கர்ப்பமாக இருக்கும் பூனைகளுக்கு வளைகாப்பு - கோயம்புத்தூர் சுவாரசியம்

பட மூலாதாரம், ani
இன்று இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.
கருவுற்று இருக்கும் பூனைகளுக்கு, அவற்றை வளர்ப்பவர்களால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. இது கோயம்புத்தூரில் நடந்துள்ளது.
''எங்கள் வளர்ப்பு பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளோம். அவற்றுக்கு பூனைகளுக்கான உணவுகளும் திண்பண்டங்களும் வழங்கினோம். பெண்களுக்கு மக்கள் வளைகாப்பு நடத்துகிறார்கள். இந்தப் பூனைகளும் எங்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதால் அவற்றுக்கு நாங்கள் வளைகாப்பு நடத்தியுள்ளோம். மருத்துவ மையத்துக்கு வந்து (விலங்குகள்) மருத்துவர்களுடன் இதை ஏற்பாடு செய்தோம்,'' என்று அவற்றில் ஒரு பூனையின் உரிமையாளர் கூறியுள்ளார் என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.
இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது இது முதல்முறை என்றும் இது பூனைகளை மகிழ்ச்சியாக்கும் என்றும் இந்த வளைகாப்பில் கலந்துகொண்ட விலங்குகள் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
நடிகர் விஷாலுக்கு ரூ. 500 அபராதம்
நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் ஒன்றால் ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறித்து தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், @VishalKOfficial twitter
கடந்த 2016-ம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஷால் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் அவர் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாதற்கான ஆவணங்கள் சிக்கியது குறித்து விஷால் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் பலமுறை அழைப்பாணை அனுப்பியும் அவர் நேரில் முன்னிலையாகவில்லை.
அதைத்தொடர்ந்து விஷால் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி மீனாகுமாரி முன்னிலையில் நடந்தது. சேவை வரித்துறை சார்பில் நடிகர் விஷாலுக்கு 10 முறை சம்மன் அனுப்பியும் அவர் முன்னிலையாகவில்லை என்றும், இதன்காரணமாக அவர் மீதான விசாரணையை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவை வரித்துறையில் விஷால் முன்னிலையாகாதது விசாரணைக்கு இடையூறு விளைவித்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற அவரது உள்நோக்கத்தை காட்டுகிறது. எனவே, நடிகர் விஷாலுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது என்று வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டார் என்கிறது அந்தச் செய்தி.
பிகார் முதல்வர் மகனுக்கு தந்தையை விட 5 மடங்கு சொத்து

பட மூலாதாரம், Getty Images
பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரைவிட அவரது மகனுக்கு ஐந்து மடங்கு மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக இந்து தமிழ் திசை செய்தி தெரிவிக்கிறது.
ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் பிகார் அமைச்சர்கள் தங்களது குடும்ப சொத்து விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளனர். முதல்வர் நிதிஷ் குமாரிடம் ரொக்கமாக ரூ.29,385-ம், வங்கியில் ரூ.42,763-ம் உள்ளது. அவரது மகன் நிஷாந்திடம் ரொக்கமாக ரூ.16,549-ம், வங்கியில் வைப்பு தொகையாக ரூ.1.28 கோடியும் உள்ளது.
நிதிஷ் குமாரிடம் ரூ.75.36 லட்சத்துக்கு அசையும், அசையா சொத்துகள் உள்ளன. அவரது மகனிடம் ரூ.3.61 கோடிக்கு அசையும், அசையா சொத்துகள் உள்ளன. தந்தையை விட மகனிடம் 5 மடங்கு அதிகமாக சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- இலங்கையில் உணவு பற்றாக்குறை: குறையும் நெல் உற்பத்தி - அச்சுறுத்தும் விலையேற்றம்
- ரோமானிய காலத்தில் வாழ்ந்த இந்த பெண்களைப் பற்றி உங்களுக்கு தெரியாத 7 விஷயங்கள்
- அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை சீனா மாற்றுவது ஏன்?
- எழில் கொஞ்சும் வேளாண் கிராமத்தில் புயலாக வீசும் சிப்காட் தொழிற்பேட்டை யோசனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












