கிருஷ்ணகிரியில் ஒரே மாதத்தில் 10 கொலைகள் - என்ன நடக்கிறது?

சித்தரிப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்
    • எழுதியவர், ஏ.எம். சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 பேர் கொலைகள் நடந்துள்ளன. உள்ளூர் சட்டம் ஒழுங்கு பராமரிப்பை கேள்விக்குரியதாக்கி வரும் இந்த சம்பவங்கள் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்கள் உள்ளன. இதில் ஓசூர், தேன்கனிக்கோட்டை 2 உட்கோட்டங்கள் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளன. இந்த 2 உட்கோட்ட எல்லையிலும் குற்ற வழக்குகள் அதிகமாக பதிவாகியிருக்கின்றன. குறிப்பாக கொலை, கொள்ளை வழக்குகள் அதிகம். எல்லைப் பகுதி என்பதால் ஒரு மாநிலத்தில் குற்றம் செய்து விட்டு பக்கத்துக்கு மாநிலத்துக்கு குற்றவாளிகள் தப்பிச் செல்வதும் இங்கு குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.

பதைபதைக்க வைக்கும் 10 கொலைகள்

காதல் மனைவி கொலை (ஜூன் 5)

கல்லாவி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவி ரஞ்சிதாவை அவரது கணவர் அமல்ராஜ் குடும்ப பிரச்னை காரணமாக கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பாக அமுல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகாத உறவால் கொலை (ஜூன் 11)

அதிகாலையில் சாலையில் வந்து கொண்டிருந்த காவேரிப்பட்டணம் கூழ் வியாபாரி ராஜேந்திரன் கட்டையால் அடித்து கொல்லப்பட்டார். அவருக்கு மூன்று மனைவிகள். அதில் மூன்றாவது மனைவி முனியம்மாவுக்கும் அவருடைய உறவினர் குமாருக்கும் தவறான உறவு இருந்துள்ளதாகவும் இது பற்றி ராஜேந்திரன் முனியம்மாவை கண்டித்ததால் குமாருடன் சேர்ந்து தன் கணவனை கொலை செய்ய முனியம்மாள் திட்டமிட்டதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். இதன்படியே உடனே குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து ராஜேந்திரனை உருட்டு கட்டையால் அடித்து கொன்றதாக கூறுகிறது காவல்துறை வழக்கு. இந்த வழக்கில் முனியம்மாள், குமார் உள்பட 6 பேர் கைதாகியுள்ளனர்.

பண பரிவர்த்தனை கொலை (ஜூன் 12)

கொலை
படக்குறிப்பு, பாலாஜி

ஓசூர் அன்னை நகரை சேர்ந்தவர் பாலாஜி சிறு குறுந்தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் ரகுராம் என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார் இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பாலாஜி நடத்தி வந்த தொழில் நிறுவனம் இயங்கவில்லை. இதனால் அவர் ரகுராமிற்கு வட்டித்தொகையை கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் பாலாஜி கொடுத்த காசோலை ஒன்று பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த ரகுராம் அரிவாளை எடுத்து பாலாஜியை அவரது வீட்டு வாசலிலேயே சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த வழக்கில் ரகுராம் கைதாகியுள்ளார்.

சொத்துக்காக மகனை கொன்ற தாய் (ஜூன் 16)

கொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

பர்கூரை அடுத்த பண்டசீமானூர் பகுதியை சேர்ந்தவர் கவுரம்மா. இவரது மகன் சுகுமார் எலக்ட்ரீசியன். இவருக்கும் தாய் கவுரம்மாக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்துள்ளதுக இதனால் சுகுமாரிடம் கோபித்துக் கொண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தன் உறவினர்களான சுப்பிரமணி, திம்மராயன் ஆகியோருடன் வசித்து வந்தார் கவுரம்மா. இந்நிலையில் சுகுமார் வீட்டிற்கு உறவினர்கள் சிலருடன் வந்த கவுரம்மா, சுகுமார் இருந்த வீட்டை பூட்டி, வீடும், நிலமும் தங்களுக்கு வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் இரு தரப்புகக்கும் இடையே தகராறு முற்றியதில் சுப்பிரமணி, திம்மராயன் ஆகியோருடன் சேர்ந்து சுகுமாரை கட்டை, இரும்பு கம்பியால் கவுரம்மா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். சுகுமாரை அடித்துக் கொன்றதாக அவரது தாய் கவுரம்மா, உறவினர்கள் 5 பேர் கைதாகியுள்ளனர்.

சித்தரிப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

ரவுடி கொலை (ஜூன் 17)

ஓசூர் நல்லூர் ராஜாஜி லே அவுட்டை சேர்ந்தவர் அபி என்கிற அபிலாஷ் இவர் மீது ஓசூர் ஹட்கோவில் 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கு, ஓசூர் சிப்காட்டில் 2020ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இதே போல சிப்காட்டில் ஒரு அடிதடி, கொலை மிரட்டல் வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது. ஒரு முறை குண்டர் சட்டத்திலும் அவர் சிறையில் இருந்துள்ளார். அபிலாசும், ஓசூர் பேடரப்பள்ளியை சேர்ந்த சபரிசிங் என்பவரும் நண்பர்கள் இருவரும் சேர்ந்து பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்கள். இதில் திடீரென அவர்களுக்குள் பணம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது .இந்நிலையில் அபிலேஷ் சாலையில் நடந்து வரும் போது சபரிசிங், தனது நண்பரான கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை சேர்ந்த நவீன் என்பவருடன் சேர்ந்து, அவரை வெட்டி சாய்த்துள்ளதாக கூறப்படுகிரது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பெண் கொலை (ஜூன் 19)

கர்நாடகா மாநிலம் மாலூரை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ் மற்றும் ராதா இவர்கள் பாகலூரில் புதிதாக குடி வந்துள்ளனர் . குடிவந்த நான்கு நாளில் அவர்கள் வீடு மூடியே இருந்துள்ளது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல் துறையினர் வந்து வீட்டை திறந்து பார்த்ததில்ல் ராதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடன் இருந்த வெங்கடேஷை காணவில்லை. அவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

விவசாயி கடத்தி கொலை (ஜூன் 22)

சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் முருகப்பா என்கிற முருகன் விவசாயி. இவர் கடந்த 22 ந் தேதி தனது விவசாய நிலத்திற்கு செல்வதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் சென்றார். பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் ஜூன் 23ஆம் தேதி ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரம் அருகே ராஜாபுரத்தில் முருகன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றி காவல்துறையினர் கூறும் போது முருகனும் அம்ரிஷ் என்பவரும் நண்பர்கள். முருகன் தன் நிலம் ஒன்றை விற்பனை செய்தார் . முருகனிடம் நிலம் விற்ற பணம் ரூ.30 லட்சம் இருப்பதை அம்ரிஷ் தெரிந்து கொண்டார். முருகனை கடத்தி சென்று அவரது வீட்டுக்கு போன் செய்து மிரட்டி பணம் பறிக்கலாம் என அம்ரிஷ் முடிவு செய்துள்ளார். பின்னர் தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து முருகனை ஜீப்பில் கடத்த முயன்றுள்ளனர். அப்போது முருகன் வாகனத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யவே அவரை அந்த கும்பல் தாக்கியுள்ளனர். அதில் அவர் இறந்து விட்டார். இதையடுத்து முருகனின் உடலை தொரப்பள்ளி அருகே கல்குவாரி ஒன்றில் தேங்கி இருந்த தண்ணீரில் போட்டு சென்று விட்டனர் என்றனர். இந்த கொலை தொடர்பாக அம்ரிஷ் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர்.

மது போதையில் நடந்த கொலை (ஜூன் 27)

கொலை
படக்குறிப்பு, சசிகுமார்

தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சசிக்குமார் டெம்போ ஓட்டுநர். இவர் தன் நண்பர்களுடன் மதகொண்டப்பள்ளியில் இரவு மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊர் வால்மீகி தெருவை சேர்ந்த டெம்போ ஓட்டுநர் பிரசன்னா தன் நண்பர்களுடன் அருகில் உள்ள பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார். அந்த நேரம் மதுபோதையில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது. அதில் பிரசன்னாவும் அவரது நண்பர்களும் மது பாட்டிலை உடைத்து சசிகுமார் தரப்பினரை சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் சசிகுமார் இறந்து போனார் இந்த வழக்கு தொடர்பாக பிரசன்னா உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யார் பெரியவன் என்ற போட்டியில் நடந்த கொலை (ஜூன் 29)

கொலை
படக்குறிப்பு, உதயகுமார்

தேன்கனிக்கோட்டை தளி அருகே உள்ளகும்ளா புரத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் இவர் மீது கர்நாடக மாநிலத்தில் 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே போல தேன்கனிக்கோட்டையில் வழிப்பறி வழக்கு உள்ளது. இதைத் தவிர குண்டர் சட்டத்திலும் சிறையில் இருந்தவர். கொலை வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்த உதயகுமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் உதயகுமார் காரில் கும்ளாபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடந்த ஒரு கும்பல் காரை வழிமறித்தது இதை பார்த்த உதயகுமார் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் விடாமல் அவரை விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே உதயகுமார் இறந்து போனார். இது ரவுடிகளுக்குள் யார் பெரியவர் என்ற ஈகோவால் நடந்த கொலையாக இருக்கலாம் என்கின்றனர் காவல்துறையினர். ஏற்கெனவே உதயகுமார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை கர்நாடக மாநிலத்தில் கொலை செய்து உடலை தேன்கனிக்கோட்டை அருகே போட்டு சென்றுள்ளதாகவும் அந்த கொலைக்கு பழிவாங்கவே அவர்கள் உதயகுமாரை கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறது காவல்துறை.

ரவுடியை கடத்தி கொன்று புதைப்பு

கொலை
படக்குறிப்பு, மஞ்சுநாத்

ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள கலுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத் பிரபல ரவுடியான இவர் மீது ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி, எப்பகோடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் திடீரென இவர் மாயமானார். இவரைஉறவினர்கள் தேடி வந்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவர்கள் மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் மஞ்சுநாத்தை தேடி வந்தனர்.இந்த நிலையில் மஞ்சுநாத் மாயமான போது கடைசியாக யாரிடம் பேசினார் என்ற தகவல்களை வைத்து காவல்துறையினர் விசாரித்தனர். அதில் மஞ்சுநாத்தை அவருடைய நண்பர் சேத்தன் பேசியது தெரிய வந்தது. சேத்தன் சகோதரியிடம் மஞ்சுநாத் தவறாக நடந்து கொள்ள முயன்றதால் தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கடத்தியதும், உளிவீரனப்பள்ளி என்ற இடத்தில் அவர் கொலை செய்யப்பட்டு உடலை அவர்கள் புதைத்து விட்டதும் பின்னர் தெரிய வந்தது.இதை தொடர்ந்து அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட காவல்துறை விளக்கம் என்ன?

கிருஷ்ணகிரி
படக்குறிப்பு, சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கொலை நகரமாகிறதா கிருஷ்ணகிரி என்ற கேள்வியோடு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வியை பிபிசி தமிழுக்காக சந்தித்தோம்.

"கடந்த ஆண்டு 52 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை 33 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொலை சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. கடந்த மாதத்தில் நடந்த சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை அல்ல. தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக அதிக அளவிலான கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. உதாரணத்துக்கு, அம்மா மகனைக் கொன்றது, மனைவி கணவனை திட்டமிட்டு கொலை செய்தது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த மாதத்தில் நடந்த கொலைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை அல்ல. சில கொலைகள் குடும்ப பிரச்னை காரணமாக நடந்தவை. ஆனால், கொலை குறித்த தகவல் கிடைத்தவுடன் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்துள்ளோம். கடந்த மாதத்தில் நடந்த கொலையில் ஒரு முக்கிய தகவல் கிடைத்ததன் பேரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையையும், அதனால் கொல்லப்பட்டவர் குறித்த தகவலும் கிடைத்தது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்திருக்கிறோம்."

"குற்றச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில், குற்றப்பின்னணி கொண்ட 450-க்கு மேற்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் எந்த குற்றச் செயலில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து உள்ளோம். மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். இதன்மூலம் கர்நாடகாவிலிருந்து மதுப்பொருள்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தி வருகிறோம். மேலும், ஊரடங்கு சமயத்தில் தாபா போன்ற உணவகங்களில் மது பொருள்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதை கண்டறிந்துள்ளோம். அத்தகைய தாபாக்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறோம்."

"நெடுஞ்சாலைகளிலும், மாவட்டத்தின் உள்பகுதிகளிலும் ரோந்துகளை அதிகரித்திருக்கிறோம். இதன்மூலம் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்படும் புகையிலை பொருட்களையும், மதுப்பாட்டில்களையும் அதிகளவில் கைப்பற்றி இருக்கிறோம். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் காவல்துறையினர் இரு சக்கர வாகனங்களில் ரோந்து மேற்கொள்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் என்றால் உடனே இவர்களை அழைக்க காவல்நிலையத்தின் தொலைபேசி எண்களையும், காவல் நிலையத்தில் உள்ள காவலர்களின் செலேப்சி எண்களையும் வழங்கி உள்ளோம். இதன் மூலம் வரும் காலங்களில் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது," என்றார் சாய் சரண் தேஜஸ்வி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :