தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளை திருப்திப்படுத்தியிருக்கிறதா?

வேளாண் நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின் முழுமையான முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளும் விவசாய அமைப்புகளும் இந்த பட்ஜெட்டில் திருப்தியடைந்திருக்கிறார்களா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 202-23 நிதியாண்டுக்கான வேளாண் தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மார்ச் 19ஆம் தேதி தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் மண் வளம் குறித்து அறிந்து கொள்வதற்காக 'தமிழ் மண் வளம்' என்ற தனி இணைய முகப்பு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்குவது, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ஒரு டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்தித் தருவது, ரூ. 300 கோடி மதிப்பில் கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம், தமிழ்நாட்டில் மரம் வளர்க்கும் திட்டத்திற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

கடந்த முறை தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 86 திட்டங்களில் 80 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டதாகவும் விவசாயத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

வேளாண் நிதி நிலை அறிக்கை விவசாயிகளை திருப்திப்படுத்தியிருக்கிறதா?

வேளாண் நிதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பும் பின்பும் மத்திய வேளாண் அமைச்சகத்துடன் விவாதம் நடத்த வேண்டுமென்கிறார் அனைத்து விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த பி.ஆர். பாண்டியன். இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக பயன்படுத்த முடியும் என்கிறார் அவர்.

"இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை பன்முகத் தன்மை கொண்ட வேளாண் நிதிநிலை அறிக்கை. அதனை வரவேற்கிறோம். ஆனால், பல்வேறு அம்சங்களில் இந்த பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது.

வேளாண் நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் ஆதார விலையாக நிர்ணயிக்கப்படும் என்றார்கள். அதேபோல, கரும்புக்கான ஆதார விலை 4,000 ரூபாயாக நிர்ணயிக்கப்படும் என்றார்கள். ஏற்கனவே இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டு, இரண்டாவது நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையிலும் அது தொடர்பாக ஏதும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கை உற்பத்தி, சந்தைப்படுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கிறது. ஆனால், எல்லா விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். கொள்முதல் உத்தரவாதமளிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் அதைச் செய்கிறார்கள்.

அதேபோல இந்த அரசு விவசாயம் தொடர்பாக பல்வேறு குழுக்களை அமைக்கிறது. அப்படி குழுக்களை அமைக்கும்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் இதில் இடம்பெறுகிறார்கள். மாறாக விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்களையும் அந்தக் குழுக்களில் சேர்க்க வேண்டும்" என்கிறார் அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த பி.ஆர். பாண்டியன்.

கால்நடை வளர்ப்பு தொடர்பாக கூடுதலான அறிவிப்புகளைச் செய்திருக்க வேண்டும் என்கிறார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் செம்மல் விருது பெற்ற விவசாயியான தெய்வமணி.

"பால் வளத்திற்கு கூடுதலாக ஏதாவது செய்திருக்கவேண்டும். குறிப்பாக இப்போது வைக்கோல் கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது. மாடு வளர்ப்பவர்களுக்கு நேரடியாக பயன்படும் வகையில் மானியங்கள் ஏதாவது அறிவித்திருக்கலாம்.

அதேபோல, காப்பீடு முறையை இன்னும் மேம்படுத்த வேண்டும். மற்றொரு பக்கம் எல்லா விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்க வேண்டும். தக்காளி ஒரு நாள் கிலோ 3 ரூபாய்க்கு விற்கிறது. மற்றொரு நாள் முப்பது ரூபாய்க்கு விற்கிறது. முடிவில் விவசாயிகளுக்கே இழப்பு ஏற்படுகிறது" என்கிறார் தெய்வமணி.

ஆனால், இந்த நிதி நிலை அறிக்கையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஏமாற்றமளிப்பதாகக் கூறுகிறது பாரதீய கிசான் சங்கம்.

"வைகை அணையைத் தூர்வார வேண்டும்"

"இது வரவேற்கத் தக்க பட்ஜெட்டாக இல்லை. நிதி நிலை அறிக்கையை உருவாக்கும்போது அமைச்சருடன் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் விளைவிக்கப்பட்ட நெல் குவிந்துகிடப்பதைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் கொள்முதல் செய்ய வேண்டும்; எல்லா மாவட்டங்களிலும் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தோம். அது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதேபோல, ரசாயனம் கலக்காத வேளாண்மை மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கு தனியான உழவர் சந்தை வேண்டுமெனக் கோரினோம். அது தொடர்பாகவும் எந்த அறிவிப்பும் இல்லை.

விவசாயி

பட மூலாதாரம், Getty Images

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வைகை அணையை தூர்வாரினால், மேலும் ஐம்பதாயிரம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்க முடியும். அது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை.

தற்போது விவசாயத்திற்கு ஆள் கிடைக்கவில்லை. இயந்திரங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இதற்கான மானியத்திற்கு வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருக்கிறார்கள். இது போதாது. இயந்திரங்களின் மூலம் நெல் நடவு செய்தால் கூடுதல் விளைச்சல் கிடைக்கும். ஆகவே இயந்திரங்களை வாங்குவதற்கான மானியத் தொகையை அதிகரித்திருக்கலாம்.

80 ஆயிரம் பேருக்கு இலசவசம் மின்சாரம் கொடுத்திருக்கிறார்கள். அது மட்டுமே இதில் வரவேற்கத்தக்க அம்சம்" என்கிறார் பாரதிய கிசான் சங்கத்தின் தேசியத் துணைத் தலைவர் பெருமாள்.

சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, வேளாண் நிதி நிலை அறிக்கையின் சில அம்சங்களை வரவேற்றிருக்கும் நிலையில் சில அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோரியுள்ளது.

"அதிகம் தண்ணீர் மற்றும் ரசாயனங்கள் தேவைப்படாத இயற்கை வேளாண்மை., சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பதை வரவேற்கிறோம்.

அதே நேரம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ட்ரோன் கழகத்துடன் இணைந்து ஏழு உழவர் பயிற்சி நிலையங்களில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், பயிர்வளர்ச்சி நிலை கண்டறிதல் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கப்படும் எனவும் நிதிநிலையில் கூறப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை ஒட்டி மனிதக் குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ளன. ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது பல இடங்களில் மனிதர்களுக்கும் கூட பாதிப்பாக அமையும். மேலும் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதில் பயிரிடப்பட்ட பகுதியைத் தாண்டியும் மருந்து செல்லக்கூடிய வாய்ப்பிருப்பதால் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் பல உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் இதில் உள்ளது. அரசு இதை நிச்சயமாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என அந்த அமைப்பு கோரியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: