தன்பாலின ஈர்ப்பு கொண்டவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீஸ்

பட மூலாதாரம், Getty Images
கோயம்புத்தூரில் தன்பாலின ஈர்ப்பு கொண்டவரைத் தாக்கிய கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயமுத்தூர் மாவட்டம் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் 31 வயதான அபிராம். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் அணி தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னை தன்பால் ஈர்ப்பு கொண்டவராக அறிமுகப்படுத்தி கொள்கிறார்.
இவர் blued என்கிற மாறுபட்ட பால் ஈர்ப்பு கொண்டோருக்கான (queer community) செயலியை சமீப காலமாக பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது சில கல்லூரி மாணவர்களுடன் அபிராமுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. blued செயலி மூலமாக அவர்களுடன் அறிமுகமாகி, தொடர்ந்து உரையாடி வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஒருநாள் அபிராமை நேரில் சந்திக்க வருமாறு கல்லூரி மாணவர்கள் அழைத்துள்ளனர். மாணவர்களின் அழைப்பை ஏற்று அவர்களை சந்திக்க சாய்பாபா காலனி ஆவின் பார்லர் அருகே சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த மூன்று மாணவர்கள் அபிராமை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பின்புறம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். மேலும் அந்த மாணவர்கள் மரக்கட்டைகள் மற்றும் இரும்பு கம்பிகளைக் கொண்டு அபிராமை கடுமையாக தாக்கி காயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.5000 பணத்தை எடுத்துவிட்டு தப்பியதாக அபிராம் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சாய்பாபா காலனி காவல்நிலைய போலீசார் 19 வயதான பிரசாந்த், 22 வயதான நிஷாந்த்குமார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக அபிராமை தொடர்பு கொண்டபோது, காவல்நிலையத்திலே விசாரித்து கொள்ளுமாறு தெரிவித்துவிட்டார்.
செயலியால் நடைபெறும் குற்றங்கள்
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சாய்பாபா காலனி காவல் நிலைய ஆய்வாளர் ரெஜினா, 'இந்த ஆண்டு மட்டும் தற்போது வரை இது போன்ற செயலிகள் மூலம் நிகழ்ந்த குற்றச் சம்பவங்களில் சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் மட்டும் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. Grindr, Blued போன்ற செயலிகள் மூலம் இளைஞர்கள் அதிகமாக இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்.
இந்த குறிப்பிட்ட வழக்கில் பேராசிரியர் அபிராம் தன்னை ஓர்பாலின ஈர்ப்பு கொண்டவராக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். மாணவர்களும் தங்களை ஒருபாலின ஈர்ப்பு கொண்டவர்களாக அபிராமிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் பேசியுள்ளனர்.
பணம் பறிக்கும் கும்பல்

பட மூலாதாரம், Getty Images
ஆனால் பணத்தை பறிப்பதற்காகத்தான் இவ்வாறு செய்துள்ளார்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இளைஞர்கள்தான் இதுபோன்ற வழக்கில் அதிகம் குற்றம்சாட்டப்படுகிறார்கள். வேறு சில சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யாமல் திருடப்பட்ட பொருளை கொடுத்து அனுப்பியிருக்கிறோம்.'' என்றார்.
மேலும், ''சில மாதங்களுக்கு முன்பு கவுண்டம்பாளையத்திலும் இதே போன்றதொரு சம்பவத்தில் நான்கு இளைஞர்கள் சம்மந்தப்பட்டிருந்தனர். அந்த செயலிகளைப் பற்றிய போதிய புரிதலோ விழிப்புணர்வோ இல்லாமல் இளைஞர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது'' என்றார்.
போதிய விழிப்புணர்வு, பாதுகாப்பு இல்லை
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய உளவியல் நிபுணர் வித்யா தினகரன், `சென்னை போன்ற நகரங்களில் மாறுபட்ட பால் ஈர்ப்பு கொண்டோருக்கான இடம், வெளி என்பது தற்போது உருவாகி வருகிறது. அவர்களுக்காக பணியாற்றும் தன்னார்வலர் அமைப்புகளும் உள்ளன. ஆனால் மற்ற நகரங்களில் அப்படியில்லை. அதனால் இது போன்ற செயலிதான் அவர்கள் மற்றவர்களிடம் அறிமுகமாகி கொள்வதற்கு ஒரே வழி.
மாறுபட்ட பால் ஈர்ப்பு கொண்டோர் தொடர்பாக போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக காவல்துறையினர் மத்தியில் முதலில் ஏற்பட வேண்டும். விழிப்புணர்வு இல்லாததையும் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததையும் மற்றவர்கள் சாதகமாக எடுத்துக் கொண்டு அத்துமீறுகிறார்கள். மாறுபட்ட பால் ஈர்ப்பு கொண்டோர் ஏன் இந்த செயலிகளை பயன்படுத்துகிறார்கள் என்று கேட்பது சரியாகாது. இதன் மூலம் பலர் அவர்களுக்கான இணைகளை கண்டுகொண்டுள்ளனர்.
இது போன்ற வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்திருப்பதே வரவேற்கத்தக்கது. பல நேரங்களில் இது போன்ற சம்பவங்களை உதாசீனப்படுத்திவிடுவார்கள். போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதற்கு முதல் தீர்வாக அமையும்`'என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













