தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் அரசியல் கொலைகள் அதிகரிப்பா? என்ன சொல்கிறது ஆளும் கட்சி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். `தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். இந்த ஆட்சியிலும் அது விதிவிலக்கல்ல' என அ.தி.மு.க குற்றம் சுமத்துகிறது. `முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருப்பதால்தான் ஆளும்கட்சியினர் தவறு செய்தால் கூட கைது செய்யப்படுகிறார்கள்' என்கிறது தி.மு.க. என்ன நடக்கிறது?
சம்பவம் 1:
சென்னை மடிப்பாக்கத்தில் தி.மு.கவின் 188ஆவது வட்டச் செயலாளராக இருந்த செல்வம், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இரவில் ராஜாஜி நகர் பிரதான சாலையில் தனது ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது எட்டு பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் நடந்த இந்த படுகொலை பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த ஐந்து பேர் விக்ரவாண்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இந்த கொலையின் பின்புலத்தில் முக்கிய சந்தேக நபராக முருகேசன் என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த கொலைக்காக தங்களுக்குத் தலா 2 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும் என்ன காரணம் என்பது தெரியாது எனவும் பிடிபட்டவர்கள் கூறியுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.
சம்பவம் 2:
சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள காந்தி நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தி.மு.கவை சேர்ந்த பரமசிவம் என்பவரின் உருவப்படத்தைத் திறப்பதற்காக அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்றுள்ளார். இதற்காக உள்ளூர் கட்சிக்காரர்களும் திரண்டு வந்துள்ளனர். உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் சேகர்பாபு சென்ற 10 நிமிடங்களில் தி.மு.கவை சேர்ந்த மதன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றுள்ளனர்.

`இந்த படுகொலைக்குக் காரணம் தேர்தல் பகையா.. பெண் விவகாரமா?' என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். `கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் அ.தி.மு.கவில் இருந்து விலகி தி.மு.கவிவ் சேர்ந்தார் மதன். எனவே படுகொலைக்கு அரசியல் பகை காரணமாக இருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறோம்' என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.கவினர்.
சம்பவம் 3:
பிப்ரவரி 19ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலின்போது சேப்பாக்கம் தொகுதியில் உள்ள பகுதிச் செயலாளர் ஒருவர், இஸ்லாமிய பள்ளி ஒன்றில் கள்ள வாக்கு செலுத்தச் சென்றபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் காணொளி வைரலானது. `இது எம்.எல்.ஏ (உதயநிதி) தொகுதி. இங்கு வாக்குகள் குறைந்தால் எங்களுக்குத்தான் சிரமம். எல்லா இடத்திலும் கள்ள ஓட்டு போட்டுவிட்டேன். இங்குதான் போட முடியவில்லை. இப்படித் தடுத்தால் ஆட்களை இறக்கி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவேன்' எனக் கூறி அவர் மிரட்டும் காட்சிகளும் வெளியாயின. அதேபோல், 115ஆவது வார்டிலும் தி.மு.க வேட்பாளரின் கணவர், காவல்துறையை அச்சுறுத்தும் காணொளி வெளியானது.
இது தொடர்பாக, சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ` கோவை, சென்னை ஆகிய மாநகராட்சிகளில் அதிக இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. அதிலும், சென்னை மாநகராட்சியில் உள்ள பல பூத்துகளில் கள்ள ஓட்டுக்களை தி.மு.கவினர் பதிவு செய்துள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக இப்படி செயல்பட்டுள்ளனர். இது நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. திருவல்லிக்கேணி தொகுதியில் 114 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போடுவதற்கு தி.மு.கவினர் முயற்சித்துள்ளனர். இதனைப் பலரும் தங்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். அப்போது அதிகாரிகளையும் தி.மு.கவினர் மிரட்டியுள்ளனர்' என்றார்.
இது குறித்து தேர்தல் ஆணையத்திலும் அ.தி.மு.கவினர் புகார் கொடுத்துள்ளனர்.
200 நாள்களில் 587 கொலைகள்

பட மூலாதாரம், Getty Images
- மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் அரசு வழக்கறிஞரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஐ.எஸ்.இன்பதுரை, ``கடந்த டிசம்பர் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து நாங்கள் புகார் மனு ஒன்றை கொடுத்தோம். அதில், தி.மு.க ஆட்சிக்கு வந்த 200 நாள்களில் 587 கொலைகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தோம். அந்த சந்திப்பில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக உள்ளதாகக் கூறி சில சம்பவங்களை விவரித்தோம்'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய இன்பதுரை, ``தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரியை ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கொன்ற சம்பவமும் நடந்தது. இங்கு காவல்துறைக்கே பாதுகாப்பில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போலீஸாரை மிரட்டி கள்ள வாக்கு செலுத்தியுள்ளனர். ஒரு பெண் காவலரை மிரட்டி அவரது செல்போனை பறித்துள்ளனர். சேப்பாக்கத்தில் பகுதிச் செயலாளர் ஒருவர், `சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பேன்' என மிரட்டுகிறார். திருவான்மியூரில் மின்னணு வாக்கு இயந்திரத்தை உடைத்துவிட்டனர்,'' என்றார்.

காவல்துறை யார் கட்டுப்பாட்டில்?
பொதுவாக தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். இந்த ஆட்சியிலும் அது விதிவிலக்கில்லை. இதையெல்லாம் கவனித்தால் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் ஆட்சி இல்லை என்பது தெளிவாகிறது. அவர் ஒரு பொம்மை முதல்வராக செயல்படுகிறார். காலையில் காபி குடித்ததும் சைக்கிள் ஓட்டுகிறார், பின்னர் வீட்டுக்குச் சென்று விடுகிறார். மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரியுமா என்பதே சந்தேகமாக உள்ளது'' என்கிறார் இன்பதுரை.
``டி.ஜி.பி வெளியிட்ட சுற்றறிக்கையில், `பள்ளி, கல்லூரி ஆகியவற்றுக்கு வெளியே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்பதைக் கடுமையாகக் கண்காணிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. அதன்மூலம் மறைமுகமாக போதைப் பொருள் நடமாட்டம் உள்ளதை அவரே ஒப்புக் கொள்கிறார். பள்ளி, கல்லூரிகள் தவிர மற்ற இடங்களில் விற்பதைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை'' என குறிப்பிடுகிறார் இன்பதுரை,
அதிகரிக்கும் கொலை, தற்கொலைகள்
`` தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு அதிகாரிகள் மத்தியில் தற்கொலைகளும் அதிகரித்துள்ளன. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வெங்கடாச்சலத்தின் மரணம், ராதாபுரம் ஒன்றியத்தில் அரசுப் பொறியாளர் சந்தோஷ்குமாரின் மரணம், திருவள்ளூரில் பரிசுத் தொகுப்பு தரமற்றதாகக் கூறிய ஒருவரின் மரணம் எனத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. திருவள்ளூர் நபரின் மரணத்தில் மரண வாக்குமூலமே வாங்கப்படவில்லை. தவிர, திருநெல்வேலியில் தேர்தல் தொடர்பான கொலை ஒன்று நடந்தது. மடிப்பாக்கம், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் இரண்டு தி.மு.கவினர் கொல்லப்பட்டுள்ளனர்.
குற்றச் செயலில் ஈடுபடுவோர் வெகுசுதந்திரமாக வலம் வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ரவுடிகளுக்கு வழக்குரைஞர் ஆடையை அணிவித்து தி.மு.க பயன்படுத்திக் கொண்டது. ரவுடிகளை ஒடுக்குவதற்குக் காவல்துறையைப் பயன்படுத்த வேண்டிய அரசாங்கம், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்துகிறது'' என்கிறார் இன்பதுரை.
எம்.பியே தவறு செய்தாலும் சிறைதான்
அ.தி.மு.கவின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான சூர்யா வெற்றிகொண்டானிடம் பேசினோம். அதற்கு அவர் விரிவாக பதிலளித்தார்.

``ஒரு மாநிலத்தில் எந்த ஆட்சி அமைந்தாலும் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். ஒரு குற்றவாளியை ஐந்து அல்லது பத்து நாள்களில் கைது செய்தால்தான் அது சிறப்பான ஆட்சி. ஐந்து ஆண்டுகளாக ஒரு குற்றவாளியை தேடிக் கொண்டிருக்கக் கூடாது. எனவே, குற்றச் செயல்களை காவல்துறை முன்னெச்சரிக்கையாகத் தடுக்கவில்லை என்று கூறுவது தவறானது.
ஒரு குற்றம் நடப்பதை யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவர் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த விவகாரத்தில் சுடுவதற்கு உத்தரவிட்டது யார் என அவருக்கே தெரியவில்லை. முதலமைச்சருக்கே தெரியாமல் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுதான் அராஜகமானது'' என்கிறார் சூர்யா வெற்றிகொண்டான்.
`` தி.மு.க ஆட்சியில் காவல்துறை, முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் எம்.பியே தவறு செய்தாலும் ஒரு வாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஒரு நேர்மையான அரசாங்கம் இதைத்தான் செய்யும். எங்காவது கொலை நடந்தால் அந்த சம்பவத்துக்குப் பிறகு எத்தனை நாள்களில் குற்றவாளி கைது செய்யப்படுகிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும்'' என்கிறார் சூர்யா வெற்றிகொண்டான்.
முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்

பட மூலாதாரம், Getty Images
மேலும், ``மடிப்பாக்கம் செல்வம் கொலையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கு அரசியல் காரணமா தனிப்பட்ட பகையா என்பது வழக்கின் விசாரணையில் தெரியவரும். திருச்சியில் ராமஜெயம் கொல்லப்பட்டு பத்து ஆண்டுகளாகியும் அ.தி.மு.க ஆட்சியில் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. சிபிஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்ட பிறகும் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை. தற்போது இந்த வழக்கு மீண்டும் சிறப்பு புலனாய்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக மத்திய புலனாய்வுத்துறையை கலைத்து விட முடியுமா? காவல்துறையை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினால்தான் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக் கூற முடியும்'' என்கிறார் சூர்யா வெற்றிகொண்டான்.
அவரிடம், ``சேப்பாக்கத்தில் கள்ள வாக்கு செலுத்துவதற்காக தி.மு.க நிர்வாகி மிரட்டிய வீடியோ காட்சிகளும் வெளியானதே?'' என்றோம்.
``தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளை மிரட்டியதாக புகார் வந்தவுடன் அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. கடலூர் எம்.பி மீது புகார் மட்டும் பதிவானது. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, குற்றச்சாட்டுக்கு ஆளாகிறவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியாக நிரூபித்து சம்பந்தப்பட்டவர் வெளியில் வரட்டும் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கமாக உள்ளது'' என்கிறார் சூர்யா வெற்றிகொண்டான்.
மேலும், ``கடந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு எத்தனையோ சம்பவங்களை உதாரணமாகக் கூற முடியும். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக உள்ளது. ஆளும்கட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் செயல்படுகின்றனர். எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் தேர்தல் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. தவறு நடந்த இடங்களில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது'' என்கிறார் அவர்.

பிற செய்திகள்:
- நியூட்ரினோ திட்டத்தால் என்ன ஆபத்து? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?
- "தேர்தலில் வெற்றிபெற பணத்தையும் பரிசுப் பொருள்களையும் வாரியிறைக்கும் கட்சிகள்"
- திருவள்ளூர் சாமியாரின் ஆசிரமத்தில் விஷம் குடித்து இறந்த கல்லூரி மாணவி - என்ன நடந்தது?
- கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்: கனடாவில் அவசரநிலை
- "என்னுடைய நிர்வாணப் படங்களை டெலிகிராம் நீக்காதது ஏன்?"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













