யுக்ரேன் போர்: ரஷ்ய எதிர்ப்பாளர்களை வீடு புகுந்து தாக்கும் மர்ம நபர்கள்

தர்யா கெய்கினென் தனது வீட்டு வாசல் தொடர்ந்து 2 நாட்கள் சூறையாடப்பட்டதைக் கண்டார்

பட மூலாதாரம், DARYA KHEIKINEN

படக்குறிப்பு, தர்யா கெய்கினென் தனது வீட்டு வாசல் தொடர்ந்து 2 நாட்களாக இரவில் சேதப்படுத்தப்பட்டது.
    • எழுதியவர், பென் டொபையாஸ்
    • பதவி, பிபிசி செய்திகள்

யுக்ரேனில் ரஷ்யாவின் "சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு" எதிராகப் பேசும் ரஷ்ய ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்களின் வீடுகள், ரஷ்ய அதிபருக்கு ஆதரவானவர்களால் சூறையாடப்பட்டுள்ளன.

யுக்ரேனில் ரஷ்யா நடத்திக் கொண்டிருக்கும் படையெடுப்பின்ற்கான ரஷ்ய அதிபர் மாளிகையின் சார்புச் சின்னமான "Z" என்ற எழுத்தைக் குறிப்பிட்டு, செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வீட்டுக் கதவுகளில் "துரோகி" என்று எழுதப்பட்டுள்ளன.

இன்னும் பல உதாரணங்கள் இதைவிடத் தீவிரமானவை. முன்னணி ரஷ்ய செய்தியாளரின் வீட்டு வாசலில் யூதர்களுக்கு எதிரான வாக்கியங்களைக் கதவில் ஒட்டி வைத்து, வாசலில் பன்றியின் தலை ஒன்றை, விக் அணிவித்துப் போட்டிருந்தனர்.

மாஸ்கோவின் எகோ வானொலி நிலையத்தின் நீண்டகால ஆசிரியர் அலெக்ஸி வெனெடிக்டோவ், ரஷ்ய தணிக்கை அதிகரித்து ஒளிபரப்பை நிறுத்துவதற்கும் முன்பாக, "பாசிசத்தை தோற்கடித்த நாட்டில்" நடக்கும் யூத-விரோத தாக்குதலின் புகைப்படங்களைக் காட்டியிருந்தார்.

இத்தகைய காழ்ப்புணர்ச்சியானது, யுக்ரேனில் போருக்கு பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்தும் மக்களுக்கு ரஷ்யாவில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலின் அறிகுறிகளாகும்.

வீட்டு வாசலில் கொட்டப்பட்ட சாணம்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தனது வீட்டுக் கதவிலுள்ள சிறிய துவாரத்தின் வழியாக தர்யா கெய்கினென் வெளியே பார்த்தபோது, வீட்டின் வெளிப்புறத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டிருப்பதைக் கவனித்தார். அப்போதே என்ன நடந்துள்ளது என்பதை அவர் ஊகித்துவிட்டார்.

ஏனெனில் மற்ற ஆர்வலர்களுக்கும் இதேபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன.

அவருடைய கதவில் சிவப்பு நிறத்தில் "துரோகி" என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது. கூடவே, "தாய்நாட்டின் துரோகி இங்கு வாழ்கிறாள்" என்று எழுதப்பட்ட காகிதத் துண்டுகளும் அவர் வீட்டு வாசலில் ஒட்டப்பட்டிருந்தன. கதவைத் திறந்தபோது, அவருடைய வாசல் தரையில் சாணம் கொட்டப்பட்டிருந்தது.

தர்யா கெய்கினென் தனது வீட்டு வாசலில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக சாணக் குவியலைக் கண்டார்

பட மூலாதாரம், DARYA KHEIKINEN

படக்குறிப்பு, தர்யா கெய்கினென் தனது வீட்டு வாசலில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக சாணக் குவியலைக் கண்டார்

"என்னுடைய போர்-எதிர்ப்பு அறிக்கைகள் மற்றும் எதிர்ப்புக் கருத்துகளால் இது நடந்திருக்கலாம்," என்று பிரபல அரசியல் ஆர்வலரான கெய்கினென் பிபிசியிடம் கூறினார். அதேநேரத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள மேலும் 3 ஆர்வலர்களுக்கும் இது நடந்துள்ளதாகவும் கூறினார்.

மறுநாள் காலையிலும் அது தொடர்ந்தது. ஆனால், இந்த முறை கெய்கினென் வீட்டில் மட்டுமே நடந்தது.

"கதவு முழுக்க பச்சை சாயம் பூசப்பட்டிருந்தது. பூட்டு முழுக்க நுரை மூடியிருந்தது. 'நாசிசத்தை நாங்கள் மன்னிக்க மாட்டோம்,' மற்றும் 'ஃபின்னிஷ் நாஜி இங்கு வாழ்கிறார்' என்று எழுதப்பட்ட பலகைகள் இருந்தன," என்று அவர் கூறுகிறார். அவருடைய குடும்பப் பெயர் ஃபின்னிஷ் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

யுக்ரேன் அரசாங்கம் நாஜிகளால் நடத்தப்படுகிறது என்றும் ரஷ்ய ராணுவ நடவடிக்கை நாசிசத்தை ஒழிக்க அவசியம் என்றும் ரஷ்ய அதிபர் மாளிகை பரப்பிய தவறான கூற்றுகளை இந்தச் செய்திகள் பிரதிபலிக்கின்றன.

தாக்குதலுக்கு யார் காரணம் என்று கெய்கினெனுக்கு தெரியாது. ஆனால், தனக்குத் தெரிந்தவரை அவருடைய முகவரியை வைத்திருப்பவர்கள் அவருடைய பெற்றோர் மற்றும் காவல்துறை மட்டுமே என்கிறார்.

"அது என்னை பயமுறுத்தவில்லை. உண்மையில், அதை நான் வேடிக்கையாகப் பார்க்கிறேன். ஏதோவொரு முட்டாள், 11-வது மாடிக்கு சாணம் நிறைந்த பையை, அதுவும் தொடர்ந்து இரண்டு இரவுகளாக, இழுத்துச் செல்வதை கற்பனை செய்து பாருங்கள்," என்று அவர் கூறுகிறார்.

'கேவலமானவர்கள், துரோகிகள்'

யுக்ரேனில் ரஷ்யாவின் போர் தொடங்கியதில் இருந்து, அதை எதிர்ப்பவர்களின் வாழ்க்கை பெரியளவில் கடினமாகிவிட்டது. போர் பற்றிய "போலி" தகவல்களைப் பரப்பும் நபர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை ரஷ்ய அரசு நிறைவேற்றியது.

டிமிட்ரி ஐவனோவ் தனது வீட்டு வாசலில், "தாய்நாட்டிற்கு துரோகம் செய்யாதீர்கள், டிமா" என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறினார்

பட மூலாதாரம், DMITRY IVANOV

படக்குறிப்பு, டிமிட்ரி ஐவனோவ் தனது வீட்டு வாசலில், "தாய்நாட்டிற்கு துரோகம் செய்யாதீர்கள், டிமா" என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறினார்

விளாதிமிர் புதினும் மற்ற அரசியல்வாதிகளும் போருக்கு எதிரான எந்த எதிர்ப்பையும் நாட்டிற்குச் செய்யும் துரோகம் என்று சித்தரித்துள்ளனர்.

"எந்தவொரு மக்களும், குறிப்பாக ரஷ்ய மக்கள் உண்மையான தேச பக்தர்களை கேவலமானவர்கள் மற்றும் துரோகிகளிடம் இருந்து எப்போதும் வேறுபடுத்திப் பார்க்க முடியும்," என்று ரஷ்ய அதிபர் மார்ச் 16-ஆம் தேதி உரையில் கூறினார். அதோடு, மேற்குலகம் கட்டுரையாளர்கள் மூலமாக உள்நாட்டு மோதலைத் தூண்டி ரஷ்யாவை அழிக்க முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாணவ சமூக ஆர்வலரான டிமிட்ரி ஐவனோவ், 10,000 பேர் பின்தொடரும் அவருடைய டெலிக்ராம் சேனலில் போருக்கு எதிரான கருத்துகளைப் பேசி வருபவர். அதிபரின் மேற்கூறிய உரை நிகழ்ந்த அடுத்த சில மணிநேரங்களில் அவருடைய தாயாரிடம் இருந்து, அவர்களுடைய வீட்டுக் கதவில் எழுதப்பட்டிருக்கும் வசனங்களைப் பார்த்தாரா இல்லையா என்று கேட்டு அவருக்கு அழைப்பு வந்தது.

அதில், "தாய்நாட்டிற்கு துரோகம் செய்யாதீர்கள், டிமா" என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் பிபிசியிடம் கூறினார். யுக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் தொடர்பான செய்தியைத் தெளிவுபடுத்தும் 3 பெரிய "Z" எழுத்துகளும் இருந்தன.

அன்று மாலை, மாஸ்கோவில் மேலும் 3 சமூக ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்களின் கதவுகளிலும் இது நடந்திருந்தது.

"பக்கத்து வீடுகளில் வசிப்போர் அதைக் கண்டு ஆச்சர்யப்படவில்லை," என்கிறார் ஐவனோவ். ஏனெனில், அவருடைய அரசியல் கருத்துகள் ஒன்றும் ரகசியமானவை அல்ல. போராட்டங்களில் கலந்து கொள்வதால், ஒவ்வொரு முறையும் காவல்துறையினர் அவருடைய வீட்டு வாசலுக்கு வந்து அவரை எச்சரித்துச் செல்வது வழக்கம்.

"காவல்துறையின் நடவடிக்கைகள் என்னை மிகவும் அச்சுறுத்துகின்றன. மக்களின் வாழ்க்கையை அழிக்கும் வளங்களும் சக்தியும் அவர்களிடம் உள்ளன. காழ்ப்புணர்ச்சியைப் பற்றி காவல்துறையில் புகாரளிக்க வேண்டுமென்று அவர் முடிவெடுத்தார். ஏனெனில், அவர்களுடைய தவறான பக்கத்தைப் பார்க்க அவர் விரும்பவில்லை என்கிறார்.

கலினின்க்ராட் பகுதியில் 'துரோகி' இங்கு வாழ்வதாக கதவில் குறிப்பிட்டிருக்கும் வாசகம்
படக்குறிப்பு, கலினின்க்ராட் பகுதியில் 'துரோகி' இங்கு வாழ்வதாக கதவில் குறிப்பிட்டிருக்கும் வாசகம்

இதுபோன்ற சம்பவங்கள் சிறியனவாக தெரியலாம்

இதுபோன்ற சம்பவங்கள் சிறியதாகத் தெரியலாம். ஆனால், போரை ஆதரிக்கும் அல்லது அதை எதிர்க்கும் ஒருவரை துரோகி என்று முத்திரை குத்தும் இவர்கள் இன்றைய அரசியல் சூழலின் விளைபொருளாகும்.

யுக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு, வேலையிழப்பு, குற்றவியல் வழக்கு தொடரப்படுவது எனப் பரந்த அளவிலான விளைவுகள் நிகழ்கின்றன.

ஆனால், ஐவனோவ், ஆபத்து இருந்தபோதிலும், தனது எதிர்ப்பு தொடரும் என்று கூறுகிறார்.

மேலும், "15 ஆண்டுகள் சிறைவாசம் என்ற அச்சுறுத்தல் என்னைக் கவலையடையச் செய்கிறது. ஆனால், போர் மிகவும் பயங்கரமானது. முற்றிலும் அழிவுகரமான, முட்டாள்தனமான கொடுமையை, நம் பெயரால் நம் நாடு நடத்துகிறது. அதுதான் பெரிய அதிர்ச்சி," என்கிறார்.

காணொளிக் குறிப்பு, திக் திக் இரவுகள்; பதறும் உறவுகள்: யுக்ரேனில் நடப்பது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: