கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: அனுபவ் ரவி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

கோடநாடு எஸ்டேட்

பட மூலாதாரம், KODANAD ESTATE

படக்குறிப்பு, கோடநாடு எஸ்டேட்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி அனுபவ் ரவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "கோடநாடு வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது போல தோன்றுகிறது. அந்த வழக்கில் மேல் விசாரணை தேவை என புலனாய்வுத்துறை கோரும்பட்சத்தில் அதில் மனுதாரருக்கு என்ன பிரச்னை?" என்று கேள்வி எழுப்பியது.

இந்த விவகாரத்தில் புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தற்போதைக்கு தலையிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், அனுபவ் ரவியின் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஏற்கெனவே பல்வேறு சாட்சிகளிடம் விசாரித்து வழக்கு முடிக்கப்படும் தருவாயில் அதை மீண்டும் விசாரிக்க காவல்துறை விடுக்கும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொரடர்ந்திருந்தார். ஆனால், அதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அனுபவ் ரவி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் ஊட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார். மேலும், கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கிலும் இவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.

ஆனால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க கடந்த ஏப்ரல் மாதம் அனுமதி வழங்கிய நீதிமன்றம், மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவை ஏற்கவில்லை. இதனால் அதிமுகவைச் சேர்ந்த அனுபவ் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி போலீஸ் விசாரணைக்கு தடை கோரினார்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கோடநாடு வழக்கு மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது.

கோடநாடு வழக்கு என்ன?

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கோடநாட்டில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்த வழக்கின் விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, `கோடநாடு வழக்கை மறு விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்' என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி, கோடநாடு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சயானிடம் நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ் உள்ளிட்டோர் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி சில தகவல்கள் வெளியாயின. தன்னை இந்த வழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

காவல்துறையில் சயான் அளித்த வாக்குமூலம் இன்னும் வெளிவராத நிலையில், இந்த வழக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆளும் திமுக அரசு பயன்படுத்தி வருவதாக அதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, கோடநாடு எஸ்டேட் காவலாளியாக பணியாற்றிய நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ண தாப்பாவை அழைத்து வர தனிப்படையினர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்தான் தொடக்கத்தில் எஸ்டேட்டில் கொள்ளை நடந்தபோது காவல்துறைக்கு தகவல் கொடுத்தவராக கருதப்படுகிறார். இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

ஜெயலலிதாவுக்கு என்ன தொடர்பு?

கோடநாடு எஸ்டேட், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரபல சுற்றுலா தலமான கோடநாடு காட்சி முனைக்கு அருகே இந்த எஸ்டேட் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதல் முறையாக முதல்வராக பதவிக்கு வந்த காலத்தில், 1992ஆம் ஆண்டு ரூ. 17 கோடிக்கு இந்த எஸ்டேட் வாங்கப்பட்டது. அப்போது இந்தத்தோட்டத்தின் பரப்பளவு சுமார் 900 ஏக்கர் ஆகும். அதன் பின்னர் இந்தத் தோட்டத்தின் பக்கத்திலிருந்த வேறு தோட்டங்கள் வாங்கப்பட்டு இதனுடன் இணைத்து 1,600 ஏக்கராக விரிவாக்கப்பட்டது. இங்கு சுமார் 5,000 சதுர அடி பரப்பிலான பிரமாண்ட பங்களா, ஹெலிகாப்டர் தளம், படகு குழாம், தேயிலைத் தொழிற்சாலை, தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க பேட்டரி கார்கள் போன்றவை உள்ளன.

இந்த தோட்டத்துக்கு வி. கே. சசிகலா, ஜெ. இளவரசி, வி. என். சுதாகரன் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர் இதில் ஜெயலலிதாவுக்கு 10 சதவீத பங்குகள் இருந்தன.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், முன்னாள் முதல்வராக இருந்தபோதும், தனிமையை விரும்பிய போதெல்லாம் இந்த எஸ்டேட்டில்தான் ஓய்வு எடுப்பார். இந்த எஸ்டேட் வாங்கப்பட்ட பிறகு, கோடநாடு பகுதி யில் கடும் கெடுபிடிகள் அரங்கேற்றப்பட்டன. சாமானிய மக்கள் உள்ளே நுழையாத வகையில் தோட்டத்தில் 11 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டது. இந்த பங்களா வெளியில் இருந்து பார்க்க முடியாதவாறு கட்டப்பட்டது. இந்த எஸ்டேட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பாதுகாவலர்கள் பணியாற்றினர்.

ஜெயலலிதா காலமான சில மாதங்கலில், இந்த எஸ்டேட் பங்களாவில் காவலில் இருந்த ஓம் பகதூர் என்பவர், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நள்ளிரவு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். மேலும், அவருடன் காவல் பணியில் இருந்த கிருஷ்ணா என்பவர் படுகாயமடைந்தார். அந்த எஸ்டேட் பங்களாவில் கொள்ளையடிக்கவே காவலாளிகள் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஓம் பகதூர் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வு தொடர்பாக சந்தேகிக்கப்படும் கனகராஜ், சயான் ஆகியோரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், சேலம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்து ஒன்றில் கனகராஜ் பலியானார். அதேபோல், கேரள மாநிலம் பாலக்காடு அருகே தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த சயான் என்பவரும் சாலை விபத்தில் சிக்கினார். இதில், சயானின் மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர் தப்பிய சயான் கைது செய்யப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :