சாத்தான்குளம் இரட்டை மரணம்: உயிரிழந்த ஜெயராஜ் மகளுக்கு அரசு பணி

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினை இன்று வழங்கியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் விசாரணையின் போது கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடத்திவருகிறது.
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதியின்அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என கடந்த ஜுன் மாதம் 24ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடிமாவட்டம், சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிஸிக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வழங்கினார்.
தமிழக முதல்வரிடம் இருந்து பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பெர்சி, செய்தியாளர்களிடம் பேசுகையில், "தந்தை, அண்ணன் கொலை வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். அதற்கு நீதிமன்றமும் தமிழக அரசும் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். வேதனையில் இருந்து மீள்வதற்காக அரசு தனக்கு வேலை தந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மற்றும் ஜெயராஜ் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்

சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஏபிஜே மொபைல்ஸ் என்ற பெயரில் ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர்.
ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஜூன் 19ஆம் தேதியன்று பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.
இதற்குப் பிறகு, பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜை கைது செய்த காவல்துறையினர், 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திங்கட்கிழமையன்று (ஜூன் 22) இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவருகிறது.
பிற செய்திகள்:
- அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ்: ரஜினி முன்னிறுத்தும் வேட்பாளரா? என்ன சொல்கிறார் அவர்?
- மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் - உயர்நீதிமன்றம்
- 30 நொடிகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்கிய இஸ்ரேல்
- கதாநாயகனாக சித்தரிக்கப்படும் சர்ச்சில் – கேள்வி எழுப்பும் இந்தியர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












