை மாறாமல் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட்டால் வரும் காலங்களில் திருச்சிக்கு அதுவே பெருமை சேர்க்கும் சின்னமாக இருக்கும்," என தெரிவித்தார்.


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













