யுக்ரேன் போர்: “பயப்படாதே, அது வாணவேடிக்கைதான்” – குண்டுவெடிப்பு களத்தில் குழந்தைக்கு தாய் சொல்லும் கண்ணீர் ஆறுதல்

யுக்ரேன் மேரியோபோல் ரஷ்யா
படக்குறிப்பு, மூன்று வாரங்களுக்குப் பிறகு நாடியாவும் அவருடைய குழந்தைகளும் அங்கிருந்து வெளியேறினர்.

ரஷ்ய படைகள் முற்றுகையிட்டுள்ள யுக்ரேனின் மேரியோபோலில் இன்னும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு இன்றி சிக்கியுள்ளனர். மனிதநேய உதவிகளை வழங்குவதற்கும், மக்களை வெளியேற்றவும் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அங்கிருந்து தப்பித்தவர்களுக்கும் கூட, குறிப்பாக அவர்களின் குழந்தைகளுக்கும் துன்பங்கள் இன்னும் முடிவடையவில்லை.

ஒவ்வொரு நாளும் வரிசையில் நின்று பிரெட் துண்டுகள், சாசேஜ் மற்றும் தண்ணீரை வாங்குவதுதான் அவர்களின் முதல் பணியாக இருக்கிறது. மேரியோபோலில் அவருடைய அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே நடைபெற்ற ஷெல் தாக்குதலில், அவருடைய வீட்டின் ஜன்னல்கள் வீசி எறியப்பட்ட நிலையில், மிகவும் குளிர்ச்சியான தங்கள் வீட்டிலிருந்து மூன்று வாரங்களுக்குப் பின் நாடியா டெனிசென்கோ மற்றும் அவரின் குழந்தைகள் மேரியோபோலில் இருந்து தப்பித்தனர்.

பல நாட்களாக மிகவும் குறைவாகவே அவர்கள் உணவு உண்டனர், மேலும் அருந்துவதற்கு அவர்களிடம் எதுவுமே இல்லை.

"தண்ணீரை நாங்கள் பாட்டிலில் நிரப்பிக்கொண்டதில் மகிழ்ச்சியடைந்தோம். அந்த தண்ணீரை சில நொடிகளில் காலியாக்கி விட்டோம்," என 14 மற்றும் 5 வயதுடைய தன் இரு மகன்கள் மற்றும் 12 வயது மகளுடன் பாதுகாப்பான இடத்தை அடைந்தது குறித்து நாடியா மீண்டும் நினைவுகூர்கிறார்.

"போர் தொடங்கியபோது, என்னுடைய இரண்டாவது மகன், 'அம்மா, எனக்கு கொஞ்சம் பிரெட் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது' என்றான்," என தெரிவித்தார்.

நம்பமுடியாத சோகத்திலிருந்து அவர்கள் மீண்டுவரும் நம்ப முடியாத மற்றொரு கதை இது.

மேரியோபோலில் பெரிய சுவர்கள் எழுப்பப்பட்ட நடைபாதையில் அவர்கள் பல நாட்களை கழித்தனர். தங்கள் இரவுகளை பதுங்குகுழிகளில் கழித்தனர். அவர்கள் வழக்கமாக காலை 5 மணிக்கு எழுந்தனர். சில சமயங்களில் அருகாமையிலும் சில சமயங்களில் பக்கத்திலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள், யாரையும் உறங்க விடவில்லை.

"அதுவொரு நரகம். நிச்சயம் நரகம் தான்," எனக்கூறும் 39 வயதான நாடியா, மேரியோபோலில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். "காலையில் உயிருடன் எழுந்திருப்போமா என்பதை அறியாமல் நீங்கள் வாழ்கிறீர்கள்," என, மேரியோபோலில் தன் வாழ்க்கை குறித்து கூறுகிறார்.

"அது வெறும் வாவேடிக்கைதான்"

யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவின் சண்டையில் மேரியோபோல் பல மோசமான அபாயங்களை சந்தித்துள்ளது. அந்த நகரத்தை சுற்றி வளைத்துள்ள ரஷ்ய படைகள், வான், தரை, கடல் என, மூன்று வழிகளிலும் கருணையின்றி தாக்குதல் நடத்தி வருகிறது. மிகப்பெரிய இடுகாடுகளில் பெரும்பாலானோர் அடையாளமின்றி புதைக்கப்பட்டுள்ளனர். மேரியோபோலில் அடுத்தடுத்த தெருக்கள், அடுத்தடுத்த கட்டடங்களில் தற்போது இடிபாடுகளே எஞ்சியுள்ளன.

"நாங்கள் தீவிரமான ஷெல் தாக்குதல்களுக்கு உள்ளானோம். எதுகுறித்தும் அவர்கள் கவலைப்படவில்லை... "ஏன் குண்டுகள் வெடிக்கின்றன" என என் மகன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறான்," என நாடியா கூறுகிறார்.

"நான் அவனிடம், 'கவலைப்படாதே, அது வெறும் வாணவேடிக்கைதான்' என கூறுகிறேன்" என்றார்.

மேரியோபோலில் அவர்கள் இருந்தபோது, அக்கம்பக்கத்தினர் தங்களிடம் இருந்த உணவுப்பொருட்களை வைத்து தெருக்களில் சமைத்தனர்.

"பெரும்பாலும் நாங்கள் வீடுகளில் இல்லாமல் வெளியே இருந்தோம், ஏனெனில் வீட்டுக்குள் இருப்பதை விட வெளியில் இருப்பது வெப்பமானதாக இருந்தது," என்கிறார் நாடியா.

அங்கிருந்த கடைசி இரண்டு நாட்களில், உண்பதற்கு அவர்களிடம் எதுவுமே இல்லை. தானியமோ அல்லது ஓட்ஸ் கூட இல்லை. உங்களிடம் பணம் இருக்கிறது என்பது ஒரு விஷயமே இல்லை. அந்நகரத்தில் எந்தவொரு உணவும் இல்லை.

யுக்ரேன் ரஷ்யா

அங்கிருந்து தப்பிப்பதற்கான முயற்சி ஒன்றில், கார்கள் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இடத்திற்கு, அது அங்கிருந்து வெளியேறுவதற்கான வழித்தடமாக இருக்கலாம் என நம்பி சென்றனர். ஆனால், அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

"வேண்டுமென்றே அந்த தாக்குதல் நிகழ்ந்தது," என்கிறார் நாடியா. தாங்கள் பாதுகாப்பாக இருக்கலாம் எனக்கருதி அவர்கள் இருந்த சேதமடைந்த கட்டடத்தில் இருந்து தன்னையும் தன் குழந்தைகளையும், "நாய்க்குட்டிகளை போல" ஒருவர் அங்கிருந்து தள்ளியதாலேயே தாங்கள் உயிர்பிழைத்ததாக நாடியா கூறுகிறார்.

"நம்மை ஏன் கொல்ல முயற்சிக்கின்றனர்?"

"நாங்கள் அங்கிருந்து வெளியேறியபோது, கோரமான ஒன்றை நாங்கள் கண்கூடாகக் கண்டோம்" என்றார். அங்கிருந்த கார் ஒன்று ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது.

ஓட்டுநர் ஒருவருக்கும், தன் குடும்பத்தை அந்த நகரத்திலிருந்து வெளியேற்ற முயற்சித்தை ராணுவ வீரர் ஒருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.

நாடியாவும் மற்றவர்களும் பதுங்குகுழிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு மருத்துவ பெண் ஊழியர் , காயமடைந்தவருக்கு சாதாரண ஊசியையும் நூலையும் வைத்து காயத்திற்கு தையல் போட்டுக்கொண்டிருந்தார். "இதையெல்லாம் பார்த்த பின்னர் நாங்கள் வீட்டுக்கு வந்தோம், என்னுடைய கடைசி மகன் என்னிடம், 'அம்மா, நம்மை கொல்வதற்கு ஏன் அவர்கள் முயற்சிக்கின்றனர்,' என கேட்டான்" என நாடியா கூறுகிறார்.

"அவனிடம் நான் என்ன சொல்வது? எனக்கு தெரியவில்லை" என்றார்.

நாட்கள் கழிந்து, மார்ச் 17 அன்று ஒருவழியாக அவர்கள் தனியார் வாகனங்களின் அணிவகுப்பு மூலமாக அந்நகரத்திலிருந்து வெளியேறினர். முதலில் அவர்கள் மாங்குஷ் என்ற கிராமத்தை அடைந்தனர். பின்னர், ரஷ்யப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பெர்டியான்ஸ்க்கை அடைந்தனர்.

பின்னர், பேருந்து மூலம் ஸாப்போரீஸியாவுக்கு சென்றனர். சாலை முழுவதும் ரஷ்ய படையினர் அல்லது ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளால் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகள் இருந்ததாக, அவர் தெரிவித்தார்.

"அவர்கள் எங்களை சோதனை செய்தனர், குறிப்பாக ஆண்களையும் எங்களின் செல்போன்களையும் சோதித்தனர்," என்கிறார் நாடியா. இவையெல்லாம் நடக்கும் என அறிந்திருந்த நாடியா, மேரியோபோலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முன்பே நீக்கிவிட்டார்.

"அந்த நகரத்திலிருந்து வெளியேறிய போது, நான் மிகவும் அழுக்குடனும் சேறு பூசப்பட்டும் இருந்தேன். நான் குளிக்கக்கூட இல்லை. அருந்துவதற்கு எதுவும் இல்லாதபோது, நீங்கள் குளிப்பது குறித்து சிந்திக்க மாட்டீர்கள்" என்றார்.

யுக்ரேன் மேரியோபோல்

ஸாப்போரீஸியாவிலிருந்து மேற்கு யுக்ரேனில் உள்ள, ரஷ்ய தாக்குதலில் இருந்து பெருமளவில் காப்பாற்றப்பட்ட லுவீவ் நகருக்கு செல்ல அவர்களுக்கு ஐந்து நாட்களாகின. இது போரில் உள்ள நாடு என்பதற்கான அறிகுறியாக இங்கு, வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒரு நாளைக்கு பலமுறை ஒலிக்கப்பட்டு பின் அணைக்கப்படும்.

உணவை மறைத்துவைக்கும் குழந்தை

"நாங்கள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறோம், எங்களால் உணவு வாங்க முடிகிறது. ஆனால், என்னுடைய மகன் பிரெட் மற்றும் மிட்டாய் உள்ளிட்டவற்றை இன்னும் மறைத்துவைக்கிறான். நாங்கள் தற்போது தங்கியுள்ள குடியிருப்பின் பல்வேறு பகுதிகளில் மறைத்துவைக்கிறான்" என்கிறார்.

ஏன் அவ்வாறு செய்கிறாய் என தன் மகனிடம் நாடியா கேட்டுள்ளார்.

"அவன், 'ஏனெனில் அப்போதுதான் நான் நாளை உண்பதற்கு என்னிடம் ஏதாவது இருக்கும்' என்கிறான்" என நாடியா கூறுகிறார்.

தன்னுடைய குழந்தைகள் கடந்து வந்ததிலிருந்து மீள முடியும் என நாடியா கருதுகிறார். எங்களின் நேர்காணலுக்காக தன்னுடன் வர விரும்பவில்லை எனக்கூறிய நாடியாவின் மகள், எல்லோருடனும் பேசக்கூடிய ஒரு நபர், ஆனால், புதிய நகரத்தில் அவள் இன்னும் நண்பர்களை உருவாக்கிக்கொள்ளவில்லை.

மேரியோபோலில் போர் முடிந்து, நகரம் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு, அங்கு இயல்புநிலை திரும்ப தன் மகள் விரும்புவதாக நாடியா கூறுகிறார்.

"எதுவுமே மிஞ்சவில்லை... அந்நகரம் வளர்ந்து கொண்டிருந்தது. மிகவும் நேர்த்தியாக இருந்தது," என கூறுகிறார். அங்கு இல்லாத ஒன்றேயொன்று மெக்டொனால்ட்ஸ் என நாடியா கூறுகிறார்.

"இவையெல்லாம் ஏன் நிகழ்ந்தன என்பது எனக்கு புரியவில்லை. ஏன் அவர்கள் இவ்வாறு செய்கின்றனர்?" என்கிறார் அவர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: