ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மனு - விசாரிக்க ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம்

ராமர் பாலம்

பட மூலாதாரம், NASA

(இன்று 04/08/2022) இந்தியா, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.)

ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த ஜூலை 26ஆம் தேதி பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதிகளில் ஒருவா் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் விசாரணை நடைபெறவில்லை.

இதனை குறிப்பிட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 'விசாரணைக்காக உங்கள் மனு பட்டியலிடப்படும்' என்று சுப்பிரமணியன் சுவாமியிடம் புதன்கிழமை தெரிவித்தாா்.

தமிழகத்தின் தென்கிழக்கு கடற்பகுதியில் உள்ள பாம்பன் தீவுக்கும் இலங்கையின் வடமேற்கு கடற்பகுதியில் உள்ள மன்னாா் தீவுக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் உருவான ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டிருந்தாா்.

சேது சமுத்திர திட்டத்துக்கு எதிரான பொது நல வழக்கையொட்டி, அவா் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தாா்.

5 ஆண்டுகளில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அரசு

ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

5 ஆண்டுகளில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை செய்திருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளதாக 'தினந்தந்தி' செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், "துணை ராணுவ பிரிவுகளான சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப், சி.ஐ.எஸ்.எப். ஐ.டி.பீ.பி., எஸ்.எஸ்.பி., அசாம் ரைபிள் மற்றும் என்.எஸ்.ஜி. ஆகியவை மத்திய ஆயுதப் படைகளின் அங்கமாகும். இவற்றில் சுமார் 10 லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த படைப்பிரிவுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 657 வீரர்கள் தற்கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் நேற்று இந்த தகவலை வெளியிட்டார்.

அதில், கடந்த 2021-ம் ஆண்டில் 153 வீரர்களும், 2020-ல் 149 வீரர்களும், 2019-ல் 133 வீரர்களும், 2018-ல் 97 வீரர்களும், 2017-ல் 125 வீரர்களும் தற்கொலை செய்ததாக குறிப்பிட்டு உள்ளார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற்ற மத்திய அரசு

தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா

பட மூலாதாரம், Getty Images

தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக 'இந்து தமிழ் திசை' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு 81 திருத்தங்களை முன்வைத்துள்ள நிலையில் தற்போது இம்மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ''தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா மீது நாடாளுமன்றக் கூட்டுக் குழு 81 திருத்தங்களையும் 12 பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. இதன் விளைவாக, இம்மசோதா திரும்பப் பெறப்படுகிறது. நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்வைத்துள்ள வரையறைக்கு உட்பட்டு புதிய மசோதா உருவாக்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

'கோட்டா கோ கம' கூடாரங்களை அகற்ற காலக்கெடு

'கோட்டா கோ கம'

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இலங்கை காலிமுகத்திடலில் இருக்கும் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் 'கோட்டா கோ கம' போராட்டம் தொடர்பான கூடாரங்களை அகற்ற காவல்துறை காலக்கெடு விதித்துள்ளதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், அங்கு நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்கள் ஆகஸ்ட் 5ம் தேதி மாலை 5 மணிக்கு முன்னர் அகற்றவேண்டுமென காவல்துறை, ஒலிப்பெருக்கி ஊடாக அறிவித்துள்ளனர்.

'சட்டவிரோத கட்டமைப்புகளை'அகற்ற மீதமுள்ள எதிர்ப்பாளர்களிடம் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த அறிவிப்பினால் அங்கு சற்றே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: