அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுக: தென்மாவட்டங்களில் தேர்தலில் பலன் தருமா?

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அமமுக

பட மூலாதாரம், @NainarBJP/X

    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக மீண்டும் இணைந்துள்ளது. இதுவரை தான் கடுமையாக எதிர்த்து வந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, தினகரன் அந்தக் கூட்டணியில் இணைந்திருப்பதை அதிமுக வரவேற்றுள்ளது.

இதனால் கூட்டணி பலம் பெற்றுள்ளதாக அதிமுக மற்றும் பாஜக கூறியுள்ள நிலையில், தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தினரின் வாக்குகள் கிடைப்பதற்கு இந்த இணைப்பு உதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக வாக்குவங்கி மீண்டும் பலம் பெறுமென்று அதிமுக தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படும் நிலையில், பாஜக அழுத்தத்தால் ஏற்பட்ட இந்த இணைப்பு தேர்தலில் பலனளிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டுமென்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன்.

தினகரன் இணைந்தாலும் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முக்குலத்தோர் சமுதாய மக்கள் ஏற்க மாட்டார்கள் என்கிறார் அதிமுக முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி. ஆனால் ஜானகி அணி–ஜெயலலிதா அணி பிரிந்து, பின்பு இணைந்து திமுகவை வென்றது போல இந்தத் தேர்தலிலும் இரு கட்சியினரும் இணைந்து பணி செய்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகச் சொல்கிறார் திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா.

அமமுக இணையும் நிகழ்ச்சியில் அதிமுக 'ஆப்சென்ட்'!

பியூஷ் கோயல் முன்னிலையில் அதிமுக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன்

பட மூலாதாரம், @NainarBJP/X

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், திமுக, அதிமுக இரு கட்சிகளின் தலைமையிலும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, விருப்ப மனுக்கள் பெறுதல் போன்ற தேர்தல் பணிகள் வேகமெடுக்கத் துவங்கியுள்ளன. திமுக கூட்டணியில் எந்தக் கட்சிகளும் விலகாமலும், புதிதாகச் சேராமலும் அதே நிலை தொடரும் நிலையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விலகியிருந்த கட்சிகள் இணையத் துவங்கியுள்ளன.

அன்புமணி தலைமையிலான பாமகவைத் தொடர்ந்து, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும் இதில் மீண்டும் இணைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து, அமமுக என்ற புதிய கட்சியை தினகரன் துவக்கியதிலிருந்து, இருவருக்கும் இடையிலான மோதல் மிகக் கடுமையாக இருந்தது. இருவரும் தனிப்பட்ட முறையில், ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் கூட்டணியில் அமமுக இடம் பெறாது என்று தினகரன் திட்டவட்டமாகக் கூறிவந்த நிலையில் இந்த கூட்டணியில் அமமுக இணைந்திருப்பது, தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.

பாஜக மூத்த தலைவர் பியூஷ் கோயல் முன்னிலையில் சென்னையில் ஜனவரி 21 அன்று நடந்த நிகழ்ச்சியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுகவை இணைத்துக் கொண்ட தினகரன், இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்ற முறையில் இந்தக் கூட்டணியில் இணைகிறோம் என்றும், தங்களுக்குள் இருந்தது பங்காளிச் சண்டை என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி கே. பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கூட்டணியில் இணைந்துள்ள மரியாதைக்குரிய தினகரனை வரவேற்று வாழ்த்துவதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்

கூட்டணியில் தினகரன் இணைந்ததை வரவேற்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுகவை வீழ்த்துவதற்காகவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் கூட்டணியில் இணைந்துள்ள தினகரனை வரவேற்று வாழ்த்துவதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அமமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தினகரன் இணைந்த சில மணி நேரத்தில், காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமியைப் பற்றி தினகரனும், தினகரனைப் பற்றி எடப்பாடி பழனிசாமியும் மாறிமாறி முன் வைத்த குற்றச்சாட்டுகள், தனிப்பட்ட விமர்சனங்கள் கொண்ட காணொளிகள் தொகுக்கப்பட்டு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

கடுமையான மோதல் மனநிலையில் இருந்த இருவரும் இணைந்ததன் பின்னணியில் பாஜ கட்சியின் அழுத்தம் இருப்பதாக பலரும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகிப்பதாகவும், கூட்டணியில் எந்தக் கட்சியைச் சேர்ப்பது என்பதை அதிமுகதான் முடிவு செய்யுமென்று அக்கட்சியின் பொதுக்குழுவில் கூறப்பட்டதை நினைவுபடுத்தும் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன், தினகரன் யாரைப் பார்த்து கூட்டணியில் சேர்ந்தார் என்று கேள்வி எழுப்புகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய ப்ரியன், ''தினகரன் அதிமுக தலைவர்களைப் பார்க்கவில்லை. டெல்லி சென்று பாஜக தலைவர்களைத்தான் சந்தித்தார். அவர் சென்னையில் கூட்டணியில் சேரும்போதும் அதிமுகவைச் சேர்ந்த யாருமே இல்லை எனும்போது, அவரை கூட்டணிக்குக் கொண்டு வந்தது பாஜகதான் என்பது தெளிவாகிறது. எடப்பாடி பழனிசாமியை தினகரன் கடுமையாக எதிர்த்தார். துரோகி என்று கூறினார். பழனிசாமியை முதல்வராக அறிவிக்கும் எந்தக் கூட்டணியிலும் அமமுக இடம் பெறாது என்றார். அப்படிக்கூறிய தினகரன், இப்போது ஏன் இப்படி மாறினார் என்றால் அதன் பின்னணியில் பாஜகதான் இருக்கிறது.'' என்றார்.

பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர்
படக்குறிப்பு, பிகாரில் நடந்ததைப் போல தமிழகத்திலும் பல மாற்றங்கள் நடக்கும் என்கிறார் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர்

இந்தக் கூற்றை மறுத்துப் பேசும் பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தமிழகத்தில் இருக்கும் திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தைத் தவிர, வேறெந்த நிர்ப்பந்தமும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடையாது என்றார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தினகரன் ஏற்றுக் கொண்டுவிட்டதால், அவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகளும் முடிவுக்கு வந்துவிட்டன என்கிறார்.

''அரசியலில் எப்போதுமே சூழ்நிலையைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். நேற்றிருந்தது போல இன்று இருக்காது என்பதுதான் எல்லாக் கட்சிகளுக்குமான அனுபவம். அதிமுக–பாஜக சேராது என்றார்கள். சேர்ந்தோம். பாமக வராது என்றார்கள்; வந்தது. தினகரன் சேர வாய்ப்பே இல்லை என்றார்கள். அவரும் வந்துவிட்டார். பாஜக எதிர்ப்பு என்பதில் திமுக கூட்டணிக்கட்சிகள் ஒன்றாக இருப்பதுபோல, திமுக எதிர்ப்பு என்பதில் இந்த கட்சிகள் இணைந்துள்ளன. இறுதியில் பிகாரில் பல கட்சிகள் சேர்ந்து வெற்றி பெற்றதைப் போலவே இங்கேயும் பல மாற்றங்கள் நடக்கும். அதே வெற்றி இங்கேயும் கிடைக்கும்.'' என்றார் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

இதே கருத்தை வேறு கோணத்தில் பிபிசி தமிழிடம் விளக்கினார் அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன். தனது தேர்தல் பரப்புரையைத் துவங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையுமென்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னதன்படியே அத்தனையும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.

''இதை அவர் சொன்னபோது, நாடாளுமன்றத் தேர்தலின்போது இதையேதான் அதிமுக சொன்னது, அப்போது என்ன நடந்தது என்று எல்லோரும் ஏளனம் செய்தனர். இப்போது அவர் சொன்னபடியே, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக முதலில் வந்தது. அடுத்து பாமக வந்தது. இப்போது அமமுக வந்துள்ளது. சில கட்சிகள் விரைவில் வரவுள்ளன. ஆக அவர் சொன்னது நடந்து வருகிறது.'' என்றார் அவர்.

பன்னீர்செல்வமும் கூட்டணியில் இணைவாரா?

ஆனால் இவர்களின் கருத்துகளுக்கு முற்றிலும் மாறாக மற்றொரு கருத்தை முன் வைக்கிறார், அதிமுக முன்னாள் நிர்வாகியும், டிடிவி தினகரனுடன் நெருக்கமாக இருந்தவருமான பெங்களூரு புகழேந்தி. அதிமுக ஆட்சியில் இருந்த காலத்திலிருந்து, இப்போது வரையிலும் எடப்பாடி பழனிசாமிக்கும், தினகரனுக்கும் இடையில் இருந்த மோதல் போலியானது என்றும், அவர்களிடையே ரகசியக் கூட்டணி இருந்தது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

இதற்கான காரணத்தை பிபிசி தமிழிடம் விளக்கிய பெங்களூரு புகழேந்தி, ''முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை தினகரன் எதிர்த்தபோது, அவரை 42 எம்எல்ஏக்கள் சந்தித்தனர். அப்போது மிகப்பெரிய பிளவுக்கு வாய்ப்பு இருந்தது. இவர் உறுதியான முடிவு எடுக்காததால் 18 பேர் மட்டுமே மிஞ்சினர். ஆனால் 18 பேருடைய பதவி மீதான நீதிமன்ற உத்தரவில் மேல் முறையீடு செய்யாமல் தவிர்த்தார்.'' என்றார்.

''ஒரு எம்எல்வுக்கு இவர் மேல் முறையீடுக்குச் சென்றிருந்தாலும் அனைவருடைய பதவியும் காப்பாற்றப் பட்டிருக்கும். எவ்வளவோ நாங்கள் வலியுறுத்தியும் அதைத் தவிர்த்து, பழனிசாமி அரசைக் காப்பாற்றினார். அப்போதே அவர்களுக்குள் ஒரு மறைமுக ஒப்பந்தம் இருந்தது. இப்போது வெளிப்படையாகியுள்ளது. இடையில் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகத் திட்டியதையும், இறந்தாலும் பாஜக கூட்டணிக்குப் போகமாட்டேன் என்று தினகரன் சொன்னதையும் யாரும் மறக்கமாட்டார்கள்.'' என்றார் புகழேந்தி.

திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா
படக்குறிப்பு, தினகரன் மீது பல வழக்குகளை வைத்து அவரை முடக்கவும் வாய்ப்புள்ளதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார் திராவிட இயக்க ஆய்வாளரான துரை கருணா

தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில், எடப்பாடி பழனிசாமியும், தினகரனும் இணைவதில் இருவருக்குமான அரசியல் பாதுகாப்பும் உள்ளடங்கியிருக்கிறது என்கிறார் திராவிட இயக்க ஆய்வாளரான துரை கருணா. மாநிலத்தில் ஆளும் திமுக, மத்தியில் ஆளும் பாஜக இரண்டையும் எதிர்த்துக்கொண்டு அரசியல் செய்வதில் பல சிரமங்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டும் அவர், தினகரன் மீது பல வழக்குகள் உள்ளன. அதை வைத்து அவரை முடக்கவும் வாய்ப்புள்ளதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்.

தினகரனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வமும் விரைவில் இணைவார் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் திமுகவை வீழ்த்த வேண்டுமென்பதற்காக பாஜ கட்சி பலவித தியாகங்களைச் செய்துள்ள நிலையில், அதே காரணத்துக்காக ஓ பன்னீர்செல்வமும் இந்த கூட்டணிக்குள் வருவார் என்ற நம்பிக்கை இருப்பதாகச் சொல்கிறார் எஸ்.ஆர். சேகர்.

பன்னீர்செல்வம் எப்போதுமே பாஜகவுடன்தான் ஒட்டிக்கொண்டிருக்கிறார் என்று கூறும் பெங்களூரு புகழேந்தி, அவரால் வேறு எந்த மாற்று முடிவையும் எடுக்க முடியாது என்கிறார். கூட்டணிக்குள் வரவேண்டுமென்று தினகரனுக்கு பாஜக தரப்பிலிருந்து தரப்பட்ட அழுத்தம், பன்னீர்செல்வத்துக்கும் கண்டிப்பாகத் தரப்பட வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார் பத்திரிக்கையாளர் ப்ரியன்.

இதுபற்றி விளக்கிய ப்ரியன், ''ஆனால் அவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தற்போதுள்ள சூழ்நிலையில் பன்னீர் செல்வத்தால் தவெகவுக்கும் போகமுடியாது. திமுகவுக்குப் போனால் ஒன்றிரண்டு சீட் என்று ஓரம் கட்டிவிடுவார்கள். அதனால் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் அவர் ஒதுங்கி விடுவதற்கான வாய்ப்பும் அதிகமுள்ளது.'' என்றார்.

3 பேரும் இணைந்தால் முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் கிடைக்குமா?

சமீபகாலம் வரையிலும் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி, சசிகலா, தினகரன், ஓ. பன்னீர்செல்வம் என மூவரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். தற்போது கூட்டணியின் முடிவுப்படி, அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, பரப்புரை செய்வதை மூவரையும் ஆதரிக்கும் முக்குலத்தோர் சமுதாய மக்கள் ஏற்பார்களா என்பது பற்றியும் சமூக ஊடகங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

ஆனால் அதிமுகவுக்கு சாதிக்கட்சி என்ற சாயத்தைப் பூசமுயன்றது திமுகதான் என்றும், அதற்கு ஊடகங்கள் துணை போயின என்றும் குற்றம்சாட்டுகிறார் அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை சத்யன். ஒரு கட்சியில் இருந்து வெளியே சென்றவர்கள், அக்கட்சிக்கு எதிராக என்னென்ன குற்றச்சாட்டுகளை முன் வைப்பார்கள் என்பது தமிழக அரசியலை அறிந்தவர்களுக்குத் தெரியும் என்கிறார் அவர்.

அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை சத்யன்
படக்குறிப்பு, இப்போதைய தேவை திமுகவை வீழ்த்துவது மட்டுமே. அதனால் கூட்டணியில் தினகரன் இணைந்திருக்கிறார். என்கிறார் அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை சத்யன்.

''இப்போதும் தினகரன் வந்திருப்பதால் அதிமுக ஒன்றிணைந்ததாக அர்த்தமில்லை. தினகரன் அதிமுகவை விட்டு வெளியே சென்று தனியாகக் கட்சியே துவங்கிவிட்டார். அதனால் அவர் இந்தக் கட்சியைப் பற்றி சொன்னதை யாரும் ஆராயவேண்டியதில்லை. இப்போதைய தேவை திமுகவை வீழ்த்துவது மட்டுமே. அதனால் அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டு, கூட்டணியில் தினகரன் இணைந்திருக்கிறார்.'' என்கிறார் சத்யன்.

அமமுகவுக்கு இருக்கும் வாக்குவங்கி, பெரும்பாலும் சமுதாயம் சார்ந்த வாக்குகள் என்று கூறும் பத்திரிக்கையாளர் ப்ரியன், அதிமுகவில் கோலோச்சிக் கொண்டிருந்த முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகிய மூவரையும் அரசியலில் ஒழித்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என்ற கோபம், அந்த சமுதாய மக்களிடம் இப்போதும் இருக்கிறது என்கிறார்.

''தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் மூவரையும் ஓரம் கட்டியதுடன், வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க முன்வந்து, மீதமுள்ள 7.5 சதவீதத்தில்தான் முக்குலத்தோர் பங்கிட்டுக்கொள்ள வேண்டுமென்றும் கூறியது எடப்பாடி பழனிசாமிதான். அது நடைமுறைக்கு வராவிட்டாலும் இந்த 2 விஷயங்களையும் அந்த மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.'' என்கிறார் பத்திரிக்கையாளர் ப்ரியன்.

''அதனால் எடப்பாடி பழனிசாமி மீது அந்த சமுதாய மக்களுக்கு இருந்த கோபம்தான் கடந்த 2021 தேர்தலில் அமமுகவுக்கு வாக்கு வங்கியாக மாறியது. அவர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து கடுமையாக எதிர்த்தபோது அந்த வாக்குவங்கி அப்படியே இருந்தது. இப்போது அவர் மாறியதற்காக அதுவும் மாறுமென்று எதிர்பார்க்க முடியாது. அரசியல் நிர்ப்பந்தத்துக்காக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தினகரன் ஏற்றுக்கொண்டாலும் அந்த மக்கள் ஏற்பார்களா என்பது சந்தேகமே.'' என்கிறார் அவர்.

தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 20 தொகுதிகளில், அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு அமமுகதான் காரணமென்று சுட்டிக்காட்டும் பலரும், அப்போது அதிமுகவுக்கு எதிராகப் பிரிந்த வாக்குகள் இப்போது முழுமையாகக் கிடைப்பதும் கேள்விக்குறிதான் என்கின்றனர். அது நிச்சயமாக தங்கள் கூட்டணிக்குக் கிடைக்குமென்று நம்புவதாகக் கூறுகிறார் எஸ்.ஆர்.சேகர்.

''முக்குலத்தோர் சமுதாயத்தினரில் பெரும்பாலானவர்கள் காலம் காலமாக அதிமுகவை ஆதரிப்பவர்கள். எம்ஜிஆர் காலத்தில் துவங்கி, தலைமை மாறியபோதும் அவர்கள் அக்கட்சிக்கும், இரட்டை இலைச் சின்னத்துக்கும் எப்போதுமே விசுவாசமாக இருந்திருக்கிறார்கள். ஜெயலலிதா மறைந்த பின்னும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 67 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றதற்கு, அக்கட்சியின் தொண்டர்கள் கட்சியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே தவிர, சமுதாய அபிமானம் கிடையாது.'' என்கிறார் எஸ்.ஆர்.சேகர்.

ஆனால் தினகரனும், பன்னீர் செல்வமும் இந்த கூட்டணியில் இணைந்து பரப்புரை செய்தாலும், முக்குலத்தோர் சமுதாயத்தின் வாக்குகள் அதிமுக தலைமையிலான கூட்டணிக்குக் கிடைக்கவே கிடைக்காது என்கிறார் பெங்களூரு புகழேந்தி. எடப்பாடி பழனிசாமிதான் தங்கள் சமுதாயத்தை மொத்தமாகப் பழி வாங்கி ஒடுக்கியவர் என்ற கோபம் அவர்களிடம் நிறையவே இருக்கிறது என்கிறார் அவர்.

அந்த சமுதாய மக்களில் 90 சதவீதம் பேருக்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலை இருப்பது உண்மைதான் என்று கூறும் துரை கருணா, ''அதையும்விட திமுக எதிர்ப்பும் அவர்களிடம் காணப்படுகிறது. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி அணி–ஜெயலலிதா அணி பிரிந்து, திமுகவை வீழ்த்தும் நோக்குடன் மீண்டும் இணைந்து வென்றது போல இப்போதும் திமுகவுக்கு எதிரான மனநிலையில், அதிமுக, அமமுக கட்சியினர் இணைந்து பணி செய்வார்கள் என்பது என் நம்பிக்கை.'' என்கிறார் துரை கருணா.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வரும் தேர்தலில் 4 முனைப் போட்டி என்று வரும்போது, பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் 2 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவாகவே இருக்குமென்று கூறும் பத்திரிக்கையாளர் ப்ரியன், தென்மாவட்டங்களில் அமமுகவுக்கு இருக்கும் செல்வாக்கைக் கருத்தில் கொண்டே, அந்த வாக்குவங்கியால் வெற்றி திசை மாறிவிடக்கூடாது என்று கருதியே தினகரனை பாஜக இழுத்து வந்துள்ளது என்று விளக்குகிறார்.

''இந்தத் தேர்தலில் தினகரனின் நிலை கடுமையாகத்தான் இருக்கும். எடப்பாடி பழனிசாமி ஒரு வேளை தேர்தலில் வென்று முதல்வரானாலும், அதிக தொகுதிகளில் வென்று கட்சியை மேலும் வலுப்படுத்திவிட்டாலும் தினகரனின் அமமுக கட்சியைக் காலி செய்துவிடுவார். தினகரன் எவ்வளவு இடத்தில் வென்றாலும், அவர் கட்சி சிறியது என்பதால் அவரால் பழனிசாமியை வீழ்த்துவது சாத்தியமில்லை. முதலில் அவர் கட்சிக்கு அதிமுகவினர் வேலை பார்ப்பார்களா என்பதும் சந்தேகம். தவெகவுடன் சேர்ந்திருந்தால் தினகரன் வலுப்பெற்றிருப்பார். அதை அவர் மிஸ் செய்து இப்போது ரிஸ்க் எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது.'' என்கிறார் ப்ரியன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு