கோடநாடு கொலை வழக்கு அரசியலாகிறதா? தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக, காங்கிரஸ் மோதல் ஏன்?

கோடநாடு எஸ்டேட்

பட மூலாதாரம், KODANAD ESTATE

படக்குறிப்பு, கோடநாடு எஸ்டேட்

கோடநாடு விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.கவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் மோதல் வலுத்துள்ளது. `நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை பேரவையில் விவாதிக்கக் கூடாது என்பது சட்டம் தெரிந்த செல்வப் பெருந்தகைக்கு தெரியவில்லை' என்கிறார் அ.தி.மு.க வழக்கறிஞர் இன்பதுரை.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கோடநாட்டில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்த வழக்கின் விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, `கோடநாடு வழக்கை மறு விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்' என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி, கோடநாடு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சயானிடம் நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ் உள்ளிட்டோர் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி சில தகவல்கள் வெளியாயின. தன்னை இந்த வழக்கில் சிக்க வைக்க சதி நடப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொதித்தார். காவல்துறையில் சயான் அளித்த வாக்குமூலங்கள் எதுவும் வெளிவராத நிலையில், அ.தி.மு.க தரப்பில் அரசுக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், கோடநாடு வழக்கு குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பதற்காக விதி எண் 55ன்கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை கூடுவதற்கு முன்னதாக அ.தி.மு.க அமைச்சர் டி.ஜெயக்குமார், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

ஜெயகுமார்

பட மூலாதாரம், JAYAKUMAR

படக்குறிப்பு, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அப்போது பேசிய அவர், `சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. கோடநாடு விவகாரத்தை முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாக செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார். இயற்கை இடர்பாடு, குடிநீர் பிரச்னை போன்றவைதான் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள். நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து எந்தக் காலத்திலும் சட்டமன்ற மரபை மீறி விவாதித்தது கிடையாது. பேரவை விதிகள் இடம் கொடுக்காத நிலையில் இதைப் பற்றி சட்டப்பேரவையில் விவாதிப்பது சரியானதல்ல' என்றார்.

மேலும், `இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையிலும் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் தனது உரிமைக்காக முறையிட்டார். நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை ஏன் விவாதிக்க வேண்டும். அவரது சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் மனரீதியான துன்புறுத்தலை கொடுக்கவும் சட்டப்பேரவையை பயன்படுத்துகிறார்கள். எனவே, எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்தோம்,' என்றார்.

`காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைக்கு எதிராக அ.தி.மு.க கொதிப்பது ஏன்?' என அ.தி.மு.கவின் தேர்தல் பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான இன்பதுரையிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகையின் அணுகுமுறை என்பது பேரவை விதிகளுக்கு எதிரானது. அவரே ஒரு வழக்கறிஞர்தான். நீதிமன்றத்தில் உள்ள எந்த வழக்கைப் பற்றியும் சட்டமன்றத்தில் விவாதிக்கக் கூடாது என பேரவை விதி 92 கூறுகிறது. இதை நாங்கள் மட்டும் கூறவில்லை.

இன்பதுரை

பட மூலாதாரம், INBADURAI

படக்குறிப்பு, இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ

2006ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், ஜெயக்குமார் ஒரு விவாதத்தை எழுப்ப முற்பட்டார். அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் வலியுறுத்தியபோதும், சட்ட அமைச்சராக இருந்த துரைமுருகன், `நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்துப் பேசுவது சட்ட விதிமீறல்' எனக் குறிப்பிட்டார். இதனை செல்வப் பெருந்தகைக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்," என்றார்.

தொடர்ந்து பேசுகையில், ``சட்டப்பேரவையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பேசினாரே எனவும் கேள்வியெழுப்புகின்றனர். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற ஒருவர், தான் தாக்கப்படும்போது அதைப் பற்றி பேசுவது என்பது இயல்பானது. அதாவது, புகார் சொல்ல வேண்டிய இடமாக சட்டமன்றம் உள்ளது. காங்கிரஸின் அணுகுமுறை என்பது சரியானதல்ல. மேலும், நாங்கள் செல்வப்பெருந்தகையின் வேட்புமனுத் தாக்கல் ஆவணங்களை பார்த்தோம். அவர் மீதான குற்றவியல் வழக்குகள் எல்லாம் நிலுவையில்தான் உள்ளன. இவற்றின் மீது விவாதம் நடத்த வேண்டும் என்றால் அவர் ஒப்புக் கொள்வாரா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டை பினாமி சட்டத்தின்கீழ் எஸ்டேட்டை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டை பினாமி சட்டத்தின்கீழ் எஸ்டேட்டை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

கோடநாடு விவகாரம் குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வருகின்றன. இப்போது புதிதாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும். இவர்கள் எந்த நீதிமன்றத்திலும் அனுமதியைப் பெறவில்லை. சாட்சிகளை விசாரித்த பிறகு தீர்ப்பு வரும் நேரத்தில், மேலதிக விசாரணை தேவை என்கின்றனர். கோடநாடு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக தி.மு.க வழக்கறிஞர்தான் ஆஜரானார். இந்த விவகாரத்தில், `வாளையார் மனோஜ், சயானை விசாரிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டது. எனவே, இந்த வழக்கை விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்பதைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம்," என்கிறார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

அ.தி.மு.க நிர்வாகிகளின் எதிர்ப்புக்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, ``நாங்கள் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கிறோம் என்றால் தைரியம் இருந்தால் சட்டப்பேரவைக்கு வந்து பதில் சொல்லட்டும். இது தொடர்பாக நாங்களும் விவாதிக்கத் தயார் எனக் கூற வேண்டியதுதானே. அதை விடுத்து காலை நேரத்திலேயே செய்தியாளர்களை ஏன் சந்திக்க வேண்டும். கோடநாடு விவகாரம் தொடர்பாக பேரவையில் நாங்கள் முயற்சி செய்வதை அ.தி.மு.க தொண்டர்களும் வரவேற்கின்றனர். ஆனால், இவர்கள் ஏன் அச்சப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. சட்டப்பேரவையில் அ.தி.மு.கவினர் விவாதிக்கத் தயாராக இல்லையென்றால் மக்கள் மன்றத்தில் நாங்கள் விவாதிப்போம். இந்த ஆட்சி ஜெயலலிதாவுக்கு நீதியினை வழங்கும்," என்றார்.

அதேநேரம், கோடநாடு விவகாரம் தொடர்பாக பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ``கோடநாடு விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முரண்பாடாகப் பேசுகிறார். இந்த விவகாரம் தொடர்பாக முதலில் பேசியது அ.தி.மு.கவினர்தான். கோடநாடு விவகாரத்தில் ஜெயக்குமார் பதற்றத்தில் பேசுகிறார். பேரவையில் இதனைக் கொண்டு வந்தது அ.தி.மு.கதான். இந்த வழக்கில் மறு விசாரணை செய்யப்படவில்லை. கூடுதல் விசாரணைதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :