அறிவியல் அதிசயம்: வசியம் செய்யும் உயிரிகளின் பிரமிக்க வைக்கும் வரலாறு

பட மூலாதாரம், Westend61 / Getty Images
- எழுதியவர், பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்
- பதவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிட்டது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினாறாவது கட்டுரை இது. இப்போது இந்தக் கட்டுரை #மறுபகிர்வு செய்யப்படுகிறது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
ஹிப்னாடிசம் (Hypnotism) என்பது ஒருவர் மற்றொருவரின் மூளையின் செயல்பாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவரை தன் விருப்பப்படி இயக்கும் ஒரு கலை. ஆனால் யாரும் ஹிப்னாடிசம் செய்து பிறர் மனதைக் கட்டுப்படுத்துவதை நான் பார்த்ததில்லை. இங்கே கேள்வி என்னவென்றால், "நீங்கள் வசியம் செய்து மற்றவரைக் கட்டுப்படுத்த முடியுமா? அதாவது மற்றவர்கள் உங்கள் கட்டளையை இயந்திரம் போலச் செய்து முடிப்பார்களா?" என்பதுதான்.
இது சாத்தியமா?
மற்றவர்களின் மனதைக் கட்டுப்படுத்த ஒரு வெற்றிகரமான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க முடியுமா? அப்படி ஒரு தொழில்நுட்பம் உங்களிடமிருந்தால் இந்த உலகம் உங்கள் காலடியில் இருக்கும். உங்கள் கட்டளையை உலக மக்கள் அனைவரும் நிறைவேற்றுவார்கள்.
பூமியில் வாழும் கோடான கோடி உயிரினங்களில் பல இந்த திறமையைக் கொண்டுள்ளன. இவை தங்கள் விருப்பத்திற்கேற்ப மற்ற உயிரினங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு உயிர் வாழ்கின்றன. இவற்றில் இரண்டை மட்டும் இந்த கட்டுரையில் பார்ப்போம்.
வசியம் செய்யும் வைரஸ்….
பூமியில் வாழும் உயிரினங்களில் 90 சதவீதத்திற்கும் மேல் பூச்சிகளே ஆக்கிரமித்துள்ளன. மேலும் எல்லா ஜீவராசிகளையும் கணக்கிட்டால் பாதிக்குமேல் பூச்சிகள்தான் பூமியில் வலம்வருகின்றன. மேலும் வகை வகையாக 10 லட்சம் பூச்சியினங்கள் உலகில் உள்ளன.
பூச்சிகளுக்கு நான்கு பருவங்கள் உண்டு. ஒன்று அந்துப்பூச்சிப் பருவம். இவை பார்க்கக் கிட்டத்தட்ட வண்ணத்துப்பூச்சிகள் போலிருக்கும். பெண் அந்துப்பூச்சிகள் செடிகளில் நூற்றுக்கணக்கான முட்டைகளை இடுகின்றன. இந்த முட்டைகள்தான் பூச்சிகளின் இரண்டாம் பருவமாகும். இந்த முட்டைகளிலிருந்து மூன்றாம் பருவமான கம்பளிப்புழுக்கள் வெளிவருகின்றன. இந்த புழுக்கள் கோரப்பசியுடையது. இவை பசுமையான இலைகள், மொட்டுகள், காய்கனிகள் என அனைத்தையும் மென்று தின்ன ஆரம்பிக்கின்றன.
விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் மற்றும் காய்கனிகளில் பாதிக்கு மேல் இவைகளே தின்று பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் உலகமெங்கும் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. பின்னர் இவை ஒவ்வொன்றும் தங்களுக்கு ஒரு கூட்டைக் கட்டிக்கொள்கின்றன. கூட்டுப்புழு பூச்சிகள் நான்காம் பருவமாகும். இதிலிருந்துதான் அந்துப்பூச்சிகள் வெளிவருகின்றன.

பட மூலாதாரம், mikroman6 / Getty
முட்டையிலிருந்து வெளிவரும் இந்த கம்பளிப்புழுக்களின் அட்டூழியம் எண்ணிலடங்காதது. பல ஆயிரக்கணக்கான புழுக்கள் ஒன்று சேர்ந்து உலகில் பல இடங்களில் ரயிலையே நிறுத்தியுள்ளன.
ஒரு ரயில் இஞ்ஜினின் எடை சுமார் ஒரு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் கிலோ ஆகும். ஒரு ரயில் பெட்டி சுமார் 40,000 கிலோ எடையிருக்கும். ஒரு ரயிலில் பத்து பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தால் பெட்டிகளின் எடை மட்டும் சுமார் நான்கு லட்சம் கிலோவாக இருக்கும்.
ரயிலை நிறுத்திய புழுக்கள்
ரயில்கள் மோதி இந்தியாவில் எத்தனையோ யானைகள் பலியாகியுள்ளன. எத்தனையோ பேருந்துகள் மற்றும் சரக்கு லாரிகள் ஓடும் ரயிலில் மாட்டி சின்னாபின்னமாகியுள்ளது. இந்த விபத்தின் போது ரயிலில் இருப்பவர்களுக்கு சத்தம் கேட்கலாம், மற்றபடி ரயில் தடையில்லாமல் சென்று கொண்டிருக்கும். இதற்குக் காரணம் ரயிலின் எடையும் மற்றும் அதன் வேகமுமாகும். ஆனால் இந்த ரயிலைப் புழுக்கள் ஒன்று சேர்ந்து நிறுத்தியுள்ள சம்பவம் நடந்ததுண்டு என்றால் நம்புவீர்களா?
நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது வரலாறு.
ரயிலை நிறுத்தியது சிவப்பு கம்பளிப்புழுவாகும் (Red hairy caterpillar). இந்த புழுவின் உடலில் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் முடிகள் நிறைந்திருக்கும். இதன் உடல் 1 கிராம் கூட இருக்காது. நீளம் சுமார் மூன்று இன்ச் இருக்கும். இவை மிகவும் சுறுசுறுப்பானவை. வேகமாக ஓடும் சக்தியுடையது. இந்த புழு வேர்க்கடலை தோட்டத்தில் வரும். ஒன்று இரண்டு வந்தால் பரவாயில்லை. ஆயிரக்கணக்கில் வரும். வேர்க்கடலை செடியின் இலை, தழை என எல்லாவற்றையும் தின்று தீர்க்கும். இந்த புழுக்கள் ஒரு தோட்டத்தில் வந்தால் அங்கு மருந்துக்குக் கூட செடியில் இலையைப் பார்க்க முடியாது. ஆடு, மாடு மேய்ந்தால் கூட ஆங்காங்கே பச்சை தெரியும். ஆனால் இந்த புழுக்களின் கோரப்பசிக்கு முழுத் தோட்டமும் பலியாகும். விவசாயிகளின் நிலை அதோகதிதான்.

பட மூலாதாரம், Andrew Hipperson / EyeEm / Getty Images
இந்த புழுக்கள் கூடு கட்டும் காலத்தில் ஆயிரக்கணக்கில் ஒரு இடத்தில் குவிந்து கிடக்கும். அப்படி ஒரு நாள் சோழவந்தான் அருகே தண்டவாளத்தில் பல ஆயிரக்கணக்கான சிவப்பு கம்பளிப் புழுக்கள் குவிந்து கிடந்துள்ளன. மதுரையிலிருந்து சுமார் 600 பயணிகளுடன் வேகமாக வந்த பாண்டியன் விரைவு ரயில் இந்த புழுக்களின் மேல் ஏறியது. புழுக்கள் ரயிலின் சக்கரத்தில் நசுங்கி கூழ் போல் திரவ நிலையை அடைந்ததுள்ளது. இதனால் விழு விழு என அதிக வழுக்கும் தன்மை உடைய புழுவின் சகதி உருவாகியுள்ளது. இந்த சகதியில் ரயிலின் சக்கரங்கள் மாட்டிக்கொண்டன. இங்கு சக்கரம் சுற்றுகிறது. ஆனால் ரயிலால் நகர முடியவில்லை. சக்கரம் நின்ற இடத்திலேயே சுற்றியவண்ணம் இருக்கிறது. ரயிலால் இந்த புழுக்களின் கூட்டத்தைத் தாண்ட முடியவில்லை. சகதியில் லாரி மாட்டிக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். சோழவந்தானில் பாண்டியன் விரைவு ரயில் புழுக்களின் சகதியில் மாட்டிக்கொண்டது. இது நடந்து சுமார் 15 ஆண்டுகள் இருக்கும்.
2011ஆம் ஆண்டு சீனாவிலும் இது மாதிரி புழுக்கள் வேகமாக வந்த ஒரு ரயிலை நிறுத்தியுள்ளது. மேலும் நியூசிலாந்தில் 2013ல் ஒரு வகையான புழுக்கள் ரயிலை நிறுத்தியுள்ளன .
நடுவழியில் ரயில் நின்றால் பழுது நீக்கப் பொறியாளர்களை அழைப்பது வழக்கம். ஆனால், இந்த தருணத்தில் பூச்சியியல் வல்லுநர்களை வரவழைத்து ஆலோசனை கேட்டுள்ளனர்! ரயிலின் போக்குவரத்தை சரி செய்ய முதலில் தண்டவாளத்திலிருந்த புழுக்களை அகற்றினர். பின்னர் சக்கரத்திலிருக்கும் இறந்த புழுக்களின் சகதியைக் காரதிரவம் கொண்டு கழுவிச் சுத்தப்படுத்தினர். பின்னர் தான் ரயில் அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கியது.
புழுக்களை பாடுபடுத்தும் வைரஸ்
வேடிக்கையைப் பாருங்க, யானையால் தடுத்து நிறுத்த முடியாத ரயிலைப் புழுக்கள் நிறுத்தியுள்ளன! இவ்வளவு வலிமையான புழுக்களை ஒருவகை வைரஸ் என்னப் பாடுபடுத்துகிறது எனப் பார்ப்போம்.
இந்த வைரசை பலாப்பழத்துடன் ஒப்பிடலாம். ஒரு சராசரி அளவில் உள்ள பலாப்பழத்தை வெட்டிப் பார்த்தால் உள்ளே அழகாக சுமார் 150 பலாப்பழச் சுளைகளுக்கு மேல் இருக்கும். ஒரு சுளையை எடுத்துப் பிய்த்து பார்த்தால் உள்ளே பலாக் கொட்டை (விதை) இருக்கும். இதே போன்ற உருவ அமைப்பில் ஒரு வைரஸ் உள்ளது. இந்த வைரஸ், பஃக்குலோவைரஸ் (Baculovirus) என அழைக்கப்படுகிறது. இந்த வகை வைரஸ் பூச்சியினங்களைக் குறிவைத்துத் தாக்கி அழிக்கிறது.

பட மூலாதாரம், NANOCLUSTERING/SCIENCE PHOTO LIBRARY / Getty Image
சுமார் 150 வைரசுகள் ஒன்று சேர்ந்து பாலிகிட்ரான் (Polyhedron) என்ற ஒரு அமைப்பை உருவாக்குகின்றது. இந்த பாலிகிட்ரானை முழு பலாப்பழத்தோடு ஒப்பிடலாம். காரணம் பலாப்பழத்தில் சுளைகள் அடுக்கப்பட்டிருப்பது போல் இந்த பாலிகிட்ரானில் சுமார் 150 வைரசுகள் அடுக்கிவைக்கப்படுள்ளன. இந்த வைரசை பலாச்சுளைகளோடு ஒப்பிடலாம். ஆனால் இந்த பாலிகிட்ரானும் வைரசும் கண்ணுக்குத் தெரியாது. காரணம் ஒரு பாலிகிட்ரான் இரண்டு மைக்ரோ மீட்டர் அளவில்தான் இருக்கும். அதாவது ஒரு பாக்டீரியத்தின் அளவில்தான் இந்த பாலிகிட்ரான் இருக்கிறது. இதைப் பார்க்க ஒரு சாதாரண நுண்ணோக்கி போதும். இதன் உள்ளே உள்ள வைரஸ் 40 நானோமீட்டர் தடிமனில் 200 நானோ மீட்டர் நீளத்திலிருக்கும். இதனைப் பார்க்க எலக்ட்ரான் நுண்ணோக்கி வேண்டும்.
பலாச்சுளைக்குள் விதை இருப்பது போல் இந்த வைரசுக்குள் அதன் மரபணு (DNA) இருக்கிறது. இந்த பாலிகிட்ரான், இலைகளில் ஆங்காங்கே இருக்க வாய்ப்புள்ளது. கம்பளிப்பூச்சிகள் தாவர பாகங்களை உண்ணும் போது வைரஸ் குடலுக்குள் நுழைகிறது. நுழைந்த உடன் பலாப்பழம் போலிருக்கும் பாலிகிட்ரான் அங்குள்ள கார திரவத்தில் கரைகிறது. இதனால் உள்ளே இருக்கும் வைரஸ் நூற்றுக்கணக்கில் வெளிவருகின்றன. பின் இவை கம்பளிப்பூச்சியின் வயிற்றில் உள்ள செல்களுக்குள் நுழைகின்றன. பின் வைரஸ் அந்த செல்களின் உள்ளே பல்கிப்பெருகுகின்றன. ஒரே நாளில் இந்த வைரஸ் புழுவின் உடல் முழுவதும் பரவுகின்றன. இப்போது பாதிக்கப்பட்ட கம்பளிப்பூச்சியை வைரஸ் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட புழு தாவரங்களின் நுனியை நோக்கி ஊர்ந்து செல்லத் தொடங்குகிறது.
சரியாகச் சொல்லவேண்டுமானால் வைரஸ் மேலே ஏறச் சொல்கிறது. இந்த அப்பாவிப் புழு வைரசின் சொற்படி செடியின் மேல் நோக்கி நடக்க ஆரம்பிக்கிறது. பின் செடியின் உச்சியை அடைகிறது. இந்த நேரத்தில் வைரசின் தாக்கம் அதிகரிக்கிறது. பின்னர் இந்தப் புழுச் செடியின் உச்சியில் உள்ள இலைகளுக்குக் கீழே வந்து ஓய்வெடுக்கத் தொடங்குகிறது. வைரஸ் புழுவை ஆக்ரோஷமாகத் தாக்கப் புழு தலைகீழாகத் தொங்கி இறந்துவிடுகிறது.
இந்த நிலையில், புழுவின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் செல்களையும் பயன்படுத்தி வைரஸ் தன் சந்ததியைக் கோடிக்கணக்கில் பெருக்கிக்கொள்கிறது. கூட்டுப்புழுவின் வெளி தோலில் ஒரு பகுதி மட்டும் மீதியிருக்கும். மற்றபடி புழுவில் உள்ள அனைத்து உறுப்புகளும் வைரசாக மாறி திரவ நிலைக்கு வருகிறது. இந்த நிலையில்தான் புழு இலைக்கு அடியில் தலைகீழாகத் தொங்க ஆரம்பிக்கிறது. அதாவது வைரஸ் தொங்க வைக்கிறது. புழு தொங்குகிறது.
இப்போது கோடிக்கணக்கான வைரஸ்களைக் கொண்ட திரவம் புழுவின் வாய்வழியே கசிகிறது. செடியின் மேலிருந்து வைரஸ் அடங்கிய திரவம் சொட்டுவதால் தாவரத்தில் உள்ள பெரும்பாலான இலைகளில் சிதறி பரவுகிறது. பின் இந்த செடியிலுள்ள இலையை இன்னொரு கம்பளிப்பூச்சி வந்து மென்று தின்றால், வைரஸ் அந்த புழுவின் உடலுக்குள் சென்று நோயை உண்டாக்குகிறது. இவ்வாறாக இந்த வைரஸ்கள் தன் வசிய சக்தியைப் பயன்படுத்தி செடிமுழுக்கப் பரவிவிடுகிறது. இதனால்தான் இந்த வைரஸ்களால் அதிக கம்பளிப்பூச்சிகளைக் கொல்ல முடிகிறது.
நோயுற்ற கூட்டுப்புழு செடியின் உச்சிக்கு வரவில்லை என்றாலும்; இவை செடியின் உச்சியில் போய் நின்று கொண்டிருந்து பறவைகளுக்கு உணவாகியிருந்தாலும்; இது செடியின் உச்சியிலுள்ள இலைக்கு அடியில் போய்ச் சேராதிருந்தாலும்; அங்கே அது தலைகீழாகத் தொங்கவில்லை என்றாலும்; அந்த நேரத்தில் உடலிலுள்ள உறுப்புக்கள் எல்லாம் வைரசாக மாற்றி திரவ நிலைக்குக் கொண்டு வரவில்லை என்றாலும், இந்த வைரஸ் செடி முழுக்க பரவ வாய்ப்பில்லை.

பட மூலாதாரம், Naturfoto Honal / Getty Images
வைரஸ் செடி முழுக்க பரவினால்தான் அதனை சாப்பிடும் நிறைய கம்பளிப்பூச்சிகளை இந்த வைரசால் தாக்க முடியும். அப்போதுதான் வைரஸ் தன் சந்ததியினரை நிறைய உருவாக்கமுடியும். தன் இனத்தைப் பெருக்கவே மேற்கண்ட அனைத்தையும் வைரஸ் செய்யச் சொல்லப் புழுக்கள் செய்து முடிக்கிறது என்பதே உண்மை.
ஒருவரை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நம் விருப்பப்படி, அனைத்து கட்டளைகளையும் செய்யவைப்பது முடியாதகாரியம். ஆனால் இந்த செயலைக் கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ்கள் செய்வது விந்தைதான். நான் இத்தகைய வைரசில் ஆய்வுகளை மேற்கொண்டு பார்த்தே மரபணுக்கள் மற்றும் உயிரியியலின் நவீன தொழில்நுட்பங்களைப் புரிந்துகொண்டேன். இத்தகைய புதிய வைரசைக் கண்டறியும் வாய்ப்பும் கிடைத்தது.
நத்தைகளை வசப்படுத்தும் ஒட்டுண்ணிகள்…
லுகோகுளோரிடியம் (Leucochloridium sp) என்பது ஒரு தட்டைப்புழு ஆகும். இது ஓர் ஒட்டுண்ணி. இதனை நுண்ணோக்கியில் மட்டுமே நம்மால் பார்க்க முடியும். இந்த புழு நத்தையின் உடலுக்குள் நுழைகிறது. பின்னர் வெற்றிகரமாக நத்தையின் கல்லீரலை அடைகிறது. அங்கே அது நிறையச் சந்ததிகளை உருவாக்குகிறது.
புதியதாக உருவான இந்த புழுக்கள் நத்தையின் கண் பகுதிக்குச் சென்றடைகிறது. நத்தைக்கு நம்மை மாதிரியே இரண்டு கண்கள் உள்ளன. ஆனால் நத்தையின் கண் அமைப்பு நம்மில்லிருந்து வேறுபடுகிறது. இது நண்டின் கண்போன்றுள்ளது. அதாவது தண்டு மாதிரியான அமைப்பின் நுனியில் நண்டுக்கும் நத்தைக்கும் கண்கள் இருக்கும். இதனால் இவற்றுக்குத் தலையைத் திருப்பாமல் தண்டை மட்டும் திருப்பி தன்னைச் சுற்றியுள்ளவற்றைப் பார்க்க முடியும்.
சரியாகச் சொல்லவேண்டும் என்றால் புதியதாக உருவாக்கப்பட்ட புழுக்கள் நத்தையின் தண்டுப் பகுதிக்கு வந்து சேர்கிறது. இதனால் நத்தையின் கண்ணின் தண்டு அளவுக்கு அதிகமாக வீங்கியும் நீண்டும் விடுகிறது. இதனால் இந்த நத்தையின் கண்களைப் பார்க்க இரண்டு கம்பளிப்பூச்சிகள் போல் காட்சியளிக்கிறது!
அடுத்து இந்த ஒட்டுண்ணிப் புழு நத்தையின் மனதை தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. சராசரியாக நத்தை ஒரு மணிநேரத்தில் சுமார் மூன்று அடி தூரத்திற்குப் பயணிக்கின்றது. இந்த ஒட்டுண்ணி நத்தையை வேகமாக ஓட தூண்டுகிறது. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 12 அடி தூர வேகத்தில் நத்தை ஓடுகிறது! இது நத்தையின் அதிவேக ஓட்டமாகும். ஓட்டத்தில் மனிதனின் சராசரி வேகம் 13 கிலோமீட்டர்தான். நோயுற்ற நத்தையின் இந்த ஓட்டம் மனிதன் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுவதற்குச் சமமாகும். இவ்வளவு வேகத்தில் இந்த அப்பாவி நத்தையை ஒட்டுண்ணி அருகில் உள்ள தாவரத்தின் மேல் ஏறத்தூண்டுகிறது. மாங்கு மாங்கு என வேகமாக ஓடி நத்தை தாவரங்களின் உச்சியை அடைகிறது.

பட மூலாதாரம், Krisztina_JB / 500px / Getty Images
பொதுவாக நத்தைகள் அவை வாழும் இடத்தை ஒத்த வண்ணத்தில்தான் இருக்கும். அதனால் பறவைகள் மற்றும் மற்ற விலங்குகள் நத்தையை எளிதில் பார்க்க முடியாது. ஆனால் இந்த நிலையில் பசியுள்ள பறவைகள் நத்தையைத் தெளிவாகப் பார்க்க முடியும். காரணம் நத்தை செடியின் உச்சிக்கு வந்துவிடுகிறது. மேலும் அந்த ஒட்டுண்ணி தன் உடலைச் சுருக்கி நீட்டி முழு மூச்சாக இயங்க செய்ய ஆரம்பிக்கின்றன. இதனால் நத்தையின் கண்ணின் தண்டும் நீண்டு சுருங்க ஆரம்பிக்கிறது. இதனைப் பார்க்க இரண்டு கூட்டுப்புழுக்கள் ஊர்ந்து செல்வது போலிருக்கும். இது பறவைகளை மேலும் ஈர்க்கிறது. பின்னர், பாதிக்கப்பட்ட நத்தையை கண்டுணர்ந்து பறவைகள் சாப்பிடுகின்றன. அவ்வளவுதான் ஒட்டுண்ணியின் திட்டம் முற்றிலும் வெற்றிகரமாக நிறைவேறுகிறது.
ஆம், இப்போது ஒட்டுண்ணிகள் பறவையின் குடலை அடைகின்றன. பறவையின் குடலில் அனைத்து ஒட்டுண்ணிகளும் முட்டைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கின்றன. பின் பறவையின் எச்சத்தில் ஒட்டுண்ணியின் முட்டைகள் நிறைந்து காணப்படுகின்றன. பறவைகள் எச்சமிடும் இடமெல்லாம் ஒட்டுண்ணி பரவுகின்றன. பறவைகள் நீர்நிலைகளுக்கு அருகில் உணவுக்காக அதிக நேரம் செலவிடுவதால் நீர்நிலைகளில்தான் இவை அதிகம் எச்சமிடுகின்றன. ஆகவே அங்கு முட்டைகளிலிருந்து நிறைய ஒட்டுண்ணிக் குஞ்சுகள் பொரிக்கும். ஏராளமான ஒட்டுண்ணி இப்போது நிறைய நத்தைகளைக் குறிவைத்துத் தாக்கத் தயாராகிவிடுகின்றன.
என்னதான் நோயுற்ற நத்தை வேகமாக ஓடினாலும் குளத்திலிருந்து அடுத்த குளத்திற்குப் பயணிக்க முடியாது. அதனால் இந்த ஒட்டுண்ணியும் ஒரு குளத்திலிருந்து அடுத்த குளத்திற்கு பயணிக்க முடியாது. இதனாலேயே இந்த புத்திசாலி ஒட்டுண்ணி தனது அடுத்த தலைமுறையை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பரப்பப் பறவைகளைப் பயன்படுத்துகிறது, அதாவது இந்த ஒட்டுண்ணிப் பறவையை விமானமாகப் பயன்படுத்துகிறது. ஆனால் நினைவில் கொள்ளுங்கள். ஒட்டுண்ணிக்கு இது ஒரு சுகமான பயணச்சீட்டில்லா பயணம்தான்! ஒட்டுண்ணிகளுக்கும், நத்தைகளுக்கும், பறவைகளுக்கும் உள்ள இந்த பிணைப்பை 2013ல் போலந்தின் வ்ரோக்லா பல்கலைக்கழகத்தின் (Wroclaw University) டாக்டர் டோமாஸ் வெசோலோவ்ஸ்கி (Dr.Tomasz Wesolowski) கண்டறிந்தார் .
மேலும், கொரோனா வைரஸ் இருமலைத் தூண்டுவதும், காலராவை உண்டாக்கும் விப்ரியோ காலரே வாந்தி பேதியை முடுக்கிவிடுவதும், ரேபிஸ் வைரஸ் தாக்கத்தால் உருவான வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றவர்களை நகத்தால் கீறுவதும் மற்றும் கடிப்பதும் இந்த நோய்க்கிருமிகள் தங்கள் சந்ததியினர்களை அதிக அளவில் உற்பத்தி செய்யவே அன்றி வேறில்லை. அதாவது கொரோனா வைரஸ் கட்டளையால் இருமல் ஏற்படுகிறது; விப்ரியோ காலரே பாக்டீரியாவின் கட்டளையின்படி அதிக அளவில் தண்ணீராக வாந்தி, பேதி ஏற்படுகிறது. ரேபிஸ் வைரசின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்துதான் மற்றவர்களை நகத்தால் கீறுகிறோம் மற்றும் கடிக்கிறோம்.
இந்த நோய்க்கிருமிகளின் கட்டளைகளையும் அதற்கு நோயுற்ற உயிரினங்கள் எவ்வாறு கட்டுப்படுகின்றன என்பதை முற்றிலும் அறிய முடிந்தால் ஒரு நாள் ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக வாய்ப்புள்ளது. இதனைக் கொண்டு ஒருவரை வசியப்படுத்தி இயந்திரம் போல் எந்த வேலையையும் செய்துமுடிக்கும் அபாயமும் உள்ளது.
(மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி பயணத்தைத் தொடங்கிய கட்டுரையாளர் சுதாகர் சிவசுப்பிரமணியம், 1999இல் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பத்து வருடங்கள் பணியாற்றியுள்ளார். தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் இவர், பல்கலைக்கழக தொல்லியல் மையத்தின் இயக்குநராவும் செயல்படுகிறார். மண்புழுவைக் கொண்டு உறுப்புக்களின் மறுஉருவாக்கம் மற்றும் வயதாவது சம்பந்தப்பட்ட நோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறார். இவர் மண்புழுக்களின் மரபணுத் தொகுப்பைக் கண்டறிந்தவர்.)
தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













