சென்னையில் வீடுகள் இடிப்பு: 'வெறும் வாய்மொழி உத்தரவுகள் மட்டும்தான்' - வேதனையில் மக்கள்

வீடுகள் இடிக்கப்பட்டபோது
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னை மயிலாப்பூரில் வீடுகளை அப்புறப்படுத்தும் விவகாரம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டாலும் மக்களின் பதற்றம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. "மாற்று வீடுகள் என்ற பெயரில் படப்பை, நாவலூர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் வீடுகளை ஒதுக்கியுள்ளனர். கல்வி, வேலை என அனைத்துமே பாதிக்கப்படும் என்பதால் மக்கள் யாரும் அங்கு செல்லவில்லை" என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

112 வீடுகள் இடிப்பு; தீக்குளிப்பு

சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராஜா அண்ணாமலை புரத்தில் கோவிந்தசாமி நகர், இளங்கோ நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த இடத்தை ஆக்கிரமித்து மக்கள் வசித்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த ராஜிவ் ராய் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கிரீன்வேஸ் சாலையையும் காமராஜர் சாலையையும் இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயின் தெற்குக் கரையை மக்கள் ஆக்கிரமித்துள்ளதால் அதனை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக வீடுகளை இடிக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்காக அப்பகுதி மக்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு, மாற்று ஏற்பாடாக பெரும்பாக்கம், நாவலூர் ஆகிய பகுதிகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. தற்போது வரையில் அங்குள்ள 249 வீடுகளில் 112 வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன. இதர குடியிருப்புகளையும் இடிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாரிகளும் காவல்துறையினரும் குவிந்தனர். காலை 7 மணி முதலே வீடுகளை இடிக்க உள்ளதாகத் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த கண்ணையா என்ற 65 வயது முதியவர், தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டார். 'இது பொய்யான வழக்கு, வீடுகளை இடிப்பதை நிறுத்திவிட்டு ஜே.சி.பியை கொண்டு போகச் சொல்லுங்க. ஊமை மக்களை காப்பாத்துங்க' எனவும் அவர் கத்தினார். அவரை மீட்டு ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். மறுநாள் காலை 2.30 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. இதனால் கோவிந்தசாமி நகர், இளங்கோ நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் கோபம் அதிகமானது.

போராட்டத்தில் மக்கள்

முதலமைச்சரின் வாக்குறுதி

இதையடுத்து, சாலைகளில் திரண்ட மக்கள் தி.மு.க அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் என அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும் அவர்கள் கருத்துகளைப் பதிவிட்டனர்.

இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. 'வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் அனைத்து மக்கள் நலன் சார்ந்து மறுகுடியமர்வு கொள்கை வகுக்கப்படும்' என தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டில் நிகழ்ந்த கடைசி சம்பவமாக இது இருக்க வேண்டும். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மந்தைவெளி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் வீடுகளில் வெளியேற்றப்பட்டவர்களுக்கு நிச்சயம் வீடுகள் ஒதுக்கித் தருவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது" என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

படக்குறிப்பு, முதலமைச்சர் ஸ்டாலின்

இதற்கிடையில், வீடுகளை இடிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், "வீடுகளை அகற்றும் விவகாரத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மக்களிடம் உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஒதுக்கும் மாற்று இடம் வெகு தொலைவில் உள்ளது. இது பாதிப்பை ஏற்படுத்தும்" என்று வாதிட்டார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், "மாநில அரசின் நடவடிக்கைகளை நாங்கள் நிறுத்தப்போவதில்லை. மாற்று இடம் வழங்குவது அரசின் வேலை. ஆக்ரமிப்புகளை அகற்றும் விவகாரத்துக்கு நாங்கள் தடை விதிக்கப் போவதில்லை. உத்தரவை அமல்படுத்தும் வேலையைத்தானே முதலமைச்சர் செய்து வருகிறார்" என்றனர்.

மேலும், ' இதனால் பாதிக்கப்படப் போகும் நபர்களுக்கு கண்ணகி நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உரிய வசதிகளை அரசு செய்து தரலாம். இந்த இடைக்கால மனுக்கள் எல்லாம் 2011 ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் உள்ளதால் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம். மாற்று இடம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்

வெறும் வாய்மொழி உத்தரவுதான்...

"தற்போது நிலைமை எப்படி உள்ளது?" என கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த பொறியாளர் மோகனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். கண்ணையா இறந்த பிறகு அதிகாரிகள் அமைதியாக உள்ளனர். அரசுத் தரப்பில் அவகாசம் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் எதுவுமே எழுத்துப்பூர்வமான உத்தரவாதமாக இல்லை. மக்களை சந்திக்க வரும் அதிகாரிகளும் வாய்மொழியாகத்தான் பேசிவிட்டுச் செல்கின்றனர். அவர்கள் சொல்கின்ற அளவுக்கு உறுதியாக இருப்பார்களா எனத் தெரியவில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், '' கோவிந்தசாமி நகரில் இதுவரையில் 112 வீடுகள் வரையில் இடிக்கப்பட்டுவிட்டன. என்னுடைய வீட்டையும் இடித்துவிட்டனர். இந்த வீடுகளுக்கு மாற்றாக படப்பை, நாவலூர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் வீடுகளை ஒதுக்கியுள்ளனர். அங்கு நாங்கள் யாருமே செல்லவில்லை. வேலைவாய்ப்பு, படிப்பு என அனைத்துமே இங்குதான் உள்ளது. அதனால் வேறு வழியில்லாமல் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளோம். எங்களுக்குப் போதிய அவகாசத்தைக் கொடுக்காமல் பெரும்பாக்கத்துக்குத் தள்ளிவிடத்தான் பார்க்கின்றனர். கோவிந்தசாமி நகரில் இருந்து இந்த இடங்களுக்கான தூரம் என்பது 48 கி.மீட்டராக உள்ளது. எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுவிடும்'' என்றார்.

சென்னை மயிலாப்பூரில் வீடுகளை அப்புறப்படுத்தும் விவகாரம்

"கோவிந்தசாமி நகர், இளங்கோ நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை இடிப்பதால் புதிதாக திட்டங்கள் எதுவும் வரப் போவதில்லை. அவ்வாறு அரசின் திட்டம் வருவதாக இருந்தால் நாங்களே வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவோம். சில தனி நபர்கள் எங்களை வெளியேற்றத் துடிக்கின்றனர். தற்போது இங்குள்ள கட்டபொம்மன் தெருவையும் இடிப்பதாகத் தகவல் வெளியானதால் அப்பகுதி மக்களும் கொதிப்பில் உள்ளனர். சட்டமன்றத்தில் முதலமைச்சர் கூறியுள்ளதுபோல, மயிலாப்பூர், மந்தைவெளியில் எங்களைக் குடியமர்த்தவதற்கு உதவி செய்ய வேண்டும்" என்றும் தெரிவித்தார் மோகன்.

தி.மு.க எம்.எல்.ஏ சொல்வது என்ன?

பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக மயிலாப்பூர் சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் மயிலை த.வேலுவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ''மயிலாப்பூரை சுற்றிலும் அரசின் சில குடியிருப்புத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஏற்கெனவே குடியிருந்தவர்களுக்கு ஒதுக்கியதுபோக மற்றவற்றை இப்பகுதி மக்களுக்கு ஒதுக்குவதற்கான உத்தரவாதத்தைக் கொடுக்க உள்ளோம். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கை என்னவென்றால், 'இரண்டு வருடங்கள்கூட காத்திருக்கத் தயாராக இருக்கிறோம். மயிலாப்பூரை சுற்றியுள்ள திட்டங்களில் இருந்து வீடு கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்' என்றனர்.

அதைப் பற்றிக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குள் தீக்குளிப்பு சம்பவம் நடந்துவிட்டது. இதுதொடர்பாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் அமர்ந்து பேசி, அவர்களுக்கான வீடுகளை ஒதுக்குவோம். உடனடியாக வீடு வேண்டும் என அவர்கள் விருப்பப்பட்டால் பெரும்பாக்கத்தில் புதிய திட்டம் ஒன்று நிறைவடைய உள்ளது. அந்தக் குடியிருப்புகளை மிகச் சிறப்பாகக் கட்டியுள்ளனர். அந்த வீடுகளைப் பார்த்தாலே மக்களுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன். அங்கு போக விருப்பப்பட்டாலும் தருவதற்குத் தயாராக இருக்கிறோம்'' என்கிறார்.

மயிலை த.வேலு

பட மூலாதாரம், mylaivelu/ facebook

படக்குறிப்பு, மயிலை த.வேலு

அதிகாரிகள் மீது தவறா?

'' தீக்குளிப்பு சம்பவம் நடந்த அன்று மக்களிடம் அதிகாரிகள் நடந்து கொண்ட முறையும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?'' என்றோம். '' உண்மையில் அப்படிப்பட்ட நிகழ்வு நடந்திருக்கக் கூடாது. அதிகாரிகளை நானும் கண்டித்தேன். இதுதொடர்பான வீடியோ காட்சிகளைப் பார்த்தேன். நீதிமன்றம் விதித்த அவகாசம் என்பது மிகக் குறைவாக இருந்தது. அதிகாரிகளுக்கும் ஓர் அழுத்தம் இருந்தது. இதற்கிடையில் கோவிந்தசாமி நகரிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டன. சிலர் இந்த விவகாரத்தைக் கட்சிரீதியாக கையாளத் தொடங்கினர். ஒரு சட்டமன்ற உறுப்பினராக நான் அங்கு சென்று வீடுகளை இடிப்பதை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் அங்குள்ளவர்களோ, 'எம்.எல்.ஏ வந்தால் நிறுத்திவிடுவார்கள்' எனப் பிரசாரம் செய்தனர். அங்கு நடந்த விவகாரம் தொடர்பாக பேசிய அதிகாரிகளும், 'எங்களை அடிக்க வந்தனர். வீடியோ எடுத்து வைத்துள்ளோம்' என்கின்றனர்'' எனக் கூறும் த.வேலு,

''2018 ஆம் ஆண்டு கோவிந்தசாமி நகர் விவகாரம் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, 'சில அதிகாரிகள் நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களை எடுத்து வைக்கவில்லை' என அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் பேசியுள்ளார். அப்போது பதில் அளித்த ஓ.பி.எஸ், 'இதனை மறுசீராய்வு செய்வதற்கு ஆவன செய்கிறேன்' எனப் பதிவு செய்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் எந்த முயற்சியும் எடுக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த ராஜிவ் ராய் என்பவர் நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கினார்.

அவர் தனது மனுவில், வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாநகராட்சி, பொதுப்பணித்துறை என 6 துறை அதிகாரிகளைக் குறிப்பிட்டிருந்தார். எனவே, ஆக்ரமிப்புகளை அகற்றுவதை குறிப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றத்தின் உத்தரவு வந்ததால் உயர் அதிகாரிகளுக்கும் அழுத்தம் ஏற்பட்டது. இதனால் உத்தரவை மீறக் கூடாது எனப் பயந்துவிட்டனர். இதுதான் அன்று நடந்தது. தவிர, அந்தப் பகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது'' என்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :