பங்குச் சந்தையில் லட்சங்களை சம்பாதிக்க Algo Trading உதவுமா? - ஓர் அலசல்
- எழுதியவர், கார்த்திகேயன் பாஸ்துரா
- பதவி, தனி நபர் நிதி மேலாண்மை ஆலோசகர்
(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் ஏழாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
காலம்தான் உலகின் மிகச் சிறந்த விற்பனைப் பொருள். காலத்தை சேமிக்கவே அதிவேக விமானங்களும், விலை உயர்ந்த மருந்துகளும், தொழில்நுட்பங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் பங்குச் சந்தையில் வேகம் மிக முக்கியம். பங்குச் சந்தைகளில் சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து லாபம் ஈடுபவர்களே வெற்றியாளர்கள். இந்த செயல்முறையை மனிதனுக்கு எளிமையாக்கும் கணினி தொழில்நுட்பம் தான் Algo Trading எனப்படும் தானியங்கி வர்த்தக மென்பொருள்.
Algo trading தொடங்கியது எப்படி?
பங்குச் சந்தையில் எண்ணற்ற கணித சூத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பங்குச் சந்தை பரவ ஆரம்பித்த 1900களிலேயே பலவிதமான கணித சூத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 1930களில் ரால்ப் நெல்சன் எலியட் (Ralph Nelson Elliott) என்ற கணக்கியல் வல்லுநரால் கண்டுபிடிக்கப்பட்ட Elliott wave theory மிகப் பிரபலம். இதனை அடிப்படையாக வைத்து பங்குச் சந்தை கிராஃப்பில் ஒரு அலையானது ஏற்படும்போது அந்த அலைக்குள் மூன்று அலைகள் மேலே ஒன்றின்மேல் ஒன்றாக ஏறினால் பிறகு இரண்டு சிறிய அலைகள் ஒன்றின் பின்னொன்றாக இறங்கியபடி இருக்கும். இந்த அலைகளையும் உற்று நோக்கினால் இதே வடிவத்தில் மூன்று ஏற்றங்களும் இரண்டு இறக்கங்களும் இருக்கும்.
அதேபோல பங்குச்சந்தையில் Fibonacci sequence மிகப் பிரபலம். பங்குச்சந்தை மேலே ஏறவோ அல்லது கீழே இறங்கவோ ஒரு Trend எடுத்துவிட்டால் அதன் அடுத்தடுத்த மாற்றங்கள் இதன் அடிப்படையில் இருக்கும் என்று ஒரு கருத்துகோள் இருக்கிறது. அதாவது தற்போதைய விலையையும், இதற்கு முந்திய விலையையும் கூட்டினால் அடுத்த விலை கிடைக்கும்.

பட மூலாதாரம், Getty Images
இது போன்று எண்ணற்ற கணித சூத்திரங்கள் கடந்த கால பங்குச்சந்தையின் போக்கினை வைத்து ஆய்வு செய்து உருவாக்கப்படுகின்றன. இந்தக் கணித சூத்திரங்களை அடிப்படையாக வைத்து கணினி நிரல்கள் எழுதப்பட்டு அவற்றின் மூலம் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கவும் விற்கவும் செய்கிறார்கள். அதன் மூலம் விரைவாக முடிவு எடுக்கப்பட்டு தானியங்கி வர்த்தகம் நடைபெறுகிறது.
கணினி பயன்பாட்டுக்கு வந்த காலம் முதலே இது நடைமுறையில் இருந்து வருகிறது. பங்குச் சந்தையில் இணையப் பயன்பாடு தொடங்கியபின் முற்றிலும் தானியங்கி முறையில் செயல்பட ஆரம்பித்துவிட்டது. மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்துமே algo trading வர்த்தகத்தை பரவலாக செய்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் மிகப்பெரிய அளவில் பங்குகளை வாங்கவும் விற்கவும் செய்பவர்கள். அதனால் மனிதர்களின் முடிவெடுக்கும் திறன் மட்டும் போதாது, தானியங்கி வர்த்தகம் தான் நல்ல பலனைக் கொடுக்கும்.

பட மூலாதாரம், Getty Images
யாரெல்லாம் இதை பயன்படுத்தலாம்? வழிமுறை என்ன?
Algo trading செய்வதற்கு ஆரம்ப காலத்தில் C++ என்ற கணினி மொழி பரவலாக பயன்படுத்தப்பட்டது. இன்றும் பயன்படுத்தப்படுகிறது. காரணம் வங்கிகளின் சேவைகள் பெரும்பாலும் இந்த கணினி மொழியில்தான் எழுதப்பட்டுள்ளன. பின்னர் Java கணினி மொழிப் பயன்பாட்டிற்கு வந்த பின் அதன் பாதுகாப்பு அம்சங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. இன்று matlab, python, stata போன்ற நவீன கணினி மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. மிக சமீபத்தில் இணைய உலாவிகளில் (internet browser) algo trading செய்து முடிக்கும்படி மிக எளிமையாக JavaScript என்ற உலாவிகளின் மொழியிலேயே வந்துவிட்டது. பெரும்பாலான சில்லரை வர்த்தகர்கள் இவற்றையே பயன்படுத்துகிறார்கள்.
இன்று யார் வேண்டுமென்றாலும் algo trading செய்துகொள்ளும் அளவுக்கு சந்தையின் போக்கு மாறிவிட்டது. தரகு (Brokerage) நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறுவதற்காக பங்குச்சந்தை API-களை கொடுத்து வருகிறார்கள். இதன் மூலம் யார் வேண்டும் என்றாலும் algo trading செய்வதற்கு மென்பொருள் எழுதி அதனை பங்குச் சந்தையின் API மூலமாக இணைப்பை ஏற்படுத்தி தங்களது கணக்கில் தானியங்கி வர்த்தகம் செய்ய முடியும்.
உலக அளவில் 70 முதல் 80 சதவீத வர்த்தகம் இவ்வாறு தான் நடைபெறுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019ல் வெளிவந்த Robert Kissell எழுதிய Algorithamic Trading Methods என்ற புத்தகத்தில் வெளிநாட்டுப் பரிமாற்ற சந்தையில் (Forex market) 92% algo trading வழியாகத்தான் வர்த்தகம் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் 73% வரை Algo trading வழியாக பங்கு வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் இதன் சதவீதம் 50% மட்டுமே. இவற்றில் பெரும்பாலும் அதிவேக பங்கு வர்த்தகம்தான் (High Frequency Trading) நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக Futures and Options வகையிலான ஊக வணிகத்தில் அதிகம் நடைபெறுகிறது.
எல்லா நாடுகளிலும் உள்ள பங்குச் சந்தை மற்றும் அதனை கண்காணிக்கும் அரசு அமைப்புகள் தானியங்கி வர்த்தக முறைக்கு தடை ஏதும் விதிக்கவில்லை. இந்தியாவிலும் இதற்கு எந்தத் தடையும் கிடையாது. ஆனால் 2021 டிசம்பரில் வெளிவந்த இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) அறிக்கையில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பங்குச் சந்தையில் பங்கு பெற்றுள்ள தரகு (Brokerage) நிறுவனங்கள் மட்டுமே algo trading மென்பொருட்கள், மொபைல் ஆப்கள் கொடுப்பதற்கு அங்கீகரிக்கப்பட்டவை. இவர்களின் API-ஐ வைத்து உருவாக்கப்படும் மூன்றாம் நபர்களின் மென்பொருட்கள் அங்கீகரிக்கப்படாதவை என்று கூறியிருக்கிறது. இதற்கு முன்னணி தரகு நிறுவனங்கள் ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
Algo trading பயன்படுத்துவதால் வெற்றியின் சாத்தியம் அதிகரிக்குமா?
பங்குச் சந்தையை பொறுத்தவரை எந்த ஒரு கணித சூத்திரமும் 100% சரியான முடிவினை கொடுப்பதில்லை. சந்தையை பாதிக்கும் எந்த ஒரு செய்தியும் வெளியே வராதவரை இந்த சூத்திரங்கள் நன்றாக வேலை செய்யலாம். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் உலகின் ஏதாவது ஒரு மூலையில் பங்குச் சந்தையை பாதிக்கும் ஒரு செய்தி வந்து கொண்டேதான் இருக்கிறது.
அதேபோல எல்லோரும் ஒரேவிதமான சூத்திரங்களை பயன்படுத்துவதில்லை. வெவ்வேறு விதமான சூத்திரங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் துல்லியமாக கணிக்க முடியாத பங்குச் சந்தையின் நிச்சயமற்ற தன்மையை algo trading மாற்றிவிட முடியாது. அதனால் தான் இதற்கு பங்குச் சந்தைகள் தடை எதுவும் விதிப்பதற்கு மாறாக ஊக்குவிக்கிறது.
ரஷ்யா - யுக்ரேன் பதற்றமும் பங்குச் சந்தையின் போக்கும்
தற்போது நடைபெற்று வரும் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பங்குச் சந்தையை வெகுவாக பாதித்திருக்கிறது. இதுபோன்ற பதற்ற நிலையின் போக்கினை கணித சூத்திரங்களால் கணக்கிட முடியாது.
நேட்டோ நாடுகள், யுக்ரேன் அதிபர் மற்றும் ரஷ்ய அதிபரின் அறிக்கைகள், மோதல் நடைபெறும் இடங்கள், அதன் சேதாரங்கள், இந்த நாடுகளில் உற்பத்தி ஆகும் பொருட்களின் விலை ஏற்றங்கள் என பலவிதமான செய்திகள் பங்குச் சந்தையின் நகர்வினை மாற்றுகின்றன.
பிப்ரவரி 28, 2022 அன்று காலை பங்குச் சந்தை 4.5 சதவீதம் இறக்கத்தில் தொடங்குகிறது. முந்தைய தினத்தில் ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிறகு யுக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என்று கூறியவுடன் பங்குச்சந்தை மேலே வரத் தொடங்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்தப் படையெடுப்பால் உலகளவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட உயர்ரக உற்பத்திப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி இருக்கிறது. இதன் தாக்கம் எல்லாப் பொருட்களின் விலை ஏற்றத்திலும் எதிரொலிக்கும். ரஷ்யா - யுக்ரேன் இடையிலான மோதல் ஒரு முடிவுக்கு வரும் வரை இதில் பெரிய மாற்றம் இருக்காது. போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே சென்றால் மூன்றாம் உலக நாடுகளில் பஞ்சம் உருவாக ஆரம்பிக்கும். பிறகு எல்லா நாடுகளிலும் அது பரவக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் பலரும் உலக நாடுகளை எச்சரிக்கிறார்கள்.
இதுபோன்ற உலக செய்திகளை புரிந்துகொண்டு Algo trading செய்வதற்கு artificial intelligence என்ற செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தவும் சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியானது முழுமையாக வெற்றி பெறவில்லை. செயற்கைக்கோள் மூலம் பூமியை படமெடுத்து பருவ காலத்தை அதன் இயற்கை பேரழிவை முன்கூட்டியே கணிக்க முடிந்தாலும் துல்லியமான முடிவுக்கு வர முடிவதில்லை. இழப்புகளைத் தடுக்க முடிவதில்லை. அதுபோலவே என்னதான் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு பங்குச் சந்தையின் போக்கினை கணிக்க முடிந்தாலும் மறுபக்கம் அதற்கு மாற்றாக எதிர்வினை நடக்கவே செய்கிறது என்பதால் நிச்சயமற்ற தன்மை என்பது இருக்கிறது. அந்த யூகிக்க முடியாத தன்மை இருக்கும் வரை தான் பங்குச் சந்தையும் நிலைத்திருக்கும்.
(மதுரையை சேர்ந்த தனிநபர் நிதி மேலாண்மை ஆலோசகரான கார்த்திகேயன் பாஸ்துரா, 12 ஆண்டுகள் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிவிட்டு கடந்த ஆறாண்டுகளாக நிதி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பத்திரிகை துறையில் பணியாற்றிய அனுபமுள்ள இவர், பல்வேறு தமிழ் இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். மேலும், பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்)
தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ்
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













