ரஷ்யாவை யுக்ரேனால் வெல்ல முடியுமா? 10 கேள்விகளுக்கு களத்திலிருந்து பதில் தரும் நிருபர்கள்

யுக்ரேன் - ரஷ்யா போர்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யா நடத்தி வரும் ஆக்கிரமிப்பு படையெடுப்பு நடவடிக்கைக்கு கடந்த ஒரு மாத காலமாக யுக்ரேன் ஈடுகொடுத்துப் போராடி வருகிறது.

ரஷ்யா ஆக்கிரமித்த சில இடங்களை, யுக்ரேன் படைகள் மீண்டும் தன்வசமாக்கி வருகிறது. ரஷ்யா, வடக்கு யுக்ரேனில் உள்ள செர்னீஹிவ் பகுதியிலிருந்தும், தலைநகர் கீயவில் இருந்தும் தனது படைகளை குறைப்பதாக கூறியுள்ளது.

இதற்கிடையில், நாற்பது லட்சம் பேர் யுக்ரேனை விட்டு வெளியேறியுள்ளனர். அந்த நாட்டில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர், புலம் பெயர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது.

இரு நாடுகளில் களத்தில் உள்ள பிபிசியின் நிருபர்களான ஓர்லா குரின்( கீயவ், யுக்ரேன்), ஜென்னி ஹில் (மாஸ்கோ, ரஷ்யா), இரு தரப்பிலுள்ள நிலவரத்தை மதிப்பிட்டு நாம் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.

யுக்ரேன் - ரஷ்யா போர்

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் ரஷ்யாவுக்கு கொடுக்கும் பதிலடி, தோல்வி அடைந்து வரும் இரு தரப்பு பேச்சுவார்த்தை போன்ற சூழலில், யுக்ரேனால் போரில் வெற்றி பெற முடியுமா?

ஓர்லா குரின்: யுக்ரேன் நாட்டின் ராணுவத்தைப் பொருத்தவரையில், இதுவரை நன்றாகவே களத்தில் செயல்பட்டு வருகிறது. பெரும் படைகளை கொண்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியில் சிறந்த ராணுவத்தை கொண்டுள்ள நாடாக விளங்கும் ரஷ்யாவை, யுக்ரேன் இத்தனை நாட்களாக ஆட்டம் காண வைத்து வருவது, ரஷ்ய அதிபர் புதினை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த கள நிலைமைகளுக்கு மத்தியில் ரஷ்ய படைகள் மிகவும் ஒழுக்கற்ற நிலையில் களத்தில் செயல்பட்டு வருவதும் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வாரம் கீயவுக்கு வெளியே நடந்த சண்டையில் யுக்ரேன் வென்றுள்ளதை நாம் இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம். கடந்த மாதம் நான்கு முறை கீயவுக்குள் முன்னேறிச் செல்ல ரஷ்யா முயற்சி செய்தது என்று யுக்ரேன் தெரிவித்தது. ஆனால், அது முடியவில்லை. ரஷ்யா அங்கு கைப்பற்றியதை விட தாக்குதல் நடத்தி அழித்த இடங்களே அதிகம். பெரும் பொருள் செலவில் தொடங்கிய இந்த போருக்கு, ரஷ்யாவுக்கு மிஞ்சியது அதன் ராணுவ வளங்களின் இழப்பு மட்டுமே.

தற்போதைய சூழலில் இந்தப் போரின் முடிவு எப்படி இருக்கும் என்று கூற முடியாது.

ஒரு நீண்ட கால போரின் தொடக்க நிலையாக இது இருக்கலாம். கிழக்கு யுக்ரேனின் டான்பாஸ் பகுதியில் கவனம் செலுத்துவோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. இந்தப் போரின் வெற்றி, தோல்வியைப் பொருத்தே புதினின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும்.

யுக்ரேன் - ரஷ்யா போர்

பட மூலாதாரம், Getty Images

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து படைகளை திரட்டுகிறது ரஷ்யா. தனது சொந்த படைகளின் திறன் மீது ரஷ்யாவுக்கு நம்பிக்கை இல்லையா?

ஜென்னி ஹில்: இது குறித்து ரஷ்ய அரசு ஒருபோதும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காது. ஆனால், சில ரஷ்ய துருப்புகள் தயாராக இல்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தன்னார்வலர்கள் 16,000 பேரை கொண்டுள்ளதாக ரஷ்ய அரசு தெரிவிக்கிறது. அதில் பலரும் கடந்த பத்தாண்டுகளில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை எதிர்கொண்டவர்கள். சில ரஷ்ய படைகளை விட அவர்கள் மிகவும் திறமையானவர்கள்.

யுக்ரேனியர்களை கொல்வதற்கோ தாக்குவதற்கோ அவர்கள் தயங்க மாட்டார்கள் என்று சிலர் நினைக்கின்றனர். மேலும் அவர்கள் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பெயர் பெற்றவர்கள்.

ரஷ்ய அரசுக்கு இவை எல்லாம் தெரிந்தே உள்ளது. அதனால்தான், மத்திய கிழக்கு வீரர்கள் குறித்து அந்நாடு பிரபலப்படுத்துக்கிறது. ஆனால், அவர்களை யுக்ரேன் போருக்கு அனுப்புவார்களா என்பது குறித்த அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இல்லை.

போருக்கு பிறகு வெடிக்காத வெடிகுண்டுகள்யுக்ரேனுக்கு எந்த அளவிற்கு ஒரு பிரச்னையாக இருக்கும்? இதன் விளைவாக பெருமளவிலான நிலபரப்புகளை பயன்படுத்தமுடியாத நிலைக்கு போகும் சாத்தியம் உள்ளதா?

ர்லா குரின்: வருந்தத்தக்க ஒன்றாக இதற்கு ஆம் என்றே பதில் சொல்ல முடியும்.. அடிக்கடி தாக்குதல் ஏற்படுவதால், போர்காலம் முடிந்த பிறகும் மனித உயிருக்கு ஆபத்து நீண்ட காலம் நீடிக்கும். வெடிக்காத வெடிகுண்டுகளால் மட்டுமல்ல; நிலக்கண்ணி வெடிகளாலும் ஆபத்து ஏற்படலாம். நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் அமைப்புகள் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள குண்டுகளை அகற்றும் வரை, பல ஆண்டுகளுக்கு அந்த குண்டுகளுக்கு மனிதர்கள் இரையாகலாம். மற்ற இடங்களில் போர்களுக்குப் பிறகு இந்த அமைப்புகள் செயல்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் பணி கடினமானதும் பெரும் நேரத்தை எடுத்துக்கொள்வதுமாக இருக்கும்.

படையெடுப்பு தொடங்குவதற்கு முன்பு, ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் யுக்ரேன் அரசுக்கும் இடையே ஏற்கனவே நாட்டின் கிழக்கு பகுதியில் போர் நடந்து கொண்டிருந்தது. இந்தப் போர் 2014இல் தொடங்கியது. தற்போது வடக்கே உள்ள பயணிகள் நகரான இர்பின்னில், கண்ணிவெடிகள் இருப்பதால் உயிருக்கு அதிக ஆபத்து இருப்பதாக யுக்ரேனிய ராணுவம் கூறுகிறது.

இந்த போர் காரணமாக, ரஷ்யர்கள் தங்களுடைய அதிபரை பதவியில் இருந்து தூக்கி எறிவார்களா அல்லது உள்நாட்டு அமைதியின்மையை ஏற்படுத்துவார்களா?

ஜென்னி ஹில்: அதற்கு வாய்ப்பு குறைவே. போரை எதிர்ப்பவர்கள் மீது ரஷ்ய அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கிறது. அப்படி நினைத்துச் செலய்பட்ட பல ரஷ்யர்கள் நாட்டை விட்டுத் தப்பி ஓடிவிட்டனர். கிட்டத்தட்ட தினமும் நடக்கும் போராட்டங்கள் குறைந்து விட்டன.

சுயதீன ரஷ்ய ஊடகங்கள் அனைத்தும் அங்கு முடக்கப்பட்டு விட்டன. ரஷ்யாவில் அரசு ஊடகங்களுக்கு மாற்றாக இருக்கும் ஊடகங்கள் மிகவும் குறைவே. இந்த போர் ரஷ்ய மொழி பேசும் மக்களைப் பாதுகாக்க மட்டுமே. ரஷ்ய துருப்புக்கள் யுக்ரேனுக்குள் சென்றுள்ளன என்று மட்டுமே அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீங்கள் அந்நாட்டு அரசு டிவியை மட்டுமே பார்த்தீர்கள் என்றால், இது உண்மையில் ரஷ்ய மொழி பேசுபவர்களையும் ரஷ்யாவையும் யுக்ரேனிடமிருந்து காப்பாற்றுவதற்கான ஒரு கெளரவமான மற்றும் அவசியமான நடவடிக்கை என்றே நீங்கள் ஒரு முடிவுக்கு வருவீர்கள்.

யுக்ரேன் அமெரிக்காவின் உதவியுடன் உயிரி ஆயுதங்களை உருவாக்குகிறது. பொருளாதாரத் தடைகள் விலைவாசி உயர்வுடன் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன என்றே அந்த ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

ரஷ்ய அரசு யுக்ரேனுக்கு ஆதரவான பிற நாடுகளின் செயல்பாட்டை மேற்கத்திய ஆக்கிரமிப்புக்கு மற்றொரு உதாரணமாகக் காட்டுகிறது. இந்தக் கட்டத்தில் எந்த ஒரு பொது அதிருப்தியையும் புரட்சியாக பார்ப்பது கடினம்.

யுக்ரேன் - ரஷ்யா போர்

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேனின் கட்டமைப்பு சேதத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு யார் நிதி கொடுப்பார்கள்?

ஒர்லா குரின்: இதன் பெரும் விலையாக மனித வளமே இருக்கும். அது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, சரிபார்க்கப்பட்ட குடிமக்களின் இறப்பு எண்ணிக்கை சுமார் 1,200 பேர். ஆனால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.

நாற்பது லட்சம் யுக்ரேனியர்கள் தப்பி ஓடி வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைய வேண்டியிருப்பதையும் நாம் இங்கே குறிப்பிட வேண்டும்.

தெற்கு யுக்ரேனில் உள்ள மேரியோபோல் நகரில் ஏற்பட்ட பாதிப்புகள் போல வேறு எங்கும் அத்தகைய பாதிப்புகள் ஏற்படவில்லை. அங்கு படையெடுப்புக்கு முன் பத்து நாட்களை நாங்கள் கழித்தோம்.

அந்த நேரத்தில் அது ஒரு பரபரப்பான துறைமுக நகரமாக இருந்தது, நவநாகரிக கஃபேக்கள், பரபரப்பான உணவகங்கள் மற்றும் பூங்காக்களில் குடும்பங்கள் உலா வந்தன. மேரியோபோல் நகரின் செயற்கைக்கோள் படங்கள் இப்போது பெரும்பாலும் எரிந்த பூமியைக் காட்டுகின்றன. 90% குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.

யுக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நகரத்தில் மட்டும் 5,000 பேர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. உண்மையான இறப்பு எண்ணிக்கை அதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, "ஒவ்வொரு வீடு, ஒவ்வொரு தெரு, ஒவ்வொரு நகரம் என எல்லாவற்றையும் மீட்டெடுப்போம்," என்று உறுதியளித்துள்ளார்.

"இழப்பு" என்ற வார்த்தையை ரஷ்யா கற்றுக் கொள்ள வேண்டும். போருக்கான முழு செலவையும் செலுத்த வேண்டும் என்று ஸெலன்ஸ்கி கூறுகிறார். ரஷ்யா செலுத்துமானால், கோட்பாட்டளவில், G7 நாடுகளால் முடக்கப்பட்ட வெளிநாட்டில் உள்ள ரஷ்ய சொத்துக்களை விற்று இழப்பை எதிர்கொள்ள பயன்படுத்தலாம் என்கிறார் ஸெலென்ஸ்கி.

யுக்ரேன் - ரஷ்யா போர்

பட மூலாதாரம், Getty Images

ஓர் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், ரஷ்யாவும் யுக்ரேனும் கிரைமீயா பகுதி மீது எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும்? மேலும், கடந்த மாதம் டான்பாஸ் நகரில் ஆக்கிரம்பு செய்த பகுதிகள் குறித்து என்ன நிலைப்பாடுகள் எடுக்கப்படும்?

ஜென்னி ஹில்: 2014ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைந்த கிரைமியாவை உலகம் ரஷ்ய நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று புதின் விரும்புவதை நாம் அறிவோம். ரஷ்ய அரசின் தற்போதைய திட்டம், கிழக்கு யுக்ரைனில் முழு டான்பாஸ் பகுதியையும் "விடுதலை" செய்வதற்காக அதன் முயற்சிகளை தீவிரப்படுத்துவதாகும் என்பதால், புதின் அப்பகுதியை ஆக்கிரமிக்கவே முயற்சி செய்வார் என்று நாம் ஊகிக்கலாம்.

யுக்ரேன் நாடு ராணுவம் சில பகுதிகளில் மிகவும் திறம்பட செயல்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். தங்கள் நகரங்களில் ஷெல் தாக்குதல் நடத்தும் ரஷ்ய பீரங்கிகளை அழிப்பதில் இருந்து ராணுவத்தை தடுப்பது எது?

ர்லா குரின்: சுயாதீன ராணுவ வல்லுநர்கள் இதற்கு ஒரு சாத்தியமான காரணியை சுட்டிக்காட்டுகின்றனர். கண்காணிக்கப்பட்ட வாகனங்களில் இருந்து ரஷ்யா பீரங்கிகளை சுடுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் சுட்டவுடன் அந்த இடத்திற்கு விரைவாக முன்னேறி செல்ல முடியும். அதனால் யுக்ரேன் அவர்களை இலக்காக வைப்பதை கடினமாக்குகிறது.

ரஷ்ய பீரங்கிகளை குறி வைப்பதாகக் கூறி சொந்த மக்களை கொல்லும் அபாயத்தை ஏற்படுத்த யுக்ரேன் விரும்பவில்லை. பொதுவாக, யுக்ரேன் ரஷ்ய அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உதவுவதற்காக சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுமாறு கோருகிறது. மேலும் இங்கு விமானம் பறக்க தடை விதிக்க வேண்டும் என்பதே நேட்டோவுக்கு வைக்கப்படும் கோரிக்கை. மேலும், ஒரு பெரும் போரில் சிக்கிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகள் அச்சம் கொள்வதால், நேட்டோ அவ்வாறு செய்யும் சாத்தியம் மிகவும் குறைவே.

ரஷ்யாவில் ஊடகங்கள் மீது பெரும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அதிபர் விதித்துள்ளார். ஆனால் யுக்ரேன் தெரிவிக்கும் செய்திகள் - துருப்புக்கள் மற்றும் பொதுமக்களின் இறப்பு எண்ணிக்கை - முற்றிலும் துல்லியதாக இருக்குமா?

ஒர்லா குய்ரின்:இரு தரப்பினரும் போர் களத்தில் சண்டையிடுவதை போல், ஒரு தகவல் போரையும் எதிர்கொள்கின்றனர். எந்தவொரு போரிலும், போரிடும் தரப்பினரின் தகவல் - பொதுமக்கள் மரணங்கள், கைப்பற்றப்பட்ட பிரதேசம் அல்லது எதிர் தரப்பு வீரர்கள் கொல்லப்பட்டது - போன்ற விஷயங்கள் எச்சரிக்கையுடன் அணுகவேண்டும் .

யுக்ரேன் இழப்புகளை சந்தித்ததை ஒப்புக்கொள்கிறது. மேலும் வெவ்வேறு நகரங்களில் உள்ள பிபிசி குழுக்கள் போரில் கொல்லப்பட்ட யுக்ரேனிய வீரர்களின் இறுதிச் சடங்குகளைப் பற்றி தெரிவிக்கின்றன. இழப்புகளின் முழு அளவும் பொதுவெளியில் பகிரப்படுகிறதா என்பதை இன்னும் நம்மால் அறிய கொள்ள முடியவில்லை.

போருக்கு எதிரான நிலைப்பாட்டை ரஷ்யர்கள் கொண்டிருக்கிறார்களாஅப்படி நினைப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? 

ஜென்னி ஹில்: ஆம் உள்ளனர். ஆனால், அத்தகைய கருத்து வேறுபாடு உண்மையில் எந்த அளவுக்கு பரவலாக உள்ளது என்பதை மதிப்பிடுவது கடினம்.

ரஷ்யா படையெடுப்பின் முதல் மூன்று வாரங்கள், கிட்டத்தட்ட தினமும் வீதிகளில் போராட்டங்களில் பங்கேற்றதற்காக 15,000 க்கும் அதிகமானோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.பெரும்பாலான சுயாதீன பத்திரிகையாளர்கள் மற்றும் படையெடுப்பை எதிர்க்கும் பல ரஷ்யர்கள், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி, துருக்கி, ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியா போன்ற இடங்களுக்குச் சென்றனர். ரஷ்ய அரசு அவர்களை 'துரோகிகள்' என்று அழைக்கிறது.

யுக்ரேனில் உள்ள ரஷ்ய துருப்புகளைப் பற்றி செய்தி சேகரிக்கும்போதும் அவர்களுடன் பேசும்போதும் ரஷ்ய படையினர் உங்களைத் தடுக்கிறார்களா? 

ஜென்னி ஹில்: தற்போது யுக்ரேனில் உள்ள எனது சக ஊழியர்கள் குறித்து என்னால் பதிலளிக்க முடியாது, ஆனால் ரஷ்யா அரசு ரஷ்யாவிற்கு தகவல் வருவதை கட்டுப்படுத்துகிறது. அதன் பாதுகாப்பு அமைச்சகம் அவ்வப்போது புதுப்பித்த செய்திகளை வெளியிடுகிறது. அதன் ராணுவ நடவடிக்கைகள் வெற்றி பெற்றதாக தொடர்ந்து செய்தி வெளியிடுகிறது.ரஷ்ய வீரர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. படைவீரர்களின் குடும்பங்கள் அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சுயாதீன அமைப்பு உள்ளது. ஆனால், தங்கள் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அதிகாரிகளிடமிருந்து தொடர்ந்து அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் சமீபத்தில் எங்களிடம் கூறியுள்ளனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :