சத்தீஸ்கரில் குழந்தைகள் கையில் வெடிகுண்டுகள் - மாவோயிஸ்டுகள் நிறைந்த பகுதியில் 'புதிய அச்சம்'

பட மூலாதாரம், Alok Putul
- எழுதியவர், அலோக் பிரகாஷ் புதுல்
- பதவி, ராய்பூரில் இருந்து பிபிசி ஹிந்திக்காக
உங்கள் சிறுகுழந்தை பொம்மை என்று நினைத்து விளையாடுவது பொம்மை அல்ல, பாரா வெடிகுண்டு என்று உங்களுக்கு தெரிந்தால் என்ன செய்வீர்கள்?சத்தீஸ்கரின் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட தண்டேவாடாவில் அத்தகைய ஓர் சம்பவம்தான் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பிறகு அங்கு வாழும் மக்களிடையே ஒருவித அச்சம் நிலவுகிறது.
பஸ்தரின் பிற பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் காவல்துறை மீது வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்பட்டு வரும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இருப்பினும், இந்த பாரா வெடிகுண்டுகள் காலாவதியானவை என்றும் அவற்றை அழிக்கும்போது எப்படியோ விடுபட்டுப்போய்விட்டன என்றும் செய்தி கிடைத்ததும் அவை அழிக்கப்பட்டன என்கிறார் தந்தேவாடா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சித்தார்த் திவாரி.
"தவறாக வீசப்பட்ட அல்லது காலாவதியான ஆயுதங்கள் முழு சட்ட நடைமுறைகளுடன் அவ்வப்போது அழிக்கப்படுகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பாரா குண்டுகளும் இந்த வகையைச் சேர்ந்தவை. எங்கள் குழுவுக்கு தகவல் கிடைத்ததும், நான்கு பாரா குண்டுகளும் கைபற்றப்பட்டன,"என்று சித்தார்த் திவாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட குண்டுகள் சரியான நடைமுறைகளின்படி அழிக்கப்பட்டதாக சித்தார்த் திவாரி கூறினார்.
ஆனால் சத்திஸ்கர் சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவர் தரம்லால் கௌஷிக் இந்த முழு விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தவறு யாருடையது என்பது கண்டுபிடிக்கப்படவேண்டும் என்றார் அவர்.
சத்திஸ்கரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினரைக் குறி வைத்து மாவோயிஸ்டுகள் வைக்கும் வெடிப்பொருட்கள் மீட்கப்படும் சம்பவங்கள் மிகவும் சாதாரணமானவை.
ஆனால் இதுபோன்ற மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து வெடிபொருட்கள் அல்லது பாதுகாப்புப் படையினரின் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் மிகவும் அரிது.

பட மூலாதாரம், Alok Putul
பொம்மை போல நினைத்தால் வெடிகுண்டு
சுடிடிக்ரா-மஞ்சிபாதர் தாய்சேய் நல மையத்தை அடைந்த சிறு குழந்தைகள், ஆற்றங்கரையில் குளித்துவிட்டுத் திரும்பி வரும் வேளையில் அருகிலுள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். வயல்வெளியில் கிடந்த நான்கு பாரா வெடிகுண்டுகளை, பொம்மைகள் என்று நினைத்து குழந்தைகள் விளையாட ஆரம்பித்தனர் என்று தந்தேவாடா நகரின் ஒன்பதாவது வார்டில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில் அங்கன்வாடி பணியாளர் சென்று குழந்தைகளை பார்த்தபோது, அவர்கள் கைகளில் இருந்த வெடிகுண்டுகளை அகற்றிவிட்டு, இதுகுறித்து ஊர் மக்களிடம் தெரிவித்தார்.
பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இந்த பாரா வெடிகுண்டுகளை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த பாரா குண்டுகள் அழிக்கப்பட்டதாகவும், அதன் சத்தம் மக்களுக்கு கேட்டதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், மக்கள் வசிக்கும் பகுதியில் பாரா வெடிகுண்டுகள் சிக்கிய சம்பவத்தால், அப்பகுதி பழங்குடியினர் அச்சமடைந்துள்ளனர்.
இது மவுவா, பீடி இலையின் காலம். அவற்றை பறிக்க மக்கள் இருளில் செல்கின்றனர். இதுபோன்ற சூழலில், வயல்களில் வெடிப்பொருட்கள் கிடந்தால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இது காலாவதியான வெடிகுண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் அவை சேதமடைந்திருந்தால், அழிக்கும்போது எப்படி சத்தம் கேட்கும்? கவனக்குறைவாக இருக்கவேண்டாம் என்று நாங்கள் காவல்துறையினரை கேட்டுக்கொள்கிறோம்,"என்று ஒரு கிராமவாசி கூறினார்.
கடந்த சில நாட்களில், இதுபோன்ற சுமார் மூவாயிரம் வெடிபொருட்கள் அல்லது ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவை பயன்படுத்த முடியாதவை அல்லது காலாவதியானவை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இத்தகைய ஆயுதங்களில் குறைந்தது 349 பாரா குண்டுகளும் இருந்தன. அழிக்கும் நடவடிக்கையின்போது, எப்படியோ இவை எங்கள் கவனத்திலிருந்து தப்பியிருக்கலாம் என்றார் அவர்.

பட மூலாதாரம், Alok Putul
விசாரணக்கான கோரிக்கை
பஸ்தரில் வசிக்கும் மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞரும், நக்ஸல்வாதம் குறித்து முனைவர் பட்டம் பெற்றவருமான பேலா பாட்டியா, இது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
"இந்த வெடிபொருட்களால் ஒரு சதவிகித ஆபத்து இருந்தாலும்கூட, அது பெரிய கவனக்குறைவாகும். இந்தப்பகுதியின் கவுன்சிலரிடம் பேசினேன். நகருக்கு மிக அருகில் இப்படி வெடிபொருட்கள் அழிக்கப்படுவது பற்றி அவருக்கும் தகவல் தெரியாது,"என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதுபோன்ற விஷயங்களில் உள்ளூர் மக்களிடம் தகவல் தெரிவிப்பது குறித்தும், குண்டுகள் மற்றும் பிற வெடிபொருட்களை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கையை மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து முடிந்தவரை தூரத்தில் வைப்பது குறித்தும் பேலா பாட்டியா பேசினார். இதுபோன்ற விஷயங்களில் அலட்சியம் காட்டுவது உயிரிழப்பை விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.
தந்தேவாடாவில் பாரா வெடிகுண்டுகள் கிடைத்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. வெடிகுண்டு அப்புறப்படுத்தப்படும்போது அது முழு பாதுகாப்புடன் செய்யப்படவேண்டும் என்று சத்தீஸ்கர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தரம்லால் கெளசிக் குறிப்பிட்டார்.
பஸ்தர் போன்ற மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, இதில் தொடர்புடைய அனைவரும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் இதற்குப்பொறுப்பானவர்கள் இன்னும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் பிபிசியிடன் தெரிவித்தார்.
"குழந்தைகளுக்கு பாரா வெடிகுண்டுகள் கிடைத்த விதம் மிகவும் கவலையளிக்கிறது. இதற்கு யார் பொறுப்பு? இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்" என்றார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













