மதுராந்தகத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை காலி செய்ய திடீர் நோட்டீஸ்; அதிர்ச்சியில் 100 குடும்பங்கள் - கள நிலவரம்

செங்கல்பட்டு வீடுகள்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள திரு.வி.க.நகர், அருணாகுளம் பகுதிகளில் ஏரியை ஒட்டி அமைந்துள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற வருவாய்த் துறையும் பொதுப் பணித் துறையும் முடிவு செய்துள்ளன. பல ஆண்டுகளாக இங்கு வசிப்பவர்கள், எங்கு செல்வதென கேள்வி எழுப்புகிறார்கள்.

கட்டடப் பணிகளில் சித்தாளாக வேலை பார்த்து வரும் சுலோச்சனா, தனது வீட்டை இடிக்கப்போவதாக நோட்டீஸ் வந்ததைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். இவரது கணவர் ஒரு மாற்றுத் திறனாளி. மகனும் கண் பார்வை தெரியாத மாற்றுத் திறனாளி. விரிந்து பரந்து கிடக்கும் மதுராந்தகம் ஏரியின் தென் பகுதியில் கரையின் ஓரமாக உள்ள திரு.வி.க. நகரில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

"இப்போது திடீரென வந்து காலிசெய்யச் சொன்னால், மாற்றுத் திறனாளிகளான மகனையும் கணவரையும் வைத்துக்கொண்டு எங்கே போவது? நான் இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன். இங்கிருந்த பெரும்பாலானவர்கள் 30 -40 வருடங்களுக்கு முன்பாக இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கியவர்கள்தான். இப்போது திடீரென இப்படிச் சொல்வது தலையில் இடி விழுந்ததைப் போலிருக்கிறது. எங்களுக்கு வேறு இடத்தில் வீடு கொடுத்து, எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தால்தவிர, இந்த இடத்தைவிட்டு வெளியேற மாட்டோம்" என்கிறார் சுலோச்சனா.

மதுராந்தகம் ஏரியின் கரையில் அமைந்திருக்கும் திரு.வி.க. நகர், அருணா குளம் பகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்படி அதிர்ந்துபோன நிலையில்தான் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் வலியுறுத்துகின்றன. குறிப்பாக 2019ஆம் ஆண்டு மே மாதம் அளித்த தீர்ப்பு ஒன்றில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியது. அதன்படி மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பொது நல வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

இந்த நிலையில், மதுராந்தகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நிர்மல்குமார் என்பவர் மதுராந்தகம் ஏரியைத் தூர் வார வேண்டுமென்றும் அதன் கரைகளை ஐந்து மீட்டர் உயரத்திற்கு கான்க்ரீட்டால் கட்ட உத்தரவிட வேண்டுமென்றும் கோரி பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

மதுராந்தகம் ஏரி

அந்தத் தீர்ப்பில் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் ஏரியின் எல்லைகளை அளக்க வேண்டும். அங்கு ஆக்கிரமிப்புகள் ஏதும் இருந்தால் அவற்றை அகற்றி, மார்ச் 31ஆம் தேதிக்குள், அவை அகற்றப்பட்டது குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில்தான், தற்போது இந்த வீடுகளை அகற்ற நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கென கடந்த பிப்ரவரி 21ஆம் தேதியன்று இந்தப் பகுதியில் சர்வே மேற்கொள்ளப்பட்டு, 124 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இவர்கள் உடனடியாக அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டுமென நோட்டீசும் வழங்கப்பட்டிருக்கிறது. 124 வீடுகளில் 76 பேருக்கு பொதுப் பணித் துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. 48 பேருக்கு வருவாய்த் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுலோச்சனா

திடீர் நோட்டீஸால் அதிர்ச்சியில் மக்கள்

"21ஆம் தேதி எங்கள் வீடுகளை எல்லாம் வந்து அளந்தார்கள். எங்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு முதலியவற்றை வாங்கிக் கொண்டார்கள். எதற்கு என கேட்டதற்கு கணக்கெடுப்பு நடப்பதாகச் சொன்னார்கள். இதற்கு அடுத்த நாளே எல்லோருக்கும் வீடுகளை இடிக்கப்போவதாக நோட்டீஸ் வந்தது. இந்த வீடுகள் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும் மாற்று இடம் வழங்குவதாகவும் சொன்னார்கள். அந்த இடத்தையும் எங்களையே அடையாளம் காட்டச் சொன்னார்கள். அதிகாரிகளாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டுமென்று சொன்னோம். எத்தனையோ அதிகாரிகளைப் பார்த்துவிட்டோம். இப்போதைக்கு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், என்ன நடக்கும் என தெரியவில்லை" என்கிறார் இந்தப் பகுதியில் வசிக்கும் பாஞ்சாலை.

பகுதி மக்கள்

"40 வருடத்திற்கு மேலாக இங்கே வேறொரு இடத்தில் இதேபோல சாலை வசதி, வீடு, குழாய் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தரட்டும். நாங்கள் காலி செய்கிறோம். திடீரெனக் காலி செய்யச் சொன்னால் எங்கே போவது? இத்தனை ஆண்டுகளாக இங்கேதான் வசிக்கிறோம். இங்கேதான் எங்கள் வாழ்க்கை இருக்கிறது. எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போகச் சொன்னால் எப்படி? இங்கே எத்தனை மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் இருக்கிறார்கள். எல்லோரையும் அழைத்துக்கொண்டு எங்கே போவது. " என்கிறார் சுந்தரி.

இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தினக்கூலித் தொழிலாளர்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இதே இடத்தில் வசித்து வருபவர்கள். இவர்களில் பலர், இதற்கு முன்பு குடியிருந்தவர்களிடம் நிலத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். பலர் கடன் வாங்கி கான்க்ரீட் வீடுகளைக் கட்டியிருக்கின்றன. வீடுகளை அகற்றப்போவதாக வந்திருக்கும் திடீரென அறிவிப்பு இவர்களை அதிரச் செய்திருக்கிறது.

ஜெர்லின் ஜோஸ்

"இந்த மக்கள் குடியிருக்கும் பகுதி ஏரிக்குள் இல்லை. ஏரிக்குள் இருந்தால் காலி செய்வதாகச் சொல்லிவிட்டோம். மற்ற இடங்களில் உள்ள வீடுகளை அகற்ற வேண்டாமென மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேட்டிருக்கிறோம்" என்கிறார் இந்தப் பகுதியின் (12வது வார்டு) கவுன்சிலரான ஜெர்லின் ஜோஸ்.

இந்த விவகாரம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.ஆர். ராகுல்நாத்திடம் பிபிசி கேட்டபோது, "மாவட்ட நிர்வாகத்தின் கையில் ஏதும் இல்லை. நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே இது நடக்கிறது. அங்கிருந்து அகற்றப்படும் மக்களுக்கு வேறு இடங்களை கொடுக்க முயற்சித்து வருகிறோம். அரசின் வேறு பல திட்டங்களின் கீழ் வீடுகளைக் கட்ட உதவ முடியுமா என்றும் ஆலோசித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

தங்கள் வீடுகளைக் காப்பாற்றுவதற்காக மார்ச் 15ஆம் தேதி முதல் இந்தப் பகுதி மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணொளிக் குறிப்பு, மதுராந்தகத்தில் வீடுகளை அகற்ற அரசு அளித்த திடீர் நோட்டீஸ் - குடும்பங்கள் அதிர்ச்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: