தடைசெய்யப்பட்ட வார்த்தைகள்: சொற்களைப் பார்த்து அஞ்சுகிறதா அரசு?

ஓம் பிர்லா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 18ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 12ஆம் தேதிவரை நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தகாத வார்த்தைகளின் நீண்ட பட்டியல் ஒன்றை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலத்திலும் இந்தியிலும் பயன்படுத்தத் தகாத வார்த்தைகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால், அரசியல்வாதிகள் விவாதத்தின்போது பயன்படுத்தும் மிகச் சாதாரணமான வார்த்தைகள்கூட இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஆத்திரமூட்டியிருக்கிறது.

மக்களவைச் செயலகம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தத் தகாத வார்த்தைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், சகுனி, சர்வாதிகாரி, ஜூம்லாஜீவி, கோவிட்டை பரப்புபவர், காதுகேட்காத அரசு, அகங்காரம், கறுப்பு தினம், குண்டர்களின் அரசு, இரட்டை வேடதாரி, காலை நக்குபவர், நாடகம், ஊழல், திறமையற்ற உள்ளிட்ட பல வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த வார்த்தைகள் தடையை மீறி பயன்படுத்தப்பட்டால், அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிடக்கூடும். ஆனால், இந்தத் தடை எதிர்க்கட்சிகளை ஆத்திரமடைய வைத்திருக்கிறது. இந்தப் பட்டியலில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள், எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிக்கப் பயன்படுத்திய வார்த்தைகளின் தொகுப்பு என்கின்றன எதிர்க்கட்சிகள்.

"மோடி அரசு குறித்த உண்மையைத் தெரிவிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. விஸ்வகுரு, அடுத்த என்ன?" எனக் கேட்டிருக்கிறார் ஜெய்ராம் ரமேஷ்.

திருணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மொஹுவா மைத்ரா, இன்னும் கடுமையாக அரசைச் சாடியிருக்கிறார். "நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளின் பட்டியலில் சங்கி என்ற வார்த்தை இல்லையே? இந்தியாவைக் காப்பாற்ற பா.ஜ.க. எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைச் சொல்ல எதிர்க்கட்சிகள் பயன்படுத்திய வார்த்தைகள் அனைத்தையும் அரசு தடைசெய்துவிட்டது" என்கிறார் மொஹுவா.

மொஹுவா

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்ற செயலகம் இதுபோல, பயன்படுத்தத்தகாத வார்த்தைகளின் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறும் வார்த்தைகள் பல்வேறு விதங்களில் தொகுக்கப்படுகின்றன. இந்திய மாநிலங்களின் சட்டப்பேரவைகளால் அறிவிக்கப்பட்ட வார்த்தைகள், காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்றங்களில் பயன்படுத்தத்தகாத வார்த்தைகளாக அறிவிக்கப்பட்டவை ஆகியவற்றை மக்களவை செயலகம் தொடர்ந்து தொகுத்து வருகிறது. 2018லிருந்து தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டாலும், இந்த ஆண்டுதான் இந்தப் பட்டியல் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் வார்த்தைகளின் தொகுப்பு கடந்த 2021ஆம் ஆண்டில் சட்டப்பேரவைகளாலும் மக்களவை, மாநிலங்களவை சபாநாயகர்களாலும் பயன்படுத்தத்தகாத சொற்களாக அறிவிக்கப்பட்டவை. மேலும், 2020ஆம் ஆண்டில் காமல்வெல்த் நாடுகளின் பாராளுமன்றத்தில் பயன்படுத்தத்தகாத வார்த்தைகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சில வார்த்தைகளைத் தனியாகப் பார்க்கும்போது தகாத வார்த்தைகளாக இல்லாவிட்டாலும்கூட, வேறு வார்த்தைகளுடன் சேர்த்துப் பார்க்கும்போது தகாத பொருளைத் தரலாம் என்பதால் அவை இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறது நாடாளுமன்றச் செயலகம்.

இந்தத் தகாத வார்த்தைகளின் பட்டியல், இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பட்டியல் ஆங்கில வார்த்தைகளின் பட்டியல். இரண்டாவது, இந்தி வார்த்தைகளின் பட்டியல். பிற மொழிகளில் உள்ள தகாத வார்த்தைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, முதல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

su. venkatesan

" துரோகம், ஊழல், முதலைக் கண்ணீர், ஏமாற்று, இழிவான, நாடகம், இரட்டைத் தன்மை, கண் துடைப்பு, போலி, பொய், மோசடி, வதந்திகள், பேராசை, முதிர்ச்சியின்மை, லாலிபாப், குழப்பம், தவறான தகவல், தவறாக வழி நடத்துவது, வெட்கம் - இவை எல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லையே. இந்த வார்த்தைகள் இல்லாமல் சட்டங்களே இயற்ற முடியாதே. இந்தப் பட்டியலை தயாரித்தவர்களை பாராட்டலாம். இந்த அரசின் மீது என்ன விமர்சனங்கள் வரும் என்பதை யோசித்து வார்த்தைகளை தேர்வு செய்திருக்கிறார்கள். இந்தச் சொற்கள் இல்லாமல் போனால் யாரும் கவலைப்பட போவதில்லை. உங்கள் பெயர்களே போதுமானது" என்கிறார் மதுரைத் தொகுதியின் சிபிஎம் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன்.

மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடத்தக்கூடாது என்று சொல்லியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் மீதான நேரடித் தாக்குதல் இது. ஜனநாயகத்தின் குரல்வளை இந்த அரசால் நெரிக்கப்படுகிறது." என்கிறார் அவர்.

நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்ற நடைமுறைகள் கடந்த சில ஆண்டுகளாக அர்த்தமற்றதாக, பொருளற்றதாக மாற்றப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியான நடவடிக்கைதான் இது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார்.

"வார்த்தைகளுக்கு என தனியான அர்த்தம் கிடையாது. அது வரும் இடத்தைப் பொறுத்துதான் அர்த்தத்தைப் பெறுகிறது. ஒரு சூழலில் ஒரு பொருளைத் தரும் வார்த்தை இன்னொரு சூழலில் இன்னொரு அர்த்தத்தைத் தரும். இந்தப் பட்டியல் எந்திரத்தனமாக உருவாக்கப்பட்டுள்ளது" என்கிறார் அவர்.

சபாநாயகரைப் பார்த்து வழக்கமாக உறுப்பினர்கள் சொல்லும் வாக்கியங்களையும் தடைசெய்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார் ரவிக்குமார். "நீங்கள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதைத் தடை செய்திருக்கிறார்கள். இப்படி வழக்கமாகப் புழங்கும் சொற்களையே தடை செய்தால், எதைத்தான் பேசுவது? இப்படி பேசக் கூடாத சொற்களைப் பட்டியலிடுவதற்குப் பதிலாக, இதைத்தான் பேச வேண்டும் என்று சொல்லி அதற்கான சொற்களை பட்டியலிட்டால் பிரச்சனையில்லாம்ல இருக்கும்.

தொடர்ந்து நாடாளுமன்ற மரபுகள் மோசமாக்கப்பட்டு வருகின்றன. எந்த மசோதா மீதும் சரியாக விவாதம் நடப்பதில்லை. குறைந்தபட்ச நேரம்கூட ஒதுக்காமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. நாடாளுமன்ற நடைமுறை பலவிதங்களிலும் முடக்கப்படுகிறது. பொருளற்றதாக மாற்றப்படுகிறது. ஆகவேதான், இந்தத் தடைசெய்யப்பட்ட சொற்களின் பட்டியல் நம்மைப் பெரிய நெருக்கடியாக உணர வைக்கிறது" என்கிறார் ரவிக்குமார்.

இந்தப் பட்டியலுக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கமொன்றை அளித்திருக்கிறார். "இந்தக் கையேடு வெளியிடுவது 1954ஆம் ஆண்டிலிருந்து இருக்கும் நடைமுறைதான். எந்த வார்த்தையும் தடைசெய்யப்படவில்லை. எம்.பிக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகத் தெரிவிக்கலாம். அந்த உரிமையை யாரும் பறிக்கவில்லை. ஆனால், சபையின் மாண்புக்கு ஏற்ப பேச வேண்டும். ஆளும் கட்சிகள் பயன்படுத்திய வார்த்தைகளும் கடந்த காலத்தில் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தடைசெய்யப்பட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அந்த வார்த்தையை மட்டும் நீக்குவதா, வரியையே நீக்குவதா அல்லது அந்த ஒட்டுமொத்தப் பேச்சையும் நீக்குவதா என்பதை சபாநாயகர்தான் முடிவெடுப்பார். ஜூலை 18ஆம் தேதி அவை துவங்கும்போது, இந்தத் தடையின் அர்த்தம் என்ன என்பது தெளிவாகிவிடும்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :