ரஷ்யா – யுக்ரேன் மோதல்: எரிந்துபோன பீரங்கிகளின் மிச்சமும் பிணங்களும் - யுக்ரேன் நகர வீதிகளில் அழிவின் சாட்சிகள்

யுக்ரேன் சந்திக்கும் அழிவுகளுக்குச் சான்றாக விளங்கும் புச்சா நகரம்

பட மூலாதாரம், BBC/LEE DURANT

படக்குறிப்பு, ரஷ்ய படையின் வாகனங்கள் சிதைந்து கிடக்கும் புச்சா நகரத்தின் புறநகர் தெரு
    • எழுதியவர், ஜெர்மி போவன்
    • பதவி, பிபிசி செய்திகள், புச்சா

ரஷ்யா கீயவை சுற்றி வளைத்து, அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அரசைக் கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சியில் உருவான முதல் கல்லறைகளில் ஒன்றாக, புச்சாவின் புறநகர் பகுதியிலுள்ள ஒரு மரங்களடர்ந்த சாலை மாறியது.

பிப்ரவரி 24-ஆம் தேதியன்று ரஷ்ய படைகள் யுக்ரேனுக்குள் நுழைந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு, யுக்ரேன் படைகள் புச்சா நகரத்தின் வழியாக கீயவ் நகருக்குள் நுழைய முயன்ற ரஷ்ய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களின் நீண்ட வரிசையை அழித்தனர்.

பல யுக்ரேனிய படைகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில், ரஷ்ய படைகளின் முன்னேற்றம் தடுக்கப்பட்டு, அந்த வாகனத் தொடர்வரிசை அழிக்கப்பட்டது.

ரஷ்ய அதிபர் மாளிகையின் முடிவுகளின் ஒரு பகுதியாக, கிழக்கு யுக்ரேனில் நடத்தப்படும் போரில் கவனம் செலுத்தத் தொடங்கியதால், வெள்ளிக்கிழமை அன்று கடைசி ரஷ்ய வீரர்களும் புச்சாவிலிருந்து வெளியேறினார்கள் இதனால் பிபிசி குழுவால் புச்சாவுக்குள் செல்ல முடிந்தது.

யுக்ரேன் படைகளின் கடுமையான எதிர்ப்பு

ரஷ்யா, மத்திய யுக்ரேனில் அதன் போர் இலக்குகளை அடைந்துவிட்டதாகவும் அந்த இலக்குகளில் ஒன்றாக அவர்கள் கீயவை கைப்பற்றுவதை ஒருபோதும் சேர்க்கவில்லை என்றும் ஆதாரமோ நம்பகத்தன்மையோ இல்லாத வகையில், கூறியது.

உண்மை என்னவெனில், எதிர்பாராத விதமாக கடுமையான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட யுக்ரேனிய எதிர்ப்பு, ரஷ்ய படைகளை தலைநகருக்குள் நுழைய விடவில்லை. மேலும், அந்த புறநகர் தெருவில் வாகனத் தொடர்வரிசை அழிக்கப்பட்ட இடத்தில் துருப்பிடித்துக் கிடக்கும் போர் வாகனங்கள் அதற்கான சான்றுகளில் ஒன்றாக விளங்குகின்றன.

போர் தொடங்கி இரண்டு, மூன்று வாரங்கள் கடந்தபோது ரஷ்ய படைகள் வேகத்தை இழந்தன. புச்சாவின் தெருவில் அதற்கான காரணத்தை நம்மால் பார்க்க முடியும்.

ரஷ்யாவின் வான்வழிப் படைகளின் உயரடுக்கு படைகள் விமானம் சுமந்து செல்லக்கூடிய வகையில் இருக்கும் இலகுரக கவச வாகனங்களில் நகரத்திற்குள் நுழைந்தன.

படையெடுப்பின் முதல் நாளில் ஹெலிகாப்டர் மூலம் தரையிறக்கப்பட்ட ரஷ்ய பாராசூட் படைகளால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட, சில மைல்கள் தொலைவிலுள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்திலிருந்து அவர்கள் வந்தனர். அப்போதும்கூட, யுக்ரேன் படைகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேர்ந்தது.

கீயவ் செல்லும் வழியில் புச்சா வழியாக வாகனங்களின் அந்த நீண்ட வரிசை நகர்ந்தபோது, அவர்கள் கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர்.

யுக்ரேன் சந்திக்கும் அழிவுகளுக்குச் சான்றாக விளங்கும் புச்சா நகரம்

பட மூலாதாரம், BBC/KATHY LONG

படக்குறிப்பு, உள்ளூர் மக்கள், ரொட்டி சாப்பிட்டு நீண்ட நாட்களாகிவிட்டதாகக் கூறினார்கள்

அந்தச் சாலை குறுகியதாகவும் நேரானதாகவும் இருந்ததால், யுக்ரேன் படைகள் பதுங்கியிருந்து தாக்குவதற்குச் சரியான இடமாக அமைந்தது. துருக்கியில் இருந்து வாங்கப்பட்ட பேரேக்டர் ஆளில்லா தாக்குதல் விமானங்கள் மூலமாக யுக்ரேன் படையினர், வாகனத் தொடர் வரிசை மீது தாக்குதல் நடத்தியதாக சாட்சிகள் தெரிவித்தன. யுக்ரேனிய பிராந்திய பாதுகாப்பு தன்னார்வலர்களும் அந்தப் பகுதியில் இருந்ததாக அங்கிருந்தவர்கள் கூறினர்.

தப்பியோடிய ரஷ்ய படையின் இளைஞர்கள்

யுக்ரேன் படையினர், ரஷ்ய படைகளின் முன்னணி வாகனங்களையும் அதற்குப் பின்னால் வந்த வாகனங்களையும் தாக்கியதோடு, மற்றவர்களைச் சிறையில் அடைத்தார்கள். 30 மிமீ பீரங்கி குண்டுகளின் பெல்டுகள் புற்களின் மீது கிடக்கின்றன. மேலும் பல ஆபத்தான மற்றும் சேதமடைந்த கைவிடப்பட்ட ஆயுதங்களின் துண்டுகளும் கிடக்கின்றன.

ரஷ்ய படைகளில் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இளைஞர்கள், அந்தச் சண்டையில் பிடிபட்டபோது யுக்ரேனிய படைகளிடம் தங்களை ஒப்படைக்க வேண்டாமென்று கெஞ்சியதாகவும் பிறகு அங்கிருந்து அவர்கள் ஓடிவிட்டதாகவும் உள்ளூர் மக்கள் கூறினார்கள். 'அங்கிள் ஹ்ரிஷா' என்று தன்னை அழைத்துக் கொள்ளும் 70 வயதான ஒருவர், "நான் அவர்களுக்காக கவலைப்பட்டேன். 18 முதல் 20 வயதுடைய இளைஞர்களாக அவர்கள் இருந்தனர். அடுத்து வரவுள்ள ஒரு முழு வாழ்க்கையும் அவர்களுக்கு மிச்சம் இருந்தது," என்கிறார்.

புச்சாவில் இருந்து வெளியேறத் தயாரான ரஷ்ய படைகள் மீது அவ்வாறு யாரும் பரிதாபம் காட்டவில்லை என்பதைப் போல் தெரிகிறது. யுக்ரேனிய படைகள் நகரத்திற்குள் நுழைந்தபோது, குறைந்தபட்சம் 20 பேர் தெருவில் உயிரிழந்து கிடந்தனர். அவர்களில் சிலருடைய கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. 280 பேரை பெரிய புதைகுழிகளில் புதைத்ததாக அந்த நகரத்தின் மேயர் கூறினார்.

யுக்ரேன் சந்திக்கும் அழிவுகளுக்குச் சான்றாக விளங்கும் புச்சா நகரம்

பட மூலாதாரம், BBC/KATHY LONG

படக்குறிப்பு, ரஷ்ய படைகள், காங்க்ரீட் லின்டெல்கள் மற்றும் கதவுக்கான தூண்களையும் அகற்றியதன் மூலம் கதவுகளைத் திறந்தனர்

உடைந்து நொறுங்கிய யுக்ரேனின் கனவு விமானம்

அங்கேயே தங்கியிருந்த சில பொதுமக்கள், எரிவாயு, மின்சாரம், தண்ணீர் விநியோகம் அனைத்தும் தடைபட்டதால், அவர்களின் க்ரூஷ்சேவ் காலத்து குடியிருப்புகளுக்கு வெளியே விறகு வைத்து தீ மூட்டி சமைத்தார்கள். அந்த மக்கள் ரஷ்ய படைகளைத் தவிர்க்க முயன்றதாகக் கூறினார்கள்.

தன்னார்வலர்கள் மேற்கு யுக்ரேனிலுள்ள லுவீவ் மற்றும் புவியியல் ரீதியாக போரில் இருந்து வெகு தொலைவிலுள்ள நாடுகளில் இருந்து பொருட்களைக் கொண்டு வருகிறார்கள்.

"38 நாட்களில் நாங்கள் சாப்பிட்ட முதல் ரொட்டி இது," என்று மரியா என்ற பெண், ரொட்டிகள் இருந்த ஒரு நெகிழிப் பையைப் பார்த்தபடி கூறினார். அவருடைய மகள் லாரிசா சோவியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்தை எனக்குச் சுற்றிக் காட்டினார்.

பாதுகாப்பான பகுதிகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றவர்களில் பலர் பாதுகாப்புக் கதவுகளைப் பூட்டியிருந்தனர். ஆனால், ரஷ்ய படைகள், காங்க்ரீட் லின்டெல்கள் மற்றும் கதவுக்கான தூண்களையும் அகற்றியதன் மூலம் அந்தக் கதவுகளைத் திறந்தனர்.

யுக்ரேன் சந்திக்கும் அழிவுகளுக்குச் சான்றாக விளங்கும் புச்சா நகரம்

பட மூலாதாரம், BBC/JEREMY BOWEN

படக்குறிப்பு, யுக்ரேனிய மொழியில் கனவு(மிரியா) எனப் பெயரிடப்பட்ட விமானம்

சில மைல்கள் தொலைவில், இந்தப் பேரழிவின் தொடர்ச்சி ஹோஸ்டோமல் விமான நிலையம் வரை நீளுகிறது. ரஷ்ய வான்வழி படைகள் அதை கீயவுக்குள் நுழைவதற்கான தளமாகப் பயன்படுத்த முயன்றன.

உலகின் மிகப்பெரிய போக்குவரத்து விமானம் தொடக்கத்திலேயே அழிக்கப்பட்டது. அதற்காகக் கட்டப்பட்ட பிரமாண்டமான மேற்கூரை துப்பாக்கிக் குண்டுகள் தாக்கியதன் அடையாளமாக துளைகளால் நிறைந்திருந்தது. யுக்ரேனிய மொழியில் கனவு(மிரியா) எனப் பெயரிடப்பட்ட அந்த விமானம், உடைந்த பின்புறம், பெரும்பகுதி உறுகிய நிலையில், உள்ளன.

உலகமெங்கும், பெரிய திட்டங்களை உருவாக்கும் யுக்ரேனின் திறனுக்கான அடையாளமாக, பெரியளவிலான தேசிய பெருமையோடு இந்த விமானத்தில் முதலீடு செய்யப்பட்டது. அந்த விமானம் தற்போது, யுக்ரேனுக்குள் என்ன நடக்கிறது என்பதற்கான உவமையாக விளங்குகிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: