சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு: இனி அவருக்குள்ள வாய்ப்புகள் என்ன?

பட மூலாதாரம், TTV DINAKARAN
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
`அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ` அ.தி.மு.க மீது சசிகலாவுக்கு உரிமை இல்லை என்றாகிவிட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தாலும் பயன் உள்ளதா என்பது கேள்விக்குறிதான்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா பொறுப்பேற்றார். இதுதொடர்பாக, 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அடுத்து வந்த சில வாரங்களில் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையை சசிகலா பெற்றார். இதனால் அவர் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக, அதிமுகவை வழிநடத்தும் வகையில் டி.டி.வி.தினகரனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். அதன்பின்னர் அதிமுகவில் நடந்த சில மாற்றங்களால் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடியது. அந்தக் கூட்டத்தில் வி.கே.சசிகலாவையும் டி.டி.வி.தினகரனையும் கட்சிப் பொறுப்பில் இருந்தே நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். அ.தி.மு.கவின் உள்கட்சி விதிகளை திருத்திய பிறகு எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதலை வழங்கியது. `இந்தப் பொதுக்குழு செல்லாது, சட்டத்துக்குப் புறம்பானது' எனக் கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதிமுக மனுவில் என்ன இருந்தது?
மேலும் அந்த மனுவில், ` அதிமுகவின் பொதுச் செயலாளராக நான் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். அதைவிடுத்து ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் புதிய பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம். இவர்கள் கூட்டிய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது' எனக் குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
`இந்த மனுவை தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்' என்பதை வலியுறுத்தி ஓ.பி.எஸ், இ.பி.எஸ், செம்மலை ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், `அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. அன்று நீதிபதி விடுப்பில் இருந்ததால், இன்று (11.4.22) தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிமன்றம் தீர்ப்பு
அதன்படி, அ.தி.மு.கவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் எனவும் அவரது வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
``சிட்டி சிவில் நீதிமன்ற வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வெளிவந்துள்ளதே?'' என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.
``எந்தவொரு கட்சியையும் நீதிமன்றத்தை வைத்துக் கைப்பற்ற முடியாது. சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். சொத்துரிமை தொடர்பான வழக்குகளைப் போலவே இதையும் கையாள்வார்கள்.
அ.தி.மு.க மீதான உரிமை என்பது ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் உள்ளது. இது உச்ச நீதிமன்றம் வரையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பில் இருந்து அவர்களை விடுவிக்கும் வேலையை கீழமை நீதிமன்றம் செய்யப் போவதில்லை. சிவில் சட்டப்படி யாரிடம் உரிமை உள்ளதோ அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். பொதுச் செயலாளர் என்ற தலைப்புக்கு முக்கியத்துவம் கிடைக்காது'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
அதிக ஆதாரங்கள் தேவை
தொடர்ந்து பேசுகையில், `` ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோரை அதிமுக மீதான உரிமையில் இருந்து விடுவிப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் தேவை. உச்ச நீதிமன்றம் வரையில் சென்று நிரூபிக்கப்பட்ட வழக்கு இது. இந்தத் தீர்ப்பு சசிகலாவுக்கு ஆதரவாக வந்திருந்தாலும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் மேல்முறையீட்டுக்குச் செல்வார்கள். ஆனால் கட்சி அவர்களிடம்தான் இருக்கும். அந்தவகையில் பார்த்தாலும் சசிகலாவுக்கு இதனால் லாபமில்லை. இது ஒருநாள் செய்தியாக மட்டுமே இருக்கும்'' என்கிறார்.
``இனி வரும் நாள்களில் சசிகலாவுக்குள்ள வாய்ப்புகள் என்ன?'' என்றோம்.
``தொடக்கத்தில் இருந்தே அவருக்கிருந்த வாய்ப்பு என்பது டி.டி.வி.தினகரனை வலுப்படுத்துவதுதான். காரணம், இந்த வழக்கில் இருந்து தினகரன் தன்னை விடுவித்துக் கொண்டார். 2019 ஆம் ஆண்டு அ.ம.மு.க என்ற கட்சியும் தொடங்கிவிட்டார். அதற்கு முன்னதாக ஆர்.கே.நகரில் போட்டியிட்டு இரட்டை இலையை தோற்கடித்தார். அந்தவகையில் மக்கள் மன்றத்தில் அவர் தன்னை நிரூபித்துவிட்டார். ஆனால், அதன்பிறகு நடந்த தேர்தல்களில் அவர் எடுபடவில்லை. பெங்களூருவில் இருந்து சசிகலா வந்த பிறகு, `அ.தி.மு.க பொதுச் செயலாளர் நான்தான்' என்றார். அதனை நிரூபிப்பதற்கு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதிலும் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வந்துவிட்டது. இனி மேல்முறையீட்டுக்குச் சென்றாலும் அதனால் ஒரு பயனும் இல்லை'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், ``1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கிய பிறகு நடந்த ஆலோசனைக் கூட்டங்களில், `நாம் போட்டி பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் போடுவோம். நீதிமன்றத்துக்குச் செல்வோம்' என அவருக்கு ஆலோசனை சொல்லப்பட்டது. ஆனால் அப்படியொரு முடிவை எம்.ஜி.ஆர் எடுக்கவில்லை. அ.தி.மு.கவை தொடங்கிய பிறகு 73 ஆம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பிறகு நான்கு இடைத்தேர்தல்களில் வென்றார். 1977ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வரானார். காங்கிரஸ் கட்சியில் இருந்து 1969 ஆம் ஆண்டு இந்திரா காந்தியை நீக்கினர். அவரும் தேர்தல் மூலமாக நிரூபித்துவிட்டுத்தான் வந்தார். எனவே, மக்கள் மன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. காரணம், எந்த நீதிமன்றமாக இருந்தாலும் சட்டத்தின் நான்கு முனைகளுக்குள்தான் செயல்பட முடியும்,'' என்கிறார் அவர்.
`` அதிமுக மீதான சசிகலாவின் உரிமையைப் பறித்துவிட்டதால் அவருக்கு உரிமை இல்லை என்றாகிவிட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்யலாம். கீழமை நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வருவதற்கே ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. உயர் நீதிமன்றத்தில் எப்போது வழக்கு முடியும் எனத் தெரியாது. இது முடிவடையாத ஒன்றாகத்தான் பார்க்கிறேன்,'' என ஷ்யாம் கூறுகிறார்.
``அமமுக வலுப்பெற்றால் அடுத்த பத்து ஆண்டுகளில் நல்ல முடிவுகள் கிடைக்கலாம். தி.மு.க மீதான அதிருப்தி வாக்குகளை அவர்கள் பிரிக்கலாம். தற்போதைய நிலையில் அதிமுகவால் உடனடியாக வெற்றி பெற முடியாது. அனைவரும் ஒன்று சேர்ந்தால் அதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பேசுவதைப் பார்த்தால் அதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரியவில்லை'' என்கிறார் ஷ்யாம்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












