யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்றது எப்படி? - முதலிடம் பிடித்த ஷ்ருதி சர்மா

2021ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் முதல் மூன்று இடங்களை பெண்களே பெற்றுள்ளனர்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷ்ருதி சர்மா என்ற பெண் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை அன்கிதா அகர்வால் என்ற பெண்ணும் மூன்றாம் இடத்தை காமினி சிங்க்லா என்று பெண்ணும் பிடித்துள்ளனர்.
முதல் ஐந்து இடங்களைப் பிடித்தவர்களில் நால்வர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் பிடித்த ஷ்ருதி சர்மா
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்திப்படி, ஷ்ருதி சர்மா டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் இளநிலை பட்டமும் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-இல் முதுநிலை பட்டமும் பெற்றவர். முன்னதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் முதுநிலை பட்டபடிப்புக்காகச் சேர்ந்த அவர், அங்கிருந்து விலகி பின்னர் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-இல் சேர்ந்தார்.
டெல்லியில் உள்ள இன்னொரு புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழத்தின் ரெசிடென்ட்ஷியல் கோச்சிங் அகாடமியில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்காகப் பயிற்சி மேற்கொண்டார்.
இந்த அகாடமியில் பயிற்சி எடுத்தவர்களில் மட்டும் 23 பேர் யுபிஎஸ்சி போட்டி தேர்வில் இந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் நகரைச் சேர்ந்தவர் ஷ்ருதி சர்மா. இவரது தந்தை ஒரு கட்டடக்கலை நிபுணர். இவரது தாய் ஒரு முன்னாள் ஆசிரியை. இவரது சகோதரர் ரஞ்சி போட்டிகளில் விளையாடி வரும் மாநில அளவிலான கிரிக்கெட்டர்.
இரண்டாவது முயற்சி - கை கொடுத்த ஆங்கிலம்
பிபிசி இந்தி செய்தியாளர் விகாஸ் திரிவேதியிடம் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு பேசினார் ஷ்ருதி சர்மா.
இந்திய அளவில் முதலிடம் பிடிப்பீர்கள் என நினைத்தீர்களா என்ற கேள்விக்கு,''நிச்சயமாக நான் எதிர்பார்க்கவில்லை. முடிவுகள் நல்லபடியாக இருக்குமா இருக்காதா என்ற சிந்தனையில் நான் நேற்று ஓய்வின்றி இருந்தேன்; சிறிது பயம் இருந்தது என்று கூடச் சொல்லலாம். முடிவுகள் வெளியாகி விட்டதா என்று நான் தொடர்ந்து என் கைபேசியைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். எல்லாமே திடீரென நிகழ்ந்து விட்டது; எல்லாம் மாறிவிட்டது,'' என்று கூறினார்.

ஷ்ருதி சர்மாவுக்கு இது இரண்டாவது யுபிஎஸ்சி தேர்வு முயற்சி. முதல் முறையாக யுபிஎஸ்சி தேர்வு எழுதிய பொழுது விருப்பப் பாடமாக வரலாறை தெரிவு செய்திருந்த இவர் இந்தியில் தேர்வு எழுதினார். ஆனால் அந்த முறை அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இரண்டாவது முறையாக முயற்சி செய்தபோது வரலாறை விருப்பப் பாடமாகத் தெரிவு செய்திருந்தாலும் ஆங்கிலத்தில் தேர்வுகளை எழுதினார்.
''இந்தியில் தேர்வு எழுதுவது எனக்கு அவ்வளவு எளிமையாக இல்லை என்பதால் இரண்டாவது முறை முயற்சி செய்தபோது ஆங்கிலத்தில் தேர்வு எழுதினேன்,'' என்று ஷ்ருதி சர்மா பிபிசியிடம் தெரிவித்தார்.
நேர்முகத் தேர்வு எவ்வாறு இருந்தது
அவரது நேர்முகத் தேர்வு எவ்வாறு இருந்தது என்பது குறித்தும் பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார் ஷ்ருதி சர்மா.
''நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன்; என்னுடைய மாதிரி நேர்முகத் தேர்வுகள் அனைத்தும் மிகவும் நன்றாகவே இருந்தன. நான் நேர்காணல் செய்யப்படும் பொழுது நன்றாக பதிலளிப்பேன் என்று நம்பினேன். ஆனால் நேர்முகத் தேர்வு நடந்து முடிந்த பின்பு என்னுடைய அம்மா, அப்பாவிடம் வந்து அழுதுவிட்டேன். நேர்முகத் தேர்வில் நிறைய கேள்விகளுக்குத் தெரியாது என்று தான் நான் பதில் சொன்னேன். கடைசியாக எல்லாமே நன்றாக நடந்து விட்டது,'' என்றார்.
எவ்வளவு நேரம் படிக்க வேண்டும்
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற எவ்வளவு மணி நேரம் படிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, ''எத்தனை மணி நேரம் நீங்கள் படிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. படிக்கும் நேரத்தில் எவ்வளவு நேரத்தைத் தரமாகச் செலவிடுகிறீர்கள் என்பதே முக்கியம்,'' என்று கூறினார்.
படிக்கும் பொழுது இடைவேளை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம்; படிக்கும் நேரம் மற்றும் இடைவேளை எடுக்கும் நேரத்துக்கு இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இத்தனை நாட்கள் கடுமையாகப் படித்ததால், அடுத்ததாக ஒரு சுற்றுலா செல்ல இருப்பதாகவும் அதற்கான இடத்தை இன்னும் தேர்வு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













