தமிழக பட்ஜெட் 2022: தாலிக்கு தங்கமா கல்விக்கு உதவித்தொகையா? விவாதமாகும் அரசின் திட்டம்

தாலிக்கு தங்கம் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 3 ஆண்டுகளாக, இந்த திருமண உதவித்திட்டம் பயனாளிகளை சென்றடையவில்லை எனவும், கிட்டத்தட்ட 3 லட்சத்து 34,913 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

"ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றைக் கொண்ட பட்ஜெட்" - வெள்ளிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாராட்டு இது.

இந்த பட்ஜெட்டில், கருணாநிதியால் முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்டது மட்டுமின்றி அதன் பயன் நீட்டிக்கப்பட்ட அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் தான் இப்போது மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருசேர கொண்டு வந்திருக்கும் நிலையில், பெண் கல்வி, திருமணம் குறித்த மற்றுமொரு விவாதத்திற்கும் வழிவகுத்திருக்கிறது.

ந்த திட்டம் என்ன? அது மாற்றியமைக்கப்படுவது ஏன்?

சமூக நலத்துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் வழங்கப்பட்டு வந்த திருமண நிதியுதவித் திட்டம் தான் தற்போது பெண்களின் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றியமைக்கப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன்மூலம், அரசுப்பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு/தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக்கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக பட்ஜெட்டில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்" என பட்ஜெட் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1989ஆம் ஆண்டில் கருணாநிதியால் ரூ.5,000 திருமண நிதியுதவியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தில், 2009-ல் ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. பின்னர் 2011-ல் இத்திட்டத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும் சேர்த்து வழங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக, இந்த திருமண உதவித்திட்டம் பயனாளிகளை சென்றடையவில்லை எனவும், கிட்டத்தட்ட 3 லட்சத்து 34,913 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.

பின்னர், கடந்த ஜனவரி மாதம், திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் 2021-2022ம் நிதியாண்டிற்கு 762 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த 53,599 பயனாளிகள், பட்டதாரியல்லாத 41,101 பயனாளிகள், என மொத்தம் 94,700 பயனாளிகள் பயனடைய உள்ளதாக அறிவித்த முதல்வர் ஸ்டாலின், அடையாளமாக சில பயனாளிகளுக்கு உதவித்தொகையையும் தங்கத்தையும் வழங்கினார்.

இந்த நிலையில்தான், இத்திட்டம் மாற்றியமைக்கப்பட இருக்கிறது.

"கற்பனைக்கு எட்டாத பாதிப்புகளை ஏற்படுத்தும்" - ராமதாஸ்

திமுக அதிமுக தாலிக்கு தங்கம் திட்டம்

பட மூலாதாரம், THA.MO. ANBARASAN

படக்குறிப்பு, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 300 பேருக்கு தாலிக்கு தங்கம் (ம) திருமண நிதியுதவி வழங்கும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் (கோப்புப்படம்)

இத்திட்டத்தை உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றுவதை வரவேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ், திருமண நிதியுதவி, தாலிக்குத் தங்கம் திட்டத்தையும் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

"மூவலூர் திட்டம் தவிர்த்து மற்ற திட்டங்கள் சிறப்புப் பிரிவினருக்கான திட்டங்கள் ஆகும். இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை அதிகம்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின்படி, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும்; அத்துடன் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 ஆயிரமும், மற்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

அரசால் செயல்படுத்தப்படும் 5 வகையான திருமண உதவித் திட்டங்களால் 2020-2021 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 8,373 பெண்கள் பயனடைந்துள்ளனர். இவர்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவித் திட்டத்தின் பயனடைந்தவர்கள் என்பதில் இருந்தே அத்திட்டத்தின் தேவையை அறிந்துகொள்ளலாம்.

பயனாளியின் குடும்ப வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும். தினமும் ரூ.200 வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு ரூ.90,000 மதிப்புள்ள உதவிகள் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை" என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தை நீக்குவது தவறு"

கல்வி உதவித்தொகை தாலிக்கு தங்கம்

பட மூலாதாரம், MK STALIN

படக்குறிப்பு, பெண்களுக்கு 12ஆம் வகுப்புக்குப் பிந்தைய உயர்கல்வியில், எந்த படிப்பாக இருந்தாலும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என பாமக சமீபத்தில் வெளியிட்டுள்ள நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருப்பதாகக் கூறுகிறார் அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு.

இது தொடர்பாக பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு, பிபிசி தமிழிடம் பேசினார்.

"தமிழகம் பெண்கல்வியில் முன்னேறிவிட்டது என, சென்னை உள்ளிட்ட நகரங்களை மட்டும் வைத்து சொல்லக்கூடாது. கிராமங்கள், விவசாயிகள், தினக்கூலிகளின் குடும்பங்களில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டும் சம்பாதிப்பவர்களுக்கு, திருமண நிதியுதவியும், தாலிக்குத் தங்கமும் எவ்வளவு முக்கியம்? இந்த திட்டத்தை நம்பியே திருமணம் நடந்த குடும்பங்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தை நீக்குவது தவறு.

மாணவிகளுக்கு உதவித்தொகையை வரவேற்கிறோம். பெண்களுக்கு 12ஆம் வகுப்புக்குப் பின்னான உயர்கல்வியில், எந்த படிப்பாக இருந்தாலும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என, நாங்கள் சமீபத்தில் வெளியிட்ட பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறோம்" என்றார்.

"வறுமையில் இருப்பவர்கள் கஷ்டப்படுவர்"

4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்திருந்தாலும், கொரோனா ஊரடங்கு காரணமாக நிலுவையில் இருந்து சமீபத்தில்தான் 50,000 திருமண நிதியுதவி மற்றும் ஒரு பவுன் தங்கம் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கவிக்கு வழங்கப்பட்டது. அவரிடம் இத்திட்டம் தொடர்பாக பேசினேன்.

"அரியலூர் மாவட்டம் குலவடையான் கிராமம்தான் என்னுடைய ஊர். என்னுடைய அம்மா-அப்பா விவசாயம்தான் பார்க்கின்றனர். 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த திட்டம் மிகவும் பயனுடையதாக இருந்தது. இல்லாதவங்க நாங்க, கஷ்டப்பட்டு படித்தோம். கடன் வாங்கிதான் எனக்குத் திருமணம் செய்தனர். இந்த பணமும், தங்கமும் கிடைத்தது என்னுடைய பெற்றோருக்கு மிகவும் உதவியாக இருந்தது. அந்த பணமும், தங்கமும் அவர்களுக்குத்தான். திருமணத்திற்கு ஒரு இடத்தில் வட்டிக்கு வாங்கியிருந்த கடனை தற்போது செலுத்திவிட்டோம். அந்த கடனுக்கு மாதம் மாதம் ரூ.2,000 வட்டி செலுத்திக்கொண்டிருந்தோம். இப்போது நிம்மதியாக இருக்கிறது. இந்த திட்டத்தை நிறுத்துவது ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது. 5 லட்சம் வரை கடன் வாங்கி எனக்கு திருமணம் செய்தனர். இப்போது உள்ள சூழ்நிலைக்கு ஒரு சவரன் தங்கம் 40,000 ரூபாயைக் கடந்துவிட்டது. பெற்றோருக்கு சிரமத்தைக் குறைக்கும் வகையில் இத்திட்டம் இருந்தது. மாதம் 1,000 ரூபாய் என்பது வருவதும் போவதும் தெரியாது. இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். எங்களை விட வறுமையில் இருப்பவர்கள் இன்னும் கஷ்டப்படுவர்" என்கிறார் சங்கவி.

தாலிக்குத் தங்கம் முக்கியமா? அல்லது உயர்கல்வி முக்கியமா?

தாலிக்கு தங்கம் திமுக அதிமுக திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி ஆகியவற்றை அரசே வழங்கியதை பெண்ணிய செயற்பாட்டாளர்கள் ஆரம்பத்தில் விமர்சித்தனர்.

ஆனால், தற்போது அரசுப்பள்ளிகளில் படித்துவரும் மாணவிகள் சிலரிடம் பேசுகையில், மாதம் 1,000 ரூபாய் என்பது நிச்சயம் உயர்கல்விக்கு உதவியாக இருக்கும் என்றனர்.

பென்னாடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவரும் சிவசங்கரி பிபிசி தமிழிடம் பேசினார். ஓராண்டுக்கு முன்பு தந்தையை இழந்தவர். தாய் வீட்டு வேலை செய்து குடும்ப தேவைகளை நிறைவேற்றிவருகிறார்.

பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு குறித்து தெரியுமா என கேட்டால் உடனடியாக பதில் வருகிறது சிவசங்கரியிடமிருந்து.

"உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் வங்கியில் செலுத்துவதாக சொல்லியிருக்கின்றனர். கல்லூரிப் படிப்புக்கு உதவியாக இருக்கும். தாலிக்குத் தங்கத்தைவிட ரூ.1,000 வழங்குவதே உதவியாக இருக்கும்" என்றார்.

அதேபோன்று, திருச்சி மாவட்டம் ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாலதி, "ரூ.1,000 உதவியாக இருக்கும். என்னுடைய வங்கியில் நேரடியாக செலுத்துவதால் அந்த பணத்தின் மூலம் புத்தகங்கள், படிப்புக்குத் தேவையான மெட்டீரியல்கள் வாங்கலாம். வீட்டில் யாரிடமும் பணம் கேட்காமல் நமக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ளலாம்" என்றார்.

தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி ஆகியவற்றை அரசே வழங்கியதை பெண்ணிய செயற்பாட்டாளர்கள் ஆரம்பத்தில் விமர்சித்தனர். மிகப்பெரும் பொருளாதார சுமையாகவும் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் நவீனப்படுத்தப்பட்ட அழகுணர்ச்சியுடன் பொருத்திப்பார்க்கப்படும் ஒன்றாக திருமணம் மாறிவிட்ட சூழ்நிலையில், தாலிக்காக அரசே தங்கம் வழங்குவது இத்தகைய பிற்போக்குத்தனங்களை ஊக்குவிக்கும் ஒன்றாகவே இருக்கும் என அவர்கள் கருதினர். ஆனால், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 பணம், ஒரு பவுன் தங்கம் என்பது அவர்களை பட்டப்படிப்பு வரை படிக்க ஊக்குவிக்கும் திட்டமாகவே இருக்கும் என்பதே இன்றைய, முந்தைய அரசுகளின் எதிர்வாதமாக இருந்தது.

தற்போது, அத்திட்டத்தை பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றுவது நிச்சயம் முற்போக்கானதே என்கின்றனர், கல்வியாளர்களும் பெண்ணிய ஆர்வலர்களும்.

"பழமைவாத நம்பிக்கைகளை களையும்"

தாலிக்கு தங்கம் திட்டம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் இயல் துறை பேராசிரியர் மணிமேகலை பிபிசி தமிழிடம் பேசுகையில், "திருமணம் என்பதே ஒரு நிறுவனம்தான். பெண்களுக்கு திருமணம் செய்வதை ஏன் அரசே ஊக்குவிக்க வேண்டும்? ஏனென்றால், ஆண்களுக்கு இந்த திட்டம் இல்லை. அரசே திருமணத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதல்ல. இப்போது நிறைய பெண்கள் ஒற்றை பெண்களாக உள்ளனர். அவர்கள் தனித்து வாழ முடிவெடுக்கின்றனர்.

திருமணம் என்பது மாறிக்கொண்டே வருகிறது. உயர்சாதியினரின் திருமண வழக்கங்களை மற்ற சாதியினரும் பின்பற்றத் தொடங்கியதாலேயே, திருமணம் இன்றைக்கு மிக பொருளாதார சுமையுடையதாக மாறியிருக்கிறது. அதற்கு அரசும் துணை போயிருக்கிறது என்றுதான் தாலிக்குத் தங்கம் திட்டத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

தற்போது இத்திட்டத்தை மாற்றியமைப்பதன் மூலம், பழமைவாத நம்பிக்கையில் இருந்து பெண்களை சமத்துவமாக பார்க்கும் மனநிலைக்கு அரசு வந்துகொண்டிருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். அவர்களின் வங்கிக்கணக்கிலேயே இந்த உரிமைத்தொகை செலுத்தும்போது, அவர்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கும்.

பொதுவாக பார்த்தால் திட்டத்தை நிறுத்துவது நல்லதல்ல என்றே தோன்றும். ஆனால், பெண்ணியப் பார்வையில் பார்த்தால் நல்லதுதான். முந்தைய திட்டத்தில் ரூ.90,000 அளவில் பெண்கள் பயன்பெற்று வந்தனர். இப்போது அவர்கள் மூன்று வருட பட்டப்படிப்பு என எடுத்துக்கொண்டாலும் ரூ.36,000 மட்டுமே பெறுவர். அப்படியென்றால், அரசு தங்கள் நிதிச்சுமையைக் குறைப்பதற்காக திட்டத்தை மாற்றியதா என்று தோன்றும். ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து பெண் குழந்தைகளின் உயர்கல்விக்கு ஊக்குவிக்கும் திட்டமாக இது அமையும். முந்தைய திட்டத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் தான் பயன்பெறுவர்கள். அதில் 1,00,000 பேர் தான் பயன்பெற முடியும்.

எனவே, நிதிச்சுமையை குறைப்பதற்காக இதனை மாற்றவில்லை என்பது தெரிகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சியாகவும் இதனைப் பார்க்க வேண்டும்.

உயர்கல்வி சேர்க்கை அதிகமாகும்போது இயல்பாகவே பெண்களின் திருமண வயது அதிகரிக்கும்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் ஆண்-பெண் சேர்க்கை விகிதம் கிட்டத்தட்ட 50:50 என்ற விகிதத்திலேயே உள்ளது. ஆனால், அரசுப்பள்ளிகளில் இருந்து உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. நீண்ட கால பயனாக இத்திட்டத்தின்மூலம் இந்த எண்ணிக்கை அதிகமாகும்.

இந்த திட்டத்திற்காகவே பெண்களை படிக்க வைத்த பெற்றோர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால், திருமணம் தொடர்பான மற்ற திட்டங்கள் தொடரும் என அரசு அறிவித்திருக்கிறது. நீண்ட, நீடித்த பயன் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும்" என்றார்.

"பெண்கள் முன்னேற்றத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி"

தாலிக்கு தங்கம் திட்டம்

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, `பிபிசி தமிழிடம்` பேசுகையில், "கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட ஆண்டை தொடர்ந்து வந்த கல்வியாண்டில் விடுபட்ட மாணவிகள் பள்ளியில் சேர்ந்தனர். இந்த திட்டம், உண்மையில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகத்தான்.

ஆனால், பாலின சமத்துவம், அறிவுசார் சமூகமாக நாம் இருக்க வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் காலத்தில், இன்னும் வரதட்சணை என்பதை குற்றமாக பொதுச் சமூகம் கருதவில்லை. தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், விளம்பரங்கள் என எதிலும், வரதட்சணையை குற்றமாகக் காட்டவில்லை. அப்படியிருக்கும்போது பெண்ணுக்குக் கல்வி முக்கியமா, தாலி முக்கியமா என்பதுதான் இப்போதைக்கு இருக்கும் கேள்வி.

சாவித்ரிபாய் பூலே, பெரியார் உள்ளிட்டோரின் 200 ஆண்டு கால போராட்டம், 75 ஆண்டுகால சுதந்திரம் இவற்றில் பெண் கல்வியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியிருக்கிறோம். இந்த முன்னேற்றத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக இத்திட்டத்தை நான் பார்க்கிறேன்.

இந்த உதவித்தொகை மூலம் பெண்கள் மேல்படிப்பை தொடர்வதற்கும், வேலைவாய்ப்புக்கான பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிக்கலாம், பெண்கள் முனைவர் பட்டம் பெறும் வரை இத்திட்டத்தை விரிவுப்படுத்தலாம்.

பெண்களை திருமணத்திலிருந்து வெளியில்வந்து கல்வியை நோக்கி இந்த திட்டம் செலுத்தும். முந்தைய திட்டத்தில் ரூ.90,000 வரை பயன் பெறுவார்கள். தற்போது ரூ. 36,000 அளவிலேயே பயன்பெற முடியும் என, பணத்தொகை அடிப்படையில் இதனை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது" என்றார்.

காணொளிக் குறிப்பு, வெறும் 124 ரூபாயில் நடந்த திருமணம்: எங்கு? எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: