பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றங்கள் புரிந்தவருக்கு மரண தண்டனை

பட மூலாதாரம், AP

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றத்திற்காக சந்திரபான் சனப் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை வெளியிட்ட மும்பை சிறப்பு மகளிர் நீதிமன்றம் நீதிபதி விருஷாலி ஜோஷி அப்போது கூறுகையில், இதை மிகவும் அரிதான வழக்காக கருத்தில் கொண்டே இது வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கின் குற்றவாளி, குற்றத்தை தெரிந்தே திட்டமிட்டு செய்துள்ளதாகவும் அந்த நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பெண்ணைக் கடத்தியது, பாலியல் வல்லுறவு கொண்டது, கொலை செய்து அந்த குற்றத்தை மூடி மறைக்க முயன்றது போன்ற குற்றங்களுக்காக இன்றைய தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் தீர்ப்பை அறிந்துக்கொண்ட குற்றவாளியான சந்திரபான் சனப் தமது கவலையை ஊடகங்களிடம் வெளியிட்டார். தாம் குற்றவாளி இல்லை என்றும், செய்யாத குற்றத்திற்காக தண்டனையை பெற்றுள்ளதாகவும், சாட்சிகள் எதுவும் இல்லாதபோதே தமக்கு இந்த அநீதி விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறை கூறினார்.

மரணமுற்ற அந்த ஆந்திர மாநிலத்து பெண்ணின் உறவினர்கள் வழக்கின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மென்பொருள் பொறியாளரான அந்த இளம் பெண் 23 வயதுடையவர். கடந்த 2014 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 5ஆம் தேதியன்று ஊரிலிருந்து பயணம் மேற்கொண்ட அவர், காணமால் போனதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் 10 தினங்களுக்கு பிறகு அவரது பிணம் கண்டெடுக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில், அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியாகியது.

தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிந்து மேற்கொண்ட விசாரணையில், சந்திரபான் சனப் கைது செய்யப்பட்டார்.

அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்து தற்போது தான் தீர்ப்பு வெளியாகியுள்ளது.