கோவை: அணியாகப் போட்டியிட்டு திமுக, அதிமுகவை வீழ்த்தி பேரூராட்சியை கைப்பற்றிய சுயேச்சைகள்

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திமுக, அதிமுக என்கிற இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி கோவை மாவட்டம் மோப்பேரிபாளையம் பேரூராட்சியை சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மாநகராட்சியும் ஏழு நகராட்சிகளையும் 31 பேரூராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக ஒரு பேரூராட்சியை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
கோவை மாவட்டத்தில் திமுகவின் எழுச்சியும் அதிமுகவின் வீழ்ச்சியும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள மோப்பேரிபாளையம் பேரூராட்சி தனித்துவமான தேர்தல் முடிவுகளைத் தந்துள்ளது.
மோப்பேரிபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளில் சுயேட்சைகளும் 5 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சுயேட்சைகள் அனைவரும் ஒரே அணியாக ஒரே சின்னத்தில் போட்டியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மோப்பேரிபாளையம் பேரூராட்சியின் முன்னாள் சுயேச்சை கவுன்சிலர் வாகை சிவக்குமார், "மோப்பேரிபாளையம் அதிமுக வலுவாக உள்ள இடம். கோவையிலேயே மோப்பேரிபாளையம் பேரூராட்சி தான் மிகவும் ஊழல் நிறைந்தது. இந்தப் பேரூராட்சியில் கடந்த மூன்று முறையும் அதிமுக தான் பேரூராட்சி தலைவர் பகுதியை வகித்துள்ளது. அப்போது வீடு வழங்கும் திட்டத்தில் பெரும் அளவில் முறைகேடு நடந்துள்ளது," என்கிறார்.
மேலும் இது பற்றிக் கூறும் அவர், "மக்கள் வரிப் பணத்தில் ரூ.3 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளது. அது தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது," என்றார்.

"மோப்பேரிபாளையத்திற்கு உட்பட்ட வாகராயன்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்குவது தொடங்கி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், வாகராயன்பாளையம் கூட்டுறவு சங்கத்திலும் நடைபெற்ற தேர்தலிலும் முறைகேடு நடைபெற்றதாகவும் புகார் அளித்து அந்தக் கூட்டுறவு சங்கத்தின் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்தப் பேரூராட்சியைச் சேர்ந்த மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இதனால் நாங்களே சுயேச்சைகளாக போட்டியிட முடிவு செய்தோம். சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் மாற்றத்திற்கான அணி என்கிற அணியை உருவாக்கி ஒரே அணியாக 14 வார்டுகளிலும் போட்டியிட்டோம்.
பேரூராட்சியின் 14வது வார்டுகளிலும் தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிட்டோம். 14-ல் 9 வார்டுகளில் வென்று எங்கள் அணி, தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. இன்னொரு தொகுதியில் வேறொரு சுயேட்சை வேட்பாளர் வென்றுள்ளார். திமுக ஐந்து இடங்களில் வென்றுள்ளது. அதிமுக அனைத்து வார்டுகளிலும் தோல்வி அடைந்துள்ளது. அதிமுகவின் முன்னாள் பேரூராட்சி தலைவர் தெப்பீஸ்வரன் தோல்வியடைந்துள்ளார்.
திமுக மற்றும் அதிமுக ஒரு சில வார்டுகளில் டெபாசிட்டையும் இழந்துள்ளன. மக்களுக்கு இந்தக் கட்சிகள் மீது இருந்த அதிருப்திதான் இதற்கு காரணம். திமுகவால் கூட இங்கு பெரும்பான்மை பெற முடியவில்லை. சுயேச்சை வேட்பாளர்களை கட்சியில் சேர்க்க முயற்சி நடைபெற்றாலும் நாங்கள் தனியாகவே எங்கள் அணியில் தலைவர் பதவியை பெற உள்ளோம்" என்றார் சிவக்குமார்.

பிற செய்திகள்:
- களர்ப்பாலை நெல் ரகத்தை காப்பாற்றும் நாகப்பாடி விவசாயிகள்: களர் நிலங்களுக்கு தீர்வா?
- அஜித்தின் 'வலிமை' - சினிமா விமர்சனம்
- யுக்ரேன் பதற்றம்: புதினின் முடிவால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்?
- தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிர அமைச்சர் கைது
- 'மரணம் ஏற்படும் கடைசி நொடியில் வாழ்க்கையின் பிளாஷ்பேக் தெரியும்'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













