ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 2ம் இடம் பெற்ற 4 வயது மகனின் தாய்

ANU KUMARI

பட மூலாதாரம், ANU KUMARI

படக்குறிப்பு, அனு குமாரி
    • எழுதியவர், சர்வப்ரியா சாங்வான்
    • பதவி, பிபிசி

ஹரியானாவின் சோனிபாட்டில் வசிக்கும் நான்கு வயது மகனின் தாய் அனுகுமாரி சிவில் சர்விஸ் தேர்வுகளில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் என்ற நல்ல ஊதியத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த அனுகுமாரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விலகி, குடிமைப் பணித் தேர்வுகள் எழுத முடிவு செய்தார்.

அவர் எடுத்த இந்த முடிவு மிகவும் கடினமானது என்றாலும்கூட அது புத்திசாலித்தனமானது, வாழ்க்கையின் சிறந்த முடிவு என்பதை கடினமான தேர்வில் உயர்ந்த இடத்தை பிடித்து நிரூபித்திருக்கிறார் அனுகுமாரி.

UPSC 2017: நான்கு வயது மகனின் தாய் ஐ.ஏ.எஸ் ஆன வெற்றிக்கதை

பட மூலாதாரம், ANU KUMARI/BBC

வெள்ளியன்று 2017ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி அறிவித்தது. தேர்ச்சியடைந்த 990 பேரில் இரண்டாம் இடத்தையும், பெண்களில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்திருக்கும் அனுகுமாரியை பிபிசி சந்தித்து பேசியது.

"ஒன்பது ஆண்டுகள் தனியார் துறையில் பணிபுரிந்த நான், வாழ் நாள் முழுவதும் இந்த வேலை செய்ய முடியாது என்பதை உணர்ந்தேன், நல்ல சம்பளம், வசதி எல்லாமே கிடைத்தாலும், இந்த வேலை எனது வாழ்க்கையை முழுமையாக்காது என்பதை புரிந்துக்கொண்டேன். இதுபற்றி பலமுறை, வெவ்வேறு கோணங்களில் சிந்தித்து, வேலையை விட்டுவிலக முடிவு செய்தேன்" என்று சொல்கிறார் அனுகுமாரி.

ஆனால் வேலையை விட்டு விலகும் முடிவு சுலபமானதாக இருந்ததா?

"நான் குடிமைப்பணியில் ஈடுபடலாம் என்று முடிவு செய்து அதற்கான தயாரிப்புகளில் இறங்கினேன். அதில் வெற்றிபெறாவிட்டால் ஆசிரியப் பணிக்கு செல்வது எனது மாற்று தெரிவையும் முடிவு செய்தேன். ஆனால் மீண்டும் தனியார் துறைக்கு வேலைக்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை" என்று பதிலளிக்கிறார் அனுகுமாரி.

சகோதரருடன் அனுகுமாரி

பட மூலாதாரம், Alamy

குடிமைப்பணி தேர்வுகளை எழுத ஊக்கம் கொடுத்த தம்பி

வேலையை விட்டுவிடச் சொல்லி என்னை வற்புறுத்தியது என் மாமாவும், தம்பியும் தான். டீனா டாபி, சிவில் சர்விஸ் தேர்வில் முதல் இடத்தை பிடித்தபோது, மாமா எனக்கு ஒரு செய்தியை அனுப்பினார், "நீ வேலையை விட்டுவிட்டு, குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயார் செய். அதற்கு ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டு ஆகும், அதுவரை உன்னுடைய செலவுகளுக்கு பணம் அனுப்புகிறேன்".

"என் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை புரிந்துக் கொண்டேன். இதற்கிடையில், என்னிடம் கேட்காமலேயே முதல் நிலைத் தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை எனது சகோதரர் பூர்த்தி செய்துவிட்டார். வேலையை விட்டு விலகும்படி என்னை சமாதானப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது" என்று நினைவுகூர்கிறார் அனு.

பணியில் இருந்து விலகி ஒன்றரை மாதம் மட்டுமே தயார் செய்து முதல் நிலைத் தேர்வு எழுதிய அனு, முதல் முயற்சியில் தோல்வியடைந்தார். ஆனால் உடனே அடுத்த ஆண்டு தேர்வுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டார்.

"மாதம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் சம்பாதித்த எனது நிதிநிலைமை நன்றாகவே இருந்தது. பணம் எனது கனவுகளுக்கு தடையாக இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். சிவில் சர்விஸ் தேர்வுகளில் வெற்றி பெறாவிட்டாலும்கூட குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது."

தனியார் துறையில் வேலை பார்த்தபோது, பணிக்காக அதிக நேரத்தை அலுவலகத்திலேயே செலவிட வேண்டியிருந்தது.

காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி என்ற வழக்கமான வேலை போதும் என்று, திருமணமான அனுகுமாரியின் கணவர் வீட்டார் கருதினார்கள்.

ஊழியர்கள் தேர்வு ஆணையத்தின் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு நிலை தேர்வான சி.ஜி.எல். (SSC CGL) தேர்வு எழுதும்படி அனுவின் மாமனார் அறிவுறுத்தினார். ஆனால் அனு, அதைவிட உயர்ந்த நிலையில் பணியாற்றும் திறமை கொண்டவர் என்று அவரது சகோதரர் அவருக்கு விளக்கினார்.

கண்ணில் நீர் வழிந்தபோது ...

நான்கு வயது மகனின் தாயான அனுகுமாரி தேர்வுக்காக தயார்படுத்தத், தொடங்கியபோது, மகனுக்கு மூன்று வயது. மகனைப் பற்றி பேசுகையில், அனுகுமாரி உணர்ச்சி வசப்பட்டார்.

அவர் கூறுகிறார், "மகனை பிரிந்து என்னால் இருக்கமுடியாது, அவனை விட்டு விலகி இருப்பது கடினமாக இருந்தது, சித்தியின் வீட்டு மாடியில் நின்று மகனை நினைத்து நீண்ட நேரம் அழுவேன்."

UPSC 2017: நான்கு வயது மகனின் தாய் ஐ.ஏ.எஸ் ஆன வெற்றிக்கதை
படக்குறிப்பு, தாயுடன் அனுகுமாரி

அனுவின் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அனுவின் தாய் கூறுகிறார், "எங்கள் வீட்டில் கால்நடைகள் வளர்த்து வந்தோம். மாட்டு சாணத்தை வறட்டியாக தட்டி வீட்டின் மாடியில் காய வைத்திருப்போம். என் மகள் அனு, ஒரு மூலையில் நாற்காலியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பாள். சிறுவயதில் இருந்தே அவள் படிப்பில் சூட்டிகையானவள்."

பணியில் ஏற்படும் சவால்களை எப்படி சமாளிப்பார்?

ஒரு குடிமைப் பணி அதிகாரியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்களை அனு எப்படி எதிர்கொள்வார்?

"நமது அமைப்பில் சில தடைகள் உள்ளதை நான் அறிவேன். அதை நாம் தவிர்க்க முடியாது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்துக் கொண்டே குடும்பத்தையும் நிர்வகித்த அனுபவமும் இருக்கிறது. அதனால் எந்தவித சவால்களையும் எதிர்கொள்வேன் என்று முழுமையாக நம்புகிறேன்."

UPSC 2017: நான்கு வயது மகனின் தாய் ஐ.ஏ.எஸ் ஆன வெற்றிக்கதை

"நான் மிகவும் நேர்மையானவள். நேர்மையை முழுமையாக நம்புகிறேன். மகாத்மா காந்தியின் ஒரு பொன்மொழியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 'உங்களிடம் சில குணங்கள் இல்லாவிட்டாலும், உங்களுக்கு சக்தி இருந்தால், விருப்பமும் இருந்தால் அவை நாளடைவில் உங்களை வந்தடையும்'.

இன்று என்னிடம் சில குணங்கள் இல்லாமல் போகலாம், ஆனால் என்னுடைய விருப்பமும், சக்தியும் அந்த குணங்களை என் வாழ்க்கையில் கொண்டுவரும் என்று நம்புகிறேன்."

"நான் எப்பொழுதும் வலிமையுடன் இருப்பதாக உணர்கிறேன். நீங்கள் வலுவானவரா என்று நேர்காணலில் என்னிடம் கேட்டபோது, ஆமாம் என்று நம்பிக்கையுடன் பதிலளித்தேன். ஏனெனில் வலிமையாக இருப்பதற்கு கல்வி மற்றும் தன்னம்பிக்கை தேவை.

ஆரோக்கியமாக இருக்க வேண்டும், இவற்றுடன் கடவுளின் ஆசீர்வாதமும் தேவை, என்னிடம் இவை அனைத்தும் இருப்பதால் நான் வலுவாக இருக்கிறேன்.

ஆனால் முன்பிருந்த தன்னம்பிக்கையில் இருந்து, இன்று நான் மேலும் அதிக நம்பிக்கையாக உணர்கிறேன். இன்று ஹரியானா மாநில பெண்கள், என்னை உத்வேகம் தரும் ஆதாரமாக பார்க்கின்றனர். அவர்களுக்கு என்னுடைய அனுபவம் பயனளிக்கும்.

UPSC 2017: நான்கு வயது மகனின் தாய் ஐ.ஏ.எஸ் ஆன வெற்றிக்கதை

"ஒரு பெண் தன்னை ஆத்மார்த்தமாக வலுவாக உணர்கிறபோது, மனதில் அச்சம் இருக்காது. அந்த பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரம் இருக்கும், தனது குழந்தைகளுக்காக முடிவுகளை எடுக்க முடியும், சரியான பாதையில் செல்வதற்கு பெண்களின் தன்னம்பிக்கை உதவியாக இருக்கிறது."

தனது வெற்றிக்கு காரணம் தாயும், சித்தியும் என்று கூறுகிறார் அனுகுமாரி. "என் அம்மா முதலில் என்னை வளர்த்தார், இப்போது என் மகனை வளர்க்கிறார். என் வெற்றிக்கு அடிப்படை ஆதாரம் என் அம்மாதான். தூணாக இருந்து என்னை தாங்கிப்பிடிப்பவர் அம்மா என்றால், நான் தேர்வுகளுக்கு தயார் செய்யும்போது, இருக்கும் இடத்திற்கே உணவை கொண்டு வந்து உபசரித்து என்னை வெற்றிப் படிக்கட்டில் ஆரோக்கியத்துடன் ஏற அன்புடன் சேவை செய்தவர் என் சித்தி" என்கிறார் அனுகுமாரி.

நேர்காணலில் எதிர்கொண்ட சவால்கள்?

குடிமைப் பணி தேர்வுகளின் மூன்றாம் கட்டமான நேர்காணல் அனுபவம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு உற்சாகமாக பதிலளிக்கிறார் அனு. "நேர்காணலில், ஒருவரின் ஆளுமையை பரிசோதிக்கின்றனர். அந்த கட்டத்தில் உங்கள் அறிவுத் திறனை பரிசோதிப்பது இரண்டாம் பட்சமே.

ஒரு சிக்கலான சூழலை, நிதானமாகவும் அமைதியாகவும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பரிசோதிக்கும் ஆளுமை சோதனை அது".

UPSC 2017: நான்கு வயது மகனின் தாய் ஐ.ஏ.எஸ் ஆன வெற்றிக்கதை

"நேர்காணலுக்கு சென்றபோது, என் குடும்பத்தின் பெரியவர்களை சந்தித்துப் பேசப்போகிறேன் என்ற மனநிலையில் இருந்தேன். அப்போதுதான் இயல்பாக சுதந்திரமாக பேச முடியும். ஆனால் இந்த பெரியவர்கள், மிகுந்த புத்திசாலிகள், நிறைய விஷயங்கள் தெரிந்தவர்கள் என்று கருதினேன்.

நேர்காணலுக்கு சென்றபோது மனதில் மகிழ்ச்சியுடன் இருந்தேன். தேர்வுக்குழு உறுப்பினர்கள் என்னை பார்த்து சிரித்தபோது, நானும் அவர்களை பார்த்து சிரித்தேன். தேர்வுக்குழு உறுப்பினர் ஸ்மிதா நாகராஜ் மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் இருந்தார். "

நேர்க்காணலின்போது அழுத்தம் இருந்ததா?

நேர்க்காணல் பற்றி அனுகுமாரி மேலும் கூறுகிறார், "கேள்விக்கு பதிலளித்தபோது எதிர்க் கேள்விகளும் கேட்கப்பட்டதாகவும், பதிலில் இருந்தே தொடர் கேள்விகளும் கேட்கப்பட்டதாகவும் நேர்காணல் முடிந்த சிலர் கூறினார்கள்.

என்னிடமும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், அவை அச்சத்தையோ அல்லது அழுத்தத்தையோ ஏற்படுத்தவில்லை, எந்த அளவு கவனமாக இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதாக, நமது அறிவை, ஆளுமையை தெரிந்துக் கொள்வதற்கானதாக அவை இருந்ததன.

தேர்வுக்குழுவில் அனைவரும் புன்னகையுடன் இருந்தபோது, ஒருவர் மட்டும் முகத்தை கடினமாகவே வைத்திருந்தார், அவர் கேள்வி கேட்டபோது, முதலில் அவரை பார்த்து சிரித்தேன். பிறகு பதிலளித்தேன். அப்போது அவர் முகத்திலும் புன்னகை எட்டிப்பார்த்தது. ஒட்டுமொத்தமாக எனது நேர்காணல் தேர்வு அனுபவம் சிறப்பானதாகவே இருந்தது."

UPSC 2017: நான்கு வயது மகனின் தாய் ஐ.ஏ.எஸ் ஆன வெற்றிக்கதை

அரசியல்வாதிகள், குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை எப்படி எதிர்கொள்வீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு அவர், "இப்போது அதைப்பற்றி பெரிதாக சிந்திக்கவில்லை, இயல்பாக இருக்கிறேன். தலைவர்கள், ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்கு அடிபணிவதைவிட அரசியலமைப்பு, சட்டங்கள் மற்றும் நாட்டு நலன்களை முக்கியமானவைகளாக கருதி பின்பற்ற வேண்டும் என்பதே எனது பொதுவான கருத்து.

பல்வேறு சூழல்களையும் சமாளிக்கும் பயிற்சி எங்களுக்கு அளிக்கப்படும்.

குடிமைப் பணித் தேர்வுகள் என்பது, விஷயங்களை சரியான முறையில் புரிந்துக்கொள்ளும் அறிவு இருக்கிறதா, பொது அறிவு, ஆட்சியை வழிநடத்தும் தகுதி இருக்கிறதா போன்றவற்றை பரிசோதிக்கும் ஒரு வழிமுறை. அதன் பிறகு பயிற்சியில்தான் பொறுப்புகளை நிர்வகிக்க எங்களை தயார் செய்வார்கள்.

கொடுக்கப்படும் பயிற்சி மற்றும் கொள்கைகளின் அடிப்படையில், எதிர்காலத்தில் பல்வேறு சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிப்பேன் என்று நம்புகிறேன்."

ஆளுமை உருவாக்கம் பற்றி கேள்விக்கு அனுகுமாரியின் பதில் இது: "மிகக் குறைந்த காலத்தில் ஆளுமைத் தன்மையை உருவாக்குவது கடினம். ஆளுமை என்பது இயற்கையானது, அதை இயல்பாக, படிப்படியாக உருவாக்க முடியும்.

சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொள்வது ஒருவரின் ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் சில பயிற்சிகளால் ஆளுமைத்தன்மையை மேம்படுத்திக் கொள்ளமுடியும் என்று நம்புகிறேன்."

UPSC 2017: நான்கு வயது மகனின் தாய் ஐ.ஏ.எஸ் ஆன வெற்றிக்கதை

தேர்வுக்கு தயாராகும்போது ஏமாற்றம் ஏற்பட்டதா?

"முதல் நிலைத் தேர்வுக்கு பிறகு, அடுத்த கட்டத் தேர்வுக்கு, விருப்பப் பாடமான சமூகவியல் பாடத்திற்கான தொடர் மாதிரித் தேர்வுகளில் கலந்துக் கொண்டேன். அப்போது நான் டெல்லியில் இருந்தேன். இரண்டு முறை தேர்வுகள் எழுதினேன். அதில் இருபதுக்கு பதினைந்து கேள்விகளுக்குதான் பதிலளிக்க முடிந்தது.

மீதமுள்ள கேள்விகளுக்கு பதில் எழுதமுடியவில்லை என்ற வருத்தத்தில் தேர்வு எழுதிய இரவு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அழுதேன், அழுதுக்கொண்டே உறங்கிவிட்டேன். அடுத்த நாள் காலை வழக்கம்போல எழுந்து படிக்க ஆரம்பித்தேன்.

எனது குறைகளை சுய பரிசோதனை செய்துக்கொண்டு, அதற்கு ஏற்றாற் போல் தேர்வுக்கான தயாரிப்புகளை மாற்றிக்கொண்டேன்."

உத்வேகம் யாரிடம் இருந்து கிடைத்தது என்பது பற்றி பேசுகையில், "நான் தனியார் துறையில் வேலையில் சேர்ந்தபோது உற்சாகத்துடன் இருந்தேன். ஒருகட்டத்தில் அதில் ஏற்பட்ட விரக்தியால் ஏமாற்றம் அடைந்தேன். என்னுடைய உற்சாகத்தையும் ஈடுபாட்டையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று எனக்கு நானே தன்னூக்கம் அளித்துக்கொள்வேன்.

வாழ்க்கையில் கடினமான நேரம் வரும்-போகும், ஆனால் இதுவும் கடந்து போகும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டிருந்தேன்."

UPSC 2017: நான்கு வயது மகனின் தாய் ஐ.ஏ.எஸ் ஆன வெற்றிக்கதை

குடிமைப் பணித் தேர்வு மிகவும் கடினமானது என்பதை ஒப்புக் கொள்கிறார் அனுகுமாரி. இந்த தேர்வுகளில் தேறி வருபவர்கள் கடும் உழைப்பிற்கு பிறகே இந்த இடத்தை அடைவதாக நம்புகிறார் அனு. குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சியடைபவர்களுக்கு உரிய மதிப்பு வழங்கவேண்டும்.

ஏனெனில் அவர்கள் மக்களுக்கும், சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சேவைகளை செய்ய வேண்டியிருக்கிறது.

அதற்கான உத்வேகமும், உற்சாகமும் கிடைக்கவேண்டும் என்கிறார் அனுகுமாரி.

குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாரவதற்கு முன்னரே, குழந்தைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தன் மனதில் இருந்ததாக சொல்கிறார் அனுகுமாரி. "நம் நாட்டில் குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த திசையில் நான் உறுதியாகப் பணியாற்ற விரும்புகிறேன்" என்று அவர் கூறுகிறார்."

ஹரியானா மாநிலம் ஆணாதிக்க சமுதாயம் கொண்டது என்று சொல்வது தவறில்லை என்று அனு கூறுகிறார். ஆனால் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் நம்புகிறார்.

"ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள சோனிபட் போன்ற மாவட்டங்களில் நிலைமை தற்போதுமுன்னேறி வருகிறது" என்கிறார் அனு. மானுஷி சில்லர், சாக்ஷி மலிக் போன்ற பெண்கள் ஹரியானாவில் இருந்து ஒளிக்கீற்றாக வெளிப்படுகிறார்கள். இவை ஹரியானாவில் விஷயங்கள் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டு" என்கிறார் அனுகுமாரி.

பெண்களை நடத்தும் விதம் பற்றிய தனது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறார் அனுகுமாரி. "என் சகோதரர்களின் கல்விக்கு செலவிட்டதைவிட என்னுடைய படிப்புக்காக அதிகமாக செலவு செய்தார் என் அப்பா. நகரங்களில் வசிக்கும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன.

ஆனால் கிராமப்புற பெண்களுக்கு சூழ்நிலைகள் கடினமாகவே இருக்கின்றன. கிராமப்புறங்களை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் குடிமைப் பணிகளுக்கு வரவேண்டும், அதற்காக திட்டமிட்டுத் தயாராக வேண்டும்."

"கனவு காணுங்கள், கனவுகளை நனவாக்க கடுமையாக உழையுங்கள், வானமும் உங்கள் வசப்படும்" என்று நம்பிக்கையுடன் உற்சாகப்படுத்துகிறார் அனுகுமாரி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: