தமிழக மாவட்டங்களில் அதிகரிக்கும் ஆசிரியர், மாணவர் மோதல்கள் - பிபிசி கள ஆய்வு

- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் உள்ள தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் இது.
பிளஸ் 1 மாணவர் ஒருவர் காலை நேர வகுப்புக்கு வராமல் மதியம் பள்ளிக்கு வந்துள்ளார். `ஏன் லேட்... காலையில ஏன் ஸ்கூலுக்கு வரலை?' என வகுப்பு ஆசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த மாணவர் உடனே வீட்டுக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து ஆசிரியரை மிரட்டியுள்ளார். அந்த மாணவரை காவல்துறை அழைத்து எச்சரித்துள்ளது.
இந்தத் தகவலால் கோபமடைந்த இன்னொரு மாணவர் மறுநாள் ஆசிரியரை நோக்கி, `போலீஸ் வந்தா அவங்களையும் குத்துவேன். ஏறுனா ரயிலு, இறங்குனா ஜெயிலு.. போட்டா பெயிலு' என வசனம் பேசியதை அந்த ஆசிரியர் வீடியோ பதிவாக எடுத்துள்ளார். அந்த மாணவரின் பெற்றோரை வரவழைத்துக் காவல்துறை எச்சரித்துள்ளது.
அதே தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த மற்றொரு சம்பவம் இது. வகுப்பில் நோட் புத்தகம் கொண்டு வராத மாணவரை நோக்கி, `ஏன் நோட் புத்தகத்தைக் கொண்டு வரவில்லை?' என ஆசிரியர் ஒருவர் சற்று கோபமாகக் கேட்டுள்ளார்.
இதனை விரும்பாத அந்த மாணவர், ஆசிரியரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் பள்ளிக்கு வருவதற்கே அந்த ஆசிரியர் வேதனைப்பட்டுள்ளார்.
தொடர்ந்து இந்தச் சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தவே, `தேர்வெழுத வந்தால் மட்டும் போதும்' என அந்த மாணவருக்கு தலைமை ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடையே சாதிரீதியான மோதல் ஏற்பட்டதை ஆசிரியர்கள் அச்சத்துடன் கவனித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களில் நடந்த தொடர்ச்சியான இந்தச் சம்பவங்களால் கொதித்தெழுந்த தேனி மாவட்ட ஆசிரியர்கள், முதன்மைக் கல்வி அலுவலகம் முன்புகூடி தங்கள் வேதனையைப் பதிவு செய்தனர். அப்போது பேசிய தேவதானப்பட்டி ஆசிரியை விமலாதேவி, `கேட்கக் கூடாத கேள்விகளை எல்லாம் மாணவர்கள் கேட்கின்றனர். மற்ற மாணவர்களும், `என்ன டீச்சர் நாளைக்கு லீவா?' எனக் கேட்கின்றனர். அதாவது யாருக்கும் எதுவும் ஆகலையா என்ற தொனியில் பேசுகின்றனர். நாங்களும் உரிய தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டுத்தானே அரசுப் பணிக்கு வருகிறோம். இதனால் பள்ளிக்கு வருவதற்கே பயமாக உள்ளது' எனப் பேசிய காட்சிகள் வைரலானது.
கன்னியாகுமரி கலக்கம்

பட மூலாதாரம், Getty Images
இது தேனி மாவட்டத்துக்கான பிரச்னை மட்டும் அல்ல. சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், கன்னியாகுமரி எனப் பல மாவட்டங்களில் ஆசிரியர்-மாணவர் மோதல் என்பது வலுத்து வருகிறது. கன்னியாகுமரியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்து கன்னியாகுமரியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது.
அப்போது பேசிய ஆசிரியர்கள், `கொரோனா காலத்துக்குப் பிறகு மிகப்பெரிய சீரழிவுகளை சந்தித்து வருகிறோம். எந்த மாணவரும் மாணவராகத் தெரியவில்லை. `பள்ளிக்கு ஒழுங்கா வருகிறாரா, வீட்டுப் பாடம் எழுதினாரா?' என எதையும் கேட்கக் கூடாது.
ஆனால் கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை மட்டும் தர வேண்டும். ஆசிரியர்கள் என்பவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களின் உணர்வுகளை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்குப் பல நெருக்கடிகளை ஆசிரியர்கள் சந்தித்து வருகின்றனர். கன்னியாகுமரியில் பல இடங்களில் ஆசிரியர்கள் தாக்குப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன. அண்மையில் உடற்கல்வி ஆசிரியர் மீது கொடும் தாக்குதல் நடத்தப்பட்டது. காவலர்கள் தாக்கப்பட்டால் அமைதியாக இருப்பார்களா?' எனக் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர்.
களஆய்வில் கண்டறிந்தது என்ன?
இது தொடர்பாக, தேனி மாவட்டத்தில் பிபிசி தமிழ் களஆய்வினை மேற்கொண்டது. இங்குள்ள தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 900 மாணவர்கள் படித்து வருகின்றனர். அறுபது ஆண்டுகள் பாரம்பரியம்மிக்க இந்தப் பள்ளியில் கடந்த சில நாள்களாக நடந்த சம்பவங்களின் காரணமாக ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தப் பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடத்திய பின்பு மாணவர்களை மத்தியில் சற்று அமைதி தென்படுகிறது. அதேநேரம், சற்று ஒழுங்கீனமாக ஆடை அணிந்து வந்த மாணவர் ஒருவரை ஆசிரியர்கள் அறிவுறுத்தும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது. `` மாணவர்களுக்கு காலையில் பத்து நிமிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வகுப்புகள் நடத்தப்படுகிறது. அந்த ஒரு சம்பவத்தைத் தவிர வேறு எந்தப் பிரச்னைகளும் இல்லை'' என்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன்.

அதேநேரம், அரசுப் பள்ளிக்கு எதிரிலேயே அரசு மதுபானக்கடை இயங்கி வருவதையும் பார்க்க முடிந்தது. இதனால் மாணவர்களுக்கு மது, கஞ்சா எனப் பல்வேறு போதைப் பொருள்கள் எளிதாகக் கிடைப்பதால் வகுப்பறைகளுக்கு போதையுடன் வருவதாக வேதனைப்படுகிறார், இந்தப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த அப்துல்லா பத்ரி.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` தேவதானப்பட்டி அரசுப் பள்ளியில் சுமார் 400 பெண்கள் வரையில் படித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர் தயங்குகின்றனர். இங்கிருந்து 15 கிலோமீட்டர் தள்ளியுள்ள வத்தலகுண்டு பகுதிக்குச் சென்று படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டியில் மட்டும் இல்லாமல் ஜி.கல்லுப்பட்டி, தேவாரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் இதே நிலைமைதான் நீடித்து வருகிறது. இந்த மாணவர்களை பெற்றோரும் கண்டுகொள்வதில்லை. பெற்றோர்-ஆசிரியர் கழகம் நடத்திய கூட்டத்துக்கு 900 பெற்றோரில் 290 பேர்தான் பங்கெடுத்தனர். தவறு செய்யும் மாணவர்கள் குறித்து அவர்களது பெற்றோரிடம் சென்று கூறினாலும், `என் மகன் அப்படிச் செய்ய மாட்டான்' என்கின்றனர். இந்தப் பகுதியில் கஞ்சா உள்பட போதைப் பொருள்கள் சர்வசாதாரணமாக புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் காவல்துறை மெத்தனப்போக்கில் உள்ளது'' என்கிறார்.
ஆசிரியர்களுக்கு கடிவாளமா?
இது தொடர்பாக, தேவதானப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் ராஜசேகரிடம் பேசியபோது, ``எங்கள் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடப்பதில்லை. மாணவர்களுக்கு மதுபானம் வேண்டுமானால் எளிதாகக் கிடைக்கலாம். இருப்பினும், போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என பிபிசியிடம் தெரிவித்தார். மேலும், ஆசிரியரை நோக்கி கத்தியை காட்டிய மாணவர் மீது வேறொரு வழக்கும் இருந்ததால் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு பிணையில் விடுவித்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, ஜி.கல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றபோது பிபிசி தமிழிடம் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் ரசீதா பேகம், ``தற்போது நிலைமை சீரடைந்துவிட்டது. எந்தப் பிரச்னைகளும் இல்லை'' எனக் கூறிவிட்டு, `` ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கக் கூடாது என மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். அதனால் பேட்டி கொடுப்பதற்கு வாய்ப்பில்லை'' எனக் கூறி சுற்றறிக்கையின் நகலையும் காண்பித்தார்.
தொடர்ந்து தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றோம். அங்கு மாணவர்களை சிசிடிவி கேமரா, கார்ட்லெஸ் போன்ற உபகரணங்களின் உதவியால் கண்காணித்து வருவதைப் பார்க்க முடிகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிராஜா பிபிசி தமிழிடம் பேசும்போது, `` நான் இதே பள்ளியில் படித்துத்தான் தலைமை ஆசிரியராக வந்திருக்கிறேன். அந்த ஒரு சம்பவத்தைத் தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை. எங்கள் மாணவர்கள் தவறு செய்யக் கூடியவர்கள் அல்ல'' என்றார்.

அதேநேரம், மாணவர்களிடையே தென்படும் வயதுக்கு மீறிய பேச்சுக்கள், போதைப் பயன்பாடு, ஆசிரியர்களைத் தாக்க முற்படுவது போன்ற சம்பவங்களால் கல்வித்துறை வட்டாரத்தில் கலக்கம் உள்ளதையும் காண முடிகிறது. ``பிரச்னைகளை மூடி மறைக்கவும் ஆசிரியர்களை ஒடுக்கவும்தான் கல்வித்துறை அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர்.
இதற்கு நிரந்தரத் தீர்வினைக் கொடுக்காமல் ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்புகின்றனர்'' என ஆசிரியைகள் வேதனைப்படுகின்றனர். இதுதொடர்பாக, பெரியகுளம் கல்வி மாவட்ட அதிகாரி வளர்மதியை சந்திக்கச் சென்றபோது, அவர் ஆய்வுப் பணியில் இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகனிடம் பேசியபோதும், உரிய பதில் அளிக்க அவர் முன்வரவில்லை.
என்னதான் தீர்வு?
இதுதொடர்பாக, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொருளாளர் அன்பழகனிடம் பேசியபோது, `` மாணவர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. வயதுக்கு மீறிய பேச்சுக்கள், ஆசிரியர்களை மிரட்டுவதற்கு வெளியாட்களைக் கூட்டிக் கொண்டு வருவது எனச் சில மாணவர்கள் செயல்படுகின்றனர். தற்போது பாடங்களை நிறைவு செய்ய வேண்டியுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு கூடுதல் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இரண்டு ஆண்டுளாக பொதுத்தேர்வு எழுதாததால் இந்தப் பிரச்னை என்பது மேல்நிலை வகுப்புகளில்தான் உள்ளது. அவர்களை நல்வழிப்படுத்த நினைக்கும்போது சிக்கல் வருகிறது'' என்கிறார்.
``நாற்பது பேர் உள்ள பள்ளியில் ஒரு மாணவரால் இதர மாணவர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது. சுற்றுப்புறமும் மாணவர்களுக்கு ஆதரவாக இல்லாத சூழலை தொடர்ந்து பார்க்கிறோம். காவலர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு இருப்பது போல ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். ஓர் ஆசிரியருக்கு பல்வேறு நடத்தை விதிகளை பள்ளிக்கல்வித்துறை வகுத்துள்ளது. அதேபோல், மாணவர்களுக்கும் பல்வேறு நடத்தை விதிகளை அமல்படுத்தினால்தான் தவறு செய்யும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு வரும்'' என்கிறார் அன்பழகன்.

இந்த விவகாரம் தொடர்பாக கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் சத்தியநாதனிடம் பேசியபோது, ``பள்ளிப் பருவங்களில் இதுபோன்ற கதாநாயகத்தன்மையில் மாணவர்கள் இருப்பது என்பது இயல்பானதுதான். அவர்களில் சிலரது செயல்பாடுகளால் பிற மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அந்தவகையில் தவறு செய்யும் மாணவரைக் கண்டறிந்து அவர்களுக்கு, போதைப் பொருளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விளக்க வேண்டும். கடந்த காலங்களில் வாழ்க்கைக் கல்வி பாடத்தை வகுப்பறைகளில் எடுத்துவந்தனர். தற்போது அதுபோன்ற வகுப்புகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. நீதி நெறிகளை வலியுறுத்தும் வகுப்புகளை எடுத்து நல்வழிப்படுத்துவதே மட்டுமே தீர்வாக இருக்க முடியும்'' என்கிறார்.
பள்ளிக்கல்வித்துறை சொல்வது என்ன?
ஆசிரியர்-மாணவர் மோதல் தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்ஸிடம் பேச முற்பட்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. தொடர்ந்து அவரது செல்பேசிக்கு தகவல் அனுப்பியும் விளக்கம் கிடைக்கவில்லை.
இதையடுத்து, கல்வித்துறையின் மூத்த உயர் அதிகாரி ஒருவரை நேரில் சந்தித்துப் பேசியபோது, ``மாணவனை அவ்வளவு எளிதாக ஆசிரியர்கள் கைவிட்டுவிட முடியாது. பள்ளி ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில்தான் மாணவர்கள் இருக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் என்பது விதிவிலக்கானவை. அவற்றை விதியாக எடுத்துக் கொள்ள முடியாது. `இதுபோன்ற மாணவர்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டோம்' எனக் கூறுவது தவறான செயல்'' என்கிறார்.

மேலும், ``பாடம் நடத்துவது மட்டும் ஆசிரியர்களின் பணி அல்ல. அதையும் தாண்டி அவர்களை ஒழுங்குபடுத்துவதும் அவர்களின் முக்கியமான பணி. ஒட்டுமொத்த ஆசிரியர்களும் இதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆலோசிக்க வேண்டும். பல பள்ளிகளில் இதேபோன்ற பிரச்னைகள் உள்ளன. மேலும், அரசில் பணிபுரிவதால் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு என்பது இயல்பிலேயே உள்ளது'' என்கிறார்.
``மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தும் திட்டம் உள்ளதா?'' என்றோம்.
``இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தவறு செய்யும் மாணவனைக் கண்டறிந்து உளவியல்ரீதியாக நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வோர் மாவட்டத்துக்கும் அரசு மனநல மருத்துவர்கள் உள்ளனர். மாணவர்களை மனநோயாளியாகப் பார்க்காமல் இதை ஒரு சவாலாக ஆசிரியர்கள் பார்க்க வேண்டும். சென்னை நகரத்திலேயே ஒரு மாணவர் ஆசிரியையை குத்திக் கொன்ற சம்பவம் நடந்தது. அதன்பிறகு அந்தப் பள்ளியில் மாணவர்கள் படிக்காமல் இல்லை. அனைத்து ஆசிரியர்களும் பி.எட் தகுதிபெற்றதால்தான் பணிக்குத் தேர்வாகின்றனர். குறிப்பாக, குழந்தைகளின் உளவியலையும் சேர்த்தே அவர்கள் படிக்கிறார்கள். தங்களின் பழைய அனுபவத்தை வைத்து தீர்ப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும். இது தொடர்பாக அரசும் உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க உள்ளது,'' என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













