பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராய் பயணித்த ரயிலில் வெடித்த குண்டு: இதற்கு உதவிய அறிவியல் மேதை

வைஸ்ராய் லார்ட் இர்வின், ரயிலில் குண்டுவெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், வகார் முஸ்தஃபா
    • பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்

கடந்த 1929ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி கடும் குளிராக இருந்த காலை நேரத்தில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. அப்போது பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராய் லார்ட் இர்வின் மற்றும் அவரது மனைவி பயணம் செய்த சிறப்பு ரயிலில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்தக் குண்டுவெடிப்பு, டெல்லியில் இருந்து ஆறு மைல் தொலைவில் ரயில் பாதையில் நடத்தப்பட்டது.

இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பான செய்தி, அடுத்த நாள் வெளியான தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில் வெளியானது. தென்னிந்தியாவில் இருந்து டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்த லார்ட் இர்வினின் தனிப்பட்ட சிறப்புப் பெட்டி (சலூன் என்றழைக்கப்பட்டது) தாக்குதலில் இருந்து தப்பிவிட்டதாக அந்தச் செய்தி கூறியது.

ரயிலில் இருந்த லார்ட் இர்வின் இந்த வெடிப்பு சத்தத்தை, பனிமூட்டத்தின்போது ரயில்களுக்கு விடப்படும் பனிமூட்ட எச்சரிக்கைச் சமிக்ஞை எனத் தவறாகக் கருதினார். பொதுமக்களோ அதை இர்வினை வரவேற்க முழங்கப்பட்ட பீரங்கிச் சத்தம் என்று நினைத்துக் கொண்டனர்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் பற்றி செய்தி வெளியிட்ட அமெரிக்க நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ், பனிமூட்டம்தான் இர்வின் தம்பதி உயிர் பிழைக்கக் காரணமாக அமைந்தது என்றும், அது "தெய்வீக அருள்" என்றும் தெரிவித்தது.

பைலட் என்ஜின் ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்தைப் பாதுகாப்பாகக் கடந்துவிட்டதாக 'தி ஸ்டேட்ஸ்மேன்' செய்தி வெளியிட்டிருந்தது.

"மொத்தம் 13 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலின் மூன்றாவது பெட்டியான உணவகப் பெட்டியும், அதையடுத்த நான்காவது பெட்டியும் குண்டுவெடிப்பால் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இர்வினின் தனிப்பட்ட சிறப்புப் பெட்டி, இவற்றுக்கு இரு பெட்டிகள் தள்ளி பின்னால் இருந்தது.

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, தாக்குதல் நடத்தியவர்களால் வைஸ்ராயும் அவரது மனைவியும் இருந்த பெட்டியைச் சரியாக அடையாளம் காண முடியவில்லை. குண்டுவெடிப்பு நடந்தபோது, தாங்கள் புதிதாகக் குடியேறப்போகும் மாளிகையைப் பற்றி, இர்வின் தனது மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தார்."

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக வைஸ்ராய் பயணித்த ரயிலின் வேகம் மிகவும் குறைவாக இருந்ததாகவும், இதனால் அந்த ரயில் 30 அடி உயரப் பக்கவாட்டுச் சுவரில் இருந்து கீழே விழுந்து நொறுங்குவது நூலிழையில் தவிர்க்கப்பட்டதாகவும் 'தி டைம்ஸ்' இதழ் குறிப்பிட்டிருந்தது.

"வெடிப்பினால் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த இரண்டு அடி இடைவெளியை ரயிலின் பெட்டிகள் ஒவ்வொன்றாகக் கடந்து சென்றன. அப்போது அவற்றின் அடியில் இருந்த மரத்தால் ஆன ஸ்லீப்பர்கள் தீக்குச்சிகளைப் போலச் சிதறிக் கிடந்தன" என அந்த இதழ் விவரித்தது.

மிகவும் திறமையாகவும் கவனமாகவும் தண்டவாளத்தில் குண்டுகளை வைத்து, அங்கிருந்து 200 கெஜம் தொலைவில் இருந்த பேட்டரி ஒன்றுடன், பூமிக்கு அடியில் சென்ற கம்பி மூலம் அது இணைக்கப்பட்டிருந்தது. இந்த வெடிப்புக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கும் பனிமூட்டமே காரணம் என்று 'தி ஸ்டேட்ஸ்மேன்' எழுதியிருந்தது.

'தி டைம்ஸ்' இதழின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல் அறிவியல் அறிவும் நுட்பமான திறனும் கொண்ட நபர்களால், மிகுந்த எச்சரிக்கையுடன் திட்டமிடப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என்று காவல்துறை கருதியது.

பிரிட்டிஷ் இந்தியா, வைஸ்ராய் லார்ட் இர்வின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராய் லார்ட் இர்வின்

'அரசாங்கத்திற்கு சந்தேகம் வந்துவிடும்'

முனைவர் தர் முகமது பதானின் கூற்றுப்படி, 1922ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மகாத்மா காந்தி திடீரென 'ஒத்துழையாமை இயக்கத்தை' நிறுத்தினார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், காங்கிரஸில் இருந்து புரட்சிகரக் குழு ஒன்று உருவானது. அதற்கு 'இந்துஸ்தான் குடியரசு சங்கம்' (Hindustan Republican Association) என்று பெயரிடப்பட்டது. இந்தச் சங்கம் 1928இல் 'சோஷலிஸ்ட்' என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட பிறகு, சுருக்கமாக HSRA என்று அழைக்கப்பட்டது.

இந்த அமைப்பில் சந்திரசேகர் ஆசாத், பகத் சிங், சுக்தேவ், பிஸ்மில், அஷ்பகுல்லா கான் மற்றும் பல முக்கிய புரட்சியாளர்கள் இருந்தனர். இந்த அமைப்பின் கொள்கை அறிக்கையான 'தி ஃபிலாசஃபி ஆஃப் பாம்' (The Philosophy of Bomb) என்பதை பகவதி சரண் வோஹ்ரா எழுதினார்.

அபிஜித் பால்ராவ் தனது 'The Man Who Avenged Bhagat Singh' என்ற புத்தகத்தில், ஒரு மாலை வேளையில் பகவதி சரண் வோஹ்ரா பின்வருமாறு கூறியதை விரிவாக எழுதியுள்ளார்: "நமது தோழர்கள் சிறையில் உள்ளனர், பல திட்டங்கள் தோல்வியடைந்துவிட்டன, நீதி என்ற பெயரில் அநீதி தொடர்கிறது. பிரிட்டன் நெருப்போடு விளையாடுகிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த, நாம் பெரிய அளவிலான நடவடிக்கையை எடுப்பது அவசியம்."

அதைக் கேட்ட யஷ்பால், "உங்கள் ஆலோசனை என்ன?" என்று கேட்டார். யஷ்பாலுக்கு பதிலளித்த பகவதி, "பாம்பின் தலையைத் துண்டிப்பது" என்றார். அதற்கு ஆசாத், "அதன் அர்த்தம் வைஸ்ராய் லார்ட் இர்வினை படுகொலை செய்வது" என்று விளக்கினார். 'வயர்லெஸ்' என்று அழைக்கப்பட்ட ஹன்ஸ்ராஜ் என்பவர் வரவழைக்கப்பட்டார். அவர், ரிமோட் மூலம் வெடிக்க வைக்கக்கூடிய குண்டை தன்னால் உருவாக்க முடியும் என்று கூறினார்.

யஷ்பாலின் சுயசரிதையான 'Yashpal Looks Back' புத்தகத்தின்படி, தரம்பால் யஷ்பாலுக்கு தனது பால்ய நண்பரும் நிபுணத்துவம் வாய்ந்த எலக்ட்ரீஷியனுமான ஹன்ஸ்ராஜ் 'வயர்லெஸ்' என்பவரிடம் உதவி பெற அறிவுறுத்தினார்.

"ஹன்ஸ்ராஜ் உதவி செய்யத் தயாராக இருந்தார். அதுமட்டுமல்லாமல், தன்னால் வெடிகுண்டுக்குள் பொருத்தக்கூடிய சிறிய சாதனத்தையும், கம்பிகள் அல்லது வேறு எதுவுமின்றி வெடிகுண்டுடன் இணைக்கக்கூடிய மற்றொரு சிறிய சாதனத்தையும் உருவாக்க முடியும் என்றும், அது குண்டிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருக்கும், முழு அமைப்பையும் கட்டுப்படுத்தும் என்றும் கூறினார்."

"ஆனால், பிறகு ஹன்ஸ்ராஜ் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். இத்தகைய மேம்பட்ட கருவியை தன்னால் மட்டுமே உருவாக்க முடியும் என்பது அரசுக்குத் தெரியும் என்பதால், அவர்களுக்குத் தன் மீது சந்தேகம் ஏற்படும் என்று அவர் விளக்கம் கூறினார். ஹன்ஸ்ராஜ் நேர்மறையானவராக உற்சாகத்துடன் இருந்தார், அவர் மின்சாரத்தைப் பயன்படுத்தி அற்புதமான சாதனைகளைச் செய்யக்கூடியவர்."

ஹன்ஸ்ராஜ் வயர்லெஸ், மிர்சா நசீம்

பட மூலாதாரம், makeheritagefun

படக்குறிப்பு, ஹன்ஸ்ராஜ் வயர்லெஸின் நண்பர் மிர்சா நசீம்

'ஹன்ஸ்ராஜ் வயர்லெஸ்'

ஹன்ஸ்ராஜ் 'வயர்லெஸ்' தெற்கு பஞ்சாபின் லையா நகரிலிருந்து மத்திய பஞ்சாபின் லயல்பூர் (இப்போது பைசலாபாத்) நகருக்கும், பின்னர் மேற்படிப்புக்காக பஞ்சாபின் தலைநகரான லாகூருக்கும் சென்றார்.

ஹன்ஸ்ராஜின் பள்ளித் தோழரான மெஹர் அப்துல் ஹக், 'ஜோ ஹம் பே குஸ்ரி' என்ற தனது சுயசரிதையில் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே விசித்திரமான டார்ச் விளக்கு ஒன்றைத் தயாரித்ததாகவும், அதன் ஒளியைப் பார்த்தவர்களுக்கு உடனே தூக்கம் வந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"அந்த நாட்களில், வயர்லெஸ் தொடர்பான கண்டுபிடிப்புகள் பொதுப் பயன்பாட்டிற்கு வரவில்லை. அப்போது, ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கும் இந்திய வைஸ்ராய்க்கும் இடையே சில முக்கியமான உரையாடல் நடந்து கொண்டிருந்தது. என்னுடைய இந்த நண்பர், தான் கண்டுபிடித்த வயர்லெஸ் சாதனத்தின் மூலம் காற்றில் இருந்து அதைப் புரிந்துகொண்டு மறுநாள் நாளிதழ்களில் வெளியிட்டார்."

"அன்றிலிருந்து, 'வயர்லெஸ்' என்பது அவரது பெயரின் ஒரு பகுதியாக மாறியது, அவர் 'ஹன்ஸ்ராஜ் வயர்லெஸ்' என்று பிரபலமானார்."

கடந்த 2016ஆம் ஆண்டில், இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய புரட்சியாளரான மிர்சா நசீம் சாங்கேசியை வரலாறு தொடர்பான ஒரு இணையதளத்திற்காக ஆயிஷா சயீத் நேர்காணல் செய்தார். அப்போது டெல்லியில் வசித்து வந்த 106 வயதான சாங்கேசி தனது நேர்காணலில், தான் தனது கூட்டாளிகளான சலாவுதீன் மற்றும் ஹன்ஸ்ராஜ் வயர்லெஸுடன் சேர்ந்து, லார்ட் இர்வின் பயணித்த ரயிலுக்கு அடியில் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததை நினைவுகூர்ந்தார்.

"நாங்கள் ஹார்டிங் பாலம் அருகே ரயில் பாதையில் வெடிகுண்டு ஒன்றை வைத்துவிட்டு காட்டில் ஒளிந்து கொண்டோம். அந்த நாட்களில் பிரகதி மைதானம் காடாக இருந்தது. லார்ட் இர்வின் பயணித்த ரயில் கடந்து சென்றபோது குண்டு வெடித்தது. ஆனால் அந்தத் தாக்குதலில் இருந்து அவர் தப்பிவிட்டதாக பின்னர் எங்களுக்குத் தெரிய வந்தது."

கமலேஷ் மோகன் தனது 'Militant Nationalism in Punjab' என்ற புத்தகத்தில், இந்திரபாலும் பக்ராமும் யஷ்பாலுடன் டெல்லி செங்கோட்டைக்குச் சென்று 1929 டிசம்பர் 22 மற்றும் 23க்கு இடையிலான இரவில் குண்டுகள், கம்பிகள் போன்றவற்றை வைத்ததாக எழுதியுள்ளார்.

"மறுநாள் அதிகாலையில், யஷ்பாலும் பக்ராமும் சம்பவ இடத்திற்கு வந்தனர். கடும் பனிமூட்டம் காரணமாக, வைஸ்ராய் பெட்டி வரும்போது பொத்தானை அழுத்த யஷ்பால் நினைத்தாலும், அவரால் சரியான நேரத்தைக் கணக்கிட முடியவில்லை, இருப்பினும் ஒரு வெடிப்புச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது."

யஷ்பாலின் கூற்றுப்படி, "ரயில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன், இன்ஜினுக்கு முன்னால் குண்டை வெடிக்கச் செய்து அதைத் தடம் புரண்டு கவிழச் செய்வதுதான் எங்கள் திட்டம். பனிமூட்டம் காரணமாக, பேட்டரி சுவிட்சை எப்போது அழுத்த வேண்டும் என்பதை யூகிக்க ரயிலின் சத்தத்தைக் கேட்க வேண்டியிருந்தது."

"நான் மூச்சைப் பிடித்துக் கொண்டு, என் காதுகளை கூர்மைப்படுத்திக் கொண்டே, என் கைகளை சுவிட்சில் வைத்து காத்துக் கொண்டிருந்தேன். ரயில் வரும் சத்தத்தை கேட்ட பின்னர் சுவிட்சை அழுத்தினேன், பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இஞ்சின் கவிழவில்லை, ரயில் புதுடெல்லியை நோக்கி வேகமாகச் சென்றது."

ராணுவ சீருடை அணிந்திருந்த யஷ்பாலுக்கு உதவியாளராக பக்ராம் இருந்தார். அவர்களின் சீருடையே அவர்களை காவல்துறையிடம் இருந்து தப்பிக்கச் செய்ததாக மோகன் எழுதியுள்ளார்.

மகாத்மா காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகாத்மா காந்தி, 1922ஆண்டின் தொடக்கத்தில், திடீரென ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸில் இருந்து புரட்சிகரக் குழு ஒன்று உருவானது

யஷ்பாலின் கூற்றுப்படி: "இந்திரபால், ஹன்ஸ்ராஜ், பக்ராம் ஆகியோர் அதிகாலை நான்கு மணி ரயிலில் லாகூர் திரும்புவதே திட்டம். மேலும், லேக்ராம் ரோதக் செல்வது என்றும், பகவதி காசியாபாத் நிலையத்தில் எனக்காகக் காத்திருப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது."

பகவதி நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தார். அவரது கண்கள், "என்ன நடந்தது?" என்று கேட்டன. 'ஒன்றும் நடக்கவில்லை' என்று நான் கைகளால் சைகை செய்தேன். ஒருவேளை ஹன்ஸ்ராஜின் பேட்டரி பழுதாகியிருக்குமோ என்று பகவதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. நான் அவரிடம், 'வெடிச்சத்தம் மிகவும் பலமாக இருந்தது, இருந்தாலும் ரயிலுக்கு பெரியளவில் சேதம் எதுவும் ஏற்பட்டிருக்கும் என்று தோன்றவில்லை' என்று கூறினேன்."

"பகவதியும் நானும் பயணிகள் டிராம் ரயிலில் மொராதாபாத்துக்கு புறப்பட்டோம். பகவதி எளிய உடையை அணிந்திருந்தார், நான் ராணுவ சீருடையில் இருந்து சிவில் உடைகளுக்கு மாறியிருந்தேன். நாங்கள் இருவரும் டிராமில் அமைதியாகவும் அதே நேரத்தில் சோகமாகவும் இருந்தோம். டிராம் மொராதாபாத்தை அடைந்ததும், ஒரு நாளிதழ் விற்பனையாளர், 'முக்கியச் செய்தி! வைஸ்ராயின் ரயிலுக்கு அடியில் குண்டு வெடித்தது! ரயில்வே பாதை தகர்ந்தது! ஒரு பெட்டி நாசம்! ஒரு நபர் பலி!' என்று கத்துவதைக் கேட்டோம்."

முனைவர் பதானின் கூற்றுப்படி, HSRA-வின் லாகூர் பிரிவு பின்னர் தனியாகப் பிரிந்து ஹன்ஸ்ராஜ் "வயர்லெஸ்" தலைமையில் "அதிஷி சக்ரா" என்ற பெயரில் வேறொரு அமைப்பாக நிறுவப்பட்டது. இந்த அமைப்பு 1930 ஜூன் மாதம் பஞ்சாப் முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்தியது.

இர்ஃபான் ஹபீப் தனது "To Make the Deaf Here: Ideology and Program of Bhagat Singh" என்ற புத்தகத்தில், ஹன்ஸ்ராஜ் "வயர்லெஸ்", இந்திரபால் ஆகியோர் பஞ்சாபில் 'ஆதிஷி சக்ரா' என்ற அமைப்பை உருவாக்கியதற்குக் காரணம், அதை HSRA அமைப்போடு தொடர்புபடுத்தக் கூடாது என்பதற்காகவே என்று குறிப்பிட்டுள்ளார். பல இடங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கான திட்டத்தையும் ஹன்ஸ்ராஜ் தயாரித்திருந்தார்.

சிறப்பு ரயில், குண்டுவெடிப்புச் சம்பவம்

பட மூலாதாரம், Waqar Mustafa

'புரட்சிகரக் கட்சியில் பணியாற்றுவது யாருக்கும் தெரியாது'

பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பிறகு,'வயர்லெஸ்' தொடர்பான கதைகள் ஜாம்பாஸ் மிர்சாவின் எழுத்தில் 'மஜ்லிஸ்-இ-அஹ்ரார்' அமைப்பின் 'தப்சரா' என்ற மாதாந்திர இதழில் 1960களில் தொடராக வெளிவந்தன.

'வயர்லெஸ்' அதில் பின்வருமாறு எழுதுகிறார்: "லார்ட் இர்வினின் சிறப்பு ரயில் மீதான குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்திருந்தது. பஞ்சாபின் ஏழு நகரங்களில் ஒரே நேரத்தில் குண்டுகள் வெடித்தன. பஞ்சாபின் பல நகரங்களில் புரட்சியாளர்களின் பல மையங்கள் உருவாகியிருந்தன. ஆனால் இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி பிரிட்டிஷ் அரசுக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை."

அவரது நண்பர் அம்ரீக் சிங், லாகூரின் சையத் மித்தா சந்தையில் ஒரு கடையில் லஸ்ஸி குடித்துக் கொண்டிருந்தபோது, வெடிமருந்து நிரப்பப்பட்ட ஒரு சூட்கேஸை அங்கேயே வைத்ததாகவும், அது நெருப்புக்கு அருகில் இருந்ததால் வெடித்ததாகவும் 'வயர்லெஸ்' குறிப்பிட்டுள்ளார்.

அதில் காயமடைந்த அம்ரீக் சிங், லாகூரின் குவால் மண்டியில் உள்ள தங்களுடைய மையத்திற்குத் திரும்பினார். போலீசார் அங்கு அவரைப் பின்தொடர்ந்து சென்று அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

"நான் அங்கிருந்து ஏற்கெனவே கிளம்பிவிட்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த சூட்கேஸில் என்னுடைய கோட் இருந்தது. அந்த கோட்டில் உள்ள பையில் எனது பெயருடன் கூடிய டைரி ஒன்று இருந்தது. பஞ்சாப் முழுவதும் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு நடவடிக்கைகள் குறித்த முழு கோப்பும் அதில் இருந்தது. அதுமட்டுமின்றி, வைஸ்ராய் ரயில் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட பேட்டரியும் அதில்தான் இருந்தது."

இது குறித்து மெஹர் அப்துல் ஹக் இவ்வாறு எழுதுகிறார்: "ஒருமுறை, கோடை விடுமுறையின்போது, ​​நான் பஹவல்பூரில் இருந்து லையா நகருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஷெர்ஷா ரயில் நிலையத்தில் ரயில்களை மாற்ற வேண்டியிருந்தது. அதில், என் வகுப்புத் தோழனின் படத்துடன் கூடிய ஒரு விளம்பரத்தைக் கண்டேன்." அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருந்த அந்த விளம்பரத்தில், "ஹன்ஸ்ராஜ் வயர்லெஸை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10,000 ரூபாய் வெகுமதி வழங்கப்படும்" என்று எழுதப்பட்டிருந்தது.

'வயர்லெஸ்' தனது குறிப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்: அவர் தனது நண்பர் ஒருவரிடம், தன் வீட்டிலிருந்து 100 ரூபாய் வாங்கி வருமாறு கேட்டுக்கொண்டார். "எனது குடும்பத்தினர் காவல்துறையினரால் எவ்வளவு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதை அந்த நண்பர் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.

நான் உடனடியாக ரயில் நிலையத்திற்குச் சென்றேன். தாடி வளர்ந்திருந்தது, மிகவும் கிழிந்த பழைய துணிகளை அணிந்துகொண்டு பிளாட்பாரத்தின் மூலையில் பதுங்கி அமர்ந்திருந்தேன். ஓரிரு முறை சில போலீசார் எனக்கு அருகில் வந்து அமர்ந்து என்னைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்ததையும் கேட்டேன். அவர்கள் உரையாடலில் இருந்து பல முக்கியமான தகவல்களைத் தெரிந்துக் கொண்டேன்."

மேலும், தான் லாகூரிலிருந்து முல்தானுக்கும், அங்கிருந்து சிந்து மாகாணத்திற்கும் தப்பிச் சென்றது எப்படி என்பதை அவர் தனது சுயசரிதையில் விவரித்துள்ளார்.

 ஹன்ஸ்ராஜ் 'வயர்லெஸ்'

பட மூலாதாரம், Waqar Mustafa

சிந்து மாகாணத்தில் ஹன்ஸ்ராஜ் 'வயர்லெஸ்'

முனைவர் தர் முகமது பதான் இவ்வாறு எழுதுகிறார்: "ஆல்பிரட் பூங்காவில் போலீசாருடன் நடந்த மோதலின்போது சந்திரசேகர் ஆசாத் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிர்நீத்தார். பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் 1931 மார்ச் மாதம் தூக்கிலிடப்பட்டனர். ஆசாத்தின் மறைவுக்குப் பிறகு, ஒருங்கிணைந்த தலைமை இல்லாமல் போனதால், அமைப்பு பிராந்தியக் குழுக்களாகப் பிரிந்து, ஒருங்கிணைப்பு இன்றிச் செயல்படத் தொடங்கியது."

இத்தகைய சூழ்நிலையில், ஹன்ஸ்ராஜ் 'வயர்லெஸ்' சிந்து மாகாணத்தைத் தனது பாதுகாப்பான புகலிடமாக மாற்றிக் கொண்டார். அந்த நேரத்தில் சிந்துவில் இந்து மற்றும் இஸ்லாமிய புரட்சியாளர்கள் இருவருமே தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான ஹர் இயக்கம் உச்சத்தில் இருந்தது. மேலும் சுபாஷ் சந்திர போஸின் வருகை இந்து இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஹன்ஸ்ராஜ் குறிப்பாக இந்து இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்தார், ஆனால் அவர் சிந்துவில் பிடிபட்டார்.

சிந்துவில் அவர் அனுபவித்த சிறைவாசம் மற்றும் சித்திரவதைகள் குறித்த கதைகள் அவரது சுயசரிதையில் காணப்படுகின்றன. அவரது நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்கள் சிந்தி மொழியில் கிடைக்கின்றன. தடுப்புக் காவலில் அவர் இருந்தது குறித்தும், வன்முறையைக் கைவிடுவதாக உறுதியளித்ததன் பேரில் அவரை விடுவிப்பது குறித்தும் சிந்து சட்டமன்றத்தில் பலமுறை அதிகாரபூர்வ விவாதங்கள் நடந்தன.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஒரு 'ஷோ-மேன்' ஆக உருவெடுத்தார். டிக்கெட் கட்டணம் வசூலித்துத் தனது கண்டுபிடிப்புகளை மக்களுக்குக் காட்டத் தொடங்கினார். ரேடியோ உபகரணங்கள், ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இயந்திரங்கள், தானியங்கி காலணி பாலிஷ் இயந்திரம், கைகாட்டியவுடன் எரியும் மற்றும் அணையும் மின்விளக்கு, ஒலிப்பதிவு செய்யும் சாதனம் (காந்த டேப்கள் புழக்கத்திற்கு வராத காலம்) போன்றவற்றை அவர் உருவாக்கினார். 1944-45இல் லாகூரில் அவர் நடத்திய கண்காட்சிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, 'வயர்லெஸ்' கிழக்கு பஞ்சாபில் உள்ள ஜலந்தர் நகரத்திற்குச் சென்றுவிட்டார். 1948 ஜனவரி 16 அன்று இந்தியாவின் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் சில தகவல்கள் தெரிய வருகின்றன.

அந்தக் கடிதத்தில், "ஹன்ஸ்ராஜிடம் அபாரமான திறமையும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆற்றலும் உள்ளன. பொதுநலன் கருதி அவரை ஊக்குவிக்க வேண்டும். அரசாங்கம் காலியாக உள்ள தொழிற்சாலை ஒன்றை ஏற்று நடத்தி, அதில் ஹன்ஸ்ராஜை நிபுணராகச் சேர்த்துக் கொண்டால் அது பயனுள்ளதாக இருக்கும். இதில் தோல்வி அடைந்தால் நஷ்டம் குறைவு, வெற்றி பெற்றால் வேலைவாய்ப்புகளும் புதிய வாய்ப்புகளும் உருவாகும்" என்று நேரு எழுதியுள்ளார்.

ஹன்ஸ்ராஜ் வயர்லெஸ், மிர்சா நசீம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சுதந்திரத்திற்குப் பிறகு, அவர் பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் திருவிழாக்களில் தனது கண்காட்சிகளைத் தொடர்ந்தார். 1950களில், தொலைதூரத்தில் இருந்தே ஒரு வாகனத்தின் இஞ்சினை அணைக்கக் கூடிய கருவி ஒன்றையும் அவர் காட்சிப்படுத்தினார்.

'வயர்லெஸ்' தனது சைக்கிளில் பல்வேறு வகையான பைகளைச் சுமந்து சென்று, பள்ளிகளில் அறிவியல் பரிசோதனைகளைச் செய்து அதன் மூலம் தனது வாழ்க்கையை நடத்தி வந்ததாக 'தி ட்ரிப்யூன்' நாளிதழில் டி.எஸ்.சீமா எழுதியிருக்கிறார்.

"கடந்த 1958ஆம் ஆண்டு, நான் பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது, ​​அருகிலுள்ள கல்லூரியின் அரங்கத்தில் அவரது நிகழ்ச்சி பற்றி எங்களுக்குச் சொல்லப்பட்டது. மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அங்கு இருந்தனர். ஒரு குட்டையான, புன்னகையுடன் கூடிய மனிதர் கையசைத்து எங்களை வரவேற்றார். சில நிமிடங்களில், ஓர் எளிமையான இடத்தை தயார் செய்தார்."

"அழுக்கடைந்த துணியைக் கொண்டு தற்காலிகமாக ஓர் அறையை உருவாக்கி, அதற்குள் ஆட்கள் நுழையும் போதும் வெளியேறும் போதும் மின்விளக்கு தானாக எரிந்து அணைவதைக் காட்டினார். பிறகு துருப்பிடித்த குழாய் ஒன்றின் அடியில் கையை வைத்தால் தண்ணீர் தானாக வருவதும், கையை எடுத்தால் நின்றுவிடுவதுமான வித்தையைச் செய்தார். இவை அனைத்தும் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தன" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"மிகவும் பாராட்டப்பட்ட இயந்திரம் தானியங்கி ஷூ பாலிஷ் இயந்திரம். மாணவர் ஒருவர் மரப்பெட்டி ஒன்றில் தனது ஷூவை வைத்தார். மோட்டார் ஓடியது, அது நின்றபோது ஷூ பளபளப்பாக மாறியிருந்தது."

டி.எஸ். சீமாவின் கருத்துப்படி, ஹன்ஸ்ராஜ் 'வயர்லெஸ்' தனது காலத்திற்கு மிகவும் முற்பட்ட ஒரு மனிதராகத் திகழ்ந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு