இந்தியாவில் குடி நோய்க்கு ஆளாகும் பெண்களின் கதை: எப்படி சிகிச்சை பெறுகிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்தி
பிரேர்ணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடிப் பழக்கத்திற்கு, போதைப் பொருளுக்கும் அடிமையாக இருப்பதை கண்டுப்பிடித்தபோது, அவருக்கு வயது 16 கூட இல்லை. ஒரு கட்டத்தில், அவர் பள்ளியில் போதையில் இருந்ததால், பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
அவர் போதையில் இருந்தபோது பல முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அவர் குறித்து கவலையடைந்த அவரது பெற்றோர், அவரை பல்வேறு மறுவாழ்வு மையங்களுக்கு அழைத்து சென்றனர். அவர் அங்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தங்கினார்.
ஆனால், அந்த மையங்களில் இருந்து திரும்பிய இரண்டு நாட்களிலேயே, அவர் குடிபழக்கத்தையோ அல்லது போதைப்பொருளையோ எடுத்து கொள்வார். தன் பெற்றோருடன் நடந்த கடுமையான சண்டைக்கு பிறகு, அவர் தன் வீட்டை விட்டு வெளியேறினார்.
ஒரு மறுவாழ்வு மையத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்ற சில ஆண்டுகளுக்கு பின், அவரது பெற்றோர் அவரை ஒரு விமானத்தில் ஏற்றி பெங்களூருக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் பெண்களுக்கான சென்டர் ஃபார் அடிக்ஷன் என்ற மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையைப் பொருத்தவரையில், அது அவ்வளவு எளிதாக இல்லை. ஒவ்வொரு முறையும் அவர் குணமாகிவிட்டார் என்று நினைக்கும்போது அவர் மது குடிப் பழக்கத்துக்கோ, ஹெராயின் போதை பழக்கத்திற்கோ ஆளாவார்.
அவரது நிலை குணமாகுவதற்கு முன், பல முறை தடுமாறினார். ஏறக்குறைய ஐந்து வருடங்கள் மனநல மருத்துவர்களுடன் வழக்கமான ஆலோசனைகள் முடிந்த நிலையில், படிப்பில் கவனம் செலுத்தினார். வாழ்வில் ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்திக்க தொடங்கினார்.
அதன் பிறகு, படிப்பிற்காக பிரிட்டன் சென்றார். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து விட்டு, தற்போது மத்திய கிழக்கில் தன் தந்தையின் நிறுவனத்தை கவனித்துக்கொள்கிறார். அவர் இப்போது எப்போதாவது குடிப்பார். ஆனால், அவர் முன்பு போல் குடிப்பதில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், குடிப்பழக்கம் என்பது சமூகத்தின் நடுத்தர அல்லது மேல் தட்டு பெண்களிடம் மட்டும் காணப்படுவதில்லை.
36 வயதான ஆடைத் தொழிற்சாலை ஊழியர் சங்கீதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மருத்துவர்கள் உதாரணமாக குறிப்பிடுக்கின்றனர். சங்கீதாவுக்கு12 வயதில் திருமணமான முதலே, அவரது கணவர் அவரை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார்.
இது விநோதமாகத் தோன்றினாலும், அவரது குடிப்பழக்கம் அவரது கணவரிடம் இருந்து தொடங்கியது. அவரது குடும்பத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கணவர் குடிப்பதற்கு துணையாக இருக்க, அவர் குடிக்க தொடங்கினார். பின்னர், அவரது குடிப்பழக்கம் மோசமடைந்தது. ஏனெனில், அவருடைய சோகத்தையும் அவர் கணவனிடமிருந்து அவர் எதிர்கொள்ளும் வன்முறையையும் சமாளிக்க ஒரே வழியாக குடிப்பழக்கம் இருப்பதை அவர் கண்டார்.
ஆனால் அதன் பிறகு அவரது கணவர் குடிப்பதை விட்டுவிட்டார். அவரை குடி போதைக்கு அடிமையானவர் என்று அழைப்பதுடன், அவரை குடிப்பதை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தினார். சங்கீதா குடிப்பதை நிறுத்த முயன்றபோது, அவருக்கு நடுக்கம் ஏற்பட்டது. , ஒருமுறை வலிப்பு கூட ஏற்பட்டது.
மருத்துவர்கள், பொதுவாக நோயாளிகளின் விவரங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. குறிப்பாக, பெண் நோயாளிகள் ( மதுபழக்கம் அல்லது போதைப்பொருள் அடிமையானவர்கள்) விஷயத்தில், மருத்துவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
இதற்கான காரணங்களை தேடுவது கடினமானதல்ல. இதற்கான சிகிச்சை பெறுவதும், அது வெற்றிகரமாக நடப்பதும் சாத்தியமே என்பதே இந்த இரண்டு உதாரணங்கள் சுட்டிக்காட்டுவது. இந்த வெற்றிக்கதைகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஏனெனில், ஒரு பெண் மது அருந்துவது 'இழுக்கு' என காலங்காலமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய சமுதாயத்தில் பெண்கள் மது அருந்துவது புதிதல்ல.
``முதலில், இந்தியாவில் பெண்கள் குடிப்பது மிகவும் தவறாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, சங்கீதா போன்ற பெண்கள், மருத்துவ உதவியோ, அல்லது ஆதரவோ நாடுவது குறைவு. அதனால், மது அருந்தும் பெண்கள், இந்த பழக்கம் மோசமான கட்டத்தை எட்டும்போதுதான் அவசர சிகிச்சைக்காக வர வாய்ப்புள்ளது,'' என நிம்ஹன்ஸ் நிறுவனத்தின் செண்டர் ஃபார் அடிக்ஷன் மெடிசன் மையத்தின் தலைவர் பேராசிரியர் விவேக் பெனகல் பிபிசி இந்தியிடம் தெரிவிக்கிறார்.
இந்தியாவில் பெண்களின் குடி பழக்கம் எப்படி உள்ளது ?
மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்திய ஆண்களில் சுமார் 30 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை ஐந்து சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்த எண்ணிக்கை கூட சமூகத்தின் நடுத்தர அல்லது உயர்தட்டு மக்களிடையே உள்ளது.
ஆனால், நாட்டின் மற்ற மாநிலங்களை விட வடகிழக்கு மாநிலங்களில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது 10-11 சதவீதமாக உள்ளது. அதே சமயம் ஆண்களிடையே மது அருந்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 70 சதவீதமாக உள்ளது.
ஆனால், இந்த பிரச்னை ஒட்டுமொத்த எண்ணிக்கையில் இல்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. பெண்கள் எந்த வகையான குடிப்பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதும், அதன் விளைவாக அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பும்தான் வல்லுநர்களுக்கு கவனம் செலுத்தும் விஷயம்.
ஜெண்டர் ஆல்கஹால் அண்ட் கல்ச்சர் (Gender Alcohol and Culture) என்ற அமைப்பு உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் மேற்கொண்ட 2016 ஆய்வு இந்தியாவில் பெண்களின் குடிப்பழக்கம் குறித்த முதல் ஆய்வாகும். இதில் நிம்ஹன்ஸ் நிறுவனமும் ஒரு பகுதியாக இருந்தது.
இது இரண்டு விதமான குடி பழக்க முறைகளைக் காட்டியது. ஒன்று ஆண்களுக்கு இணையான பாரம்பரிய பாணி.
``இது விசித்திரமாக இருந்தது. ஏனெனில், ஆண்களைப் போலவே பெண்களும் ஒரு நேரத்தில், ஐந்து முறை குடிப்பார்கள். இது மேற்கத்திய சமூகங்களைப் போல் இல்லை. அங்கு தீவிரமான மதுபானத்தை (hard liquor) பெண்கள் குறைவாகக் குடிக்கிறார்கள். மேலும் இது ஒயின்கள் மற்றும் பீர்களைத் தவிர வோட்கா, ஜின் போன்ற வெள்ளை மதுபானங்கள் மட்டுமாகவே இருந்தது.", என்று பேராசிரியர் பெனகல் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மது அருந்துவதில் மேற்கத்திய சமூகங்களுடன் ஒப்பிடும்போது மற்றொரு வித்தியாசமும் உள்ளது. மேற்கத்திய நாடுகளில், இந்தியர்களுடன் ஒப்பிடும்போது, அவர்கள் தண்ணீர் குடிப்பது மிகவும் குறைவாக இருப்பதால், உணவுடன் மதுவும் உட்கொள்ளப்படுகிறது. இந்தியாவில், மதுபானம் உணவுக்கு முன் உட்கொள்ளப்படுகிறது மற்றும் பெரும்பாலும் ``போதைக்காக உட்கொள்ளப்படுகிறது''.
வல்லுநர்களை ஆச்சரியப்படுத்திய மற்றொரு விஷயம் என்றால் , ஆண்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காக மது அருந்துகின்றனர். அதுவே பெண்கள் பொதுவாக தங்கள் எதிர்மறை உணர்வுகளை (சங்கீதா போன்ற) சமாளிக்க மது அருந்துகின்றனர். "நிச்சயம் இது மனச்சோர்வைச் சமாளிக்க ஒரு மோசமான வழி" என்று பேராசிரியர் பெனகல் கூறுகிறார்.
மது அருந்துவதால் பெண்களை பாதிக்கும் பிற உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
பெண்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள்
இந்தியாவில் மது அருந்தும் பெண்களுக்கு மருத்துவ, உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளும், சமூகம், பொருளாதார பிரச்சனைகளும் அதிகம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
"இதில் ஆண்களுடன் ஒப்பிடும்போது, உயிரியல் காரணங்களில் மிக முக்கியமானது, பெண்களின் உயரமும், எடையும். ஒரு பெண்ணின் உடலில் உள்ள நீரின் அளவு ஓர் ஆணின் உடலில் இருப்பதை விட மிகவும்குறைவு. மேலும், பெண்களின் ஹார்மோன்கள் மதுவகைகளுக்கு வித்தியாசமாக வினைபுரியும்,'' என்கிறார் பேராசிரியர் பெனகல்.
அடிப்படையில், பெண்களின் ஹார்மோன்கள் ``மதுவை உடலில் மெதுவாக பரப்பி, அதன் மூலம் பெண்களின் உடலில் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்க செய்கிறது. இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான மருத்துவ ரீதியான சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.
சமூகரீதியாக, மதுவுக்கு அடிமையாகி ஒரு பெண்ணுக்கு மன ரீதியான பிரச்னை ஏற்படும்போது, ஆண்களிடமிருந்து அவருக்கு மிகக் குறைவான ஆதரவே கிடைக்கிறது. ``பெண்கள் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறார்கள், அவர்கள் மற்றவர்கள் தவறான வழிகளுக்கு இட்டு செல்கின்றனர். ஒரு சமூக-பொருளாதார-அரசியல் சூழலில், ஆண்களை விட பெண்கள் இதிலிருந்து மீள்வது மிகவும் கடினம். ஆனால், சரியான சூழ்நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, நல்ல பலன் கிடைக்கிறது,'' என்கிறார் பேராசிரியர் பெனகல்.
மது அருந்துபவர்கள் அனைவரும் அதற்கு அடிமையாகிவிடுவார்களா?
இல்லை.
இதுதான் பேராசிரியர் பெனகல் அளிக்கும் பதில். மேலும் அவர் பல்வேறு காரணிகளையும், சிகிச்சைகளையும் பட்டியலிடுகிறார்.
- மது அருந்துபவர்கள் அனைவரும் போதைக்கு அடிமையாக மாட்டார்கள். ஆண்களைப் பொறுத்தவரை, மது அருந்தும் 30 சதவீதம் பேரில், ஐந்து முதல் 10 சதவீதம் பேர் போதைக்கு அடிமையாகிறார்கள். மேலும், மது அருந்தும் அந்த ஐந்து சதவீத பெண்களில், ஐந்து சதவீதம் பேர் மட்டுமே போதைக்கு அடிமையாகிறார்கள்.
- மனிதர்களுக்கு அவர்களின் மனோபாவத்தால் போதைக்கு அடிமையாகும் பழக்கம் ஏற்படுகிறது. அவர்களின் மனநிலையைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் கொண்டவர்கள், ஒரு வேலையை தள்ளிப்போடுபவர்களுடன் இந்த மனோபாவம் தொடர்புடையது.
- மேலும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது, மற்றவர்களின் உணர்ச்சிகளை அடையாளம் காணாதது, உணர்ச்சி வசப்படுவது ஆகிய பண்புகள் உள்ளவர்களும் இதற்கு அடிமையாகலாம்.
- குழந்தைப் பருவத்திலோ, இளம் வயதிலோ போதையை எடுப்பவர்கள் அதற்கு அடிமையாக வாய்ப்பு அதிகம்.
- போதைப்பொருளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது மூளையின் கட்டமைப்பில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. இது போதை என்று அழைக்கப்படும் நிலையை ஏற்படுத்துகிறது.
மீண்டும் அடிமையாக்கும் பழக்கம் குறித்து?
"மீண்டவர்கள் மீண்டும் அடிமையாவார்கள். அதுதான் போதையின் இயல்பு. இது ஏதோ ஓர் அறுவை சிகிச்சை அல்லது உடலில் உள்ள எலும்பு முறிவை சரிசெய்வது போன்றது அல்ல,'' என்று பேராசிரியர் பெனகல் கூறினார்.
ஆனால், அவர்கள் அனைவருக்கும் சிகிச்சையளிக்க முடியும்.
இங்கு மது அருந்துவதுதான் பிரச்னையா ?
இல்லை - இதுவே பேராசிரியர் பெனகலின் பதில்.
``இதில் மதுவை குற்றம்சாட்டுவதில் பயனில்லை. சில இளைஞர்கள் தங்கள் சூழ்நிலையை சமாளிக்க, தங்கள் கையில் எடுக்கும் உத்திதான் மது. மதுவை அவர்களிடம் இருந்து பிரித்தால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடாது. அறிவாற்றல் கட்டுப்பாடு, உணர்ச்சி ரீதியான அங்கீகாரம் போன்ற அவர்களின் அடிப்படைப் பிரச்னையைத் தீர்ப்பது அவசியம். நீங்கள் அதைத் தீர்க்கும் வரை, அவர்கள் மது அல்லது பிற போதைப்பொருள்களுக்கு திரும்பிச் செல்வார்கள், "என்று பேராசிரியர் பெனகல் கூறுகிறார்.
"மது அல்லது போதைப்பொருளை அகற்றுவதன் மூலமோ அல்லது மறுவாழ்வு மையங்களில் வைப்பதன் மூலமோ போதைக்கு சிகிச்சையளிக்கும் பழைய நடைமுறை ஒரு சிறந்த வழி அல்ல. ஏனெனில் அது அவர்களை வாழ்நாள் முழுவதும் அடிமையாக மாற்றும்,'' என்றார்.
பிரேர்ணாவுக்கும் சங்கீதாவுக்கு அத்தகைய சிகிச்சைதான் அளிக்கப்பட்டது.
மேலும், கடந்த சில ஆண்டுகளில் போதை அடிமை மீட்பு மையங்களில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்ததற்கு இதுவே காரணம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












