சீனா மற்றும் அதன் லட்சியங்களை சீர்குலைக்கும் இரான் - அமெரிக்கா போர்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், சீனா

பட மூலாதாரம், AFP via Getty Images

    • எழுதியவர், லாரா பிக்கர்
    • பதவி, சீனா செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் நடக்கும் போரின் அதிர்ச்சியை சீனா இன்னும் உணரவில்லை – அதாவது இதுவரை.

ஆனால் அதன் அதிர்வலைகளை அது உணர்கிறது.

சீனாவிடம் பல மாதங்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு உள்ளது. அதன் பிறகு அது உதவிக்காக அண்டை நாடான ரஷ்யாவை நாடலாம்.

ஆனால் நீண்ட காலத்தில் மத்திய கிழக்கில் அதன் முதலீடுகளுக்கு மட்டுமல்ல, அதன் லட்சியங்களுக்கும் கூட இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை சீனா கணக்கிடும்.

குறைந்த நுகர்வு, நீடித்த சொத்து நெருக்கடி மற்றும் உள்நாட்டுக் கடன் ஆகியவற்றுடன் தொடர்ந்து போராடி வரும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்திற்கான எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விவாதிக்க, இந்த வாரம் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் பெய்ஜிங்கில் கூடுகிறார்கள்.

தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்துறைகளை பெய்ஜிங் தொடர்ந்து வேகமாக மேம்படுத்தி வந்தாலும், 1991-க்குப் பிறகான மிகக் குறைந்த அளவிலான வருடாந்திர பொருளாதார வளர்ச்சி இலக்கை வியாழக்கிழமை சீனா நிர்ணயித்துள்ளது.

பொருளாதார சிக்கலில் இருந்து வெளியேற ஏற்றுமதியை அதிகரிப்பது ஒரு வழி என சீனா நம்பியிருக்கலாம். ஆனால் அது அமெரிக்காவுடன் ஒரு வர்த்தகப் போரில் ஓராண்டு காலம் போராடியுள்ளது, இப்போது தன் முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகள் மற்றும் அதன் எரிசக்தி தேவைகள் பலவற்றையும் வழங்கும் மத்திய கிழக்கில் கொந்தளிப்பான சூழலை எதிர்கொள்கிறது.

சீனாவுக்கு என்ன பாதிப்பு?

போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தொடர்ந்து முடக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.

"மத்திய கிழக்கில் நீடித்த கொந்தளிப்பு மற்றும் பாதுகாப்பற்ற சூழல், சீனாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பிற பிராந்தியங்களையும் பாதிக்கும்," என்கிறார் ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பிலிப் ஷெட்லர்-ஜோன்ஸ்.

"உதாரணமாக, ஆப்பிரிக்கப் பொருளாதாரங்கள் வளைகுடா மூலதனத்தின் கணிசமான மற்றும் நிலையான வரவு மூலம் பயனடைந்துள்ளன. முதலீட்டு அலை ஓய்ந்தால், இது சீனாவின பரந்த மற்றும் நீண்ட கால நலன்களின் நிலைத்தன்மையைக் குலைக்கும் விரிவான, ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கும் அபாயம் உள்ளது."

அதாவது, சீனாவின் உலகளாவிய தடம் காரணமாக, மத்திய கிழக்கிற்கு அப்பால் உள்ள அதன் முதலீடுகள் மற்றும் சந்தைகளும் ஒரு நீண்டகால போரால் பாதிக்கப்படக்கூடியவை. மற்ற பல நாடுகளைப் போலவே, சீனாவும் இந்த புதிய கணிக்க முடியாத சூழலைக் கண்டு எச்சரிக்கையாக இருக்கிறது.

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் சீனா லாவ் இன்ஸ்டிடியூட் இயக்குநர் பேராசிரியர் கெர்ரி பிரவுன் கூறுகையில், "சீனாவும் மற்றவர்களைப் போலவேதான் நினைக்கிறது என்று நான் நினைக்கிறேன்."

"திட்டம் என்ன? நிச்சயமாக அமெரிக்கர்கள் எந்தத் திட்டமும் இல்லாமல் இதில் இறங்கியிருக்க மாட்டார்கள்."

அவர் மேலும் கூறுகையில் "அநேகமாக, மற்றவர்களைப் போலவே அவர்களும், 'ஓ கடவுளே, அவர்கள் உண்மையில் எந்தத் திட்டமும் இல்லாமல் இதில் இறங்கிவிட்டார்கள்' என்று நினைப்பார்கள். சரி, மற்ற எதிலும் சிக்கிக் கொள்ள விரும்பாதது போலவே இதிலும் சிக்கிக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை, ஆனால் நாங்கள் ஏதாவது செய்தாக வேண்டும் என்றும் நினைப்பார்கள்." என்றார்.

'அவ்வளவு நெருக்கமான நண்பர்கள் அல்ல'

மேற்கத்திய நாடுகளால் இரான் எப்போதும் சீனாவின் "கூட்டாளி" என்றே குறிப்பிடப்படுகிறது.

அவர்கள் நிச்சயமாக மிகவும் நட்பாகவே இருந்துள்ளனர். இரான் அதிஉயர் தலைவர் காமனெயி மேற்கொண்ட கடைசி வெளிநாட்டுப் பயணம் 1989-இல் பெய்ஜிங்கிற்கு அமைந்தது. அவர் சீனப் பெருஞ்சுவரில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காமனெயி 1989-ஆம் ஆண்டு மே மாதம் சீனா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

2016-இல் ஜின்பிங் டெஹ்ரான் சென்ற போது அவர்களுக்கு இடையிலான கூட்டாண்மை ஆழமானது. இறுதியில் இரு நாடுகளும் 2021-இல் 25 ஆண்டுகால உத்தி ரீதியான கூட்டாண்மையில் கையெழுத்திட்டன.

25 ஆண்டுகளில் இரானில் 400 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக சீனா உறுதியளித்தது, அதற்கு ஈடாக, இரான் தொடர்ந்து எண்ணெய் வழங்க வேண்டும்.

இருப்பினும், அந்தப் பணத்தில் ஒரு சிறு பகுதி மட்டுமே இரானியர்களைச் சென்றடைந்ததாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனால் எண்ணெய் விநியோகம் தொடர்ந்து கொண்டிருந்தது.

குளோபல் எனர்ஜி பாலிசி மையத்தின்படி, சீனா 2025-இல் இரானிடமிருந்து ஒரு நாளைக்கு 1.38 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது - இது சீனாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 12% ஆகும். இந்த பீப்பாய்களில் பல, எடுக்கப்பட்ட இடத்தை மறைப்பதற்காக மலேசியாவிலிருந்து வந்தவை என மறுபெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொலம்பியா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில், ஆசியாவில் 46 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான இரானிய எண்ணெய் மிதக்கும் சேமிப்பகங்களில் இருப்பதாகவும், டாலியன் மற்றும் சௌஷன் ஆகிய சீன துறைமுகங்களில், சுங்கத் துறையால் இன்னும் அனுமதிக்கப்படாத சேமிப்பகங்களில் இன்னும் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே ஆயுத விற்பனை நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. டெஹ்ரானுக்கு கப்பல் எதிர்ப்பு க்ரூஸ் ஏவுகணைகளை விற்பனை செய்ததாக கூறப்படுவதை சீனா மறுத்துள்ளது. ஆனால் பொறியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலமும் பாகங்களை வழங்குவதன் மூலமும் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு சீனா ஆதரவளிப்பதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

போராட்டக்காரர்கள் மற்றும் ஆட்சியின் விமர்சகர்களுக்கு எதிரான இரானின் கொடூரமான ஒடுக்குமுறைகள் பெய்ஜிங்கால் பகிரப்பட்ட சீன முகம் அடையாளம் காணும் மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலமே செய்யப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதனால் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பது போல் தோன்றலாம்.

இவை அனைத்தும் வட கொரியா மற்றும் ரஷ்யாவுடன் சேர்த்து சீனாவையும் இரானையும் "கொந்தளிப்பின் அச்சு" என்று அடையாளப்படுத்தும் செய்தித்தாள் தலைப்புகளுக்கு வழிவகுத்தன. இந்த நான்கு நாடுகளும் அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கை எதிர்க்க விரும்புகின்றன, ஆனால் உண்மையில் அவர்களின் உறவு பரிவர்த்தனை சார்ந்தது.

"சீனா ஏன் இரானுடன் பழக வேண்டும் என்பதற்கு உண்மையான கருத்தியல் அல்லது கலாசாரக் காரணம் எதுவுமில்லை," என்று பேராசிரியர் பிரவுன் கூறுகிறார்.

" இரான் அமெரிக்காவிற்கு ஒரு தொடர்ச்சியான எரிச்சலூட்டும் காரணியாக இருந்தது சீனாவின் கிட்டத்தட்ட 'பிரித்தாளும்' உத்திக்கு சில நேரங்களில் உதவியது. எனவே, சாதகமான காரணங்களை விட எதிர்மறையான காரணங்களுக்காகவே சீனா இரானுடன் உறவை விரும்புகிறது என்று நான் நினைக்கிறேன்."

"இது ஒரு உறவிற்கான மிகவும் பலவீனமான அடிப்படை, இது ஒரு குறிப்பிட்ட புள்ளி வரை வேலை செய்தது. ஆனால் இது ஒரு ஆழமான உறவு அல்ல."

மேற்கத்திய நாடுகள் பார்க்கும் அதே கோணத்தில் சீனா தனது "கூட்டணிகளை" பார்ப்பதில்லை. இது பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடாது மற்றும் தனது கூட்டாளியின் உதவிக்கு விரைந்து வராது.

மாறாக, எந்தவொரு மோதலிலிருந்தும் விலகி இருக்கவே சீனா விரும்புகிறது.

'சீனா தன்னை பொறுப்பான மாற்றாக முன்னிலைப்படுத்த விரும்புகிறது'

அதனாலேயே மத்திய கிழக்கில் நடப்பவை சீனாவை ஆழமாகப் பாதிக்கவில்லை என்று அதற்குப் பொருள் இல்லை.

சீனா ஒரு கணிக்கக்கூடிய மந்தமான கண்டனத்தை வெளியிட்டதுடன் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, "அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களை நடத்துவது... அதிலும் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவரை அப்பட்டமாக படுகொலை செய்ததும், ஆட்சி மாற்றத்தைத் தூண்டுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார்.

உண்மையில், ஜனவரியில் வெனிசுவேலாவிலும், இப்போது இரானிலும் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள், அந்த நாடுகளுக்கும் சீனாவுக்குமான கூட்டாண்மையின் எல்லைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் சீனா உதவ முடியாமல், ஒரு பார்வையாளராக ஓரங்கட்டப்பட்டுள்ளது.

சீனா தன்னை அமெரிக்காவிற்கு ஒரு "பொறுப்பான மாற்றாக" நிலைநிறுத்த முயல்கிறது என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பிலிப் ஷெட்லர்-ஜோன்ஸ் கூறுகிறார், ஆனால் "ராணுவ சமநிலையைப் பொருத்தவரை, ஒரு வல்லரசாக இருப்பது என்றால் என்ன என்பதை அமெரிக்கா நிரூபித்துக் கொண்டிருக்கிறது, அதாவது உலகம் முழுவதும் உள்ள களங்களில் விளைவுகளை ஏற்படுத்தும் திறன் ஆகும்."

பொருளாதார வலிமை இருந்தபோதிலும், சீனா "அதே அளவிலான ஒரு வல்லரசு" அல்ல என்று அவர் வாதிடுகிறார். "அது விரும்பினாலும் கூட, இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக தனது நண்பர்களைப் பாதுகாக்க அதனிடம் வாய்ப்புகள் இல்லை."

அதற்குப் பதிலடியாக, டொனால்ட் டிரம்பிற்கு நேர்மாறாக, ஜின்பிங் தன்னை ஒரு நிலையான மற்றும் கணிக்கக்கூடிய உலகளாவிய தலைவராக தொடர்ந்து நிலைநிறுத்துவார்.

"டொனால்ட் டிரம்ப் மேற்கத்திய நாடுகளின் பாசாங்குத்தனத்தையும், தாராளவாத சர்வதேச ஒழுங்கு பற்றிய மேற்கத்திய நாடுகளின் பேச்சுகளின் அளவையும் மீண்டும் ஒருமுறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளார் என்பதே சீனாவின் வாதமாக இருக்கும்," என்கிறார் எஸ்.ஓ.ஏ.எஸ் (SOAS) சீனா இன்ஸ்டிடியூட் இயக்குநர் பேராசிரியர் ஸ்டீவ் சாங்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய கிழக்கு வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளை நம்பியிருக்கும் பல துறைமுகங்களில் சீனாவின் ஷென்சென் துறைமுகமும் ஒன்று.

இந்த மோதலின் விளைவாக எரிசக்தி விநியோகம் மற்றும் விமானப் பயணத்தில் ஏற்படும் இடையூறுகள் "மேற்கத்திய நாடுகளை விட குளோபல் சவுத் பகுதிகளில் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

"சில நாடுகள் இன்னும் சில மாதங்களில் உணவுத் பற்றாக்குறையைச் சந்திக்கப் போகின்றன... அவை குளோபல் சவுத் நாடுகள். பிரிட்டன் , ஸ்பெயின் ஆகிய நாடுகள் தனிமைப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்படுவதன் மூலம் மேற்கத்திய கூட்டணிக்குள் விரிசலையும் ஏற்கனவே காண்கிறோம்."

மற்ற நாடுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உதவும் ஒரு வாய்ப்பையும் சீனா காணலாம். வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஏற்கனவே ஓமன் மற்றும் பிரான்ஸ் அமைச்சர்களுடன் பேசியுள்ளார். சீனா மத்திய கிழக்கிற்கு ஒரு சிறப்புத் தூதரை அனுப்பப் போவதாகவும் அறிவித்துள்ளது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

டிரம்ப் பயணம் மீதான எதிர்பார்ப்பு

இருந்தபோதிலும், சீனா கவனமாக காய்களை நகர்த்துகிறது, ஏனெனில் அவர்களுக்கு மிகப்பெரிய கணக்கீடுகளில் ஒன்று கணிக்க முடியாத அமெரிக்க அதிபர் ஆவார், அவர் இந்த மாத இறுதியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு சந்திப்பிற்காக சீனா செல்கிறார்.

இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்த சீனாவின் விமர்சனங்கள் எதிலும் டிரம்பை நேரடியாக இலக்கு வைக்கவில்லை. இது ஒரு கைகுலுக்கலைச் சற்று எளிதாக்கலாம்.

இந்த வருகை இனி நடக்குமா என்று சிலர் சந்தேகிக்கின்றனர். ஆனால் அது இன்னும் திட்டமிட்டபடி நடப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்தப் பயணம் குறித்து விவாதிக்க இரு தரப்பு அதிகாரிகளும் சந்திக்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா உரிமை கோரும் தைவான் போன்ற பிற சிக்கலான விஷயங்களில் டிரம்ப் எவ்வாறு பதிலளிக்கக்கூடும் என்பதற்கான "குறிப்புகளைத் தேட" இதை ஒரு வாய்ப்பாக சீனா பார்க்கலாம் என்று ஷெட்லர்-ஜோன்ஸ் கூறுகிறார்.

"இந்தப் போருக்கு வரவேற்பில்லாமல் போகும் பட்சத்தில், அது அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் கட்டுப்பாட்டை அதிகரிக்கக் கூடும். இது எதிர்கால நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டால் - சீனா தனது பிராந்தியத்திலும் பரந்த உலகிலும் தனது நலன்களை மேம்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கும்."

இந்த நெருக்கடி அமெரிக்காவை போர் வெறி கொண்டவர்களாகச் சித்தரிக்க சீனாவில் உள்ள சிலருக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இதை சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் சமூக ஊடகங்கள் முழுவதும் செய்து வருகிறது.

ஆனால் இத்தகைய "கணிக்க முடியாத மற்றும் சீரற்ற செயல்பாடுகளை கொண்ட ஒருவர்" இருப்பது சீனாவுக்கு ஒரு கவலையாக இருக்கலாம் என்று பேராசிரியர் பிரவுன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு