பேரறிவாளன் விடுதலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு - இதுவரை நடந்தது என்ன ?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
கடந்த 2014ம் ஆண்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாக ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு 2014ம் ஆண்டு அறிவித்து, மத்திய அரசின் கருத்தைக் கோரியிருந்தது.
ஆனால், மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) விசாரித்த வழக்கு என்பதால், இந்த விவகாரத்தில் தாங்கள்தான் முடிவெடுக்க முடியுமென மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு, தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கில் முக்கிய வாதங்கள்
இந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்த போது, "யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்திற்கிடையில் அவர் (பேரறிவாளன்) ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்? நாங்களே (உச்ச நீதிமன்றம்) ஏன் விடுதலை செய்யக்கூடாது?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், "அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்," என தெரிவித்தார்.
இதையடுத்து, ஆளுநர், மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை முன் வைத்து, வழக்கு விசாரணையை மே 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஒருவார காலத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்து தெளிவான முடிவை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதே வேளை, இவ்விவகாரத்தில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டனர்.

பட மூலாதாரம், Twitter
குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்?
இதையடுத்து, கடந்த 4ம் தேதி நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு வழக்குரைஞரிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக, ''விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்?,'' என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, ''30 வருடங்கள் முடிந்து விட்டன. பேரறிவாளன் நன்நடத்தையில் பிரச்னை இல்லை. அவரை விடுதலை செய்வதில் என்ன பிரச்னை உள்ளது? நீங்கள் முடிவெடுக்கவில்லை என்றால்,நீதிமன்றம் விடுதலை செய்யும் என ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.'' என்றனர்.
மேலும் 'குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ, என்ன அதிகாரம் இருந்தாலும், அரசியல் சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது. அரசியலைப்பு, சட்டத்திற்கு மேல் ஒருவரும் கிடையாது. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு எங்களால் உத்தரவிட முடியாது. ஆனால் இந்த வழக்கில் அரசியல்சாசன அடிப்படையில் தீர்ப்பை வழங்க முடியும்,'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், "அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஒரு முடிவை எடுத்து, அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இது அரசியல்சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது. இதை மத்திய அரசு ஏன் ஆதரிக்கிறது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கின் விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.
இன்றைய வாதங்கள்
இதன்படி, தமிழ்நாடு அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய ஆவணம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் அமர்வு முன்பு இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, 'விடுதலை குறித்து முடிவு எடுப்பதில் ஆளுநர் பல ஆண்டுகள் தாமதப்படுத்தியுள்ளார். இது குறித்து என்ன சொல்கிறீர்கள்? அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா? ஆளுநர் தொடர்புடைய வழக்கில் நீங்கள் ஏன் ஆஜராகிறீர்கள் ?' என்பன உள்ளிட்ட கேள்விகளை மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரிடம் கேட்டனர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நட்ராஜ், 'மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்திய வழக்குகளில் கருணை அல்லது நிவாரணம் அளிக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆகையால், ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். ஆளுநரின் முடிவு சரியானதுதான்.' என்று விளக்கமளித்தார்.
தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி கூறுகையில், "மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின்படிதான் விடுதலை செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனர். இது, அரசியல் சாசனப்படி தவறானது.' என்றார்.
மேலும், 'இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் வருகிறது. கொலை வழக்கின் கீழ் முடிவு செய்ய மத்திய, மாநில இரு அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், மத்திய அரசுக்குத்தான் முக்கியத்துவம் முன்னுரிமை.' என்று மத்திய அரசு வழக்குரைஞர் கூறினார்.
இதை தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் மறுத்தார். தமிழ்நாட்டில் நடைபெற்றால், விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்கிற வாதத்தை முன்வைத்தார்.
ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகள் சட்டம், ஒழுங்கு சார்ந்த வழக்குகள். இதில், மாநில அரசுக்குத்தான் முக்கியத்துவம் உள்ளது.' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மத்திய அரசு தவறான வாதம்

வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், தீர்ப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார் என்கிற நம்பிக்கை இருப்பதாக பேரறிவாளன் தரப்பு வழக்குரைஞர் சே.பிரபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "மத்திய அரசு தரப்பில் மீண்டும் பழையபடி தவறான வாதத்தையே முன்வைத்தனர். அவர்கள் இதுவரை வைத்த வாதங்களுக்கு மாறாக தற்போது சமர்ப்பித்த ஆவணத்தில் உள்ளது. ஆகையால், மீண்டும் மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர்.
எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க அவகாசம் அளித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்துள்ளனர். இதையடுத்து எங்கள் தரப்பிலும் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க உள்ளோம்.
வாதங்கள் நிறைவு பெற்றுள்ளதையடுத்து, தீர்ப்பு விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம். அடுத்த வாரத்துடன் நீதிமன்ற விடுமுறை வருகிறது. அதற்கு முன்னதாக தீர்ப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கிறோம். இது வரை நடைபெற்ற வாதங்களின் அடிப்படையில் பேரறிவாளன் நிச்சயம் விடுதலை செய்யப்படுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.'என்றார் வழக்குரைஞர் சே.பிரபு.
கடந்த 31 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு, கடந்த மார்ச் 9ஆம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து பேரறிவாளன் தற்போது பிணையில் வெளியாகி உள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












