சசிகலாவின் தஞ்சை வருகை: தென்மாவட்ட அ.தி.மு.கவில் அடுத்து நடக்கப் போவது என்ன?

சசிகலா
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

சசிகலாவின் கணவர் ம.நடராசனின் நினைவு நாளுக்காக தஞ்சாவூர் வந்திருந்த வி.கே.சசிகலா, சில சிறப்பு பூஜைகளையும் மேற்கொண்டுள்ளார். `எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் என்பது இனி வரப்போவதில்லை என்பதை அ.தி.மு.க உணர வேண்டும். தொடர் சுற்றுப்பயணங்கள் மூலம் சசிகலா சில முயற்சிகளை மேற்கொண்டாலும் பா.ஜ.க விரும்பினால்தான் இணைப்பு சாத்தியப்படும்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அதிருப்தி அ.தி.மு.கவின் கூட்டம்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வி.கே.சசிகலா வெளியில் வந்து ஓராண்டு காலம் ஆகிவிட்டன. அ.தி.மு.க தொண்டர்களுடன் செல்போனில் பேசுவது, சுற்றுப்பயணம் மேற்கொள்வது எனத் தொடர்ந்து சில நடவடிக்கைகளில் இறங்கினாலும் அ.தி.மு.க தலைமையில் இருந்து எந்தவித அசைவும் தென்படவில்லை. தென்மாவட்ட அ.தி.மு.கவில் மட்டும் அவ்வப்போது, சசிகலா தொடர்பான ஆதரவுப் பேச்சுகள் தென்பட்டன. அண்மையில் தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் போடப்பட்ட அ.தி.மு.க-அ.ம.மு.க இணைப்புத் தீர்மானமும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதன் தொடர்ச்சியாக, திருச்செந்தூருக்குப் பயணம் மேற்கொண்ட சசிகலாவை, ஓ.பி.எஸ்ஸின் தம்பி ஓ.ராஜாவை சந்தித்துப் பேசினார். இதன் காரணமாக ஓ.ராஜாவை கட்சியில் இருந்தே நீக்கி பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டனர்.

இதையடுத்து, சசிகலா விவகாரத்தால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, அன்வர்ராஜா, ஓ.ராஜா உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் பலரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையில் கூட்டம் ஒன்றை நடத்தினர். அ.தி.மு.கவில் சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துவது எனவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், `நடராசனின் நினைவு நாளில், அரசியல் தொடர்பான அறிவிப்பினை சசிகலா வெளியிடலாம்' என்ற பேச்சு எழுந்தது. ஆனால், அப்படிப்பட்ட எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் சிறப்பு பூஜைகளை மேற்கொள்வதற்கான பயணமாக அமைந்துள்ளதாக அ.ம.மு.கவினர் தெரிவிக்கின்றனர்.

கோபூஜையை நடத்தியது ஏன்?

`புதிய பார்வை' இதழின் முன்னாள் ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராசனின் உடல், தஞ்சையில் விளார் கிராமத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. அவரது நான்காவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தஞ்சாவூருக்குக் கடந்த 17 ஆம் தேதி சசிகலா சென்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை (மார்ச் 20) ஆறு மணிக்கெல்லாம் நினைவிடத்துக்கு சசிகலா வந்துவிட்டார். அவருடன் ஓ.பி.எஸ் தம்பி ராஜா, அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, நடராசனின் சகோதரர்கள் ராமச்சந்திரன், பழனிவேல் மற்றும் உறவினர்கள் என 150 பேர் கூடியிருந்தனர். தொடர்ந்து பசு மற்றும் கன்றுக்குட்டியை வைத்து கோபூஜை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், கணவரின் உருவப்படத்தைப் பார்த்து அவர் கலங்கியதாகக் கூறப்படுகிறது.

கோ பூகை

இதன்பிறகு ராமலிங்க வள்ளலாரின் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பெண்கள், திருவருட்பா பாடல்களை இசைத்துள்ளனர். இந்தப் பயணத்தில் சசிகலா மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் அவரது உறவினர்கள் குறிப்பிடுகின்றனர். இதன்பிறகு கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவில் மற்றும் திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் ஆகியவற்றில் அவர் வழிபாடு நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தென்மாவட்ட அ.தி.மு.கவினரின் விருப்பம்

சசிகலாவின் தஞ்சாவூர் வருகை மற்றும் ஆன்மிக சுற்றுப்பயணம் தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், `` அ.தி.மு.கவில் சசிகலாவுக்கு இடமில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். ஆனால், `சசிகலா வர வேண்டும்' என்பதில் தென்மாவட்ட அ.தி.மு.கவினர் உறுதியாக உள்ளனர். அது நியாயமான ஆர்வமாகவும் பார்க்கலாம். மேற்கு மண்டலம் உள்பட சில பகுதிகளில் உள்ளவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். அதனால்தான் அந்த மாவட்டங்களில் இருந்து சசிகலாவுக்கு ஆதரவாக பெரிதாக குரல்கள் எழவில்லை. இவர்களை பா.ஜ.க ஒன்று சேர்க்க விரும்பினால், அனைவரும் இணைவார்கள். ஆனால், அ.தி.மு.க பலவீனமாக இருக்க வேண்டும் என பா.ஜ.க நினைக்கிறதோ என்ற சந்தேகமும் எனக்கு உள்ளது'' என்கிறார்.

தொடர்ந்து பேசிய ஷ்யாம், `` எதிர்க்கட்சிக்கான ரோலை தமிழ்நாடு பா.ஜ.க கையில் எடுத்துச் செயல்படுகிறது. அதனை அவர்கள் அ.தி.மு.கவுக்கு விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டார்கள். அரசியல்ரீதியாக தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய இடத்தில் சசிகலா இருக்கிறார். அதற்கு ஒரே வழி, அ.ம.மு.கவை வலுப்படுத்துவதுதான். அந்தக் கட்சியை வெளிப்படையாக சசிகலா ஆதரித்தால், அ.தி.மு.கவுக்கு அவர் உரிமை கொண்டாட முடியாது. தவிர, நீதிமன்றத்தில் போராடி ஒரு கட்சியை வெற்றி பெற முடியாது. மக்கள் மன்றத்தில் போராட வேண்டும் என்றால் தேர்தல்தான் ஒரே வழி. இதனை உணர்ந்து கொண்டு டி.டி.வி.தினகரன் செயல்படுவதாகவே பார்க்க முடிகிறது. அவரின் கட்சி தேர்தலில் நின்று குறிப்பிட்ட சில இடங்களில் வெல்கிறது. இப்படிப்பட்ட எதையும் சசிகலா செய்யவில்லை. சிவில் கோர்ட்டில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை. யார் பிரித்தார்களோ அவர்கள் சேர்த்து வைக்க வேண்டும்'' என்கிறார்.

panneer selvam and edappadi

பட மூலாதாரம், Getty Images

பா.ஜ.க நினைத்தால் சாத்தியம்

`` பா.ஜ.க வெற்றிக்கு வாழ்த்து கூறுவது, மத்திய அரசு எதாவது திட்டத்தை அறிவித்தால் வரவேற்பது என இவற்றில் மட்டும் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஒற்றுமையாக உள்ளனர். ஆனால், சசிகலா விவகாரத்தில் இவர்கள் ஒற்றுமையாக இல்லை. பா.ஜ.க இல்லாமல் இவர்களால் அடுத்தகட்டத்தைத் தாண்ட முடியாது. சசிகலாவால் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது. சிக்கிம் முதல்வர் போல ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் அதையும் பா.ஜ.கதான் தர முடியும். சசிகலா பக்கம் எந்த ஆதரவுகளும் இல்லை'' எனக் குறிப்பிடும் ஷ்யாம்,

`` பா.ஜ.கவுக்குத் தேவையென்றால் சசிகலாவை இணைத்துக் கொள்வார்கள். தற்போதைய நிலையில் அ.தி.மு.கவால் வெல்ல முடியாது என்பது பா.ஜ.கவுக்குத் தெரியும். தி.மு.கவுக்கும் அதுதான் தேவை. அ.தி.மு.க பலமான கட்சியாகவும் கீழ் அளவில் அமைப்புள்ள கட்சியாகவும் உள்ளது. ஆனால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் காலம் இனி வரப்போவதில்லை என்பதை அ.தி.மு.க உணர வேண்டும். சசிகலா எடுக்கும் முயற்சிகளால் ஊடகங்களுக்குத்தான் செய்தி கிடைக்கின்றன. சிறையில் இருந்து வெளியில் வந்து ஓராண்டு காலம் ஆகியும் அவர் என்ன சிறப்பாகச் செயல்பட்டுவிட்டார்?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: