சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை நடந்த ஓராண்டுக்கு பிறகும் நீதிக்காக காத்திருக்கும் குடும்பம்

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரும் அவருடைய மகன் பென்னிக்சும் இணைந்து அங்குள்ள காமராஜர் சிலை அருகே செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது ஜூன் 19ஆம் தேதி மாலை 7.30 மணியளவில் பென்னிக்ஸ் கடையில் இருந்தார்.
குறித்த நேரத்திற்குள் கடையை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பென்னிக்சின் தந்தை ஜெயராஜ் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும் பென்னிக்சும் அங்கே சென்றார். தனது தந்தை ஏன் கைது செய்யப்பட்டார் என பென்னிக்ஸ் அங்கிருந்த காவலர்களிடம் கேள்வி எழுப்பியதும் அவரைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கினர். "எவ்வளவு தைரியம் இருந்தா போலீஸை எதிர்த்துப் பேசுவ" என்று சொல்லியபடியே பென்னிக்சை காவலர்கள் தாக்கியதாக, காவல் நிலையத்திற்கு வெளியில் காத்திருந்தவர்கள் கூறினர்.
சிறிது நேரத்தில் காவல்துறை துணை ஆய்வாளர் ரகு கணேஷ் காவல் நிலையத்திற்கு வந்தார். இதற்குப் பிறகு ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்திற்குள் அழைக்கப்பட்டு, பென்னிக்சும் அவரது தந்தையும் தாக்கப்பட்டனர். பென்னிக்சின் வழக்கறிஞர்கள், அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
இரவு முழுவதும் பென்னிக்சும் ஜெயராஜும் காவலர்களாலும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினரால் தாக்கப்பட்டனர். ஜூன் 20ஆம் தேதி பென்னிக்சிற்கும் அவரது தந்தை ஜெயராஜிற்கும் 6க்கும் மேற்பட்ட லுங்கிகள் வழங்கப்பட்டன. இருந்தபோதும் எல்லா லுங்கிகளும் ஆசன வாயிலிருந்து வழிந்த ரத்தத்தால் நனைந்து போயின.

இதற்குப் பிறகு பென்னிக்சும் ஜெயராஜும் மருத்துவச் சான்றிதழைப் பெறுவதற்காக கோவில்பட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பிறகு சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் டி. சரவணன் முன்பாக ஆஜர்படுத்த கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சரவணன் தன் வீட்டின் பால்கனியில் இருந்தபடியே, கையை அசைத்து அவர்களை அழைத்துச் செல்லும்படி கூறினார். பென்னிக்சும் ஜெயராஜும் நீதிமன்ற நடுவரால் சோதிக்கப்படவேயில்லை.
இதன் பிறகு, இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அங்கு இருவருக்கும் ரத்தப்போக்கு இருந்ததால், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உடம்பிற்குள் இருந்த ரத்தக் கசிவால் அங்கு ஜூன் 22ஆம் தேதி இரவு 9 மணிக்கு பென்னிக்ஸ் மரணமடைந்தார். நுரையீரலில் ஏற்பட்ட காயத்தால் ஜூன் 23ஆம் தேதி காலை 5.40 மணிக்கு ஜெயராஜும் மரணமடைந்தார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஜூன் 24ஆம் தேதியன்று தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் கையில் எடுத்தது. பிரேதப் பரிசோதனையை வீடியோ எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி குற்றவியல் நடுவர் எம்.எஸ். பாரதிதாசன் என்பவருக்கு உத்தரவிட்டது. இதற்குப் பிறகு மாநில மனித உரிமை ஆணையமும் இந்த விவகாரத்தை விசாரிக்க ஆரம்பித்தது.

பட மூலாதாரம், TWITTER
ஆனால், தான் விசாரணை நடத்தச் சென்றபோது அங்கிருந்த கூடுதல் எஸ்பி டி. குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் முன்னிலையில் அந்த காவல் நிலையத்திலிருந்த காவலர் மகாராஜன், தன்னிடம் மிக மோசமாகவும் தரக்குறைவாகவும் நடந்து கொண்டதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக இதனைப் பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தென் மண்டல ஐ.ஜிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மகாராஜன் இடைநீக்கம் செய்யப்பட்டார். டி. குமார், சி. பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக வருவாய்த துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து இந்திய காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக காவல் நிலையம் ஒன்று வருவாய்த் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட் சம்பவமாக இது சமூக ஊடக பயனர்களால் அழைக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு துணை ஆய்வாளர்கள், ஒரு ஆய்வாளர் உள்ளிட்ட பத்துப் பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சம்பவ நாளில் காவல் நிலையத்தில் பணியில்இருந்தவர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையில் உள்ளபோதே உடல் நலக் குறைவால் பால்துரை உயிரிழந்தார். இதன் பிறகு இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பட மூலாதாரம், TWITTER
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்தது. "தந்தை - மகன் உயிரிழப்பிற்கு குற்றம் சாட்டப்பட்டுள்ள பத்து காவல்துறையினருமே காரணம்" என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.
இந்த வழக்கு முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் விசாரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு வழக்கு மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதில் சிறையில் உள்ள 9 காவல்துறையினரும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திலும் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆய்வாளர் ஸ்ரீதரும் உதவி ஆய்வாளர் ரகு கணேஷும் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இப்போது இந்த வழக்கு ஒரு சிறப்பு அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பென்னிக்சின் சகோதரி பெர்சி, எழுத்தர் பியூலா, கோவில்பட்டி கிளைச் சிறையின் கண்காணிப்பாளர் சங்கர் ஆகிய இருவரிடம் மட்டுமே விசாரணை முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை ஆறு மாதத்திற்குள் நிறைவுசெய்ய வேண்டுமென கடந்த மார்ச் 18ஆம் தேதியன்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.
"மூன்றாவது சாட்சியத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்து இந்த வழக்கிற்கு தடை வாங்க உச்ச நீதிமன்றத்தில் முயற்சித்து வருகிறார்கள். வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற ஆணைக்கும் தடை வாங்க முயற்சிக்கிறார்கள். ஆனால், இதுவரை தடை வழங்கப்படவில்லை. கொரோனா காரணமாக வழக்கு நடப்பது தள்ளிப்போனது. இந்த நிலையில், இந்தத் தாக்குதலை நேரில் பார்த்த காவலரான பியூலாவுக்கு ஜூலை 2ஆம் தேதி ஆஜராகி சாட்சியம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது" என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றால் தங்களுக்கு நீதி கிடைக்காது; ஆகவே வழக்கை கேரளாவுக்கு மாற்ற வேண்டும் என ரகு கணேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு என்னென்ன உணவுகளைச் சாப்பிடக் கூடாது?
- இந்தியாவில் வரவிருக்கும் புதிய கொரோனா தடுப்பூசிகள் - பட்டியல் இதோ
- பேய் பிடித்தல் என்பது உண்மையா? - மருத்துவ உலகம் சொல்வது என்ன?
- கமலின் எதிர்கால அரசியல்: தனி அறை விசாரணைகளின் பின்னணி தகவல்கள்
- ஆப்பிரிக்க வைரத்தை தேடி அலைந்த மக்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்
- சிறுவனுக்கு பேய் பிடித்ததாக கூறி அடித்து கொன்ற தாய் உட்பட 3 பெண்கள்
- கொரோனா தடுப்பூசியால் வயிற்றில் ரத்தம் உறையுமா? இரு சம்பவங்கள் எழுப்பும் கேள்வியும் பதிலும்
- தமிழ்நாடு ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
- நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தமிழ்நாடு பாஜகவினர் கடுமையாக விமர்சிப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












