அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பிபிசி தமிழுக்கு பேட்டி: "தமிழ்நாட்டுக்கு ஏற்ப பாஜக கொள்கையை மாற்றிக்கொள்ளவேண்டும்"

பொன்னையன்

அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரான சி. பொன்னையன், அக்கட்சிக்கான பயிற்சிப் பாசறையில் பா.ஜ.க. குறித்து பேசிய பேச்சு தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.கவின் ஐ.டி. விங் அவர்களை அம்பலப்படுத்த வேண்டுமென அவர் பேசியதாகக் கூறப்பட்டது. அவரது இந்தக் கருத்துக்கு பா.ஜ.கவிடமும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் தனது பேச்சின் பின்னணி குறித்து விரிவாகப் பேசினார் பொன்னையன். அதிலிருந்து:

கே. சமீபத்தில் அ.தி.மு.கவின் பயிற்சிப் பட்டறையில் பா.ஜ.க. குறித்து நீங்கள் தெரிவித்த கருத்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எந்தப் பின்னணியில் அந்தக் கருத்தைத் தெரிவித்தீர்கள்?

ப. அது அம்மா பேரவையின் பயிற்சி முகாம் ஆலோசனைக் கூட்டம். ரகசியக் கூட்டம். அந்தச் செய்திகள் வெளியே செல்லக்கூடாது. ஆனால், எப்படியோ அது வெளியே சென்றதால், கூட்டி, குறைத்து, திரித்து பலரும் சொல்ல ஆரம்பிக்கவும் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது.

பேரவையின் பயிற்சி முகாமில், "தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி பா.ஜ.க.தான் என சமூக வலைதளங்களில் வருகிறதே?" என்று சிலர் கேட்டார்கள். இதற்கு எத்தகைய பதிலடி கொடுக்க வேண்டுமென்றும் கேட்டார்கள். சட்டரீதியாக பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.கதான். அதனால்தான் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தெளிவுபடுத்தும் பணியை சமூகவலைதளங்கள் மூலம் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கினேன்.

"உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வெறும் 4 எம்எல்ஏக்களை மட்டுமே கொண்டுள்ள பா.ஜ.கவை எப்படி எதிர்க்கட்சியென சொல்கிறார்கள் என்பதை கேட்க வேண்டுமென்று" சொன்னேன். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளை நாங்கள் வென்றுவிடுவோம் என்று பா.ஜ.க. கூறியதாக ஒரு செய்தியும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. அப்படியென்றால் அவர்களுடைய எண்ணம், ஆசை எல்லாம் மூன்றாம் நிலைக்கு அ.தி.மு.க. தள்ளப்பட வேண்டுமென்பதை இப்போதே கூறுகிறார்கள் என்றால், அது சரியாக இல்லை என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று ஆலோசனை கூறப்பட்டது.

தி.மு.கவின் தவறுகளை, ஊழல்களை விளக்கமாக எடுத்துச்சொல்ல வேண்டும். செய்ய முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிட்ட தி.மு.க., இன்றுவரை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.

பா.ஜ.க. ஒரு தேசியக் கட்சி. ஆனால், அக்கட்சியின் பல கொள்கைகள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு உகந்ததாக இல்லை எனத் தெரிவிக்க வேண்டும். தி.மு.கவை எதிர்த்துப் போராடுகிறார்கள். அதை பாராட்டலாம். அண்ணாமலை கெட்டிக்காரர். செயல்வீரர். அதைப் போலவே நாமும் தி.மு.கவின் ஊழலை சமூக வலைதளங்கள் மூலம் பரப்பிட வேண்டும் என்று சொன்னேன்.

ஈழப் பிரச்னையில் அந்த மக்களுக்கு உதவும்படி மத்திய அரசை தமிழக பா.ஜ.க. வலியுறுத்த வேண்டும். காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு 275 டி.எம்.சி. தண்ணீரைத் தர வேண்டுமென உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்ட நிலையிலும், அதைச் செயல்படுத்தாத மத்திய அரசை சமூக வலைதளங்களில் கண்டிக்க வேண்டும். தமிழக பா.ஜ.க. இதனை மோடி அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இதுபோலத்தான், முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்னைகளில் தமிழகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை பா.ஜ.க. எடுக்க வேண்டும் என்று பேசினேன்.

இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டில் மூன்றாவது மொழியைத் திணிக்கக்கூடாது. நீட்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு ஏற்ற வகையில் தமிழக மாணவர்கள் பழகும்வரை அந்தத் தேர்வை ஒத்திவைக்கவேண்டும்.. இதையெல்லாம் மைய அரசிடம் தமிழக பா.ஜ.க. வலியுறுத்த வேண்டும். இதையெல்லாம் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டுமென்று சொன்னேன் அந்தக் கூட்டத்தில் பேசினேன்.

கே. நடந்தது அ.தி.மு.கவின் பயிற்சிப் பாசறை. அதில்போய், பா.ஜ.க. எப்படிச் செயல்பட வேண்டுமென எதற்காகச் சொன்னீர்கள்?

ப. கட்டாயமாக இதைச் சொல்ல வேண்டிய சூழல். எதிர்க்கட்சி என்பது பா.ஜ.கதான் என்று சமூக வலைதளங்களில் செய்திகளை அதிக அளவில் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பா.ஜ.கவுக்கு தெரிந்தே இது பரப்பப்படுகிறதா அல்லது தெரியாமல் பரப்பப்படுகிறதா? 25 நாடாளுமன்றத் தொகுதிகளை நாங்கள் பெறுவோம் என்பதை கட்சி அதிகாரபூர்வமாக சொன்னதாகவே தெரிகிறது. இதைப் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டதால் பதில் சொல்ல வேண்டியிருந்தது

பொன்னையன்

கே. சமூக வலைதளங்களில் அ.தி.மு.கதான் பிரதான எதிர்க்கட்சி என்று சொல்ல வேண்டுமென சொன்னதாக சொல்கிறீர்கள். அப்படியானால், தற்போது பிரதான எதிர்க்கட்சி என பா.ஜ.கதான் பதிந்து போயிருப்பதாக நினைக்கிறீர்களா?

ப. நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் அப்படிப்பட்ட பதிவை பா.ஜ.க. ஆதரவாளர்கள் பரப்பி வருகிறார்கள்.

கே. பா.ஜ.க. எதிர்க்கட்சி அல்ல, அ.தி.மு.கதான் எதிர்க்கட்சி என்பதை நாம் சொல்லியாக வேண்டுமென்பது எந்தக் கட்டத்தில் உங்களுக்குத் தோன்றியது?

ப. அந்தப் பாசறைக் கூட்டத்தில், "25 நாடாளுமன்ற இடங்களை வெல்வோம் என்றால், கூட்டணி இல்லை என்றும் நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிடுவோம் என்றும் அவர்கள் நினைக்கிறார்களா?" என்று கேள்விகள் கேட்கப்பட்டன. எனவே இந்தப் பதிலை சொல்லவேண்டிவந்தது.

கே. பா.ஜ.கவைப் பொறுத்தவரை அடுத்த தேர்தலில் அ.தி.மு.கவுக்கு குறைவான இடங்களைக் கொடுக்கலாம் என நினைப்பதாக கருதுகிறீர்களா?

ப. இது குறித்து நான் ஏதும் நினைக்கவில்லை. பா.ஜ.க. தலைவர்களோடு எங்கள் இயக்கத்தின் மேல் மட்டத் தலைவர்கள் பேசும்போதுதான் இதில் உண்மை நிலவரம் தெரியவரும்.

கே. உங்களுடைய கருத்துக்கு பா.ஜ.கவினர் பதிலளித்து வருகிறார்கள். மாநிலங்களவை இடங்கள் கிடைக்காத விரக்தியில் பேசுகிறீர்கள், காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் நீங்கள் தெரிவித்த கருத்துகள் தவறு என்று பா.ஜ.க. கூறியிருக்கிறது...

ப. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் நான் கூறியது சரி என மக்களுக்குத் தெரியும். தி.மு.கவின் ஊழல்களைப் பேசுவதைப் போல, இந்தப் பிரச்னைகள் குறித்துப் பேசினால், பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு உதவும் என்றுதான் கூறினேனே தவிர, குற்றச்சாட்டாக கூறவில்லை. ராஜ்ய சபா இடத்தைப் பொறுத்தவரை, அதை பா.ஜ.க. முடிவுசெய்ய முடியாது. அ.தி.மு.கவின் எண்ணிக்கையைப் பொறுத்து அது முடிவுசெய்யப்படுகிறது. அந்த இடத்தை திறமையுள்ள, நன்கு படித்த, அறிவுத் திறன் மிக்க, இளைய சமுதாயத்தைச் சேர்ந்த இருவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். அந்த இருவரையும் நான் பாராட்டினேன். கட்சியே மகிழ்ச்சியில் இருக்கிறது. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

கே. உங்களுக்கு இதில் விரக்தி என்கிறார்களே..

ப. எனக்கு எப்படி விரக்தி ஏற்படும்? என்னுடைய வயது என்ன? நான் கேட்டிருந்தால் அம்மா கொடுத்திருப்பார், தலைவர் கொடுத்திருப்பார். தில்லிக்கு சென்று அரசியல் செய்ய வேண்டுமென்ற ஆர்வத் துடிப்பிலேயா நான் இருந்தேன்? இல்லை. அப்படியிருக்கும்போது, விரக்தி ஏன் ஏற்பட வேண்டும்? தகுதியுள்ளவர்களை இ.பி.எஸ்சும் ஓ.பி.எஸ்சும் தேர்வுசெய்திருக்கிறார்கள். இளைஞர்கள், திறமையுள்ளவர்கள் தேர்வுசெய்யப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி.

கே. நீங்கள் பல்வேறு மட்டங்களில் உள்ள தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் பேசியிருப்பீர்கள்.. பா.ஜ.கவின் போக்கு குறித்து அவர்கள் கருத்து என்ன?

ப. அவர்களைவிட நாம் தீவிரமாக செயல்பட வேண்டுமென நினைக்கிறார்கள். தி.மு.கவின் குறைகளை வெளிப்படுத்துவதில் அ.தி.மு.க. சிறப்பாக செயல்படுகிறது. சட்டப்பேரவையில் எடப்பாடியார் தி.மு.க.வின் அராஜகங்களை புள்ளிவிவரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆகவே நாங்கள் சிறப்பாகச் செயல்படுகிறோம்.

கே. பா.ஜ.கவுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டுமென தொண்டர்கள் கருதுகிறார்களா?

ப. தி.மு.கவை அம்பலப்படுத்துவதில் அவர்கள் காட்டும் வேகத்தை எங்கள் தொண்டர்கள் பாராட்டுகிறார்கள்.

modi and edappadi

பட மூலாதாரம், Getty Images

கே. மற்ற விஷயங்களில்?

ப. அவர்கள் தேசியக் கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கான கொள்கைகளை பா.ஜ.க. எங்களோடு சேர்ந்து கடைப்பிடித்தால் அவர்கள் இன்னும் வளர முடியும். அது எங்களுக்கும் உறுதுணையாக இருக்கும் என்று கருதுகிறோம்.

கே. நீங்கள் நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒரு திராவிடக் கட்சியின் தலைவர். பா.ஜ.க. அதற்கு எதிரான சித்தாந்ததைத் கொண்ட கட்சி. தொடர்ந்து அவர்களோடு இணைந்து செயல்பட முடியுமென நினைக்கிறீர்களா?

ப. கொள்கை ரீதியாக இணைய முடியாது. ஆனால், தமிழ்நாட்டு மக்களின் மனநிலை என்ற முறையில், மொழிப் பிரச்னை, இந்தித் திணிப்பு கூடாது, ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம், அவர்களுக்கு மறுவாழ்வு, நீட் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்கப்படாத அளவிற்கு நீட் தேர்வை தள்ளிவைப்பது, மாநிலங்களுக்கு அதிக நிதி தர வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். உதாரணமாக, தமிழகத்திற்கு விற்பனை வரி மூலம் ஒன்றரை லட்சம் கோடி கிடைத்து வந்தது. ஆனால், தற்போது ஜிஎஸ்டி வந்த பிறகு அந்த வருமானத்தின் பெரும் பகுதி பின்தங்கிய மாநிலங்கள் என்ற முறையில் உத்தரப்பிரதேசத்திற்கும் பிகாருக்கும் சென்றுவிடுகிறது. நாம் நெற்றி வேர்வை சிந்தி உருவாக்கும் பணத்தை அவர்களுக்கு மடை மாற்றுகிறார்கள். நிதிப் பகிர்வில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் கொடுமையை கடைப்பிடிக்கக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இதயெல்லாம் பிரதமரிடம் இங்குள்ள பா.ஜ.க. எடுத்துச் சொல்ல வேண்டும்.

கே. 2019, 2021 ஆகிய இரு தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருந்ததுதான் அந்தக் கூட்டணியின் தோல்விக்குக் காரணம் என பலர் கூறுகிறார்கள். உங்கள் கருத்து என்ன?

ப. தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கணிசமான அளவில் வாக்கு வங்கி இருக்கிறது. பா.ஜ.க. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் நலன் கருதி காய்களை நகர்த்தினால், அந்த வாக்கு வங்கி ஓரளவுக்குக் கிடைக்கும். அதுதான் பலன் தரும். இல்லாவிட்டால் அவர்களுக்கும் பாதிப்பு, அவர்களோடு சேர்ந்திருக்கும் எங்களுக்கும் பாதிப்பு.

எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம்

பட மூலாதாரம், Getty Images

கே. இதைக் கட்சியின் மூத்த தலைவர்களிடம் சொல்லியிருக்கிறீர்களா..?

ப. எல்லோரிடமும் சொல்லியிருக்கிறோம்.

கே. இருந்தபோதும் வரும் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்பதுபோலத்தான் தெரிகிறது..

ப. தேர்தல் வரட்டும். தேர்தல் வரும்போதுதான் முடிவுசெய்வார்கள்.

கே. நீங்கள் பேசிய பேச்சு, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியான ஒரு பேச்சை கட்சித் தலைமையின் ஆசீர்வாதமில்லாமல் பேசியிருக்க மாட்டீர்கள் என்ற கருத்து இருக்கிறது..

ப. இல்லை... இல்லை. கட்சித் தலைமையோடு கலந்து இதை நான் பேசவில்லை. அந்தப் பாசறைக் கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக சில கேள்விகள் கேட்கப்பட்டதால் நான் அப்படிப் பேச வேண்டியதாயிற்று. இதற்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். போன்ற தலைவர்களுக்கோ கட்சியின் பிற தலைமைகளுக்கோ சம்பந்தமில்லை.

கே. உங்களுடைய இந்தப் பேச்சு, ஊடகங்களில் வெளியான பிறகு கட்சித் தலைமை உங்களுடன் பேசியதா?

ப. இது என்னுடைய தனிப்பட்ட கருத்தல்லவா.. கட்சியின் கருத்தல்லவே.. அதனால் பேசவில்லை.

கே. நீங்கள் இப்படிப் பேசியது குறித்து அந்த மேடையிலிருந்த தலைவர்கள் ஏதும் சொன்னார்களா..

ப. எல்லோரும் கலந்து பேசினார்கள். இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

கே. உங்கள் பேச்சுக்கு பா.ஜ.க. எதிர்வினையாற்றி வருகிறது. இனி வரும் காலத்தில் பா.ஜ.க. - அ.தி.மு.க. உறவு எப்படி இருக்குமென நினைக்கிறீர்கள்?

ப. உறவு பாதிக்கக்கூடிய அளவுக்கு நான் ஒன்றும் பேசவில்லை. அந்தக் கூட்டணி எங்களுக்கு உதவ வேண்டுமெனில், அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஏற்ப கொள்கைகளை மாற்ற வேண்டும். அப்போதுதான் அவர்கள் வாக்கு வங்கி அதிகமாகும். அது எங்களுக்கும் ஆதாயம், அவர்களுக்கும் ஆதாயம். இந்தக் கருத்தில்தான் கூறியிருக்கிறேனே தவிர, உறவு முறிய வேண்டுமென்றோ, உறவுக்கு எதிராகவோ நான் ஏதும் பேசவில்லை.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: