சுவாமிமலை சோதனையில் ஆயிரம் ஆண்டு பழமையான சிலைகள் கைப்பற்றப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், IDOL WING
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடத்திய சோதனையில் 1,000 ஆண்டுகள் பழமையான ஐந்து சிலைகள் உட்பட 8 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சிலைகள் கிடைத்தது எப்படி?
ஏற்கனவே சில சிலை கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள மாசிலாமணி என்பவர் கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் சட்டவிரோதமாக பல பழங்காலச் சிலைகளை வைத்திருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
ஆனால், ஆகஸ்ட் எட்டாம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அங்கே சோதனை நடத்தியபோது சிலைகள் ஏதும் கிடைக்கவில்லை. அதற்குள் அந்த நபர் அந்தச் சிலைகளை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலைக்கு மாற்றிவிட்டதாகத் தெரியவந்தது.
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அங்கு சோதனை நடத்துவதற்கு வியூகம் வகுத்தனர். அதன்படி, கும்பகோணத்தைச் சேர்ந்த அணி ஒன்று உருவாக்கப்பட்டு, ஆகஸ்ட் 9ஆம் தேதி மதியமே சுவாமிமலையில் உள்ள மாசிலாமணியின் வீட்டில் சோதனை நடத்தியது.
இந்தத் தேடலில் முதலில் ஒரு நடராஜர் சிலை கிடைத்தது. பிறகு தேடலைத் தீவிரப்படுத்தியபோது, மேலும் 7 சிலைகள் கிடைத்தன. இந்த எட்டு சிலைகளும் சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய்க்கு விலைபோகக்கூடியவை என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவிக்கிறது.
இதில் 113 செ.மீ. உயரமுள்ள போகசக்தியின் சிலையும் 68 செ.மீ. உயரமுள்ள ஆண்டாளின் சிலையும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சுமார் 200 கிலோ எடையைக் கொண்டது. 79 செ.மீ. உயரமுள்ள நிற்கும் புத்தரின் சிலையும் 27 செ.மீ. உயரமுள்ள புத்தரின் சிலையும் இதேபோல 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, 800 கிலோ எடையுடைய சிவகாமி அம்மன் சிலையும் இங்கிருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும்,விஷ்ணு, நடராஜர், ரமண மகரிஷி ஆகிய சிலைகளும் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டன.

பட மூலாதாரம், IDOL WING
இந்தத் தேடுதல் வேட்டையின்போது, சம்பந்தப்பட்ட சிலைகளின் பழமை குறித்து இந்தியத் தொல்லியல் துறை வழங்கிய சான்றிதழ்களும் கண்டெடுக்கப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது.
போக சக்தி சிலைக்கு 2017லும் விஷ்ணு மற்றும் புத்தர் சிலைகளுக்கு 2011லும் இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்தச் சிலை தங்களுக்குச் சொந்தமானது என்பதைக் காட்டுவதற்கு, அங்கிருந்தவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. இதையடுத்து இந்தச் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

பட மூலாதாரம், IDOL WING
இந்தச் சிலைகள் எந்தக் கோவிலில் இருந்து திருடப்பட்டவை என்பது குறித்து தெரியாததால், அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சிலைகள் எங்கிருந்து வந்தவை என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் மாசிலாமணியிடமும் இல்லை. போதிய ஆவணங்கள் இன்றி இந்தச் சிலைகளை ஏன் வைத்திருந்தார் என்பதற்கான விளக்கமும் மாசிலாமணியிடம் இல்லை. இந்தச் சிலைகளை எப்படி வாங்கினார் என்பது குறித்தும் அவரால் விளக்கமளிக்க முடியவில்லை.
இதைடுத்து மாசிலாமணி மீது கும்பகோணம் காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவுசெய்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளும் துவங்கியுள்ளன. கைப்பற்றப்பட்ட எட்டு சிலைகளில் ஐந்து சிலைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை எனத் தெரியவருவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூறுகிறது.
இந்த சோதனை நடந்து, சிலைகள் கைப்பற்றப்பட்டவுடன், சுவாமி மலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட சிற்பிகள் ஒன்றுகூடி சிற்பி மாசிலாமணி வீட்டில் இருந்து சிலைகளை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். மேலும் காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர்.
இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டதால், கும்பகோணத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் சுவாமிமலைக்கு வரவழைக்கப்பட்டனர்.

பட மூலாதாரம், IDOL WING
மாசிலாமணி வீட்டில் இருந்து நடராசர் ,யோகசக்தி அம்மன், ஆண்டாள் , நின்ற நிலையில் புத்தர் சிலை, அமர்ந்த நிலையில் புத்தர் சிலை, ரமணர் ,விஷ்ணு, ஆகிய ஏழு சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு காவல் துறையினர் கைப்பற்றி சென்னைக்கு எடுத்துச் சென்றனர். 7 அடி உயரமுள்ள சிவகாமி அம்மன் சிலையை எடுத்துச் செல்ல முடியாதால் அந்த சிலை அவரது வீட்டிலேயே வைக்கப்பட்டது.
இது குறித்துப் பேசிய மாசிலாமணியன் மகன் கௌரிசங்கர், காவல்துறையினர் கைப்பற்றி சென்ற ஏழு சிலைகளும் தான் தயாரித்த சிலைகள் என்றும், இவை தொன்மையான சிலைகள் அல்ல என்றும் தெரிவித்தார்.
ஆனால், இந்த மாசிலாமணி மீது ஏற்கனவே சிலை கடத்தல் தொடர்பாக வழக்குகள் (சிவகாஞ்சி வழக்கு) உள்ளதாக காவல்துறை கூறுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













