அதிமுக ஒற்றைத் தலைமை சர்ச்சை: 'தி.மு.கவுடன் ஓ.பி.எஸ். தரப்பில் சிலர் நெருக்கம் காட்டினார்கள்' - கே. பாண்டியராஜன்

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
அ.தி.மு.கவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் 'தர்மயுத்தம்' துவங்கி, கட்சி இரண்டாக பிளவுபட்டபோது அவருடன் இருந்தவர் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன்.
தற்போது கட்சியில் மீண்டும் தலைமை குறித்த பிரச்னை எழுந்திருக்கும் நிலையில், எடப்பாடி கே. பழனிச்சாமியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார் மஃபா கே. பாண்டியராஜன். இதற்குப் பிறகு பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் நேரலையில் பேசினார் அவர். அந்தப் பேட்டியிலிருந்து:
கே. கடந்த சில நாட்களில் அ.தி.மு.கவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?
ப. பொதுக் குழு அறிவித்ததிலிருந்தே தனி ஒரு தலைமை வேண்டுமென்ற கோஷம் வலுவடைந்திருக்கிறது. இதை எதிர்த்து, ஒரு சிறிய குழு இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்கிறார்கள். தொண்டர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள். 75 கட்சி மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் "ஒற்றைத் தலைமை வேண்டும். அது இ.பி.எஸ்சாகத்தான் இருக்க வேண்டும்" என தீர்மானமே நிறைவேற்றப்பட்டுவிட்டது.
எந்த மாவட்டத்திலும் இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. சுமார் பதினைந்து மாவட்டங்களில் இதுவரை தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அந்த மாவட்டங்களிலும் தொண்டர்கள் இங்கே வந்து, தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.
இதே நிலை ஐந்தாண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்டது. தர்ம யுத்தம் என்ற பெயரில் ஓ.பி.எஸ். ஒரு முயற்சி எடுத்தார். நாங்கள் உடன் இருந்தோம். அப்படிப் பிரிந்திருந்த சூழ்நிலை ஆறு மாதத்தில் மாறியது. ஓ.பி.எஸ். மீண்டும் வந்து இணைந்தார். ஆட்சியிலும் பங்கு பெற்றோம்.

இந்த ஐந்தாண்டுகளில் இரட்டைத் தலைமை இல்லாமல் இருந்திருந்தால், கட்சிப் பணி இன்னும் தொய்வில்லாமல் நடந்திருக்கும். இந்த இரட்டைத் தலைமையால், கட்சிப் பணிகள் தொய்வடைந்தன. பல தருணங்களில் எடுக்க வேண்டிய முடிவுகள் எடுக்கப்படாமலேயே இருந்தன. இரு ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இடையில் இருந்த வித்தியாசம் கட்சிக்கு ஒரு தளர்ச்சியாக இருந்தது.
அதிலிருந்து மாற வேண்டுமென்ற எண்ணம் ஒவ்வொரு அடிமட்டத் தொண்டன் மனதிலும் இருக்கிறது. யார் அந்த ஒற்றைத் தலைமை என்ற கேள்வி வேண்டுமானால் சிலருக்கு இருக்கலாமே தவிர, 100 சதவீதம் பேரும் ஒற்றைத் தலைமையைத்தான் விரும்புகிறார்கள். 2- 3 சதவீதம் பேர்தான் ஓ.பி.எஸ். இருக்க வேண்டுமென்கிறார்கள். 97 சதவீதம் பேர் இ.பி.எஸ்தான் இருக்க வேண்டுமென்கிறார்கள்.
அந்தப் பக்கம் இருப்பவர்கள்கூட முதலில் ஒற்றைத் தலைமை வேண்டாமென்று சொல்லவில்லை. பிறகுதான், ஒற்றைத் தலைமை வேண்டாம்; இப்போது இருக்கும் நிலையே தொடரட்டும் என்கிறார்கள். விரைவிலேயே கருத்தொற்றுமை வந்துவிடுமென நம்புகிறேன். கருத்தொற்றுமை வந்தால்தான், அ.தி.மு.க. தான் இழந்த பெருமையை மீட்டெடுக்க முடியும்.
கே. அ.தி.மு.க. ஆட்சியிலிருக்கும்போதே இரட்டைத் தலைமையுடன்தான் இயங்கிவந்தது. ஆனால், பொதுக் குழுவை ஒட்டி ஒற்றைத் தலைமை குறித்த கோஷம் எழக் காரணம் என்ன?
ப. இந்த கோஷம் திடீரென எழவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் பலரும் சொல்லிக்கொண்டிருந்த விஷயம்தான் இது. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அது முன்னெழவில்லை.
இப்போது இந்தப் பிரச்சனை மீண்டும் எழுந்திருப்பதற்குக் காரணம், இரண்டு - மூன்று நிகழ்வுகள்தான். குறிப்பாக, தேனியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தது, இந்த ஆட்சியைப் பற்றிப் பெருமையாகப் பேசியது போன்றவையெல்லாம் தொண்டர்கள் மத்தியில் ரொம்பவும் எதிர்மறையாகச் சென்று சேர்ந்தது."அம்மா இருக்கும்போது இப்படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்" என்ற கேள்வியை பலரும் கேட்டார்கள். இன்றுவரை அதற்கு விடை தர முடியவில்லை.

தி.மு.கவுடன் அடிப்படை நாகரீகம் என்பது தேவைதான். அதைத் தாண்டி உறவு வைத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். ஜெயலலிதா காலத்தில் முகத்தைப் பார்த்துச் சிரித்தால்கூட, அதற்குப் பிறகு கட்சியில் இருக்க முடியாது. ஆனால், இங்கே அந்த உறவு ஒரு கட்டத்திற்கு மேல் சென்றுவிட்டது என்ற எண்ணம் கட்சித் தொண்டர்களிடம் இருக்கிறது.
அதுவும் கடந்த ஓராண்டில் கொஞ்சம் அதிகமாக நடந்திருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஒற்றைத் தலைமைக்கு எந்தவிதத்திலும் விட்டுக்கொடுக்காதவர்கள் வர வேண்டுமென நினைப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இ.பி.எஸ். எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காதவர் என்ற எண்ணம் தொண்டர்கள் மத்தியில் இருக்கிறது.
இது முக்கியமான காலகட்டம். இந்த இரண்டாண்டில் எழுந்துவந்தால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல முடியும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. மற்ற கட்சிகள், நம்மைவிட பல மடங்கு சிறிய கட்சிகள் நாங்கள்தான் முதன்மை எதிர்க்கட்சி என்று சொல்லக்கூடிய அளவில் நம் கட்சி இருக்கிறது என்ற ஆதங்கம் தொண்டர்கள் மனதில் இருக்கிறது. அதை மாற்ற ஏதாவது செய்ய வேண்டும். செய்யக்கூடிய முதல் விஷயம், ஒற்றைத் தலைமை.
கே. ஓ.பி.எஸ். தரப்பு தி.மு.கவோடு மிகவும் நெருங்கிவிட்டதாகச் சொல்கிறீர்களா?
ப. ஓ.பி.எஸ். தரப்பு என்று முழுமையாகச் சொல்ல மாட்டேன். ஓரிருவர், முக்கியமான ஓரிருவர் அப்படிச் செய்தது தொண்டர்கள் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கடுத்தபடியாக சசிகலா அவர்கள், மீண்டும் கட்சிக்குள் வர வேண்டுமென சொல்லிவருவதும் ஒரு காரணம். அவரை எதிர்த்துத்தான் தர்ம யுத்தமே சென்றோம். ஜெயலலிதாவின் மரணத்திற்கே காரணமாக இருந்தார்கள் என்று சொல்லிவிட்டு, இப்படிப் பேசுவது தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வெறுப்பை விதைத்திருக்கிறது. ஒற்றைத் தலைமை கோஷம் வலுப்பெற்றதற்கு இதெல்லாம்தான் காரணம்.

பட மூலாதாரம், Getty Images
கே. 23ஆம் தேதி பொதுக் குழு நடக்குமா என்ற பேச்சுகள் எழ ஆரம்பித்துவிட்டன...
ப. நடக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். ஓ.பி.எஸ். கட்சியின் நலத்தான் விரும்புவார் என இந்த நிமிடம்வரை கருதுகிறேன். பொதுக் குழு நடக்காமல் செல்லும் நிலைக்கு போகவிடமாட்டார் எனக் கருதுகிறேன்.
கே. அந்தப் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானமும் எடப்பாடி கே. பழனிச்சாமிதான் அந்த ஒற்றைத் தலைமை என்ற தீர்மானமும் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது..
ப. எனக்குத் தெரியவில்லை. ஆனால், அப்படி வந்தால் நல்லது என நான் நம்புகிறேன். வருமா வராதா என்று தெரியாது ஆனால், வந்தால் நல்லது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












