விஜய் மக்கள் இயக்கம்: தூத்துக்குடியில் தி.மு.கவுக்கு ஆதரவு: பின்னணி என்ன?

பட மூலாதாரம், VIJAY
- எழுதியவர், ஆ.விஜய் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் அறிவித்துள்ளார். `அது அந்த மாவட்ட நிர்வாகியின் தனிப்பட்ட கருத்து' என்கிறார் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த்.
பின்னணியில் என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் போலவே இந்தமுறையும் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டியிடுகிறது. அதேநேரம், அனைத்து இடங்களிலும் போட்டியிடாமல் தங்களுக்கு வெற்றிவாய்ப்பு உள்ள இடங்களை மட்டும் தேர்வு செய்து அதில் போட்டியிட உள்ளனர். இதற்கான அனுமதியை விஜய் மக்கள் மன்ற தலைமை அலுவலகம் வழங்கியுள்ளது.
`ஊரக உள்ளாட்சியைப் போலவே இந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு செல்வாக்கைக் காட்ட வேண்டும்' என விஜய் மக்கள் இயக்க தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அம்மாவட்டத் தலைவர் பில்லா ஜெகன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர் மன்ற நிர்வாகிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பில்லா ஜெகன் அளித்துள்ள பேட்டியில், `நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடியில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதா என ஆலோசனை நடத்தினோம். இதில் பெரும்பான்மையான மாவட்டத் தலைவர்கள், தி.மு.கவுக்கு ஆதரவு அளிக்கலாம் எனத் தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். தொடர்ந்து தி.மு.கவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளோம். இதுதொடர்பாக தலைமைக்குத் தெரிவித்துவிட்டோம்' என்றார்.
"தி.மு.கவுக்கு ஆதரவு கொடுப்பது ஏன்?'' என பிபிசி தமிழிடம் பேசிய பில்லா ஜெகன், ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டியிடவில்லை. அதனால் தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக தலைமையில் இருந்து யாரும் என்னிடம் பேசவில்லை'' என்கிறார்.

`` தி.மு.க இளைஞரணி மாவட்ட பொறுப்பாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டுவிட்டீர்கள். மீண்டும் தி.மு.கவில் இணைவதற்காகத்தான் இந்த ஆதரவா?'' என்றோம். `` அடிப்படையில் நான் ஒரு தி.மு.ககாரன். மீண்டும் தி.மு.கவில் இணைவதற்காக கடிதம் எழுதிக் கொடுத்துள்ளேன். கடந்தகால தேர்தல்களில் அ.தி.மு.கவுக்கு விஜய் மக்கள் மன்றம் ஆதரவு கொடுத்தபோது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தி.மு.கவுக்கு ஆதரவு கொடுத்தோம். மேலும், நான் விஜய் மக்கள் மன்றத்தில் இருந்து வெளியேறுவதற்கும் வாய்ப்பில்லை. மக்கள் இயக்கப் பொறுப்பாளராக பதவியில் தொடர்கிறேன்'' என்கிறார்.
பில்லா ஜெகனின் பேட்டி தொடர்பாக, அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்திடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` தி.மு.கவுக்கு ஆதரவு கொடுப்பது என்பது அவருடைய சொந்தக் கருத்து. இதற்கும் தலைமைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதுதொடர்பாக பிறகு விரிவாகப் பேசுகிறேன்'' என்றார்.
பிற செய்திகள்:
- லதா மங்கேஷ்கர்: நேருவையே கண்ணீர் சிந்த வைத்த இசைக் குயில்
- எவரெஸ்ட் சிகரம்: 'அதிவேகத்தில் உருகும் பனிப்பாறைகள்; 100 கோடி பேருக்கு பாதிப்பு'
- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொகுசு படகு பயணத்தால் நெதர்லாந்தில் கிளம்பும் சர்ச்சை
- கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை: சீருடை கட்டாயம் என அரசு ஆணை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












