கொரோனாவால் பெற்றோரை இழந்த 5 வயது குழந்தையை வளர்க்கத் துடிக்கும் 79 வயது மூதாட்டி - நெகிழ்ச்சி கதை

பெற்றோரை இழந்த 5 வயது தத்து பிள்ளையை வளர்க்க துடிக்கும் 79 வயது மூதாட்டியின் நெகிழ்ச்சி கதை
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை, நாடு முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 15 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளனர். இதுபோன்று பெற்றோரை இழந்து பல குழந்தைகள் தவிக்கும் இந்த சூழ்நிலையில், கடலூர் அருகே தள்ளாத வயதிலும் பெற்றோரை இழந்த ஐந்து வயது தத்து பிள்ளையை வளர்க்க துடிக்கு 79 வயதுடைய மூதாட்டி - பேரன் குறித்து இந்த கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்த்தவர் ஞானம். அவரது மனைவி அருள்விழி பார்வைக் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியான இவர், கடலூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். ஞானம் - அருள்விழி தம்பதிகளுக்கு திருமணமாகி குழந்தை இல்லாத காரணத்தினால், குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குழந்தையின் பெற்றோர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டனர்.

கெஜலட்சுமி
படக்குறிப்பு, கெஜலட்சுமி

இதனால், 5 வயதுடைய குழந்தை மீண்டும் தாய், தந்தை இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குழந்தை இருக்கும் வீடு முழுவதும் விளையாட்டு சாமான்களும், சுவற்றில் இந்த மழலையின் கிறுக்கல்களும் ஞானம், அருள்விழி தம்பதியர் இந்த குழந்தை மீது வைத்திருந்த அன்பை பறைசாற்றுகிறது. தனது பாட்டியை அம்மா என அழைக்கும் இந்த மழலைக் குரலானது பார்ப்பவர்களை கண்ணீர் விட வைக்கிறது.

உயிரிழந்த ஞானத்தின் தயார் கெஜலட்சுமி, இவருக்கு 79 வயதாகிறது. பெற்றோரை இழந்த நிற்கும் தனது பேரனை நல்ல நிலைக்கு கொண்டுவரும் வரை உயிர் விட மாட்டேன் என்று கூறுகிறார்.

"எனது மகன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது கணவர் உயிரிழந்து விட்டார். இதையடுத்து கடுமையான சூழ்நிலைக்கு இடையே எனது மகனை கல்லூரி வரை படிக்க வைத்தேன். பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து குடும்ப பிரச்னைகளை எனது மகன் சரி செய்தான்.

இதனால் அவன் திருமணம் செய்து கொள்ள காலதாமதமானது. பின்னர் கடலூர் அருகே அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை பார்த்தோம். ஒருவருக்கு ஒருவர் பிடித்துக் கொண்டதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தோம்.

திருமணத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் கடந்த பின்பும் குழந்தை இல்லாமல் இருந்ததால், குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளர்க்க தீர்மானித்தனர். இதையடுத்து சட்டபூர்வமாக அனுமதி பெற்று ஆண் குழந்தையை 2016ஆம் ஆண்டு தத்து எடுத்தனர். அன்றிலிருந்து அந்த குழந்தையை ஆசை ஆசையாக வளர்த்து வந்தனர்," என்கிறார் மூதாட்டி.

பெற்றோரை இழந்த 5 வயது தத்து பிள்ளையை வளர்க்க துடிக்கும் 79 வயது மூதாட்டியின் நெகிழ்ச்சி கதை

இவர்கள் இருவருமே அந்த குழந்தையின் வருகைக்கு பிறகு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஒரு புதிய புத்துணர்வுடன் இருந்தாக கூறும் அவர். நாள்தோறும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், இரவு தூங்க வைத்து அடுத்த நாள் காலை மீண்டும் வேலைக்கு புறப்படும் இருவருமே குழந்தையை விட்டு பிரிந்து இருக்கமாட்டார்கள் என்று கூறுகிறார் கெஜலட்சுமி.

காணொளிக் குறிப்பு, பெற்றோரை பறித்த கொரோனா: தவிக்கும் குழந்தைக்கு ஆதரவளிக்க போராடும் மூதாட்டி

"குழந்தை மூன்று வயதை நெருங்கியது, நாங்கள் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே மழலையர் பள்ளியில் சேர்த்தோம். அவன் பள்ளிக்கு சென்றதிலிருந்து அனைத்திலும் தனித்துவமாக இருந்தான். வகுப்பிலேயே சிறப்பாக செயல்படும் பிள்ளையாக படித்து வந்தான். அதிலும் இந்த ஊரடங்கு காரணமாக இருவரும் வீட்டிலே இருப்பதால் குழந்தையுடன் எப்போதுமே என் பிள்ளையும், மருமகளும் குழந்தையோடு குழந்தை போல விளையாடிக் கொண்டிருப்பார்கள். எனக்கும் இவர்களை பார்த்து மகிழ்ச்சியாக இருப்பதிலேயே நாட்களை ஓட்டி கொண்டிருந்தேன்.

இதற்கிடையில், கடந்த மே மாதம் முதல் வாரத்தில் எனது மருமகளுக்கு உடல்நலனில் சற்று முடியாமல் இருந்தது. எதற்கும் கொரோனா பரிசோதனை எடுத்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்து பரிசோதனை செய்தோம். இதையடுத்து மே 8ஆம் தேதி மருமகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, உடனே அன்று பிற்பகல் சிதம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக அன்று இரவு சிகிச்சை பலனின்றி எனது மருமகள் உயிரிழந்து விட்டாள்," என்று கண்ணீர் மல்க கூறினார் அவர்.

பெற்றோரை இழந்த 5 வயது தத்து பிள்ளையை வளர்க்க துடிக்கும் 79 வயது மூதாட்டியின் நெகிழ்ச்சி கதை

"ஒருபுறம் எனக்கும், குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். இதனால் எனது மருமகளை அவரது கடைசி காலத்தில் பார்க்க முடியாமல் போனது. இப்படிப்பட்ட சூழலில் இந்த இழப்பினால், எனது மகன் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளானான். மறுநாள் மருமகளை அடக்கம் செய்த அடுத்த தினமே எனது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிப்பட்டான்.

தொடர்ந்து ஐந்து நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது மகனை, வீட்டில் தனிமைப்படுத்திக் கவனித்துக் கொள்வதாக கூறி மருத்துவமனையில் இருந்து மே 15ஆம் தேதி சனிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தோம்.

வரும் வழியிலேயே அவனுக்கு மூச்சுப் பேச்சு இல்லாமல், எந்த அசைவும் இல்லாமல் காணப்படவே, மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தோம். ஆனால், எனது மகன் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்." என கெஜலட்சுமி கண் கலங்கினார்.

மே 8 சனிக்கிழமை அன்று எனது மருமகளும், அடுத்த சனிக்கிழமை மே 15ஆம் நாள் எனது மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தது என்னை நீங்க துயரத்திற்குத் தள்ளியதாக மிகுந்த வேதனையுடன் மூதாட்டி கூறினார்.

குறிப்பாக மூதாட்டியின் மகன் உயிழந்ததும், அன்று உதவி செய்ய உறவினர்கள் யாருமின்றி என்ன செய்வதென்று தெரியாமல் மூதாட்டி தவிப்பில் இருந்துள்ளார். அந்த தருணத்தில், இவர்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் மட்டுமே பேரூராட்சிக்கு தகவல் கொடுத்து, அவரை அடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து உதவியுள்ளார்.

"மகன், மருமகள் இருவரையும் இழந்து இருக்கும் துயரம் ஈடுசெய்ய முடியாதது. இந்த குழந்தையை எவ்வளவு ஆசை ஆசையாக எனது மகனும், மருமகளும் வளர்த்தனர். ஆனால், எனது பேரன் இன்று தாய், தந்தையரை இழந்து நிற்கிறான். இந்த குழந்தைக்கு தற்போது நான் இருக்கிறேன். அவனை எந்த குறையுமின்றி வளர்க்க கடவுள் எனக்கு நல்ல ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொடுப்பார்.

பெற்றோரை இழந்த 5 வயது தத்து பிள்ளையை வளர்க்க துடிக்கும் 79 வயது மூதாட்டியின் நெகிழ்ச்சி கதை

நீண்ட காலங்கள் இருந்து இந்த குழந்தையைக் கைதூக்கி விட்ட பிறகே எனக்கு உயிர் பிரியும். அந்த நம்பிக்கையில் தான், இந்த குழந்தையை தற்போது வளர்த்து வருகிறேன். எனக்கு 79 வயதானாலும் மனதைரியம் இருக்கிறது. இவர்கள் இருவரை இழந்த போதிலும் எனது பேரனை அழகாக வளர்த்திருவேன்," என்று கண்ணீர் தழும்ப தெரிவித்தார் கெஜலட்சுமி.

பெற்றோரை இழந்திருக்கும் இந்த குழந்தையை வளர்க்க முற்பட்டுள்ள மூதாட்டியின் உத்வேகம், அப்பகுதியில் உள்ள அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இருந்த போதிலும் வயது மூப்பு காறணமாக, அந்த மூதாட்டி பிறரது உதவியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.

உறவினர்கள் யாருமின்றி வாடகை வீட்டில் வசித்து வரும் 79 வயதுடைய இந்த மூதாட்டியின் வயோதிகத்தையும், ஐந்து வயது சிறுவனின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :