தீக்குளித்து கண்ணையா மரணம்: "சாகும்போதுகூட இடிப்பதை நிறுத்தியாச்சான்னு கேட்டார்"

குடும்பத்தினரோடு கண்ணையா.

பட மூலாதாரம், kannaiah

படக்குறிப்பு, குடும்பத்தினரோடு கண்ணையா.

சென்னை மயிலாப்பூரில் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதியவர் கண்ணையார் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ' கண்ணையா இறந்தபிறகும்கூட அரசுத் தரப்பில் இருந்து பேசுவதற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. கண்ணையாவின் உடலையும் வாங்க மாட்டோம்' என்கின்றனர் அவரது உறவினர்கள்.

259 வீடுகளுக்குச் சிக்கல்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் கிரீன்வேஸ் சாலை அருகில் இளங்கோ நகர், கோவிந்தசாமி நகர், கட்டபொம்மன் தெரு ஆகியவை உள்ளன. இந்தப் பகுதிகளில் 259 வீடுகள் ஆக்ரமிப்பில் உள்ளதாக இதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் முடிவில், வீடுகளை இடிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தப் பகுதி பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானதாக இருந்ததால் கடந்த 29 ஆம் தேதி முதல் வீடுகளை இடிப்பதற்கு அதிகாரிகள் நோட்டீஸ் விநியோகித்துள்ளனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் வீடுகளை இடிப்பது தொடர்பான நோட்டீஸை அதிகாரிகள் சுவர்களில் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணியளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஜே.சி.பி உதவியோடு வீடுகளை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளங்கோ நகர்ப் பகுதி மக்கள், 'உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த வழக்கு நாளை வரவுள்ளது. ஒருநாள் அவகாசம் கொடுங்கள்' எனக் கேட்டுள்ளனர். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதிர்ச்சி கொடுத்த முதியவர்

அப்போது சரியாக 9.30 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணையா என்ற 65 வயது முதியவர், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அருகில் இருந்த பொதுமக்களும் போலீஸாரும் தீயை அணைத்துவிட்டு கண்ணையாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தச் சம்பவத்தால் வீடுகள் இடிக்கப்படுவதை அதிகாரிகள் ஒத்திவைத்தனர்.

கண்ணையா

பட மூலாதாரம், kannaiya

படக்குறிப்பு, கண்ணையா

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ' ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இளங்கோ தெருவில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இடிப்புப் பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஏழை, எளிய மக்கள் தொடர்ந்து அங்கேயே குடியிருக்க வழிவகை செய்ய வேண்டும். உயிரிழந்த கண்ணையாவின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'காவல் துறையையும் மீறி குடியிருப்புவாசிகளிடம் கடுமையாக நடந்துகொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

இதுக்கா நாங்க ஓட்டுப் போட்டோம்?

இன்று (மே 9) அதிகாலை 2.30 மணியளவில் கண்ணையா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கொதிப்படைந்த மக்கள், 'உடலை வாங்க மாட்டோம். அவர் சாவுக்கு நியாயம் கிடைக்கும் வரையில் ஓய மாட்டோம்' எனத் தெரிவித்தனர். தொடர்ந்து ம.தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளும் இளங்கோ நகருக்கு வந்து கண்ணையா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சாலையில் கூடிய இளங்கோ நகர் மக்கள், தி.மு.க அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, கண்ணையா தீக்குளித்த காட்சிகளை பதாகைகளாக உயர்த்திப் பிடித்து, 'இதுக்கா நாங்க ஓட்டுப் போட்டோம், உயிர் போயும் கேட்கலயா... அமைச்சர்களே கேட்கலயா...?' எனக் குரல் எழுப்பினர்.

கண்ணையா மனைவி

இதையடுத்து, கண்ணையா குறித்து பிபிசி தமிழிடம் பேசிய இளங்கோ நகரைச் சேர்ந்த கிருஷ்ணன், '' இந்தப் பகுதியில 60 வருஷத்துக்கு மேல அவர் குடியிருந்தார். அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஆரம்பத்தில ட்ரை சைக்கிள் மூலமா பழ வியாபாரம் செஞ்சிட்டு இருந்தார்.

அதன்பிறகு கடுமையா உழைச்சு மணல், ஜல்லி வியாபாரம் செய்துட்டு வந்தார். ஆர்.ஏ.புரத்துல பொன்னம்மாள் ஏஜென்சி கண்ணையான்னு சொன்னா எல்லாருக்கும் தெரியும். வீடுகளை இடிக்கறதா நோட்டீஸ் கொடுக்க ஆரம்பிச்சதுல இருந்து அவர் மன உளைச்சல்ல இருந்தார். இப்படி பண்ணிக்குவார்னு யாரும் எதிர்பார்க்கலை'' என்கிறார்.

சாகும்போது கண்ணையா சொன்னது என்ன?

அடுத்து, கண்ணையாவின் மருமகள் நாயகியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். '' வீடுகளை இடிக்கறத எதிர்த்து உச்ச நீதிமன்றத்துல வழக்கு போட்டிருந்தோம். இன்னும் இரண்டு நாளில் வீடு இடிக்கறதுக்கு கோர்ட் தடை கிடைச்சிரும்னு நம்பிட்டு இருந்தோம். அதனால இடிக்கப்பட்ட வீடுகள் வரைக்கும் விட்டுட்டு மத்த வீடுகளைக் காப்பாத்திடலாம்னு அவர் பேசிட்டு இருந்தார். நேத்து (ஞாயிற்றுக்கிழமை) காலைல 7 மணிக்கெல்லாம் அதிகாரிகள் வந்து டோக்கன் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

ஒருநாள் அவகாசம் கேட்டோம், அதிகாரிகள் கொடுக்க மறுத்துட்டாங்க. அதுவரையில் எங்களோடதான் அவரு (கண்ணையா) நின்னு பேசிட்டு இருந்தார். பத்து நிமிஷத்துல எங்க போனார்னு தெரியலை. திடீர்னு தீயை வச்சுட்டு, 'இது பொய்யான வழக்கு. நான் இந்த வீடுகளைக் காப்பாத்தறேன். நாம் வெளிய எங்கயும் போக வேணாம்'னு கத்தினார். எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. அதுக்குள்ள தீ மளமளன்னு எரிய ஆரம்பிச்சிருச்சு'' என வேதனைப்பட்டவர்,

போராட்டம்

'' இரண்டு நாள் அவகாசம் கொடுத்திருந்தாகூட இப்படியொரு முடிவை அவர் எடுத்திருக்க மாட்டார். 'இந்த மக்களுக்காக நான் எதாவது பண்ணுவேன்'னு சொல்லிட்டு இருந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அதிகாரிகளும் அமைதியாக இருக்காங்க. அரசாங்கத்துல இருந்து யாரும் வந்து பேசலை. ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில டாக்டர்கள் ட்ரீட்மெண்ட் கொடுத்தப்பகூட, 'வொர்க் ஸ்டாப் பண்ணீட்டாங்களா'ன்னுதான் கேட்டிருக்கார். 'ஆமாம் வெளிய போயிட்டாங்க' பதில் சொல்லியிருக்காங்க.

அதன்பிறகு அவர் பேசவே இல்லை. அவர் உடம்பில் 96 சதவீத பாதிப்பு ஏற்பட்டிருக்கு. நுரையீரலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாக டாக்டர்கள் சொன்னாங்க. எப்படியும் காப்பாத்திடுவாங்கன்னு நினைச்சோம். காலைல 2.30 மணியளவில் இறந்துட்டதா சொன்னாங்க. இந்த மக்களுக்காகத்தான் அவர் இறந்தார். அவர் உடம்பை வாங்க மாட்டோம்னு சொல்லிட்டோம். அப்படி உடம்பை வாங்கிட்டா அவர் இறந்து போனதுக்கு என்ன அர்த்தம் இருக்கு. இப்பக்கூட போலீஸ்காரர்கள் ரொம்ப கெடுபிடி பண்றாங்க'' என்றார்.

இதுதொடர்பாக, கண்ணையா குடும்பத்தினரிடம் சமாதானம் பேசும் பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்களின் வருகை, மக்கள் போராட்டம் எனப் பதற்றப் பரபரப்பில் இளங்கோ நகர் இருக்கிறது. அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசும் பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, ' நீதிமன்ற உத்தரவை பின்பற்றும் வகையிலேயே வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக மக்களுக்கு உரிய மாற்று இடம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அதனை ஏற்றுக்கொள்வற்கு யாரும் தயாராக இல்லை. விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும்' என்கின்றனர்.

காணொளிக் குறிப்பு, தருமபுரம் ஆதீனத்துக்கு தடை: பேரூர் ஆதீனம் எதிர்ப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: