80 பதக்கம், 40 கோப்பை, 135 சான்றிதழ்கள் பெற்றும் கட்டடத் தொழிலாளியாக இருக்கும் கல்விப் பட்டதாரி

பட மூலாதாரம், Getty Images
(இன்று 28.08.2021 சனிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பாளையம் தாண்டா கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் ரமாவத் சின்னி கிருஷ்ணய்யா (28 வயது) பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.
தற்போது கிருஷ்ணய்யா எம்.எட் படிக்கிறார். சிறு வயது முதலே ஊரில் இருக்கும் மலைகளை ஏறி பயிற்சி மேற்கொண்டார். பின்னர், 2017, டார்ஜிலிங்கில் உள்ள 17,000 அடி உயரமுள்ள ரீராக் எனும் மலையில் ஏறி சாதனை படைத்தார்.
பின்னர் 2018-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் உள்ள துலியன் பீக் (15 ஆயிரம் அடி), அதே ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ, 2019ம் ஆண்டில் ரஷ்யாவில் உள்ள எல் புர்ஸி போன்ற மலைகளை சில அமைப்பினரின் நிதி உதவியால் ஏறி சாதனை படைத்து இவர் ஹை ரேஞ்ச் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் கராத்தேவில் கருப்பு பெல்ட், உயரம் தாண்டுதல், ஓட்டப் பந்தயங்களிலும் பல கோப்பைகளை வென்றுள்ளார். இதுவரை இவர் தங்கம், வெள்ளி உட்பட 80 பதக்கங்கள், 40 கோப்பைகள் மற்றும் 135 சான்றிதழ்களை பெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆந்திர ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் உட்பட பலரிடம் இவர் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். ஆனால், சரியான வேலை கிடைக்காமல் கட்டட தொழிலாளியாக வேலை செய்தும், மாங்காய் சீசனில் தெரு ஓரத்தில் தள்ளு வண்டியில் மாங்காய்களை விற்றும் பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், திருப்பதியில் ஆந்திர பிரதேச துணை முதல்வர் நாராயணசாமியை சந்தித்து, தனது வாழ்க்கைக்கு உதவும் படி வேண்டுகோள் வைத்துள்ளார் என இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
எரிபொருள் விலை உயா்வுக்கு காரணம் என்ன? மத்திய அமைச்சா் ராணே விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
உள்நாட்டில் எரிபொருள் விலை உயா்ந்துள்ளதற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதே முக்கிய காரணம் என மத்திய குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) துறை அமைச்சா் நாராயண் ராணே வெள்ளிக்கிழமை தெரிவித்ததாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது "கச்சா எண்ணெய்க்கான இறக்குமதி செலவினம் வெகுவாக அதிகரித்துள்ளது.
அதன் காரணமாகவே, சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. நாம் இறக்குமதியை நம்பியிருப்பதால் ஒரு சில விஷயங்கள் நமது கைகளில் இல்லை என்றாா் அவா்.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூா்த்தி செய்யப்படுகிறது. அதேபோன்று, எரிவாயுவுக்கான தேவையும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இறக்குமதி மூலமாகவே ஈடுசெய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன" என கூறியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தொழிலாளியிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

10 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் ஆய்வாளர் வசந்தி உள்ளிட்ட 5 பேர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் அர்ஷத் (வயது 32). இவர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதில் "நான் மதுரை வில்லாபுரத்தில் உள்ள பேக் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வருகிறேன். இந்தநிலையில், எனது உரிமையாளர் எனக்கு, இளையான்குடியில் சொந்தமாக பேக் கம்பெனி வைக்க உதவி செய்வதாக கூறினார். மேலும், அவர் மூலப்பொருள் வாங்குவதற்காக ரூ.4 லட்சம் கொடுத்தார்.
இதுபோல், என்னுடைய அண்ணன் மற்றும் உறவினரிடம் ரூ.6 லட்சம் கடனாக வாங்கினேன். இந்த பணத்துடன் திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மேலும் ரூ.5 லட்சம் கடன் வாங்குவதற்காக கடந்த 5-ந்தேதி நாகமலைபுதுக்கோட்டை மாவு மில் பகுதியில் காத்திருந்தேன். அப்போது கடன் தருவதாக கூறிய நபர் பணத்தை எடுத்துக் கொண்டு வருவதாக கூறி அங்கிருந்து சென்றார்.
இதற்கிடையே, அங்கு வந்த நாகமலைபுதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி, நான் தொழில் நிமித்தமாக வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பறித்து விட்டார். மறுநாள் காவல் நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ள்ளுமாறு கூறிவிட்டு சென்றார்.
மறுநாள் சென்று கேட்டபோது "நீ கொடுத்த பையில் நோட்டு புத்தகம் தான் இருந்தது, பணம் இல்லை" என கூறினார். மீண்டும் வந்து பணம்கேட்டால், கஞ்சா வழக்கு போட்டு கைது செய்து விடுவேன் என மிரட்டினார்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்த காவல் ஆய்வாளர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறி இருந்தார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி, கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமமெளலிக்கு, பாஸ்கரன் உத்தரவிட்டார். விசாரணையில், ஆய்வாளர் வசந்தி பணம் பறித்தது தெரியவந்தது. மேலும், இதில் உக்கிரபாண்டியன், பால்பாண்டி, பாண்டியராஜா, கார்த்திக் ஆகியோருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்ட 5 பேர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை ரூ. 2,26,000 பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த ஆய்வாளர் வசந்தி ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது தனிப்படையினர் வசந்தியை கைது செய்துள்ளனர் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- இறுதி நொடி வரை மக்கள் வெளியேற்றப் பணிகள் தொடரும் - அமெரிக்கா
- நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் - புதிய உயிரினம் கண்டுபிடிப்பு
- காபூல் தாக்குதல் - இதுவரை நடந்தவை: முக்கிய தகவல்கள்
- கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகள் கண்டுபிடிப்பு: ’நோயின் ஆபத்தை ஒப்பிடுகையில் குறைவு’
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- பூச்சி இனங்களின் அழிவுக்கு காரணமான தெரு விளக்குகள் – ஆய்வாளர்கள் சொல்லும் மாற்று வழி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












