யானை Vs மனிதன்: கோவை மாவட்ட வனப்பரப்பு அதிகரிப்பு மோதலை தடுக்க உதவுமா?

உலாவும் யானைகள்

பட மூலாதாரம், Mohanraj

    • எழுதியவர், மு ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவை மாவட்டத்தில், அரசுக்கு சொந்தமான 1,049.74 ஹெக்டேர் நிலங்கள் காப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்த வனப்பரப்பளவு 1.23 லட்சம் ஹெக்டர் ஆக விரிவடைந்துள்ளது.

மேலும், யானைகளின் மிகமுக்கிய வலசைப்பாதையாக கருதப்படும் கல்லார் வனப்பகுதியில் உள்ள 50.79 ஹெக்டேர் தனியார் நிலம், தனியார் வனமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு வனப் பாதுகாப்பு மற்றும் யானை - மனித மோதலை தடுப்பதற்கான மிகச் சிறந்த முயற்சி என தெரிவிக்கிறார் 'ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ்.

'நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கும், மலைப்பபகுதியில் மூன்றில் இரண்டு பங்கும் காடுகளாக இருக்க வேண்டும் என தேசிய வனக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் தமிழகத்தில் 33% ஆக இருக்க வேண்டிய வனப்பரப்பளவு 18% ஆக மட்டுமே உள்ளது. எனவே, நாட்டின் தேசிய வனக்கொள்கையை நோக்கிய பயணத்தில் இந்த அறிவிப்புகள் வரவேற்கப்பட வேண்டியவை.

வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் நிலம் இருக்கும்போது, அதன் நில அமைப்பு மாறுதலுக்குறியவை. ஆனால், வன நிலமாக அறிவிக்கப்பட்டால் அதற்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு கிடைக்கிறது.

வனத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதிகள் காப்பு நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாறியுள்ளது' என்கிறார் இவர்.

வனப் பகுதி

பட மூலாதாரம், Mohanraj

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழும் யானைகளின் வலசைப்பாதையில் கல்லார் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதை என்கிறார் இவர்.

'இந்தியாவில் யானை- மனித முரண் அதிகமுள்ள பகுதிகளில் ஒன்றாக கோவை இருக்கிறது. இதற்கு காரணம் இங்குள்ள யானைகளின் வாழ்விடம் சுருங்கிப்போனது தான்.

இதுபோன்று வாழ்விடத்தை மீட்டுத் தரும் நடவடிக்கைகள், யானைகள் மட்டுமல்லாது பிற வன உயிரினங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மற்ற மாவட்டங்களிலும் காடுகளை ஒட்டி அமைந்துள்ள பிற அரசுத்துறைகள் மற்றும் தனியார் வசமுள்ள நிலங்களை மீட்டெடுக்க நடவடிக்ககள் எடுக்கப்பட வேண்டும்.

உலகத்திலேயே ஒரே வாழ்விடத்தில் அதிக அளவில் ஆசிய யானை வாழ்வது நீலகிரி உயிர்கோல மண்டலத்தில் தான். இது கேரளாவின் மன்னார்காட்டில் துவங்கி கோவை வனக்கோட்டம், நீலகிரி, சத்தியமங்கலம், முதுமலை, கர்நாடகாவின் பந்திப்பூர், வயநாடு வரையிலான மலைத் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

இதில் வாழும் யானைகள் மொத்த காடையும் வெவ்வேறு விதமாக பயன்படுத்துகின்றன. இந்த மலைத்தொடரில் வலசைபோகும் யானைகளின் வழித்தடத்தில் குறுகலான சிறுபாதையாக கல்லார் பகுதி உள்ளது. தனியார் வசமிருந்த இந்த பகுதி தான் தனியார் வனமாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாடும் யானைகள்

பட மூலாதாரம், Mohanraj

இந்த பாதை தடை செய்யப்பட்டால், யானைகளின் வாழ்விடம் இரண்டாக துண்டிக்கப்படும். இந்த அறிவிப்பின் மூலம் யானைகளின் பாதையில் கட்டிடங்கள் உருவாவது சட்டப்பூர்வமாக தடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பில் இந்த அறிவிப்பை, ஓர் மைல்கள் நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன்.' என கூறுகிறார் காளிதாஸ்.

தனியார் நிலத்தை, தனியார் வனமாக அரசு அறிவித்துள்ளது, கல்லார் வலசைப்பாதைக்கு ஓர் சட்டப்பாதுகாப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கிறார் சூழலியல் ஆர்வலர் பூமிநாதன்.

'கல்லார் பகுதியில் உள்ள தனியார் நிலத்தை யானைகள் மட்டுமின்றி பல்வேறு மிருகங்களும் பயன்படுத்துகின்றன. அந்த நிலத்தின் தற்போதைய உரிமையாளர்கள் இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்களாக இருந்தாலும், எதிர்காலத்தில் நிலம் விற்கப்படும்போது வனவிலங்குகளின் பாதை ஆக்கிரமிக்கப்படலாம்.

எனவே, அந்த பகுதிக்கு சட்ட பாதுகாப்பு கட்டாயம் தேவை. அதைத்தான் இந்த அறிவிப்பு உறுதிசெய்துள்ளது.

தனியார் வனமாக இருந்தாலும் அங்கு கட்டிடங்கள் உருவாக்க முடியாது. அங்கு எந்த பணிகளை செய்தாலும் வனத்துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

யானை மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

இதே பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. மேம்பாலம் அமைந்தால், வாகனங்கள் மேம்பாலத்தில் செல்லும். வன விலங்குகளின் பயணத்திற்கும் வாகனங்களால் தொந்தரவு ஏற்படாது' என கூறுகிறார் பூமிநாதன்.

தமிழ்நாடு தனியார் வன நிலங்கள் பேணுகைச் சட்டத்தின் கீழ், தனியார் வனமாக அறிவிக்கப்பட்ட நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாது என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.சந்தானராமன்.

'1882-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டப் பிரிவு 26-ன் கீழ், வருவாய் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 1,049.74 ஹெக்டேர் நிலங்களை வன நிலங்களாகவும், தமிழ்நாடு தனியார் வன நிலங்கள் பேணுகைச் சட்டம் 1949-ன் கீழ் கல்லார் வனத்தின் நடுவே அமைந்திருக்கும் 50.79 ஹெக்டேர் அளவிலான தனியார் நிலம், தனியார் வனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டங்களின் அடிப்படையில், வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மேய்ச்சல் முறைபடுத்தப்படுவதோடு, வனத்துறை கட்டுப்பாட்டில் நிலம் இருப்பதால் வனச்சட்டங்களை மீறுவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிமையாளரால் ஒரு மரத்தை கூட வெட்ட முடியாது. தனியார் வனங்கள், தனியார் வசமிருந்தாலும் நிலத்தில் வன அழிப்பு தொடர்பான எந்த நடவடிக்கையும் செய்ய கூடாது. நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாது.

தமிழ்நாடு தனியார் வனநிலங்கள் பேணுகைச் சட்டத்தின் கீழ் மசினகுடி, சிறுமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ஏற்கனவே தனியார் நிலங்கள், தனியார் வனமாக மாற்றப்பட்டுள்ளது' என தெரிவிக்கிறார் இவர்.

யானை - மனித மோதல்களை தடுக்க வலசைப்பாதையில் உள்ள தனியார் கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டும் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன்ராஜ்.

'வனப்பகுதியை அதிகமாக்கியது என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், இதனால் யானை - மனித மோதல்கள் தடுக்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

யானைகள் வலசைப்பாதையின் ஒரு பகுதியை மட்டுமே மீட்கும் அறிவிப்பாக இது உள்ளது. தற்போது காப்பு நிலமாக அறிவிக்கப்பட்டுள்ள, 81% நிலம் ஒரே இடத்தைச் சேர்ந்தவை. அது, மேட்டுப்பாளையம் தாலுகா, மருதூர் கிராமத்தில் உள்ள கட்டாஞ்சி மலையின் 817 ஹெக்டெர் அரசு புறம்போக்கு நிலம் ஆகும். உரிய வசதிகளை அரசு ஏற்படுத்தி தராததால் அங்கிருந்த பழங்குடியினர் வேலைக்காக மலையிலிருந்து கீழே இறங்கிவந்து வசித்து வருகின்றனர்.

இப்பகுதி யானைகளின் வலசைபாதைக்கு உட்பட்ட பகுதியில்லை. அந்த வகையில் வன பரப்பளவு அதிகரிப்புக்கான அறிவிப்பாகவே இதை நான் கருதுகிறேன்' என்கிறார் இவர்.

'கல்லார் வனத்திற்குள் உள்ள தனியார் நிலம், ஓர் மலைச்சரிவான பகுதி. குட்டிகளோடு சுற்றும் யானைகள் அந்த பகுதிக்கு போகாது. வெகுசில யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் அங்கு வந்து செல்லும். மலையின் அடிவாரத்தில் உள்ள 300 ஏக்கர் நிலத்தில் தான் பெரும்பாலும் யானைகள் செல்கின்றன.

வனத்திற்குள் அமைந்துள்ள தனியார் நிலத்தை திடீரென, தனியார் வனம் என அறிவித்ததற்கு பதிலாக நிலத்திற்கான உரிய இழப்பீட்டுத்தொகையை வழங்கி காப்பு வனமாகவே அதை மாற்றியிருக்க வேண்டும். தனியார் நிலத்தின் உரிமையாளரும், நிலத்தை பயன்படுத்தாமல் தான் வைத்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு எதிராக நில உரிமையாளர் நீதிமன்றம் செல்ல அதிக வாய்ப்புள்ளது. எனவே, இந்த நடவடிக்கையை நிரந்தரத் தீர்வாக கருத முடியாது.

யானைகள் மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

மேலும், யானை - மனித மோதலை தடுக்க நினைத்தால் பல்வேறு ஆக்கிரமிப்புகளில் உள்ள யானைகளின் பிரதான பாதைகளை மீட்டெடுக்க வேண்டும்.

கல்லார் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை வளாகம், தனியார் பள்ளி, கேளிக்கை விடுதி ஆகியவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யவில்லை என்றால் இங்கு யானை-மனித மோதலும் குறையாது.

உணவு தேடி போக முடியாதபோது யானைகள் விவசாய நிலங்களுக்குள் சென்று சேதம் ஏற்படுத்துகின்றன. வலசைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் மட்டுமே யானை-மனித மோதல் எண்ணிக்கை குறையும். தற்போது அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை அரசு துறைகளுக்கு இடையிலான அறிவுப்பு மட்டுமே' என்கிறார் மோகன்ராஜ்.

கோவை மாவட்டத்தின் முந்தைய வனப்பரப்பு 1,22,215.13 ஹெக்டர் ஆக இருந்தது. தற்போது கூடுதலாக 1049.74 ஹெக்டர் சேர்க்கப்பட்டிருப்பதால் மாவட்டத்தின் தற்போதைய மொத்த வனப்பரப்பளவு 1,23,264. 87 ஹெக்டர் ஆக உயர்ந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :