உள்நாட்டுத் தொகுப்பில் இருந்து பெட்ரோலியம் எடுக்கும் இந்தியா: என்ன பலன் தரும்?

பெட்ரோல்

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பிபிசி மானிடரிங்
    • பதவி, இந்தியா

கச்சா எண்ணெயின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்திய அரசு தனது கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை பயன்பாட்டிற்கு எடுக்க முடிவு செய்துள்ளது. இந்தியா இவ்வாறு செய்வது இதுவே முதல் முறையாகும்.

கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியா தனது கையிருப்பில் உள்ள 3.8 கோடி பீப்பாய்களில் இருந்து 50 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை எடுக்கப் போகிறது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அதிக எண்ணெய் உற்பத்தி செய்யுமாறு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு, இந்த நாடுகள் நெருக்குதல் அளிக்கின்றன.

இருப்பினும், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க OPEC நாடுகளை சம்மதிக்க வைக்க அமெரிக்காவால் இன்னும் முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த கையிருப்புகளில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா எடுப்பது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து இந்திய ஊடகங்கள் நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளன.

அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் ஒருங்கிணைப்பு

இருப்புக்களில் இருந்து ஐந்து லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஒரு நாளில் பயன்படுத்தப்படும் பெட்ரோலிய எரிபொருளுக்கு இது சமம்.

விசாகபட்டினம், மங்களூரு மற்றும் படூர் ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகள், நிலத்தடி குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால் இந்த கச்சா எண்ணெய், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (MRPL) க்கு செல்லும்.

பெட்ரோலியம்

பட மூலாதாரம், Getty Images

''உலகம் முழுவதும் உள்ள முக்கிய நுகர்வோர்களான அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் ஆலோசனை நடத்திய பிறகே இந்த கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது," என்று இந்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. .

இவ்வாறு ஏன் செய்யப்படுகிறது?

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை அரசு குறைத்துள்ளதால், இந்தியாவுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

"பெட்ரோலிய எரிபொருட்களின் விலையை சந்தை சக்திகள் பொறுப்புடன் தீர்மானிக்க வேண்டும் என்று இந்தியா தெளிவாக நம்புகிறது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், தேவையை விட குறைவாகவே எண்ணெயை வழங்குகின்றன. இது குறித்து இந்தியா தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் விலை அதிகரிக்கும். கூடவே எதிர்மறையான தாக்கம் ஏற்படும்," என்று இந்திய பெட்ரோலிய அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பெட்ரோலியம்

பட மூலாதாரம், British Petroleum handout

கச்சா எண்ணெய் விலை உயர்வால், இறக்குமதிக்காக இந்தியா அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இது பணவீக்கத்தை அதிகரித்து வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கலாம்.

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் மீட்சிப்பாதையில் கொண்டு வருவது கடினமாக இருக்கும் என்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாள் தெரிக்கிறது.

"ரஷ்யா மற்றும் செளதி அரேபியாவின் நடவடிக்கைகளால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இருப்புகளில் இருந்து எண்ணெயை எடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கும் வகையில் இந்தியாவும் இந்த நடவடிக்கையை எடுக்கப்போகிறது," என்று தனது பெயரைக்குறிப்பிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய்

பட மூலாதாரம், EPA

சர்வதேச அளவில் எஃகு மற்றும் கச்சா எண்ணெய் மூலப்பொருள் விலைகளைக் கட்டுப்படுத்த இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று 'தி எக்கனாமிக் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்தியாவின் முடிவு ஒரு அடையாள நடவடிக்கை"

அரசின் இந்த முடிவு பெட்ரோலிய விலையை கட்டுப்படுத்துவதற்கான ஒரு அடையாள நடவடிக்கையாகவும் இந்திய ஊடகங்களில், பார்க்கப்படுகிறது. இந்த முடிவால் எண்ணெய் விலை குறையும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் எதிர்பார்க்கவில்லை.

"கையிருப்பில் இருந்து சிறிய அளவில் கச்சா எண்ணெயை எடுக்கிறோம். ஆனால் இந்த அடையாள நடவடிக்கையின் முக்கியத்துவம் மிகப்பெரியது. OPEC நாடுகளிடம் கோரிக்கை விடுப்பதோடுகூடவே தங்கள் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கமுடியும் என்பதை எல்லா முக்கிய நுகர்வோர் நாடுகளும் இதன்மூலம் சுட்டிக்காட்டுகின்றன," என்று இந்திய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், இந்த நடவடிக்கை பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் உலகளாவிய எரிசக்தி சந்தையின் கட்டுப்பாட்டிற்கான போராட்டம் தொடங்கலாம் என்றும் சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

"ஒபெக் நாடுகள் டிசம்பர் தொடக்கத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் சந்திக்கும் போது, தங்கள் நுகர்வோரின் இந்த சவாலுக்கு பதிலடி கொடுக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இருப்புகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் இந்த நடவடிக்கை காரணமாக, உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை தாங்கள் ரத்து செய்யக்கூடும் என்று OPEC நாடுகளின் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்," என்று எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டின் ஒரு செய்தி தெரிவிக்கிறது.

கச்சா எண்ணெய்

பட மூலாதாரம், Getty Images

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :