21 சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல்: ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

பட மூலாதாரம், DIPR
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடந்த இந்த சந்திப்பின்போது மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார் என்றும் மேலும் நிலுவையில் உள்ள 21 சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று அவர் கோரியதாகவும் அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு, 2022, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு, 1983, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்ட முன்வடிவு, 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022, உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும் தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு ஆளுநரை முதலமைச்சர் கேட்டுக்கொண்டதாக அரசுத் தரப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
குறிப்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநருடனான இந்தச் சந்திப்பின் போது, மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னணி
முன்னதாக, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலம் நிலுவையில் வைத்திருந்த ஆளுநர், அதை தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பினார். இரண்டாவது முறை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்து அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் அவர் தாமதம் செய்வதாக கூறி ஆளுநர் அளிக்கவிருந்த தேனீர் விருந்தைப் புறக்கணிப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஏப்ரல் 14ம் தேதி ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வரும்போதே அறிவித்தார்.

நீட் விலக்கு மசோதாவை முன்வைத்து தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் கசப்பான விவாதங்கள் நடந்து வந்த நிலையில், நேரடியாக பல்கலைக்கழக துணைவேந்தர்களை அழைத்து ஆளுநர் உரையாற்றினார். இந்நிலையில், மாநில அரசே நேரடியாக துணை வேந்தர்களை நியமிக்கும் மசோதாவை நிறைவேற்றியது தமிழ்நாடு அரசு.
பேரறிவாளன் வழக்கு
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று 2018ம் ஆண்டு தமிழ்நாடு அமைச்சரவை எடுத்த முடிவுக்கு ஒப்புதல் வழங்காமல் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் செயலைக் கண்டிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் கடந்த மே 18ம் தேதி ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்த வழக்கில் 32 ஆண்டுகளாக சிறைத் தண்டனையில் இருந்துவந்த பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் ஆளுநர் மாநில அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்டவர் என்பதை வலியுறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது. அத்துடன் பேரறிவாளனையும் சிறப்புரிமையைப் பயன்படுத்தி விடுவித்தது உச்ச நீதிமன்றம்.
இந்த தீர்ப்பு மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் இருப்பதாக கூறி முதல்வர் ஸ்டாலின் வரவேற்றிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் அரசுத் திட்டங்களை தொடக்கிவைக்க பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்திருந்தபோது விழா மேடையிலேயே நீட் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட மாநில உரிமை சார்ந்த பிரச்சனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுப்பியிருந்தார். இந்தப் பேச்சு பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திமுக - பாஜக மோதல் புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவியை சந்தித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












