இந்தியாவின் 'குழந்தை மனைவிகள்': ஹரியானாவில் தடைகளைத் தாண்டி கனவுகளைத் துரத்தும் குழந்தை திருமண மணப்பெண்கள்

ஹரியாணா குழந்தை திருமணம்

பட மூலாதாரம், RUHANI KAUR

படக்குறிப்பு, 10 வயதானபோது பிரியங்காவுக்கு திருமணமானது.

வட இந்திய மாநிலமான ஹரியானாவில் அனைத்துத் தடைகளையும் கடந்து கல்வி கற்பதற்கும் பணிபுரிவதற்கும் கனவு காணும் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட மூன்று சிறுமிகளுடைய கதைகளின் தடங்களை புகைப்பட இதழியலாளர் ரூஹானி கவுர் பதிவுசெய்துள்ளார்.

செல்வாக்கு மிகுந்த குஜ்ஜார் எனப்படும் வேளாண் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் டம்டமா எனும் கிராமத்தில் வளர்ந்தவர்கள் பிரியங்கா, மீனாஷி மற்றும் ஷிவானி. இந்தியாவின் தலைநகரமான டெல்லியின் புறநகரில் அமைந்துள்ள ஆடம்பரமான குர்கோவனிலிருந்து அரை மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் இந்த கிராமத்தை அடையலாம்.

16 வயதிலுள்ள இந்த மூன்று சிறுமிகளும் குழந்தைபருவத்திலிருந்தே தோழிகள் ஆவர். அவர்கள் மூன்று பேருமே குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் - அந்த மூன்று பேரில் ஒரு சிறுமி தன்னுடைய 10வது வயதில் திருமணமானவர்.

இந்தியாவில் 18 வயதுக்கும் குறைவான பெண்கள் திருமணம் செய்வது சட்டத்திற்கு புறம்பானதாகும். ஆனால், ஆணாதிக்கம் மற்றும் வறுமை காரணமாக, இந்த நடைமுறை இந்தியாவின் பல பகுதிகளில் இன்னும் தொடர்ந்துவருகிறது.

யுனிசெஃப் அளித்துள்ள தகவலின்படி, உலகில் குழந்தை திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண்கள் அதிகளவில் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது, அதாவது, உலகளவில் இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் பெண்கள், 18 வயதுக்குக் குறைவாகவே திருமணம் செய்வதாக, யுனிசெஃப் கணக்கிட்டுள்ளது.

இந்தியாவில் பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதா ஒன்றை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு தாக்கல் செய்தது, ஆனால், இன்னும் அது சட்டமாகவில்லை.

பிரியங்கா, மீனாஷி மற்றும் ஷிவானி - இந்த மூன்று தோழிகளும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ விரும்புகின்றனர், ஆனால், அதன் முன் பெரும் சவால்கள் உள்ளன என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

"திருமணம் செய்துவைத்து என்னை கட்டிப்போடாதீர்கள்"

பிரியங்காவின் குடும்பம் அவருக்கு திருமணம் செய்துவைத்தபோது அவருக்கு வயது 10. ஏழு ஆண்டுகள் கழிந்துவிட்டன, தற்போது அவர் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார். இன்னும் தன் பெற்றோரின் வீட்டிலேயே வாழ்ந்துவருகிறார்.

குழந்தை திருமணம்

பட மூலாதாரம், RUHANI KAUR

படக்குறிப்பு, 11ஆம் வகுப்பில் தன் பள்ளியிலேயே அறிவியல் பிரிவில் சேர்ந்த ஒரே மாணவி மீனாக்ஷி தான்.

ஆனால், காவல்துறையில் பணிபுரிவதற்காக தேர்வுக்கு தயாராகிவரும் அவருடைய கணவருக்கு வேலை கிடைத்ததும் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என பிரியங்காவிடம் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

அவர் பயத்தில் உள்ளார், தன் கவலைகளை டைரியில் கொட்டுகிறார்.

"திருமணம் செய்து வைத்து என்னை கட்டிப்போடாதீர்கள், நான் சின்ன பெண்… என்னுடைய பொம்மையை விட்டுவிட்டு மாமியார் வீட்டுக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை," என அவர் தன் டைரியில் எழுதியுள்ளார்.

தான் மிக சிறந்த மாணவி இல்லை என்றும், ஆனால், தனது சகோதரரின் அழகு நிலையத்தில் உதவி செய்வது தனக்குப் பிடிக்கும் எனவும் அவ்வாறு செய்வது தன்னுடைய வீட்டில் இன்னும் நீண்டகாலத்திற்கு தங்க உதவும் என பிரியங்கா நம்புகிறார்.

அவருடைய உறவினரின் மகள், பிரியங்காவின் கணவரின் சகோதரரை திருமணம் செய்துள்ளார். அவரும் பார்லர் வேலைகள் சிலவற்றை கற்றுக்கொண்டுள்ளார், ஆனால், அவருக்கும் திருமணமானதால் அவரால் அதனை தொடர்ந்து செய்ய முடியவில்லை. இதிலிருந்து வேறுபட்ட வாழ்க்கைக்காக பிரியங்கா ஏங்குகிறார்.

"கனவுகள் நனவாகும்வரை திருமணம் செய்யக்கூடாது"

கடந்தாண்டு மீனாக்ஷி 11ஆம் வகுப்பில் நுழைந்தபோது, அவரது பள்ளியில் அறிவியல் பிரிவில் சேர்ந்த முதல் மாணவியாக அவர் திகழ்ந்தார். அப்போது அவருடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என தெரிவிக்கிறார் மீனாக்ஷி.

குழந்தை திருமணங்கள்

பட மூலாதாரம், RUHANI KAUR

படக்குறிப்பு, (வலமிருந்து இடமாக) ஷிவாணி, அவரது தங்கை ஆஷூ மற்றும் அவர்களின் தாய். மூவருமே குழந்தை திருமணம் செய்தவர்கள்.

அந்த சமயத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பலரது வாழ்க்கையை மாற்றியது. ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்தனர், பெரும்பாலானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் திரும்பினர்.

அப்போதுதான் இளம்பெண்களின் பெற்றோர்கள் பெரும்பாலானோர், அவர்களின் வருங்காலம் குறித்த பதட்டத்தினால், தங்கள் மகள்களின் திருமணங்களுக்கு ஏற்பாடு செய்தனர்.

இந்த காலகட்டத்தில் மீனாக்ஷியின் வகுப்பு தோழிகள் பலரும் திருமணம் செய்து வைக்கப்பட்டனர். ஆனால், தனக்கு திருமணம் நடக்காது என மீனாக்ஷி நம்பினார். "திருமணம் செய்வதற்கான சரியான வயது என்ன என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், நம் கனவுகள் நனவாகும் வரை, நாம் திருமணம் செய்யக்கூடாது!" என, உறுதியாக கூறுகிறார்.

ஆனால், இந்தாண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அவரும் இந்த புள்ளிவிவரத்தில் (குழந்தை திருமணம் குறித்த) ஒருவராக இணைந்தார்.

ஹரியாணா - குழந்தை திருமணம்

பட மூலாதாரம், RUHANI KAUR

படக்குறிப்பு, தன்னுடைய திருமண ஆல்பத்தை பார்க்கும் ஆஷூ

தனது 16 வயதான கணவரிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளின் சத்தத்தால், தன் மொபைல்போனை எடுக்க சென்றபோது, மீனாக்ஷியின் கைகளில் இன்னும் மருதாணி இருப்பது தெரிந்தது. அவர் அந்த குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்ப டைப் செய்யும்போது அவருடைய சிகப்பு வளையல்கள் ஒலியெழுப்புகின்றன.

அவருடைய கணவரும் படித்து வருகிறார், எனவே மீனாக்ஷியும் பள்ளி செல்லலாம் என, மீனாக்ஷியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். தான் எவ்வளவு படிக்க வேண்டும் என விரும்புகிறேனோ, அதுவரை தன் பெற்றோரும், கணவரின் பெற்றோரும் படிக்க அனுமதிப்பர் என நம்புகிறார்.

வங்கியில் பணிபுரிய கனவு காணும் ஷிவாணி

படிப்பு குறித்து பேசும்போது ஷிவாணியின் முகம் ஆச்சர்யப்படுவது தெரிகிறது, பள்ளிக்கு செல்வது ஷிவாணிக்குப் பிடிக்கும், வங்கியில் பணிபுரிய வேண்டும் என்பது அவருடைய கனவு.

ஆனால், ஷிவாணியின் திருமண ஆல்பத்தை அவருடைய தாய், பெட்டியிலிருந்து எடுத்தபோது, நிஜத்திற்கு திரும்பினார். 12ஆம் வகுப்பை முடித்தபிறகு தன் எதிர்காலம் தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பது ஷிவாணிக்குத் தெரியும்.

ஹரியாணா குழந்தை திருமணம்

பட மூலாதாரம், RUHANI KAUR

படக்குறிப்பு, பெரும்பாலான சமயங்களை ஒன்றாகவே கழிக்கும் பிரியங்கா, ஷிவாணி, மீனாக்ஷி மற்றும் மோனு.

ஷிவாணியும் அவருடைய தங்கை ஆஷுவும் ஒரே நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டனர். இருவருடைய தந்தையும் நோய்வாய்ப்பட்டதால் அவர்களின் திருமணத்தையும் தன் சொந்த மகளின் திருமணத்துடன் சேர்த்து ஏற்பாடு செய்தவர் அவர்களின் மாமா ஆவார்.

"எதுவுமே மாறவில்லை. எனக்கு 15 வயதில் திருமணமானது, என் மகளுக்கும் அப்படியே ஆகிவிட்டது," என ஷிவாணியின் தாய் தெரிவிக்கிறார்.

12ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை முடிக்கலாம் என அவர்கள் தந்தை உறுதியளித்ததால், சகோதரிகள் இருவரும் நம்பிக்கையுடன் அவருடைய வார்த்தைகளை பிடித்துக்கொண்டனர்.

தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பாக, ஆஷூ தன் கணவருடைய வீட்டுக்கு சென்றார். ஆஷூவுக்கு அதிகமாக படிக்க வேண்டும், சட்டப்படிப்பு படிக்க வேண்டும் என விருப்பம், அதற்கு அவருடைய கணவரின் பெற்றோர் சம்மதிப்பார்கள் என அவர் நம்புகிறார்.

ஆனால், சில மாதங்களிலேயே அவர் கர்ப்பமாகிவிட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்த கிராமத்தில் இப்படியாக அவர்களின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கையில், ஒரு பிரகாசமான இலையுதிர் காலத்தில் பிரியங்கா, ஷிவாணி மற்றும் மீனாக்ஷி தங்களுடைய தோழியான மோனுவை சந்தித்தனர், மோனு திருமணம் குறித்த உடனடி அழுத்தத்திலிருந்து சுதந்திரமாக உள்ளார்.

அவர்கள் கீரிச்சிடும் பெரிய ராட்டினம் ஒன்றில் சவாரி செய்யும் போது உற்சாகத்தில் கத்துகிறார்கள்.

அந்த ராட்டினம் வேகமாக சுற்றும்போது, அந்த சிறுமிகள் தங்களின் கவலைகளை மறந்தனர்.

This work was supported by National Geographic Society's Emergency Fund for Journalists

அனைத்து புகைப்படங்களும் காப்புரிமை விதிகளுக்கு உட்பட்டது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: