தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: “பாஜக ஆட்சிக்கு எதிராக மாநில கட்சிகள் ஒன்றுபட வேண்டும்”

பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகள் ஒன்றுபட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

(இன்று (ஏப்ரல் 2) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்)

பாஜக ஆட்சிக்கு எதிராக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் மாநில கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக, 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியில், மூன்று நாட்கள் பயணமாக டெல்லி வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்துள்ள பேட்டியில், "தேசிய அரசியலில் திமுக எப்போதும் முக்கியப் பங்காற்றி வருகிறது. பிரதமர், குடியரசுத் தலைவராக யார் இருக்க வேண்டும் என தேர்வு செய்வதில் திமுக முக்கியக் கட்சியாக உள்ளது. நாடாளுமன்றத்திலும் திமுக மூன்றாவது பெரிய எதிர்க்கட்சியாக உள்ளது.

மாநில அரசியலுக்கும் தேசிய அரசியலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. மாநில அரசியலை ஒருங்கிணைத்தது தான் தேசிய அரசியல். ஆகையால் இரண்டையும் பிரிக்கக் கூடாது.

பாஜகவுக்கு எதிராகவுள்ள அனைத்து மாநில கட்சிகளும் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதுபோன்ற மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை ஓரம் கட்டியுள்ளன.

தேர்தல் நேரத்தில் மட்டும் கூட்டணி அமைக்காமல், தமிழகத்தில் கொள்கைக் கூட்டணி அமைத்து தேர்தலில் இடங்களைப் பங்கிட்டு சந்திப்பதுவே எங்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

இதேபோல், காங்கிரஸ் கட்சியும் மாநில கட்சிகளுடன் தேசிய அளவில் நட்புறவை மேம்படுத்த வேண்டும். இதற்காக அனைத்து மாநிலங்களிலும் குழுக்களை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை வலியுறுத்துகிறேன்" என்று ஸ்டாலின் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.

பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞருக்கு நூதன தண்டனை

சென்னை உயர் நீதிமன்றம்

பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் ஒருவருக்கு, ஒரு மாத காலம் மருத்துவமனையில் வார்டு பாயாகப் பணியாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், "எல் பிரவீன் என்ற இளைஞர் மார்ச் 21 அன்று ஸ்டான்லி மருத்துவமனை அருகே பொது சாலையில் அங்கீகரிக்கப்படாத பைக் ரேஸில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

பிரவீனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 'மனுதாரர் ஸ்டான்லி மருத்துவமனை ட்ராமா (Trauma) வார்டில் 30 நாட்களுக்கு தினமும் ஆஜராகி, காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, நோயாளிகளை கவனிக்க வார்டு பாய்களுக்கு அவர் உதவ வேண்டும்.

மேலும், மனுதாரர் தனது அனுபவத்தைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒரு பக்க அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். அவருடைய தண்டனை சேவையின் முடிவில், இந்த அறிக்கை ஜார்ஜ் டவுனில் உள்ள மூன்றாவது பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பப்படும்.

பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவினரால் திரைப்பட ஸ்டுடியோ கேமரா மேன் பிரவீன் கைது செய்யப்பட்டார்," எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் 1 கோடி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப யோகி திட்டம்

உத்தர பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்க ஏப்ரல் 4 முதல், 'பள்ளிகளுக்கு செல்லுங்கள்' திட்டம் தொடங்கப்பட உள்ளதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், Getty Images

அது தொடர்பான செய்தியில், "பாஜக ஆட்சி தொடரும் உத்தர பிரதேச மாநிலத்தில் இன்னும் கல்வியறிவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்காக அங்கு ஆளும் அரசுகள் எடுத்த பல முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. குறிப்பாக, உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு பள்ளிகளில் தொடர்ந்து பெரிய மாற்றங்கள் செய்ய பாஜக அரசு முயன்றது. இந்நிலையில், அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் மீண்டும் அரசு பள்ளிகள் மீதான கவனத்தைக் கையில் எடுத்துள்ளார்.

இந்தமுறை பள்ளிகளின் மீது கவனம் செலுத்த அவற்றை தத்தெடுக்கும்படி, தனது எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாற்றங்கள் செய்ய பெருநிறுவனங்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்நிறுவனங்கள் உதவியால் மாநிலத்தின் 1.58 லட்சம் அரசு தொடக்கப்பள்ளிகளை நவீனப்படுத்தவும், பள்ளிகளுக்கு குழந்தைகளைச் சேர்க்க, 'பள்ளிகளுக்கு செல்லுங்கள்' திட்டத்தை அமலாக்க ஆசிரியர்களும் வீடுதோறும் செல்ல வேண்டும் எனவும் இப்பணியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களும் உதவ முன்வரவேண்டும் எனவும் முதல்வர் யோகி கோரியுள்ளார்.

கடந்த 2016-17ம் ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.56 கோடியாக இருந்தது. மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்ட முதல்வர் யோகி எடுத்த முயற்சியால், மாணவர்கள் சேர்க்கை 1.70 கோடி என்றானது. இதை மேலும் உயர்த்தும்படியும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக ஒரு கோடி மாணவர்களைச் சேர்க்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது," எனக் கூறுகிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: