சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடியிடம் சிக்குவார்களா சந்தேக நபர்கள்?

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை மாநில குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி). இனி இந்த வழக்கில் என்ன நடக்கும்?
`இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்வரை தனது பூர்விக மாநிலமான மேற்கு வங்கத்துக்கு செல்லப் போவதில்லை என்பதில் பாதிக்கப்பட்ட மாணவி உறுதியாக இருக்கிறார். சிபிசிஐடி விசாரணையில் உரிய நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம்,' என்கின்றனர் ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள்.
சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவர் 2016ஆம் ஆண்டு முதல் 2020 வரையில் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வந்தார். சக மாணவர்களான நான்கு பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பேராசிரியரிடம் முறையிட்ட பிறகும் உரிய நியாயம் கிடைக்காததால் மூன்று முறை தற்கொலைக்கு அவர் முயன்றதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கவனத்துக்கு மாணவி தரப்பில் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் மாணவி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சந்தேக நபர்களாக மாணவி கூறிய மாணவர்கள், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத பேராசிரியர்கள் உள்பட எட்டு பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354 (b), 354 (c), 506 (1) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், `ஒன்பது மாதங்கள் கடந்த பின்னரும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சுமத்தியது.
மேற்கு வங்கத்தில் கைது, ஆனால்?
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுகந்தி கூறுகையில், ``மாணவியை கல்வி வளாகத்திலும் ஆய்வுக் கூட்டத்திலும் வைத்து இரண்டு முறை ஒரு மாணவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த வழக்கு காவல்துறையின் விசாரணைக்குச் சென்றதால் ஐஐடி நிர்வாகத்தின் உள்புகார் கமிட்டி (ஐசிசி) விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மகளிர் ஆணையத்திலும் மாணவி புகார் அளித்தார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிப்பதே சரி'' என்றார்.
இந்த நிலையில், காவல்துறை தரப்பில் சிறப்புத் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. அதில் இடம்பெற்ற காவலர்கள், மேற்கு வங்கம் சென்று கிங் சுக்தேவ் சர்மாவை கைது செய்து விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவரை விடுவித்து விட்டதாக குற்றம்சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜனநாய மாதர் சங்க நிர்வாகிகள், `மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கிங் சுக்தேவ் சர்மாவை மேற்கு வங்கத்தில் கைது செய்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அவர் முன்ஜாமீன் பெற்றதால் நீதிமன்றம் அவரை விடுவித்து விட்டதாக காவல்துறை சொல்கிறது," என்று தெரிவித்தனர்.
சிபிசிஐடி விசாரணை ஏன்?

இந்த வழக்கில் தொடக்கம் முதலே குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் காவல்துறை செயல்படுவதாகக் கூறி இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என கடந்த மார்ச் 25ஆம் தேதி மாதர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், கோட்டூர்புரம் காவல்நிலைய விசாரணை அதிகாரி மாற்றப்பட்டதாக செய்தி வெளியானது.
இது குறித்து பேசிய மாதர் சங்க நிர்வாகிககள், "மாணவி விவகாரத்தில் IPC 376, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின்கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் அவர்கள் முன்ஜாமீன் பெற்றுள்ள பழைய வழக்கில் கைது செய்ய மாநில காவல்துறை ஏன் மேற்கு வங்கம் வரை செல்ல வேண்டும்? காவல்துறையின் செயல்பாடு என்பது குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளதால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என வலியுறுத்தினர்.
மேலும், `இத்தகைய முக்கியமான வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சரே தனிக்கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி பெற்றுத் தர உதவ வேண்டும்' எனவும் தெரிவித்தது.
இந்த நிலையில், மாணவி வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டுக்குத் தப்பி ஓட்டமா?

இதையடுத்து, ``சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதன் மூலம் இந்த வழக்கின் போக்கு எப்படியிருக்கும்?'' என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுகந்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.
``நாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய பிறகு இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 376, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய இரண்டிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனர். மேற்கு வங்கம் சென்று கைது செய்யாத தமிழ்நாடு காவல்துறை, தென்கொரியாவுக்கு சென்றா கைது செய்வார்கள் என்பதுதான் எங்களின் கேள்வி. எனவே, முதலமைச்சர் தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகளையும் சென்று சந்திக்க உள்ளோம்,'' என்கிறார் சுகந்தி.
``மாணவி புகார் தொட்பாக ஐஐடி நிர்வாகம் தரப்பிலும் உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் பேசிய கல்லூரி நிர்வாகம், `உங்கள் மகள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால் சற்று ஓய்வெடுத்துவிட்டு வந்து 'தீசிஸ்' சமர்ப்பிக்கட்டும்' என கூறியுள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரான பிறகு 'தீசிஸ்' சமர்ப்பிக்க உள்ளதாக மாணவி கூறிவிட்டார். மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அந்த மாணவி மீண்டும் தற்கொலைக்கு தூண்டப்படும் செயல்களில் ஐஐடி நிர்வாகம் ஈடுபடக் கூடாது. இது குறித்து ஐஐடி நிர்வாகத்தினரிடமும் பேசுவோம்'' என்கிறார் சுகந்தி.
மேலும், ``மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 7 மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். மாணவியின் ஆராய்ச்சிப் படிப்பு வழிகாட்டிப் பேராசிரியர் ஒருவரும் அவரிடம் தவறாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், இதுபோன்ற தவறுகள் நடந்தால் நிர்வாகமே காவல்துறையில் புகார் செய்ய வேண்டும். அருப்புக்கோட்டை கல்லூரி விவகாரத்தில் பெண் பேராசிரியைக்கு எதிராக அக்கல்லூரியின் முதல்வரையே புகார் கொடுக்க வைத்தோம். இந்த வழக்கில் நேர் எதிராக அனைத்தும் நடக்கிறது'' என்கிறார் அவர்.
ஐ.ஐ.டி நிர்வாகம் சொல்வது என்ன?

அதேநேரம், மாணவிக்கு நேர்ந்த துயரம் குறித்து விளக்கம் அளித்த ஐஐடி நிர்வாகம், `மாணவி விவகாரம், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் குழுவுக்கு அனுப்பப்பட்டது. மாணவி தெரிவிக்கும் தகவல்களைப் பார்த்தால் 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் பற்றி தகவல், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட குழுவின் விசாரணைக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விசாரணை அதிகாரிகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். மாணவிக்கான உதவித்தொகை காலம் முடிந்த பின்னரும்கூட வெளி விசாரணையின்போது அவருக்கு அனைத்து ஆதரவுகளையும் நிர்வாகம் வழங்கியுள்ளது. தொடர்ந்து வளாகத்தில் உள்ள விடுதியில்தான் மாணவி தங்கியிருக்கிறார்' என ஐஐடி நிர்வாகம் கூறியுள்ளது.
`தனது பட்டப்படிபை மாணவி முடிப்பதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் நிர்வாகம் வழங்குகிறது. மாணவி மீது அனுதாபம் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவருக்கு ஆதரவு அளிக்கப்படும். இந்த விவகாரத்தில் அனைத்து செயல்முறைகளையும் ஐஐடி மெட்ராஸ் பின்பற்றியுள்ளது' என அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
`மாணவியை பட்டியலின சமூக நோக்குடன் தொடர்பான வன்கொடுமை நடந்ததா?' என்பதை அறிய உயர்மட்டக் குழு ஒன்றை ஐ.ஐ.டி நிர்வாகம் அமைத்துள்ளது. இது தொடர்பாக, கடந்த 11ஆம் தேதி மதியம் விசாரணை நடந்துள்ளது.
இந்த நிலையில், `மாணவி கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதால் அவருக்குரிய மனநல ஆலோசனைகளை ஐ.ஐ.டி நிர்வாகம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. `சிபிசிஐடி விசாரணை மூலம் உரிய நியாயம் கிடைக்க வேண்டும்' என்று மாதர் சங்கம் கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












